Monday, January 24, 2011

ராமன் எத்தனை ராமனடி ( 2 )


நடிகர் விஜயகுமார் (நடிகர்திலகம்) தலைமை தாங்க, சிறையில் பள்ளிக் குழந்தைகள் பாடி நடிக்கும்' சேர சோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ்நாடு' பாடல், நாட்டின் பிரிவினைக் கோரிக்கைகளைச்சாடி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல். சிறையில் இருப்பது தன் அம்மா என்று தெரியாமலேயே, விஜயாவின் குழந்தை ராணி அவருக்கு இனிப்பு வழங்குவதும், அது உன் குழந்தைதான் என்று நடிகர்திலகம் ஜாடை காட்டுவதும் ரசமான இடம்.

கதை வசனம் பி.மாதவனின் ஆஸ்தான கதாசிரியர் பாலமுருகன் எழுதியிருந்தார். கிராமத்தில் சிறுவர்கள் பேசிக்கொள்ளும் யதார்த்த வசனங்கள். நடிகரானபின் முதன்முதலில் குடிசையில் கைக்குழந்தையுடன் தேவகியைச் சந்திக்கும் ராமு பேசும் வசனங்களில் ஆழமும் கூமையும் அதிகம்.

நடிகர்திலகம் :
படத்தின் முற்பாதியில் சாப்பாட்டு ராமனாகவும், பிற்பகுதியில் நடிகர் விஜயகுமாராகவும் தோன்றும் இவர், நடிப்பின் இரு பரிமாணங்களையும் இருவேறு கோணங்களில் தொட்டுக் காட்டியிருப்பார். ஆயாவைப்பார்த்து 'ஏன் ஆயா கதவை சாத்துறே, ஏன் ஆயா கரண்டியை எடுக்கிறே, ஏன் ஆயா அடுப்புல வைக்கிறே. ஐயோ ஆயா, இனிமேல் தப்பு பண்ணமாட்டேன் ஆயா' என்று வாயில் விரலை வைத்துக்கொண்டு அழுதுகொண்டே, பெட்டிக்குப்பின்னால் போய் ஒளிவதும், கே.ஆர்.விஜயாவின் தோழிகளிடம் 'அடிங்கொப்பன் தன்னானே, அதை நீ சொல்லாதே அவங்க சொல்லட்டும்' என்று வெகுளியாக கலாய்ப்பதுமாக, கிராமத்து அப்பாவி ராமு வேடத்தில் கலக்கியிருப்பார். அவர் நடிகராக மாறியதும் சுத்தமாக வேறு நடிப்புக்கு மாறிவிடுவார். பிற்பகுதியில் அவரது வழக்கமான நடிப்பு பல இடங்களில் தலைகாட்டும்.  

கோடீஸ்வர நடிகராக வந்து மைனரை அசத்தும்போது, மைனரின் பணக்கார நண்பர்களைப்பற்றி, தான் சாப்பாட்டு ராமனாக இருந்தபோது அவர் சொன்னதை நினைவு வைத்து, மைனர் சொல்லி முடிக்கும் முன்பே 'டெல்லி எருமை', 'மாந்தோப்பு', 'வைர வியாபாரம்' என்று மடக்கும் இடம் ரசிகர்களிடம் கைதட்டல் பெறும். (ஆனால், மைனரிடம் தான் யாரென்று வெளிப்படுத்தும் காட்சியை இயக்குனர் இன்னும் கொஞ்சம் நாசூக்காக கையாண்டிருக்கலாமோ என்று தோன்றும். சடாரென்று சட்டையைக்கழற்றி, சாட்டையடித்தழும்புகளைக் காட்டுவது கொஞ்சம் சப்பென்று இருக்கும்).  

மைனராக எம்.என்.நம்பியார்: கிராமத்திலேயே பெரிய பணக்காரன் என்ற திமிர், ஆணவம். இவருக்கு சொல்லணுமா?. ரத்தத்திலேயே ஊறிய பாத்திரம். அவரே பலமுறை நடந்து பழகிய பாதை. அசத்துகிறார். முத்துராமன் விருந்தாளியாக தங்கியிருக்கும் வீட்டுக்காரனைப்பார்த்து ஒருபக்கம் தலையை சாய்த்துக்கொண்டே உருட்டிய விழிகளோடு "ஏண்டா, நீயெல்லாம் நான் கூப்பிட்டு வர்ர அளவுக்கு பெரிய மனுஷன் ஆயிட்டியா?" என்று கேட்குமிடத்தில் பணக்கார திமிர். ஆனால் கிராமத்து மைனர் என்றால் கூட, வடநாட்டு பாணியில் (அதாவது வைரமுத்து பாணியில்) குர்தாதான் அணிய வேண்டுமா?. வேட்டி, சட்டையில் காட்டியிக்கலாமே.

