Friday, October 14, 2011

கணிணி இல்லையா?. கால்நடைதான்

முன்பெல்லாம் விமானப்பயணம் என்பது பெரிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய பயணமாக இருந்து வந்தது. சரி, இப்போது என்ன, அது ஏழைகளின் வாகனமாக மாறி விட்டதா?. அதுதான் இல்லை. மாறாக இதுவரை ஏழைகளின் வாகனமாக இருந்து வந்த ரயில் பயணம், பஸ் பயணம் ஆகியவையும் இப்போது பணக்கார்களின் வாகனமாக ஆகிவிட்டது. விமானப்பயணம் செல்ல வேண்டுமானால் அதிக பட்சம் ஒரு ட்ராவல் ஏஜென்ஸியை அணுகினால் போதும். ஆனால், ரயில் பயணம், (இப்போது பஸ் பயணமும் சேர்ந்துகொண்டது. உபயம்: இன்றைய த்மிழ்நாடு அரசு) செல்ல வேண்டுமானால் முதலில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும். நீங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ண கற்றுக்கொள்ள வேண்டும், அடுத்து இண்ட்டர்நெட் கனெக்ஷன் வாங்க வேண்டும். அதன்பிறகே ரயில் பயணம் அல்லது பஸ் பயணம் செல்ல வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் காரணம், இந்த வசதிகொண்டவர்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே செய்துகொள்ளும் 'ஆன்லைன் புக்கிங்'. சரிப்பா, வசதி படைத்தவர்களுக்கு கால் நோகாமல் புக்கிங் செய்துகொள்ள இந்த வசதிகளை அறிமுகப்படுத்தினாலும், அதுக்கு பாதி இடங்களை ஒதுக்கிக்கொண்டு, பாதி இடங்களையாவது ரயில்வே ஸ்டேஷனில் கியூவில் கால்கடுக்க நிற்கும் அன்றாடங்காய்ச்சிக்கு ஒதுக்கலாமல்லவா?. அதை செய்ய மாட்டார்களாம்.
ஊருக்குச் செல்வதற்காக கால்கடுக்க நெடுந்தூரம் மக்கள் கியூவில் நிற்கும்போது, கவுண்ட்டரைத் திறந்ததும் இரண்டே பேருக்கு கொடுத்து விட்டு 'ஃபுல்' ஆகிவிட்டது என்று அறிவித்ததும் ஏமாற்றத்தோடு செல்கிறானே அந்த ஏழையின் முகத்தை எந்த அரசியல்வாதியாவது நினைத்துப்பார்க்கிறானா?. அவனும் ஓட்டுப்போட்டுத்தானே நீ வந்து உட்கார்ந்தாய்?.

