Monday, February 7, 2011

இளைய தலைமுறை


இளைய சமுதாயத்துக்கு, குறிப்பாக மாணவ சமுதாயத்துக்கு சீரிய கருத்துக் களைச் சொல்லவந்த நல்லதொரு திரைப்படம். நடிகர் திலகத்தின் படங்களில் மிக நீண்ட அல்ல, கொஞ்சம் நீண்ட தயாரிப்பில் இருந்த படம். 1977 மே மாத மத்தியில் வெளியானது. அதற்கு முன்னர் இரண்டு முறை தியேட்டர் பெயர் களோடு விளம்பரம் வந்து, தியேட்டர்களில் ரிசர்வேஷனும் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டு, தாமதமாக ரிலீஸ் ஆனதாம். அதனால் (அதிசயமாக) தீபம் படத்துக்கும் இளைய தலைமுறைக்கும் 123 நாள் இடைவெளி விழுந்தது
                     
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பட்டப் படிப்பு படித்த சம்பத் (நடிகர் திலகம்) வேலை தேடி சென்னைக்கு வர, அவருடைய நண்பன் (கே.விஜயன்), அவருக்கு பழக்கமான வீரராகவன் பிரின்ஸிபாலாக இருக்கும் கல்லூரியின் மாணவர் விடுதியில் 'வார்டன்' ஆக வேலை கிடைக்கிறது, (திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே அந்த வேலையில் சேர முடியும் என்ற நிபந்தனையுடன்).  ஊரில் தான் காதலிக்கும் வாணிஸ்ரீ யின் நினைவு மனதில் இருந்தபோதிலும், வறுமையான குடும்ப சூழ்நிலை அவரை அந்த வேலையை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. (பட்டம் வாங்கி வந்ததும், "அம்மா நான் பட்டம் வாங்கிட்டேன்" என்று அம்மாவிடம் காட்ட, "இதை என்ன விலைக்குப்பா விற்கலாம்?" என்று அம்மா (எஸ்.என்.லட்சுமி) அப்பாவியாக கேட்கும் இடம், குடும்பத்தின் வறுமை சூழலை காட்டும்).

'ராகிங்' என்பது புதிதாக வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக வேலையில் சேரும் வார்டனுக்கும்தான், என்ற வகையில் முதல் நாளில் மாணவர்கள் செய்யும் ராகிங்கும் அதை வார்டன் சம்பத் (நடிகர் திலகம்) முறியடிப்பதும் சுவையான காட்சிகள். மாணவர்களாக வருபவர்களில் (பழைய) ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜூனியர் பாலையா, பிரேம் ஆனந்த், ஜெயச்சந்திரன்,  ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் வார்டனை, (அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் தங்களுக்கு அடக்குமுறைகள் போல தோன்றுவதால்) தங்கள் எதிரிகளாக நினைத்து வெறுக்க, அவர்கள ஒவ்வொருவரையும் வார்டன் தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். ஒருகட்டத்தில் வார்டனை பழிவாங்குவதற்காக, தங்களுடன் எப்போதும் சேராமல் இருக்கும், குருக்கள் குடும்பத்து மாணவனுக்கு ஸ்ரீகாந்த் வலுக்கட்டாயமாக பெண் வேடம் போட்டு நள்ளிரவில் வார்டன் மேல் தள்ளிவிட்டு, அதை போட்டோ எடுத்து நோட்டீஸ் போர்டில் அம்பலப்படுத்த, அவமானம் தாங்காமல் அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்வது கொடூரம் என்றால், இன்னொரு பக்கம், ஊரில் சிவாஜியின் தந்தை இறந்து விட்டதாக வந்த 'தந்தி'யை ஜெயச்சந்திரன் மறைத்து விடுவது சோகம். மகன் வருவான், வருவான் என்று எதிர்பார்த்து (தந்தி மறைக்கப்பட்டு) மகன் வராததால் இறுதிச்சடங்கையும் முடித்து விட்டு, விதவைக்கோலத்துடன் தன்னைத்தேடி தாய் வந்து நிற்கும் கோலம் கண்டு நடிகர்திலகம் உடைந்து நொறுங்கிப்போவாரே... அது சோகத்தின் உச்சம்.

