Wednesday, December 29, 2010

1989 தேர்தலில் த.மு.முன்னணி

1989 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியுடன், குறிப்பாக திரு ஜி.கே.மூப்பனார் அவர்களின் தலைமையின்மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக நடிகர்திலகம் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். தனியாக விலகியிருந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடலாம். ஆனால் அவரோடு காங்கிரஸில் இருந்த ஏராளமான ஆதரவாளர்கள், குறிப்பாக ரசிகர்மன்றத்தினர் பெருமளவில் விலகியதன் காரணமாக அவர்களை அரசியலில் வழிநடத்திச்செல்ல ஒரு அரசியல் அமைப்பைத் துவங்கவேண்டிய நிலைக்கு ஆளானார். அதில் உருவானதுதான் அவரது தலைமையில் அமைந்த 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற இயக்கம்.

அவ்வியக்கம் உருவான சிலமாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்தது. அச்சமயம் தனிக்கட்சி துவங்கியது முதலே தன்னைத்தொடர்பு கொண்டு ஆதரவு வழங்கி வந்த அ.இ.அ.தி.மு.க (ஜானகி பிரிவைச்சேர்ந்த) திருமதி வி.என்.ஜானகி, திரு ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர், அந்தத்தேர்தலில் தனது த.மு.மு.இயக்கத்துடன் கூட்டணி வைக்க விரும்புவதை நடிகர்திலகம் ஏற்றுக் கொண்டார். இதனிடையே நடிகர்திலகம் தனிக்கட்சி ஆரம்பித்திருப்பதை அறிந்த கலைஞர் தலைமையிலான 'திராவிட முன்னேற்றக் கழகம்', நடிகர்திலகத்தின் த.மு.மு.இயக்கத்துக்கு அந்தத்தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகளைத் தருவதாக தூதனுப்பியது. ஆனால் ஏற்கெனவே ஜானகி அணிக்கு ஆதரவளிப்பதாக வாக்குக்கொடுத்து விட்டதாகவும், கொடுத்த வாக்கைக்காப்பாற்ற வேண்டுமென்றும் அரசியலில் பத்தாம்பசலித்தனமாக எண்ணிய நடிகர்திலகம், தி.மு.க.வின் கூட்டணி கோரிக்கையை நிராகரித்தார். அரசியலில் நடிகர்திலகம் எடுத்த மோசமான முடிவுகளில் இதும் ஒன்று. 20 என்ற இடத்தில் கொஞ்சம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் 25 தொகுதிகளை தர சம்மதித்திருப்பார்கள்.

ஏனென்றால் 1989 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வேறெந்த பிரதானக்கட்சியும் இல்லை. அ.தி.மு.கழகம் ஜானகி அணியென்றும், ஜெயலலிதா அணியென்றும் பிளவுபட்டு நின்றது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப்பிடிக்கும் எண்ணத்துடன் தனித்து நின்றது (மூப்பனாரும் போட்டியிட்டார்). எனவே 89 தேர்தலில் திமு.க.வின் வெற்றி உள்ளங்கை நெல்லிகனியாக கணிக்கப்பட்டது. அப்போது நல்ல வாய்ப்பாக திமு.க.தரப்பிலிருந்து வலிய வந்த அழைப்பை நடிகர்திலகம் நிராகரித்து, ஜானகி அணிக்கு வாக்குறுதி கொடுத்ததை பிரதானமாக மதித்தார். அந்நேரத்தில் இருந்த அரசியல் சூழலுக்கு, த.மு.மு.இயக்கம் தி.மு.கவுடன் சேர்ந்து களம் கண்டிருந்தால் எப்படியும் 15 சட்டமன்ற உறுப்பினர்களை த.மு.மு. பெற்று, அதன்மூலம் இயக்கம் வலுப்பெற்றிருக்கும்.  