பண்டிகைக்காலங்களுக்கு சிறப்பு ரயில் என்று தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் அறிவிப்பார்கள். அதைப்பார்த்துவிட்டு அதிகாலையிலேயே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் கால்கடுக்க கியூவில் நிற்பவனுக்கும் அதே கதிதான். கவுண்ட்டரைத்திறக்கும்போதே 'ஃபுல்' என்று அறிவிப்பார்கள். அதாவது அத்தனை டிக்கட்டுகளையும் 'ஆன்லைன்' சோம்பேறிகள் வாங்கி விட்டார்களாம். ஏழை, நடுத்தரவாதிக்கு பட்டை நாமமாம்.
சரி, இதுவரை ரயில் பயணத்தில்தான் இந்த மோசடி, ஏமாற்றம் என்றால், இப்போது பேருந்திலும் ஆன்லைன் புக்கிங்கை துவக்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ரயில் டிக்கட் கிடைக்காவிட்டால் பஸ்ஸிலாவது போகலாம் என்று எண்ணியிருந்த ஏழை வாயில் மண் விழுந்து விட்டது. இனிமேல் கம்ப்யூட்டர் பிரகஸ்பதிகள், ரயில் டிக்கட் 'ஃபுல்' ஆனதும் பஸ் டிக்கட்டையும் வளைத்துப்போட்டு விடுவார்கள். இதில் இன்னொரு பெரிய மோசடி, 'ஆன்லைன்' புக்கிங் மூலம் பெருவாரியான டிக்கட்டுகளை ட்ராவல் ஏஜெண்ட்டுகள் புக் பண்ணி வைத்துக்கொண்டு, கடைசி நேரத்தில் வருவோரிடம் ஒண்ணுக்கு நாலாக கட்டணம் வசூலிப்பதுதான்.
இப்படி பல்வேறு வழிகளிலும் மோசடி நடக்கும் இந்த 'ஆன்லைன்' புக்கிங் தேவையா?. தேவையில்லையெனில் ஓட்டுப்போட்ட மக்கள் ஏன் சும்மாயிருக்கிறீர்கள்". ரயிலில் ஆன்லைன் புக்கிங்கை நீக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும். பஸ்ஸில் ஆன்லைன் புக்கிங்கை ஒழிக்க வேண்டுமென்று சட்டமன்றத்திலும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் உங்கள் எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் நிர்ப்பந்தியுங்கள். அப்படி குரல் கொடுக்காவிட்டால் அடுத்த கூட்டத்தொடர் முடிந்தபின் அவர்கள் வீடுகள் இருக்கும் இடங்கள் வெறும் மணல் மேடாகும் என்று எச்சரியுங்கள். முடிந்தால் அவர்களை தெருவில் இழுத்துப்போட்டு சாத்துங்கள். தப்பேயில்லை.
கேட்க பயமாக இருக்கிறதா?. கணிணி இல்லாதோர் இப்போதே குடும்பத்தோடு கால்நடைப்பயணம் துவங்குங்கள். இந்த தீபாவளிக்குப்புறப்பட்டால், அடுத்த தீபாவளிக்காவது திருநெல்வேலி போய்ச் சேர்ந்து விடலாம்.

Wednesday, October 12, 2011

அன்னமிட்ட கைகளுக்கு

"அன்னமிட்ட கைகளுக்கு...."  (இரு மலர்கள்)

'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.

திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.

ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.

கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.

இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.

'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க.......  எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே

கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி. (இது குறித்து ரோஜாரமணியுடன் (தற்போது நடிகர் தருணின் அம்மா)  சமீபத்தில் 'காமராஜர் அரங்கில்' நான் உரையாடியதை அடுத்த முறை விவரமாகத் தருகிறேன்).

எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு.

Enjoy audio here (song no: 61)

Tuesday, October 11, 2011

திருடன்

'திருடன்' படம் இப்போது பார்க்கும்போது மேலும் மெருகு ஏற்றப்பட்டதுபோல தோற்றமளிக்கிறது. மிக இயல்பான நடிப்பு. ஆம், இன்றைய கதாநாயகர்கள் (சிலர்), வில்லனைப்பார்த்து... 'டேய்' என்று ஆரம்பித்து தொடர்ந்து காட்டுக்கத்தல் போடுவதைப்பார்க்கும்போது (இவற்றையெல்லாம் 'ஓவர் ஆக்டிங்' என்று அழைக்க பலருக்கு வாய் வலிக்கும்), திருடன் படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ரொம்பவே இயல்பாக இருக்கிறது.

குளக்கரையில் அமர்ந்து கே.ஆர்.விஜயாவிடம், தான் சிறைக்குச்செல்ல நேர்ந்த காரணத்தைச்சொல்லும்போது, நாம் எங்கே எங்கே என்று ஏங்கும் அந்த ஃப்ளாஷ்பேக் வந்து விடுகிறது...