ஒவ்வொரு மாணவனும் வார்டனால் திருத்தப்பட்டு, அவரது தூய உள்ளம் கண்டு அவர் பக்கம் வந்துசேர, ஸ்ரீகாந்த் மட்டும் கடைசி வரை திருந்தாத வில்லனாகவே இருந்து விடுவார். கிளைமாக்ஸ் காட்சியில் வார்டன் மீது திராவகம் நிரப்பிய பல்பை வீச, அதை அவர் தாம்பாளத்தால் தட்டி விட, திராவகம் ஸ்ரீகாந்த் மீதே விழுந்து அவரைப்பழி வாங்கி விடும் கட்டம் நல்ல முடிவு.

இன்னொரு பக்கம் வார்டனின் சொந்த ஊரில், அவரது காதலி வாணிஸ்ரீ யின் முறைமாமன் (எம்.ஆர்.ஆர்.வாசு) அவரை திருமணம் செய்துகொள்ள தீவிரமாக இருக்க, வாணிஸ்ரீ யின் அம்மா எம்.என்.ராஜம், தன் தம்பிக்கே அவளை மணம் முடிக்க வேண்டும் என்றும் துடிக்க, அப்பா (வி.கே.ஆர்) தன் மகளின் காதலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். 'திருமணம் செய்தவர்கள் வார்டன் வேலையில் நீடிக்க முடியாது' என்ற கல்லூரியின் சட்ட விதிகளின்படி, (வாணிஸ்ரீ யை மணந்து கொள்வதற்காக) வேலையை விட்டு விலக முடிவு செய்ய, வார்டனை விட்டு பிரிய மனமில்லாத மாணவர்கள் 'தங்களை தீய பழக்கங்களில் இருந்து திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்த வார்டன், தங்களை விட்டுப்போவதன் மூலம் தாங்கள் மீண்டும் தவறான வழிக்கு திரும்ப வேண்டுமா?' என்று கண்கலங்கி நிற்க, அதைப்பார்த்து நெகிழ்ந்துபோன வாணிஸ்ரீ தன் காதலை அந்த மாணவர்களுக்காக தியாகம் செய்ய முடிவு செய்ய, நடிகர் திலகம் செய்வதறியாது திகைத்து நிற்க.... எல்லோர் பேசுவதையும் வாய்மூடி கேட்டுக் கொண்டிருக்கும் பிரின்ஸிபால் வீரராகவன், "இதோ பார் சம்பத், உன்னுடைய சின்ஸியரான வேலை பற்றி மேனேஜ்மெண்டுக்கு எடுத்து சொல்லி, கல்லூரியின் தேவையில்லாத ஒரு சட்டத்துக்காக ஒரு நல்ல வார்டனை இழக்க வேண்டுமா என்று வாதாடினேன். நீ திருமணம் செய்து கொண்டு இந்த வார்டன் வேலையில் நீடிக்க கல்லூரி நிர்வாகம் சம்மதம் அளித்து விட்டது" என்று சொல்ல மாணவர்களுக்கும், வருங்கால மனைவிக்கும் ஒருசேர மகிழ்ச்சி பொங்க, முடிவு சுபம்.

நகைச்சுவைக்கு, விடுதியில் மெஸ் நடத்தும் 'சர்மா' வாக வரும் நாகேஷும் அவரது உதவியாளனாக வரும் பையனும். நாகேஷின் மலையாள வாடை கலந்த பேச்சு நேச்சுரல். (அவருக்கு சொல்லணுமா?). ஒவ்வொரு வசனமும் சரியான சிரிப்பு.