ஆனால் அரசியலில் வாக்குறுதிகளை மதித்த காரணத்தால் பெரிய இழப்பு ஏற்பட்டது. 1989 தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. (ஜானகி பிரிவு), த.மு.மு. கூட்டணி பெருத்த தோல்வியைச் சந்தித்தது. ஒரு இடம் தவிர அந்த அணி போட்டியிட்ட அனைத்து தொகுதியையும் இழந்தது. சேரன்மாதேவியில் மட்டும் இவ்வணியின் வேட்பாளர் பி.எச்.பாண்டியன், தனது தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெற்றார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட நடிகர்திலகம் உட்பட, த.மு.மு. இயக்கத்தின் 50 வேட்பாளர்களும் தோல்விடைந்தனர். ஏற்கெனவே நடிகர்திலகத்தின் அரசியல் பங்கேற்பு பற்றி வாய்க்கு வந்தபடி கிண்டல் செய்து வந்தோர்க்கு, வாயில் ஒரு மூட்டை அவல் கொட்டியது போலானது. ஆசைதீர மென்று தீர்த்தனர்.

ஆனால் தற்போது வலைப்பூக்களில் எழுதிவருவோர், அத்தேர்தலில் நடிகர்திலகத்தின் தோல்வி பற்றி எழுதும்போது, திருவையாற்றில் அவர் டெபாஸிட் இழந்தார் என்ற ஒரு முழுப்பொய்யையும் சேர்த்து எழுதிவருகின்றனர். அது முழுப்பொய் என்பதற்கு ஆதாரம்,  திருவையாற்றில் பதிவான வாக்கு விவரங்கள் இதோ:

1989 திருவையாறு சட்டமன்றத்தொகுதி தேர்தல் முடிவு

துரை சந்திரசேகரன் (திராவிட முன்னேற்ற கழகம்)   36,981 சிவாஜி கணேசன் (தமிழக முன்னேற்ற முன்னணி) 26,338 ஆறுமுக கொண்ணமுண்டார் (காங்கிரஸ்) -      14,346 ஆழி கோ மருதையன் (அ.இ.அ.தி.மு.க (ஜெ.அணி)) 13,435 முருகேசன் (நெடுமாறன் கட்சி)                  270

அத்தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் திரு துரை சந்திரசேகரன் கருத்து...

"திருவையாறு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் கழகம் எனக்கு மீண்டும் திருவையாறு வேட்பாளராக நிறுத்தியது. என்னை எதிர்த்து திரு. சிவாஜி கணேசன் நிற்கிறார் என்றதும் நான் சற்று தயங்கினேன். அச்சப்பட்டேன். அவருக்கு தஞ்சைமாவட்டத்தில் பெரிய ரசிகர் வட்டாரம் இருக்கிறது. தங்கள் தலைவருக்காக அவர்கள் வந்து உழைப்பார்கள். ஆகவே எனது வெற்றி சற்று கேள்விக்குறியாக எண்ணினேன். ஆனால் அவருடைய அரசியல் நடவடிக்கைகளையும் தேர்தல் அணுகுமுறைகளையும் பார்த்தபோது எனக்கே அவர்மீது மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது. மிகவும் ஜெண்டிலாக பாலிடிக்ஸ் பண்ணினார். தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எந்த தகிடுதத்த வேலையையும் அவர் செய்யவில்லை. அப்படிச் செய்ய முற்பட்ட தன் கட்சியைச்செர்ந்த சிலரையும் அவர் தடுத்துள்ளார். நான் வெற்றிபெற்ற செய்தி அறிவிக்கப்பட்டதும், எனது வெற்றிக்காக மகிழ்ச்சியடைந்த அதே வேளையில், அவரது தோல்வி என் மனதின் ஒரு மூலையில் சோகத்தையும் தந்தது. அந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிறுத்தப்படாமல் இருந்திருந்தால், அவருக்காக கொடிபிடித்துப் பிரச்சாரம் செய்திருப்பேன். அந்த அளவுக்கு அவரது அரசியல் கண்ணியம் என்னைக்கவர்ந்தது".

('
சிவாஜியை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற உங்கள் அனுபவம் எப்படியிருந்தது?' என்ற கேள்விக்கு, திரு துரை சந்திரசேகரனின் பதில் - மாலை முரசு நாளிதழ்).