தனது பாஸ் பாலாஜி தூக்கியெறியும் தொப்பியை கீழே விழ விடாமல் குண்டுகளால் துளைத்து அதை ராமதாஸ் தலையில் விழவைக்கும்போது,  அவரது துப்பாக்கி சுடும் ஸ்டைல் ரொம்பவே மனதை அள்ளுகிறது. அதேபோல, சினிமா ஷூட்டிங் நடத்துவது போல, பட்டப்பகலில் கூடியிருக்கும் மக்களின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு, சேட் இடமிருந்து பணப்பெட்டியை கொள்ளையடிக்கும் காட்சியில் தொப்பியும் குளிர்க்கண்ணாடியுமாக காட்சியளிக்கும் ஸ்டைல், மற்றும் சசிகுமார் தம்பதியிடமிருந்து வைர நெக்லஸைக் கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் யுவராஜா மற்றும் யுவராணியாக அவரும் விஜயலலிதாவும் ஆடும் 'கோட்டைமதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலின்போது அவர் காட்டும் ஸ்டைல்.... இப்படி எதிலும் செயற்கைத்தனம் தெரியவில்லை.

பிளாக் மெயில் பண்ணி பணம் பறிப்பதற்காக ஒருகுழந்தையைத் திருடிவரச்சென்ற இடத்தில், குழந்தையைக்காணாமல் அதன் தாய் கதறி மூர்ச்சையாகி விழ, இறந்துபோன தன் தாய் மனக்கண்முன் வந்து சாபமிட, மீண்டும் குழந்தையை அவளிடம் ஒப்படைப்பதற்காக குழந்தையைக்கேட்டு, ஸ்டண்ட் மாஸ்ட்டர் திருவாரூர் தாஸுடன் அவர் போடும் சண்டைக்காட்சி அற்புதம். ஒல்லியான உடம்பாதலால் நல்ல சுறுசுறுப்பு, ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

சிறையிலிருந்து விடுதலையான பின் திருந்தி வாழும் தன்மீது எப்போதும் சந்தேகப்பார்வையை வீசும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (முன்னர் இவரைக்கைது செய்த) மேஜரிடம், ராஜு (சிவாஜி)யின் மகள் குதிரைப்படம் வரைந்து கேட்க, மேஜர் வரைந்து தரும் படத்தைப்பார்த்து குழந்தை ராணி,... 'அய்யோ இன்ஸ்பெக்டர் அங்கிள். இது குதிரையில்லே கழுதை' என்று சொல்ல...

'என்னப்பா ராஜு, நான் குதிரைப்படம் வரைந்து கொடுத்தால் உன் மகள் கழுதைன்னு சொல்றாளே'

'உங்களைப்பத்தி என்னைவிட என் மகள் நல்லா புரிஞ்சு வச்சிருக்கா'

'என்ன சொல்றே நீ..?'

'உங்களுக்குத்தான் குதிரைக்கும் கழுதைக்கும் வித்தியாசம் தெரியாதே'. (வசனம்: ஏ.எல்.நாராயணன்)

சிறையிலிருந்து ரிலீஸானதும் தான் எவ்வளவு முயற்சித்தும் தன்னுடைய கொள்ளைக்கும்பல் பக்கம் திரும்பாத சிவாஜியைப்பழி வாங்க, இறுதியில் பாலாஜியால் கடத்தப்பட்ட தன் மகள் ராணியை மீட்டு வரச்செல்லும்போது, மனைவி கே.ஆர்.விஜயாவிடம், விரக்தியான முகபாவத்துடன் அவர் பேசும் வசனங்கள் ரொம்பவே யதார்த்தம், 'திரும்பினால் நம்ம பொண்ணோடுதான் திரும்புவேன். இல்லேன்னா'..... கொஞ்சம் நிறுத்தியவர் 'எதுக்கும் எனக்கு இப்பவே வாய்க்கரிசி போட்டு அனுப்பிடு' என்னுமிடத்தில் அவருடைய முகபாவம் அபாரம்.

இப்படி ஒவ்வொன்றையும் பார்க்கும்போதும். 1980-க்கு முன் வந்த படங்கள் ஒவ்வொன்றும் அமோகமாக ஓடியிருக்க வேண்டிய படங்களாகவே எண்ணத்தோன்றுகிறது.