மல்லியம் ராஜகோபால் கதை வசனம் எழுத கிருஷ்ணன் பஞ்சு இயக்கி யிருந்தனர். வசனம் அருமை. குறிப்பாக, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும் இடத்தில், அந்த ஸ்ட்ரைக்கை கண்டித்து நடிகர்திலகம் பேசும் வசனம் சூப்பர். (அதில் ஒரு துளி... "ஊரில் உங்க அப்பா சாகக்கிடக்கிறார். நீ உடனே போக வேன்டிய கட்டாயம். ஆனால் ஸ்ட்ரைக் நடக்கிறது. வண்டிகள் ஓடவில்லை. உன்னால் போக முடியவில்லை. உன் தந்தையின் முகத்தைக்கூட நீ கடைசியாக பார்க்க முடியாமல் செய்கிறது இந்த ஸ்ட்ரைக். இது ஏன் உங்க மூளையில் ஸ்ட்ரைக் ஆகலை?")

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 'இளைய தலைமுறை... இனிய தலைமுறை' பாடலை மட்டும் மல்லியம் ராஜகோபால் எழுதியிருந்தார். டைட்டில் ஓடும்போது எம்.எஸ்.வியும், படம் துவங்கியதும் (நடிகர் திலகத்துக்காக) டி.எம்.எஸ்ஸும் பாடியிருப்பார்கள். நல்ல பொருள் பொதிந்த பாடல். பட்டம் வாங்கியதும் நடிகர் திலகம் சக மாணவர் களுடன் (கல்விக்கண் திறந்த) காமராஜரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதாக காட்டியிருப்பது அருமை.

நடிகர்திலகம், வாணிஸ்ரீ பாடும் டூயட் பாடலான 'யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஸ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடலும் நன்றாக அமைந்திருக்கும். அடையாறு ஆலமரத்தின் பிரம்மாண்ட விழுதுகளுக்குள் கேமரா நுழைந்து நுழைந்து படமாக்கியிருக்கும் டூயட் பாடல் கண்ணுக்கு விருந்து (இப்போது அந்த ஆலமரம் இல்லை) 

இருவருக்கும் காதல் அரும்பும் முன்னர், குட்டை பாவாடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் தெருவில் செல்லும் வாணிஸ்ரீ யை கிண்டல் செய்து, நடிகர் திலகம் பாடும்

"சிங்கார தேர்கூட திரைமூடி போகும் - அதுகூட உனக்கில்லையே
செவ்வானம் தனைக்கூட மேகங்கள் மூடும் - மூடாத வெண்முல்லையே"

என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் அருமை. குடகு மலை மெர்க்காராவில் படமாக்கப்பட்டிருக்கும். (முதலில், இந்தக்காட்சிக்காக 'பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு' என்ற பாடல் ஒலிப்பதிவாகி அது இசைத்தட்டில் கூட வந்ததாம்).


நடிகர்திலகத்தைப்பொறுத்தவரை, கதாபாத்திரத்துக்கு ஏற்ற நிறைவான நடிப்பைத் தந்திருந்தார். பெரிய குடும்பத்தைத் தாங்கவேண்டிய சூழ்நிலையில், எந்த வேலைக்கும் தயாராக சென்னை புறப்படும்போதும், சென்னையில் நண்பனின் வீட்டில் அவன் தங்கை தன்னை விரும்புவது கண்டு, அதை மிகவும் கண்ணியமாக தவிர்க்கும்போதும், விடுதியில் ஒவ்வொரு மாணவனின் நலனிலும் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களை நல்வழிப் படுத்தும்போதும், இறுதியில் மாணவர் நலனுக்காக தன் காதலை தியாகம் செய்ய காதலி வாணிஸ்ரீ துணியும்போது செய்வதறியாது திகைத்து நிற்கும்போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் குருக்கள் குடும்பத்து மாணவனின் தற்கொலைக்குக் காரணமான ஸ்ரீகாந்த் மீது அவர் காட்டும் ஆவேசமாகட்டும், ஸ்ட்ரைக் நடக்கும்போது அதை உடைக்க அவர் காட்டும் தீர்க்கமாகட்டும் பிரமாதம்.