தமிழக முன்னேற்ற முன்னணி பற்றி நடிகர்திலகம்

"அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்தபின், ஜானகி அம்மாள் சிலநாட்கள் முதல் மந்திரியாக இருந்தார். அப்போது சட்ட மன்றத்துக்கு தேர்தல் வந்தது. 'ஜானகி அம்மையார் அணியும் நானும் ஒன்றாகத் தேர்தலில் நின்றால் ஜெயித்து விடலாம்' என்று பல பேர் கூறினார்கள். அது போலவே நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தோம். இருந்தாலும் எனக்குத் தேர்தலில் நிற்பதற்குத் தயக்கம் இருந்தது. ஏனென்றால் நான் கட்சி ஆரம்பித்து சில நாட்கள் தான் ஆகியிருந்தன. கட்சியானது அப்போது முழுமையாக வளர்ச்சி அடைந்து மக்களின் நம்பிக்கையைப் பெற அவகாசம் இல்லை. எனவே நான் சற்றுத் தயங்கினேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னிடம் வந்து 'நாங்கள் மக்களிடத்தில் நமது கட்சியைப்பற்றிக் கேட்டோம். எல்லா இடங்களிலும் நமது கட்சி நன்கு வளர்ந்திருக்கிறது. கிராமங்களில் எல்லாம் காங்கிரஸ் கொடிக்குப் பதில் உங்கள் கொடி தான் பறக்கிறது' என்று கூறியவுடன் எனக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. என்னை ஒரு மாயையில் சிக்கவைத்து எனக்கு சோப்புப் போட்டு விட்டார்கள். எனது தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி வைத்து விட்டார்கள். நானும் "ஆகா!" என்று ஏமாந்து விட்டேன். என்னையே நான் ஏமாற்றிக் கொண்டேன். நமக்கும் மேலாக ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் அல்லவா? எதுவாயினும் அவன்தானே தீர்ப்புச் சொல்ல வேண்டும். அவனை மீறி நாம் எது செய்தாலும் அது தீங்காகவேதானே முடியும். அப்படித்தான் எனக்கும் நடந்தது. நான் தேர்தலில் நிற்கிறேன் என்றதும் 50 சீட் கொடுத்தார்கள். என் சொந்தப் பணத்தையும் மற்றும் வங்கியில் வாங்கிய கடன்களையும் வைத்துக் கட்சிக்காக செலவழித்தேன். பிற கட்சிக்கார்களில் நல்லவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் என் பிள்ளைகளிடம் வந்து 'அப்பாவை கட்சி ஆரம்பிக்க சொல்லாதீர்கள். வீணாக செலவு செய்யச் சொல்லாதீர்கள்' என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் என் பிள்ளைகளோ நல்ல பிள்ளைகள், அவர்கள் வந்தவர்களிடம் 'அப்பா இது வரை தனக்கென எதுவுமே கேட்டதில்லை. கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கிறார். அவர் என்ன செய்தாலும் தடுக்க மாட்டோம். சொத்துக்களையே விற்றாலும் கவலைப்பட மாட்டோம். எதுவாக இருந்தாலும் அவர் இஷ்டப்படியே செய்யட்டும்' என்று கூறிவிட்டார்கள். அதைப்போலவே நானும் என் இஷ்டப்படிதான் செய்தேன். தேர்தலில் நின்றேன் தோல்வி அடைந்தேன். தேர்தல் தோல்விக்குப் பிறகு ரசிகர் மன்றத்துப் பிள்ளைகள் மட்டும் தான் என்னுடன் இருந்தார்கள். அரசியலைச் சேர்ந்தவர்கள் வேறு யாருமே கிடையாது. அரசியலில் பல நேரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறேன். அரசியலுக்குள்ளே அரசியல் பண்ணுவது எனக்கு ஒத்துவரவில்லை. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும். நான் தெரிந்தோ தெரியாமலோ ஒரு மாபெரும் தவறு செய்தேன் என்றால் அது அரசியலில் புகுந்ததும் அதைக் கையில் எடுத்துக் கொண்டு சுயமாக ஒரு கட்சி ஆரம்பித்ததும்தான். காமராஜர் பிறந்த விருதுநகர் மண் அவரைத் தோற்கடித்தது. நான் வளர்ந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு மண் என்னைத் தோற்கடித்தது. என் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் நான் கற்றுக்கொண்ட நல்ல பாடங்களை என் கலையுலக நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கலைஞர்களே! நீங்கள் அரசியலில் அனுதாபியாக இருங்கள். ஆனால் அதனுள் நுழையாதீர்கள். அரசியல்வாதியின் நண்பனாய் இருங்கள். ஆனால் நீங்கள் அரசியல்வாதியாகி விடாதீர்கள். அதில் சென்று உறுப்பினராகி அந்த வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர் ஒரு அரசியல்வாதியா? அவருக்கு உதவி செய்யுங்கள். கட்சியின் கொள்கைகளை ஆதரியுங்கள். பரவாயில்லை. நீங்களே கட்சிக்காரனாக ஆகிவிடாதீர்கள். நீங்கள் பாடகனாகவே இருங்கள் அந்த பாட்டாகவே நீங்கள் ஆகிவிட வேண்டாம். ஆண்டவனுடைய எண்ணமோ, மக்களுடைய எண்ணமோ தெரியவில்லை. நான் எவ்வளவோ முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்தேன். இருந்தும் நம்மை தூக்கித் தள்ளிவிட்டார்கள். "நீ நடிகன். நடிகனாகவே வாழ்க்கையை ஆரம்பித்தாய். நடிகனாகவே இருக்கப்போகிறாய். நடிகனாகவே சாகப்போகிறாய். ஆகையால் மற்ற வேலைகள் எல்லாம் உனக்கு வேண்டாம். நீ எப்போதும் கலையுலகின் நிரந்தர நடிகனே!" என்று மக்கள் நினைத்திருக்கலாம். அதனால் தான் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி, நடிகனாக மட்டும் இருக்கிறேன். அரசியல் என்னவென்றும் மக்களிடத்தில் நாம் அரசியல்வாதியாக எவ்வாறு இருந்தோம் என்றும், நடிகனாக எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அனுபவத்தில் தெரிந்து கொண்டவன் நான். "கெட்டபின்பு ஞானி". இவையெல்லாம் தெரிந்து கொள்ள 60 வருடங்கள் ஆகிவிட்டன. அரசியலில் நான் தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால் ஏமாற்றப்பட்டேன்."