முத்துராமன்: கிராமத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க மைனர் தங்கையையே மணந்துகொண்டு, அண்ணன் செய்த தவறுக்காக அப்பாவி மனைவியை பழிவாங்குவது கொடுமை என்றால், மனைவியின் கற்புக்கு ராமதாஸினால் களங்கம் ஏற்படநேரும்போது, துப்பாக்கிக்கு பயந்து ஓடிவிடுவதும், பின்னர் மனைவியை சந்தேகப்படுவதும் அதைவிட கொடுமை. இவரே பின்னர், பள்ளிக்கூட பஸ் டிரைவராகவும், டாக்ஸி டிரைவராகவும் வருவது கொஞ்சம் நெருடுகிறது.

கே.ஆர்.விஜயா: கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு காரில் வரும் முதல் காட்சியிலேயே பளிச்சென்று இருக்கிறார். பின்னர் சாப்பாட்டு ராமனை சந்திக்கும்போதெல்லாம் தனது ட்ரேட்மார்க் புன்னகையை வீசுகிறார். முற்பாதியில் வாய்ப்புக்குறைவு. பிற்பாதியில் அவரது வழக்கமான சோக நடிப்பு. இரண்டு அருமையான தனிப்பாடல்கள் இவருக்கு.

சின்ன வயது மகளாக பேபி ராணி, வளர்ந்த மகளாக எம்.பானுமதி, ஆயாவாக எஸ்.என்.லட்சுமி, கிராமத்தில் சாப்பாட்டுராமனோடு சுற்றும் சில்லுண்டிகளாக 'பக்கோடா' காதர், சதன், மாஸ்டர் பிரபாகர் மற்றும் இரண்டு சிறுவர்கள். இவர்க்ளோடு செந்தாமரை, பத்மினி, நாகையா, ராமதாஸ் ஆகியோரும் கௌரவமாகத் தலைகாட்டியிருப்பார்கள்.

இயக்கம் பி. மாதவன்: எங்க ஊர் ராஜா, வியட்நாம் வீடு, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா,   மன்னவன் வந்தானடி, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம் போன்ற, நடிகர்திலகத்தின் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இவர்தான், இந்த படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். நடிகர்திலகத்தின் வெற்றி சூட்சுமங்களை அறிந்த வெகு சில இயக்குனர்களில் ஒருவர். ஸ்ரீதரின் சித்ராலயா என்ற கூத்துப்பட்டறையில் வடிவமைக்கப்பட்ட இயக்குனர். முதல் படமான மணி ஓசை படத்திலேயே பேசப்பட்டவர். மிகச்சிக்கனமாக படமெடுக்கத்தெரிந்த வித்தகர்

அருண்பிரசாத் மூவீஸுக்கு இது இரண்டாவது படம். முதல் படமான எங்க ஊர் ராஜா 70 நாட்களைக் கடந்து ஓட,  இப்படம் 100 நாட்களைக்கடந்து வெற்றியடைந்தது. மூன்றாவது படமான பட்டிக்காடா பட்டணமா வெள்ளிவிழாப்படமாக அமைந்தது. (ஆகா, ஒரு நிறுவனத் துக்கு வளர்ச்சியென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்). ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15-ல் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போது சரியாக 76-வது நாளன்று தீபாவளி வந்தது. அதனால் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும்போதும் பல ஊர்களில் தீபாவளி புதிய படங்களுக்காக இப்படம் 75 நாட்களில் மாற்றப்பட்டது. இருந்தும் சென்னை பாரகன், மற்றும் மதுரை நியூசினிமா அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றி நடைபோட்டது.

'ராமன் எத்தனை ராமனடி' படம் பற்றிய என் கருத்துக்களைப்படித்த அனைவருக்கும் என் நன்றி.