இவருடன் இணைந்து வாணிஸ்ரீ, சங்கீதா (பொம்மை), K.விஜயன், வீரராகவன், V.K.ராமசாமி, M.N.ராஜம், S.N.லட்சுமி, M.R.R.வாசு, நாகேஷ், ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜூ.பாலையா,  Y.G.மகேந்திரன், ஜெயச்சந்திரன், பிரேம் ஆனந்த் ஆகிய அனைவரும் நிறைவான நடிப்பைத் தந்திருந்தனர்..

படம் பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராகத்தான் ஓடியது. ஆனால் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம். அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகர் திலகத்தின் சில படங்கள் நீண்ட கால தயாரிப்பில் இருந்தன. வைர நெஞ்சம் (Hero-72), ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, சித்ரா பௌர்ணமி, என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி இப்படி சில படங்கள். (ஆனால் எந்தப் படத்தின் தாமதத்துக்கும் நடிகர் திலகம் காரணமல்ல. தயாரிப்பாளர்களின் ஃபைனான்ஸ் பிரச்சினையே முக்கிய காரணம்). இவற்றில் பல படங்கள் வெற்றிப் படத்துக்குரிய சிறப்புகளைப் பெற்றிருந்தும், தாமதமான வெளியீடு வெற்றியை பாதித்தது.  

'இளைய தலைமுறை' படத்தைப்பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

Sunday, February 6, 2011

நீதி

நடிகர்திலகத்தின் 1972 வெற்றிப்பேரணியில் வீறு நடைபோட்ட இன்னொரு படம். மாபெரும் வெள்ளி விழாப்படமான 'வசந்த மாளிகை'யைத் தொடர்ந்து திரைக்கு வந்து அனைவரையும் கவர்ந்த படம். இரண்டு படங்களின் கேரக்டருக்கும்தான் எத்தனை வித்தியாசம்..!. மேட்டுக்குடியில் பிறந்த ஜமீன்தாருக்கும், ஒரு சாதாரண லாரி டிரைவருக்கும் நடிப்பில், பரிணாமத்தில், அதை வெளிப்படுத்துவதில் கிலோ மீட்டர் கணக்கில் வித்தியாசம். ஆம் அந்த ரோலுக்கு அந்த நடிப்பு, இந்த ரோலுக்கு இந்த நடிப்பு. எல்லா ரோலுக்கும் ஒரே மாதிரி நடிப்பதென்றால் இவர் தேவையில்லையே.


வழக்கமாக, தனது பிறந்த நாளான ஜனவரி 26 அன்று தனது சொந்தப்படங்களைத் திரையிடுவதை தன் வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, தீபாவளிக்கு வரவேண்டிய வசந்தமாளிகை, முன்னதாக செப்டம்பர் இறுதியிலேயே ரிலீஸ் ஆகிவிட்டதால் அந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி 26, 1972) 'ராஜா' படத்தை வெளியிட்டிருந்த பாலாஜி தனது நீதி படத்தை விரைவாக முடித்து 72 டிசம்பரிலேயே வெளியிட்டார். (முதலில் அவர் வெளியிடத் திட்டமிட்டிருந்தது 1973 ஜனவரி 26). இதன் மூலம் ஒரே ஆண்டில் நடிகர்திலகத்தை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்ற பெருமையைப் பெற்றார்.   

இந்தியில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ் ஜோடியாக நடித்து வெளிவந்த 'துஷ்மன்' படத்தின் கதைதான் 'நீதி'யாக தமிழில் எடுக்கப்பட்டது. ராஜா படத்தில் நடிகர் திலகத்துக்கு நிறைய டிசைன் டிசைனாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ, நீதி படத்தில் முதல் காட்சி முதல் வணக்கம் போடும் வரை ஒரே ட்ரெஸ்தான். ஆம், கைதியாக கிராமத்தில் தங்கியிருக்கும் ஒரு லாரி டிரைவர் வித விதமான உடையணிந்தால் லாஜிக் இடிக்காதா.. அதனால்தான். இடையில் 'எங்களது பூமி' பாடலின்போது மட்டும் ஒரு பைஜாமா ஜிப்பா அணிந்திருப்பார்,  