Saturday, December 25, 2010

மாநிலங்களவையில் நடிகர்திலகம்

1982 ல் ஒரு ராஜ்யசபா எம்.பி.சீட்டுக்கு கலைத்துறையைச்செர்ந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா அம்மையார், நடிகர் திலகத்தின் பெயரை தேர்வுக்கமிட்டியின் முன் வைத்தார். (ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். இந்திரா யாரைச்சொல்கிறாரோ அவரைத்தான் நியமிப்பார்கள்). அவர் நடிகர் திலகத்தை முன்மொழியக் காரணம், நடிகர்திலகம் காங்கிரஸ் கட்சியின் நீண்ட காலத்தொண்டர் என்பதும், தேர்தல் நேரங்களில் தன்னுடைய படப்பிடிப்புகளை ஒத்திவைத்து விட்டு, முழு நேர பிரச்சாரங்களில் ஈடுபட்டவர் என்பதும், தன்னுடைய படங்களில் முடிந்தவரை காங்கிரஸின் கொளகைகளை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும்... இப்படி பல காரணங்கள். தேர்தல் நேரத்தில் இந்திராவும் சிவாஜியும் பல மேடைகளில் ஒன்றாக பேசி யிருக்கிறார்கள். பாண்டிச்சேரி தேர்தலில் ஒரே மேடையில் இந்திராவுக்கும் காமராஜருக்கும் நடுவில் நடிகர்திலகம் நிற்கும் புகைப்படம் ரொம்ப பாப்புலர். தேர்தல் நேரங்களில் சுவரொட்டிகளில் இப்படம் இடம் பெறும்.

1977 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அ,தி,மு,க கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது, பிரச்சாரத்துக்காக இந்திரா அம்மையார் தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது மதுரை மேடையில் எம்.ஜி.ஆரும், திருச்சி மேடையில் சிவாஜியும் இந்திராவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

1980 தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, சென்னை மெரீனா கடற்கரை கூட்டத்தில் இந்திரா, கருணாநிதி ஆகியோருடன் நடிகர் திலகமும் மேடையில் பேசினார்.

எனவே யாருக்கு ராஜ்யசபா பதவி என்ற நிலை வந்தபோது, இந்திராவின் நினைவில் இந்த விவரங்கள் நிழலாட, நடிகர் திலகத்தை தேர்வு செய்தார்.