ராமன் எத்தனை ராமனடி

1969 இறுதியில் தீபாவளியன்று வந்த பிரமாண்ட படமான 'சிவந்தமண்'ணை அடுத்து 1970 பொங்கலன்று வெளியான 'எங்க மாமா' படம் பத்து வாரங்களைத் தொட்டு சுமார் வெற்றி யடைந்தது. நாடகமாக வெற்றியடைந்த 'வியட்நாம் வீடு' படம் படமாக்கப் பட்டபோதும் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி, 70-ம் ஆண்டில் நடிகர்திலகத்துக்கு முதல் வெற்றிப்படம் என்ற பெருமையைப் பெற்றது. நடிகர்திலகம், A.P.நாகராஜன், K.V.மகாதேவன் இணைந்த 'விளையாட்டுப்பிள்ளை' ரசிகர்களுக்கு நிறைவைத்தரவில்லை. முதல் முறையாக நடிகர் திலகமும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் இணைந்து உருவாக்கிய முதல் படமான (இறுதிப்படமும் அதுதான்), ரசிகர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிரொலி' ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் நிறைந்திருந்தும் ஏன் மக்கள் மத்தியில் அவ்வளவாகச்சென்றடையவில்லை என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. இந்நேரத்தில் ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம், நடிகர்திலகம் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான பாத்திரப் படைப்போடு வந்த படம்தான் 'ராமன் எத்தனை ராமனடி'.   

முற்பாதியில் கள்ளம் கபடமற்ற, உருவத்தில் இளைஞனாகவும், உள்ளத்தில் குழந்தையாகவும், தன் வயதுக்குப்பொருத்தமில்லாத பள்ளிச்சிறுவர்களுடன் சுற்றித்திரியும் சாப்பாட்டு ராமனாக வும், பிற்பகுதியில் உலகமே மெச்சும் திரைப்பட நடிகராவும் இருவேறு பரிமாணங்களுடன் அற்புதமாகச்செய்திருப்பார். கிராமத்து அப்பாவி இளைஞன் எப்படி சென்னைக்குப்போய் பெரிய நடிகராகிறார் என்பதை ஒப்புக்கொள்ளும்படியான காரண காரியங்களுடன் சொல்லியிருப்பார்கள் கதாசிரியர் பாலமுருகனும், இயக்குனர் மாதவனும்.