குடிபோதையில் லாரி ஓட்டி வரும்போது கவனக்குறைவினால் விடிகாலைப் பொழுதில் ஒரு விவசாயியையும் அவனது ஒரு மாட்டையும் கொன்று விட, நீதித்துறை அந்த டிரைவருக்கு அளிக்கப்போகும் சிறைத்தண்டனையால், பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு கிடைக்கப்போவது என்ன?. ஒன்றுமில்லை. அதற்கு மாறாக, கொலையாளியே அந்த கிராமத்தில் கைதியாக இருந்து, தண்டனைக்காலத்தில் அவர்களது நிலத்தை உழுது பயிரிட்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தால், கொலையாளிக்கும் தண்டனை கிடைத்தது போலிருக்கும், பாதிக்கப்பட்ட விவசாயக்குடும்பமும் பயனடைந்தது போலிருக்கும் என்ற வித்தியாசமான கருவில் உருவானதுதான் கதை. ஆம் வழக்கமான அரைத்த மாவு அல்ல. இதுவரை பார்த்திராத புதிய மாவு.

நீதிபதியாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், தன்னிச்சையாக இப்படி ஒரு வித்தியாசமான தண்டனையைக் கொடுக்காமல், தன்னுடைய இந்த பரீட்சாத்த முயற்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதும், அதற்கு நாகையா தலைமையிலான ஐந்து நீதிபதிகளடங்கிய 'ஃபுல் பெஞ்ச்' அனுமதியளிப்பதும், படத்துக்கு முதுகெலும்பான, ஒத்துக்கொள்ளத்தக்க காட்சியமைப்பு.

தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலாஜியால் கிராமத்தில் கொண்டுவந்து விடப்பட்ட டிரைவர் ராஜாவுக்கு (நடிகர் திலகம்) காவலாக கான்ஸ்டபிள் கன்னையா (சந்திரபாபு). தங்கள் குடுமபத்தலைவனும், குடும்பத்துக்கு அச்சாணியாகவும் இருந்த விவசாயியைக் கொன்று விட்டு, தங்கள் வீட்டுக்கே கைதியாக வந்திருக்கும் ராஜாவை, இறந்தவனின் மனைவி சீதா (சௌகார்), கண்ணில்லாத தாய் காந்திமதி, ஒரு காலில்லாத தந்தை எஸ்.வி.சுப்பையா, கல்யாணத்துக்கு நிற்கும் தங்கை ஜெயகௌசல்யா எல்லோரும் வெறுத்து ஒதுக்க, சௌகாரின் இரண்டு குழந்தைகளில் கடைசி பெண்குழந்தைதான் (பேபி இந்திரா) முதலில் அவனிடம் வந்து, தன் கள்ளம் கபடமில்லாமல் அவனிடம் பேசுகிறது.

"வாங்க, எங்கப்பாவை பாக்க வந்தீங்களா?. எங்க வீட்டுல ஒரு மாடு செத்துப் போச்சு. வேற மாடு வாங்க அப்பா வெளியூர் போயிருக்கு" என்று அந்த பிஞ்சு குழந்தை பேசும்போது, அந்த கைதிக்கு மட்டுமல்ல, நமக்கும் இதயம் சற்று இடம் பெயர்வது உண்மை. போதையில் கவனக்குறைவால் எவ்வளவு பெரிய மாபாதகம் செய்துவிட்டோம் என்று அந்தக் கைதியின் நெஞ்சில் ஈட்டியாய் தாக்குவதையும், குற்ற உணர்வால் குன்றிப்போவதையும் ரொம்ப அற்புதமான முகபாவத்தால் காட்டியிருப்பார் நடிகர் திலகம்.

நலிந்த குடும்பத்தின் பணத்தேவையை அறிந்து கொண்டு பண்ணையார் நாகலிங்கமும் (மனோகர்) அவரது எடுபிடியான எம்.ஆர்.ஆர்.வாசுவும் சேர்ந்து, இவர்களது நிலத்தை சொற்ப காசுக்கு அபகரிக்க முயல, விவரம் அறிந்த ராஜா சரியான நேரத்தில் வந்து அதை தடுத்துவிட, பண்ணையாருக்கும் ராஜாவுக்கும் பகை முற்றுகிறது.