இதனிடையே ராஜீவ்காந்தி தனது நண்பரான இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு அந்த எம்.பி.பதவியைக் கொடுக்க வேண்டுமென்று முயற்சித்தார். ராஜீவ் காந்தி அமிதாப்பை சிபாரிசு செய்யக்காரணம், அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதற்காகவே தவிர வேறொன்றுமில்லை. அதுவரை காங்கிரஸுக்கு அமிதாப்பின் பங்களிப்பு பூஜ்யமே. (இப்போதும் கூட அதைத்தாண்டி வந்திருக்கிறதா என்பது தெரியாது).

தவிர அப்போது ராஜீவுக்கு சிவாஜியைப்பற்றியும், கட்சியில் அவரது பங்களிப்பு பற்றியும் எதுவும் தெரியாது. (சஞ்சய் காந்தி இறக்கும் வரை, காங்கிரஸின் தலைவர் யார் என்பது கூட ராஜீவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அவர் விமானம் ஓட்டிக்கொண்டு இருந்தார்).

எனவே இந்திராவின் நியாயமான முடிவின்படி நடிகர் திலகம், ராஜ்ய சபா எம்.பி.ஆனார். (சிவாஜி ராஜ்யசபாவில் பேசிய பல விஷயங்களை பற்றி பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங் எழுதிய ஒரு கட்டுரை முன்பு பார்த்தேன். அது கிடைத்தால் பின்னர் இங்கே தருகிறேன்).

இந்திரா அம்மையார் மறைந்தபிறகு நடந்த 1984 தேர்தலில், சிவாஜி மன்றத்தினர் தேர்தலில் சீட் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதற்கு காரணமே, நடிகர் திலகத்துக்கும் காங்கிரஸுக்கும் இருந்த நீண்டகால உறவை பற்றி ராஜீவுக்கு தெரியாததே.

தமிழ்நாட்டில் காங்கிரஸின் மிகப்பெரிய தொண்டர் படையாக விளங்கிய சிவாஜி மன்றத்தினர், 1984 தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர். சிவாஜிமன்றத்தினர் பற்றி தெரிந்திருந்த பெருந்தலைவரும், இந்திரா அம்மையாரும் இயற்கை எய்தியதால் அவர்களின் அருமை ராஜீவுக்கு தெரியவில்லை. வெகுண்டெழுந்த சிவாஜி மன்றத்தினர், தலைவர் தளபதி சண்முகம் தலைமையில் கூடி முடிவெடுத்து தமிழ்நாடு முழுக்க 99 போட்டி வேட்பாளர்களை அறிவித்தனர். சிலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். புரசை குமரன், அப்பன்ராஜ், செங்காளியப்பன், ராஜசேகரன், அடைக்கலராஜ், மாரிசாமி, பொன்.தங்கராஜ், சந்திரசேகரன், புவனேஸ்வரி ஆனந்த் போன்றோர் அதில் அடக்கம்.

 பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட சிவாஜி மன்றத்தினர் பலர் காங்கிரஸ் கட்சியால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றனர். சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சிவாஜிமன்ற வேட்பாளராகப் போட்டியிட்ட (இன்றைய காங்கிரஸ் பிரமுகர்) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகளில் வெற்றியடைந்தார்.

Friday, December 24, 2010

காங்கிரஸில் நடிகர்திலகம்-2

வசந்த் தொலைக்காட்சியில் புதன் தோறும் ஒளிபரப்பாகும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர்திலகத்தைப்பற்றிய அரிய பல விஷயங்களை வழங்கியவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினருமான திரு இரா. அன்பரசு அவர்கள். காங்கிரஸ் தலைவராதலால், அவருடைய உரை நடிகர்திலகத்தின் திரைப்படங்களை பற்றியல்லாது, காங்கிரஸ் பேரியக்கத்தில் அவருடைய பங்களிப்பின் அரிய தொகுப்பாக அமைந்தது. அவருடைய உரையிலிருந்து சில துளிகள்.....

நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்றவண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழைக்கப் படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின் போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.

எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் அவருக்கான சுற்றுப்பயணம் தனியாக தயாரிக்கப்படும். சிவாஜி அவர்கள் இருந்தவரையில் அவர் எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்காமல் இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக அப்போது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பெரிய தொண்டர் பாசறையாக செயல்பட்டதே அவரது ரசிகர் மன்றங்கள்தான். (இதை மிகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்). ஒவ்வொரு தேர்தலின்போதும் சிவாஜி ரசிகர்களின் உழைப்பு, காங்கிரஸுக்கு பெரிய பலமாக அமைந்தது.  

சிவாஜி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவராக நியமிக்க வேண்டும் என இந்திராகாந்தியிடம் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார். அதை ஏற்று அது தொடர்பாக நேர்முக பேட்டிக்கு வருமாறு டெல்லிக்கு இந்திராகாந்தி அம்மையார் அழைத்தார். சிவாஜி அவர்களுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். வழக்கமாக இந்திரா அம்மையாரை சந்திக்க யார் சென்றாலும் அவர் அலுவலக அறையில் இருப்பார், போகின்றவர்கள்தான் வணக்கம் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள். ஆனால் சிவாஜி அவர்கள் சென்றபோது, இந்திரா அம்மையார் வாசல் வரை எழுந்துவந்து வரவேற்று அழைத்துச்சென்றார். கிட்டத்தட்ட அப்போது அவரையே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்த போதிலும் அது நடைபெறவில்லை. அதற்கு கட்சியில் நிலவிய உட்கட்சிப் பூசல்தான் காரணம் என்று நான் அடித்துச்சொல்வேன். அப்போதுமட்டும் அவர் தலைவராகியிருந்தால், அப்போதே தமிழ்நாட்டில், இப்போது நாம் சொல்லிவரும் 'காமராஜ் ஆட்சி' ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காமல் போனதால்தான் இன்னும் நாம் மாநிலக்கட்சிகளுக்கு மாறி மாறி பல்லக்குத் தூக்கிக் கொண்டிருக்கிறோம். (நெத்தியடி)

அவரது திரைப்படங்களில் எப்போதும் தேசியம் இடம்பெற்றிருக்கும். அவர் பங்குபெறும் காட்சிகளில் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் படம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுபோல அவரது படங்களின் பாடல்களில் பெருந்தலைவர் அவர்களைப்பற்றி புகழ்ந்து பாடும் வரிகளை சேர்க்கச்சொல்வார். தேசியம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்ததால்தான் யாருமே ஏற்றிராத பல்வேறு தேசியத்தலைவர்களின் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கினார். (இந்த இடத்தில் பகவத்சிங், திருப்பூர் குமரன் கிளிப்பிங்குகள் காண்பிக்கப்பட்டன).

தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் சிலை இடம்பெற்றுள்ள தென்றால் அதற்கு முழுமுதற்காரணம் அண்ணன் சிவாஜி அவர்கள்தான். அதிகமான காமராஜ் சிலைகளின் பீடத்திலுள்ள கல்வெட்டைக் கவனித்தோமானால், அவற்றைத்திறந்து வைத்தவர் அண்னன் சிவாஜி அவர்கள்தான். தன்னை தங்கள் ஊருக்கு வரும்படி அழைக்க வரும் தொண்டர்கள்/ ரசிகர்களிடம் 'உங்கள் ஊரில் பெருந்தலைவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யுங்கள், நான் வந்து திறந்து வைக்கிறேன்' என்று சொல்லியே ஊருக்கு ஊர் தலைவர் சிலை ஏற்படக் காரணமாயிருந்தவர் அண்னன் சிவாஜி அவர்கள். (அடுத்து அன்பரசு அவர்கள் சொன்ன விஷயம் சிலிர்க்க வைத்தது).

பெருந்தலைவர் ஆணைப்படி தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அண்னன் சிவாஜி அவர்கள், அந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை, தொண்டர்களின் முகவரிகளோடு சேகரிக்க அந்தந்த பகுதி மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். முகவரி எதற்கென்றால், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க நேர்ந்தபோது அவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்தார். தமிழ்நாட்டில் எந்த கட்சித்தலைவரும் செய்யாத அரிய செயல் இது.

அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய வெள்ளம் வந்தபோது, 16 பேரைக்காப்பாற்றிய சிவாஜி ரசிகருக்கு, அப்போதைய அரசு 'வீர இளைஞர்' பட்டம் வழங்கியது. 'நீங்கள் என்ன பட்டம் வழங்குவது?. நான் வழங்குகிறேன்' என்று அவ்விளைஞருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தி 'வீர இளைஞர்' பட்டம் அளித்ததோடு நில்லாமல் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள்.

1975 அக்டோபர் முதல்தேதி அவரது பிறந்தநாள்விழாவுக்கு வழக்கம்போல் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் , திரைப்பட நடிகர்களும் வந்து வாழ்த்துச்சொல்லி சென்றவண்ணம் இருந்தனர். ஆனாலும் அண்ணன் சிவாஜி அவர்களுக்கு பெருந்தலைவர் அவர்கள் இன்னும் வரவில்லையே என்று மனதில் ஒரு தவிப்பு இருந்தது. அதே நேரம் திருமலைப்பிள்ளை ரோட்டில் தனது இல்லத்தில் உடல்நலமின்றி இருந்த பெருந்தலைவர் அவர்களுக்கு, 'சிவாஜியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தப்போக முடியவில்லையே' என்ற துடிப்பு இருந்தது. ஒரே நேரத்தில் இருவருக்கும் ஒரே மாதிரியான தவிப்பு. இறுதியில் அங்கிருந்த குமரி அனந்தன், மணிவர்மா ஆகியோரிடம் 'புறப்படுங்கள், சிவாஜி வீட்டுக்குப்போவோம்' என்று காரில் கிளம்பி விட்டார். தலைவர் புறப்ப்ட்டு விட்டார் என்ற செய்தி கிடைத்ததுமே அண்ணன் சிவாஜி அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து தலைவரை எதிர்பார்த்து நின்றவர், அவர் காரிலிருந்து இறங்கியதும் அவரது கைகளிரண்டையும் பிடித்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். தலைவர் அண்னன் சிவாஜியை வாழ்த்திவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டார். பெருந்தலைவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி அண்ணன் சிவாஜி அவர்களின் பிறந்த நாள்தான். மறுநாள் பெருந்தலைவர் மறைந்தார்.

அண்ணன் சிவாஜி அவர்களுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் 'காமராஜ் ஆட்சி' அமைய வேண்டுமென்பதாகவே இருந்தது. எனவே அவர் கனவு கணடது போல தமிழகத்தில் 'காமராஜ் ஆட்சி' அமையச்செய்வதே அவருக்கு நாம் செய்யும் பெரிய கைம்மாறு ஆகும் என்று கூறி விடைபெறுகிறேன்".

(காங்கிரஸ் பேரியக்கத்தில் நடிகர்திலகத்தின் பங்களிப்பு பற்றிய அரிய பல தகவல்களைத்தந்த அன்பரசு அவர்களுக்கு சிவாஜி ரசிக நெஞ்சங்களின் நன்றிகள்).

காங்கிரஸில் நடிகர்திலகம்-1

நடிகர்திலகம் காங்கிரஸுக்காக உழைத்த அளவுக்கு, காங்கிரஸில் அவர் கௌரவிக்கப் படவில்லை. காங்கிரஸில் அவரளவுக்கு காமராஜர் பெயரை உச்சரித்தவர்களும் இல்லை. தன்னுடைய திரைப்படங்கள் மூல்மாக காமராஜரையும் காங்கிரஸையும் மக்கள் மத்தியில் உயிர்ப்பாக வைத்திருந்தவர். அவரது அரசியல் ஈடுபாடு காரணமாக, வெற்றிபெற வேண்டிய பல படங்களும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றன. அவ்வளவு பெரிய நடிகர் தன்னுடைய திரைப்பட செல்வாக்கை காங்கிரஸ் கட்சிக்கு வலிய வந்து தருகிறாரே என்ற நன்றியுணர்ச்சி காங்கிரஸ் தலைவர்களுக்கு (தொண்டர்களுக்கு அல்ல) என்றுமே இருந்ததில்லை.

தேர்தல் நேரங்களில், அவர் தன்னுடைய திரைப்பட படப்பிடிப்புகளை ஒத்தி வத்துவிட்டு, தேரதல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஒரு நன்றி சொல்லக்கூட அவரைச்சென்று பார்க்கமாட்டர்கள். இது கண்கூடாக நடந்த உண்மை.