பூங்குடி கிராமத்தில் உலகமே அறியாமல், அந்த கிராமத்தின் எல்லைகள் மட்டுமே உலகம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ராமன். தன் ஆயாவுக்கு கோயிலில் இருந்து சிதறு தேங்காய் பொறுக்கிக்கொடுப்பதும், ஆயா சுட்டுத்தரும் இட்லிகளை மூக்குப்பிடிக்க வெட்டுவதும், மற்ற நேரங்களில் பள்ளிக்கூட சிறுவர்கள் சிலருடன் சுற்றித்திரிவதும்தான் தன்னுடைய வேலை, அதைத்தாண்டி உலகத்தில் வேறெந்த விஷயமும் இல்லையென்ற ரீதியில் வாழ்ந்து வரும் இளைஞன். அவனுக்கும் ஒரு வீக்னஸ். எதையாவது பார்த்து அதிர்ச்சியடைந்தால் காக்கா வலிப்பு வந்து அவஸ்தைப்படுவான். அந்த கிராமத்தில் ஒரு மைனர். தனது பணக்கார திமிரில் கிராமத்து மக்கள் அனைவரையும் கிட்டத்தட்ட தனது அடிமையாக நடத்துபவன். அவனது தங்கை தேவகி நகரத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு காரில் கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, குளக்கரையில் காக்காவலிப்பு வந்து துடித்துக்கொண்டிருக்கும் ராமனை, தன் சாவிக்கொத்தைக்கொடுத்துக் காப்பாற்றுகிறாள். படித்துறையில் அவள் தலை யிலிருந்து விழும் மல்லிகைப்பூவை ஏதோ புனிதப்பொருள்போல எடுத்து அணைத்துக் கொள்ளும் அவன், அந்த சம்பவத்தை தன் நண்பர்களான சில்லுண்டிகளிடம் சொல்லும்போது, அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். மறுநாள் அவர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது, தோழிகளுடன் அந்தப்பக்கமாக வரும் அவள் அவனைப்பார்த்து சிரித்து விட்டுப்போக, அந்த சந்தோஷத்தில் சிறுவர்களுடன் ஆடிப்பாடுகிறான். இன்னொருநாள் இரவில் வீட்டில் ஆயா இல்லாத நேரம், மழைக்காக அவன் வீட்டில் ஒதுங்கும் தேவகி ராமனிடம் கூழ் வாங்கி சாப்பிட்டுப்போகிறாள். இதையெல்லாம் சிறுவர்களிடம் அவன் சொன்னதும், அவர்கள் ஒட்டுமொத்தமாக, 'டேய் சாப்பாட்டு ராமா. தேவகியம்மா உன்னைக் காதலிக்கிறாங்கடா. நீயும் உன் காதலை அவங்க கிட்டே சொல்லிடு. சம்மதிச்சாங்கன்னா, வர்ர ஞாயத்துக்கிழமைதான் எங்களுக்கு ஸ்கூல் லீவு. அன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிடு' என்று அப்பாவித்தனமாக உசுப்பேத்தி விட, அதை நம்பிய அவனும் கொஞ்சமும் யோசனையில்லாமல் நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருக்கும் தேவகி வீட்டு மாடி ஜன்னல் வழியாக உள்ளே குதித்து தன் காதலைச்சொல்ல, அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த ரெண்டுங்கேட்டானுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று எண்ணும் அவள், தனக்காக எதையும் செய்வதாகச்சொல்லும் அவனிடம் 'எங்கே எனக்காக இந்த மாடியிலிருந்து குதி' என்று சொல்ல, அவனும் எந்த யோசனையுமின்றி குதித்து விட அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த களேபரத்தில் விழித்துக் கொள்ளும் மைனர், கால் உடைந்து கிடக்கும் ராமனை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான். ஆஸ்பத்திரியில் ராமனைப் பார்க்க வரும் தேவகியை ஆயா திட்டி அனுப்புகிறாள். ஆஸ்பத்திரியில் குண்மாகி வீட்டுக்குத்திரும்பும் ராமனை, மீண்டும் அரைடிக்கட்டுகள் சந்தித்து, தேவகிக்கு வேறிடத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாகவும், அவன் நேராக மைனரிடம் போய் பெண் கேட்கும்படியும் ராமனைத் தூண்டிவிட, மைனரின் பங்களாவுக்குப்போகும் ராமன் பெரிய பணக்காரர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருக்கும் மைனரிடம் விஷயத்தைச்சொல்ல, அனைவரும் சேர்ந்து ராமனை அடித்து துவைக்கிறார்கள். மைனர் சவுக்கால் விளாசுகிறான். தன் தங்கையை கல்யாணம் செய்ய பெரிய பெரிய பணக்காரர்களெல்லாம் போட்டிபோடுகிறார்கள் என்று சொல்லும் மைனரிடம், தானும் பெரிய லட்சாதிபதியாக வந்து தேவகியை பெண் கேட்கப்போவதாக சவால் விடுகிறான். கடைசியாக மைனர் எட்டி உதைக்க, வாசலில் போய் விழும் ராமனுக்கு மீண்டும் காக்காவலிப்பு வர, காம்பவுண்டின் இரும்பு கேட்டை எட்டிப்பிடிக்கும் அவனது காக்காவலிப்பு நிற்கிறது.

'என்ன ஆயா, பணமாம் பெரிய பணம். நானும் பணக்காரனா வந்து அந்த மைனர்கிட்டே பொண்ணு கேட்கிறேனா இல்லையா பாரு' கொடியில் கிடக்கும் துணிகளை சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டே பேசும் ராமனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் ஆயா விழித்துக் கொண்டு நிற்க, அந்நேரம் அங்கு வரும் தேவகி, ராமன் பணக்காரணாக திரும்பி வரும் வரை அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்ல, ராமன் சென்னைக்கு ரயிலேறுகிறான். அங்கு கைவண்டி இழுத்து, ஒவ்வொரு பைசாவாகச்சேர்த்து வைக்கும் ராமனை ஒருநாள் இரவு சந்திக்கும் அவனது சிறுவர்பட்டாளத்தில் ஒருவனான மூக்குறுஞ்சி, தான் இப்போது சினிமாவில் நடிப்பதாகவும், ராமனையும் சினிமாவில் சேர்த்து விடுவதாகவும் சொல்லி ஸ்டுடியோவுக்கு அழைத்துப்போக, அங்குள்ள இயக்குனருக்கு ராமனின் அப்பாவித்தனம் பிடித்துப்போக, சினிமாவில் நடிக்க வைக்கிறார்.

இதனிடையே பூங்குடி கிராமத்தில் ஒரு வீட்டில், விருந்தினராகத்தங்கியிருக்கும் பட்டணத்து படித்த இளைஞனொருவன், கோயிலில் தவறுதலாக தன் தங்கையின் மீது இடித்துவிட்டதை யறிந்த மைனர், அந்த இளைஞன் தங்கியிருக்கும் வீட்டுக்காரரை அழைத்து, அவ்விளைஞனை ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்று எச்சரிக்க, இதையறிந்த அவ்விளைஞன் கிராமத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு சரியான பதில் கொடுப்பேன் என்று புறப்பட்டுப்போகிறான். ஆனால் மைனரும் இளைஞனும் நேரடியாக சந்திக்கவேயில்லை

திரைப்பட நடிகரான ராமு, கோடீஸ்வரனாக கிராமத்துக்கு வர, அது யாரென்று அறியாத மைனர் பெரிய வரவேற்பளிக்கிறார். தன்னை யாரென்று அடையாளம் காட்டும் ராமன், தன்னை முன்னர் அடித்தபோது பக்கத்திலிருந்த பணக்காரர்கள் மத்தியில் மைனரை அடிக்க சாட்டையை
எடுக்கிறான், அடிக்கவில்லை. பெட்டி நிறைய பணத்தை மைனர் மீது கொட்டி, தேவகியைத் திருமணம் செய்து தரும்படி கேட்க, இப்போது தானே விரும்பினாலும் தன் தங்கையை திருமணம் செய்து தர முடியாதென்றும், அவள் ஏற்கெனவே திருமணமாகி கணவன் வீட்டுக்குப்போய் விட்டாளென்றும் சொல்ல அதிர்ச்சியில் ராமு நொறுங்கிப்போகிறான்.

ஏமாற்றத்துடன் சென்னை திரும்பும் ராமன், ஒருநாள் காரில் போகும் நேரம், ரோட்டோரத்தில் தேவகியைக் காண, ராமுவைப்பார்த்து அவள் ஓட, விரட்டிச்சென்று பார்க்கும் ராமுவுக்கு அதிர்ச்சி. அவள் கணவனைப்பிரிந்து ஒரு குடிசையில் கைக்குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையில் ராமுவுக்கு ஏற்பட்டதைவிட பலத்த அடியும் ஏமாற்றமும். அவளது கதை ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது. அவள்விட்டு வந்த கணவன் வேறு யாருமல்ல, கிராமத்தில் மைனரால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞன்தான். (ஆனால் மைனரும் அவ்விளைஞனும் ஏற்கெனவே சந்தித்திருக்கவில்லை).தன் குடிகார நண்பர்கள் மத்தியில் கணவன் அவளைப்பாடவிட்டு அவமானப்படுத்த, அதில் ஒருவனால் தன் கற்புக்கு களங்கம் நேர முற்படும்போது, அதையும் கணவன் கொச்சைப்படுத்திப்பேச கணவனை விட்டுப் பிரிந்து தனியே வாழ்கிறாள். மனபாரத்தோடு அவளைப்பிரிந்து ராமு வீட்டுக்கு வர, ஒரு நள்ளிரவில் தேவகி கைக்குழந்தையுடன் அவனைத்தேடி வருகிறாள். மீண்டும் தன் வீட்டுக்கு வந்து தன்ன மானபங்கப்படுத்த முற்பட்ட கயவனைக்கொன்று விட்டதாகவும், தான் சிறையிலிருந்து திரும்பி வரும் வரை தன் பெண் குழந்தையை ராமுதான் வளர்க்க வேண்டுமென்றும் சொல்லி சிறைக்குப்போக..... பெண் குழந்தை ராமுவின் கஸ்ட்டடியில் வளர்ந்து பெரியவளாகிறாள்.