ஒருமுறை ஒரு பொதுத்தேர்தல் முடிந்த சமயம், படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் ஸ்டுடியோவுக்கு வெளியில் மரத்தின் நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, சற்று தூரத்தில் ஒரு கூட்டத்தினர், வேறொரு படப்பிடிப்பில் இருந்த நடிகர் ஆனந்தனை சந்தித்து, அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து அவருடன் உரையாடிவிட்டுப் போனார்களாம். அப்போது சிவாஜி தன் அருகில் இருந்தவரிடம் 'அவங்க என்னப்பா பண்றாங்க?. ஆனந்தனுக்கு இன்னைக்கு பிறந்த நாளா?' என்று கேட்க, அருகில் இருந்தவர், 'இல்லண்ணே, இப்போ நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர் வந்து ஆனந்தனுக்கு நன்றி சொல்லிட்டு போகிறார். ஏன்னா, ஆனந்தன் அவருக்காக அவருடைய தொகுதியில் பிரச்சாரம் பண்ணினாராம்' என்று சொல்லியிருக்கிறார். அப்போது நடிகர்திலகம் 'உம்... நானும்தான் தமிழ்நாடு முழுக்க சுற்றி, சுற்றி பிரச்சாரம் பண்ணினேன். அதுல பலர் ஜெயிச்சும் இருக்காங்க. ஆனா ஒருத்தர் கூட தேர்தல் முடிந்து என்னை வந்து பார்க்கலை' என்று விரக்தியோடு சொன்னாராம். இந்த அளவுக்குத்தான் காங்கிரஸ்காரர்களின் நன்றியுணர்ச்சி.

கலைஞர் கருணாநிதியும், எம்,ஜி,ஆரும், ஜெயலலிதாவும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் சிவாஜி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கருணாநிதி தி.மு.கவுக்காக பிரசாரம் செய்தால், அக்கட்சி வெற்றி பெற்றதும் அவர் முதல்வர் ஆவார். எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்தால் அக்கட்சி வெற்றியடைந்ததும் அவர் முதல்வர் ஆவார்.  அதுபோலவே ஜெயலலிதா, அண்ணா தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்தால் அக்கட்சி வெற்றியடைந்ததும் அவர் முதல்வர் ஆவார். ஆனால் சிவாஜி காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்து அக்கட்சி வெற்றி பெற்றாலும் அவருக்கு எந்தப்பதவியும் கிடைக்கப்போவதில்லை. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸில் அவருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் வழங்கப்படவில்லை என்பது உண்மை.

அதுமட்டுமல்லாது, தேர்தல் என்று வந்துவிட்டால், காங்கிரஸுக்கு மிகப்பெரிய தொண்டர்படையாக செயல்பட்டது சிவாஜி ரசிகர்மன்றம் தான். தங்கள் அபிமான நட்சத்திரம் காங்கிரஸில் இருக்கிறார் என்பதற்காகவே தங்களை காங்கிரஸுடன் இணைத்துகோண்ட ரசிகர்கள் எராளம். 2001ல் காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து, அத்தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியைப்பிடித்த சில மாதங்களில் நடிகர்திலகம் மறைந்தார். கூட்டணியில் இருந்தும் கூட சிவாஜிக்கு சிலை வைக்குமாறு ஜெயலலிதாவை காங்கிரஸார் கேட்கவில்லை. முழுதாக ஐந்தாண்டுகள் முடிந்து, நடிகர்திலகத்தின் ஆத்ம நண்பர் ஆட்சியில் அமர்ந்த சில நாட்களிலேயே, அந்த மாபெரும் கலைஞனுக்கு (அதுவும் ஏதோ சந்து பொந்தில் அல்ல, சென்னையின் மிக முக்கியமான இடத்தில்) சிலையெடுத்து சிறப்பு சேர்த்தார். அதுமட்டுமல்ல, தனது ஆட்சி இருக்கும்போதே, அரசு ஒதுக்கிய இடத்தில் நடிகர் திலகத்துக்கு நினைவு மண்டபமும் கட்டி முடிப்பேன் என்று உறுதியளித்திருக்கிறார்.