கல்லூரியில் படிக்கும் அவளுக்கு, அம்மாவுக்கு நேர்ந்ததைப்போன்ற அதே ஒரு சூழ்நிலை. மாணவன் போர்வையில் ஒரு கயவனால் அவளது கற்பு பறிபோகும் நேரம் அங்கு அவளைத்தேடி வரும் ராமு தன் வளர்ப்பு மகளைக்காப்பாற்றும் முயற்சியில், அந்தக்கயவனைக் கொன்று விடுகிறார். நடந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சிக்கும் மகள், ஒரு டாக்ஸியில் ராமுவை அழைத்துப்போக, அந்த டாக்ஸியின் ட்ரைவர் வேறு யாரும் அல்ல. அவளுடைய அப்பாதான். ராமு பெரிய நடிகர் என்ற முறையில் அவர் அடையாளம் தெரிந்து கொள்ள, அவர் பேசும் பேச்சைக்கொண்டு அவர்தான் தேவகியின் கணவர் என ராமு தெரிந்து கொள்கிறார். வீட்டுக்குப்போனதும் முதல் வேலையாக போலீஸுக்கு போன் செய்யும் ராமு, தான் செய்த கொலையைப்பற்றிச்சொல்லி தன்னைக் கைது செய்ய வரும்படி அழைக்கிறார். தேவகியையும் அவளது கணவரையும் சேர்த்து வைத்த பின் ராமு சிறைக்குச்செல்வதோடு படம் நிறைவடைகிறது.

படத்தின் இறுதியில் நடிகர்திலகம் சிறைக்குச்செல்லும் வரிசைப்படங்களில் ராமன் எத்தனை ராமனடி படமும் ஒன்று (அவரது பட்டியலில் புதிய பறவை, கவரிமான் என்று நிறைய உண்டு).

அவர் நடிகராக மாறியதும் பாத்திரத்தின் பெயரும் விஜயகுமார் என்று மாறி விடும். இதை வைத்துதான் இந்தப்படத்தின் தயாரிப்பாளரகளான அருண்பிரசாத் மூவீஸார் பின்னாளில் தங்களுடைய 'பொண்ணுக்குத் தங்க மனசு' படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு நடிகருக்கு விஜயகுமார் என்று பெயர் சூட்டினர். அவர் வேறு யாருமல்ல, இப்போது குணச்சித்திர நடிப்பில் கொடிகட்டிப்பறக்கும் விஜயகுமார்தான்.  

நடிகர்திலகம் நடித்த படங்களில் இது ஒரு புதிய பரிமாணத்தை காட்டிய படம். அவரது அறிமுகமே வித்தியாசமாக இருக்கும். " 150 வாழைப்பழம், 60 முறுக்கு, ஒரு முழு பலாப்பழம், ஒரு டஜன் சோடா அனைத்தையும் பத்தே நிமிடங்களில் சாப்பிட்டு சாதனை புரிவான் நம்ம சாப்பாட்டு ராமன்" என்று அறிவித்ததும் சப்பணமிட்டு உட்கார்ந்த நிலையில் நம்மைப் பார்த்து வெகுளிச் சிரிப்போடு கும்பிடுவார். (அன்றைக்கு ஒரு கதாநாயகன் இந்த மாதிரி ரோலில் நடிப்பதற்கும், இப்படி ஒரு அறிவிப்புடன் அறிமுகமாவதற்கும் தனி 'தில்' வேண்டும். இவரைப்பொறுத்த வரை எப்போதுமே இமேஜாவது மண்ணாவது. அதையெல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேறு ஆட்கள் இருந்தனர்). அப்போது வரிசையாக வந்த படங்களைப் பாருங்கள்... 'எதிரொலி'யில் திருட்டு வக்கீல், இந்தப்படத்தில் சாப்பாட்டு ராமன், சொர்க்கத்தில் குடிப்பவர், எங்கிருந்தோ வந்தாளில் பைத்தியம். ரொம்பத்தான் தைரியம். இப்போதுள்ள நிலை வேறு. அப்போதெல்லாம் கதாநாயகன் என்றால் அப்பழுக்கில்லாத சுத்தமான அவதார புருஷன் என்று காட்டப்பட்டு வந்த காலம்.

அவர் நடிகரானதும் எப்படி முன்னேறுகிறார் என்பதைக்காட்ட இயக்குனர் மாதவன் புது யுக்தியைக் கையாண்டிருந்தார். அவர் நடித்த படிக்காத மேதை, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், எங்க ஊர் ராஜா, தெய்வமகன் ஆகிய படங்களின் முக்கிய காட்சிகளைக்காட்டி அவற்றுக்கிடையே மக்கள் ஆரவாரத்துடன் 100-வது நாள், வெள்ளி விழா என்ற எழுத்துக்களைக் காட்டினார். (இதே உத்தி பின்னர் ஜெயலலிதா நடித்த 'உன்னைச்சுற்றும் உலகம்' படத்திலும் கையாளப்பட்டது).

ரசிகர்களுக்கு ரொம்ப நாளாக ஒரு ஏக்கம். இவர் என்னென்னவோ வரலாற்று பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். ஆனால், 'சிவாஜி கணேசன்' என்ற பெயரை அவருக்குப்பெற்றுத்தந்த மாவீரன் சத்ரபதி சிவாஜியாக வேடமிட்டு நாம் பார்க்கவேயில்லையே. பெரியார் செய்த பாக்கியம் இந்த சிறியார்களுக்கும் கிடைக்கவில்லையே என்று ஏங்கிய ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம் இத்திரைப்படத்தில் சிவாஜியாக நடிக்கும் காட்சியில் வருவார். அறுபதுகளுக்கு முன் வந்த படங்களில் வந்த ஓரங்க நாடகம் போல அனல் பறக்கும் வசனங்கள். ஒருகாலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தை தாக்கி எழுதப்பட்ட 'யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க', 'வாழ வந்த வஞ்சகக்கூட்டம் மக்களின் மடமையைக்கொண்டே வளரும் கூட்டம்' போன்ற வசனங்கள் 'பூமராங்' ஆக மாறி தங்களையே திருப்பித்தாக்கும் என்று அன்றைய (ஒன்றுபட்டிருந்த) தி.மு.க.வினர் நினைத்திருக்க மாட்டார்கள். சந்திரமோகன் நாடகத்துக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்த வசனங்கள் பொருத்தமான முறையில் செருகப்பட்டிருந்ததை ரசிகர்கள் புரிந்து கொண்டு உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர்.

படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும்  நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ கொலை கொலையா முந்திரிக்கா விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.

சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.

எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமு வுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்'  இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக் காட்டி அதையே, ஸ்ருதி மாறும் போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.

இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க் கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக் கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம்.

கே.ஆர்.விஜயாவின் ஃப்ளாஷ்பேக் கதையில் வரும் 'நிலவு வந்து பாடுமோ' பாடல் மட்டும் என்னவாம். இந்தப்பாடலிலும் மெட்டு மாறும்... சரணத்தில்

'தலைகுனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலைகுலைந்து போனபின் நீதி எங்கு வாழுமோ'
என்ற வரிகள் ஒரு மெட்டு

'வாழட்டும் மனது போல போகட்டும்
பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்'
என்ற வரிகள் வேறொரு மெட்டு.
(பாடல் பாடி ரிக்கார்ட் பண்ணியபிறகுதான் படமாக்குகிறார்கள். படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயா காலை மிதிக்க '' என்று கத்தும் அவர் பின்னர் அதை அப்படியே ராகமாக்கிப் பாடுகிறார். எங்கே அது மாதிரிப்பாடுங்கள் என்று சுசீலாவிடம் சொல்லியிருக்க, அப்படியே சுசீலா பாடியிருப்பார் பாருங்கள்... வாவ்) பாவம், இதையெல்லாம் சொல்லிக்காட்ட அன்றைக்கு அவர்களுக்கு எந்த டி.வி.சேனலும் இல்லை. இன்றைக்கு ஒண்ணேமுக்க்கால் படத்துக்கு இசையமைத்தவர்களும், ரெண்டேகால் பாடல் (??) பாடியவர்களும் தங்களின் அனுபவத்தை (???????) இருபது சேனல்களில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

(ரசிகர்கள் கவனத்துக்கு.... நடிகர்திலகத்துக்கு கதாநாயகியுடன் டூயட் பாடல் இல்லாத பல படங்களில் இப்படமும் ஒன்று)

Saturday, January 22, 2011

'சிவந்த மண்' நினைவுகள்

வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.

ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் CAMERA ANGLES செட் செய்த இயக்குனர் SREEDHAR க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்

சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.

உதாரணத்துக்கு சில:

1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.

2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.

3)  எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.

4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.

5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.

6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.

7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.
                       
8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.

9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.

10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')

11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.

12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).

13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.

14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".

இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....

".......
அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.

".........
திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".

"
பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).

"
ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)  

"
இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)
இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.

இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.  

15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).

16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.

17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).  

'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.

('
ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)
இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).

 எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.

1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.

சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம்  ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.

அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.

குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100  நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.

அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.