விவசாயத்தைப்பற்றி எதுவுமே தெரியாத டிரைவர் ராஜா, ஒற்றை மாட்டை வைத்துக்கொண்டு சிறுவர்களின் துணையோடு நிலத்தை உழ முயற்சிப்பதும்,
 குழந்தைகளைக்காணாமல் தேடி வரும் சுப்பையா, கைதி ராஜாவை திட்டுவதும் கலகலப்பு. எப்படி படிப்படியாக அந்த வீட்டிலுள்ளவர்களின் மனதை மாற்றி தன்னைப்புரிந்துகொண்டு, அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் என்பதுதான் கதையின் சுவாரஸ்யமான நகர்வு. அம்மா திட்டினாள் என்பதற்காக ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போகும் குழந்தையைக் காப்பாற்றி அழைத்து வரும்போது குழந்தைகள் மனதில் இடம் பிடிக்கும் ராஜா, இறந்தவனின் தங்கை ஜெயகௌசல்யா விரும்பும் பையனையே திருமணம் செய்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது அவள் மனதிலும், அவளது திருமணம் நடைபெறும் கோயிலில் தாக்கவ்ரும் கும்பலின் அடிகளைத் தாங்கிக்கொண்டு தன் ரத்தத்தை சிந்தி அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதன் மூலம் சுப்பையா மற்றும் காந்திமதியின் மனதை மாற்றும் ராஜா, சௌகாரின் மனதை மாற்றி தன் பக்கம் திரும்ப வைத்து அவள் மன்னிப்பைப் பெற படாத பாடு படுகிறான்.

இதனிடையில் கிராமத்தில் 'பயாஸ்கோப்' படம் காட்டும் ராதாவுக்கும் (ஜெயலலிதா) ராஜாவுக்கும் ஏற்படும் மோதல் பின்னர் காதலாக மாறுகிறது. இந்தப்படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத பாத்திரம். தொட்டுக்கொள்ள ஊறுகாய். அவ்வளவுதான். ராஜாவை அடைவதில் இவருக்கும் மனோரமாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை. சந்திரபாபு, மனோரமா வெல்லாம் இருந்தும் சிரிப்புக்கு கடும் பஞ்சம். மனோரமாவின் டிராக்டரை ராஜா ரிப்பேர் சரி செய்யுமிடத்தில் மனோரமா பேசும் வசனங்களும், தன்னை 'அக்கா' என்று அழைத்த ஜெயலலிதாவுடன் சண்டை போடுமிடத்திலும் மனோரமாவின் முத்திரை.  

வில்லன் மனோகரின் அடியாட்களால் கடத்தப்பட்டு குடோனில்  அடைக்கப் பட்டிருக்கும் ஜெயலலிதாவை, தன் உடைகளைத்தந்து தப்பிக்க வைத்து அனுப்பி விடும் சௌகார் ஜானகியை, வில்லன் மனோகர் கற்பழிக்க முயல, கதறல் சத்தம் கேட்டு அங்கு வரும் கைதி ராஜா, பூட்டியிருக்கும் குடோன் கதவை லாரியால் மோதித்திறந்து, மனோகருடன் சண்டையிட்டு சௌகாரைக் காப்பாற்ற, ராஜாவின் நல்ல மனம் அறிந்துகொண்ட சீதா (சௌகார்), ராஜாவை மன்னித்து, தங்கள் குடுமபத்தில் ஒருவராக அவரை ஏற்றுக்கொள்கிறார்.

இதனிடையே ராஜாவின் தண்டனைக்காலம் முடிந்து அவரை அழைத்துப்போக வரும் இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம், அந்தக்குடும்பத்தினருடன் அந்தக் கிராமத்திலேயே ஆயுள் கைதியாக இருந்துவிடப்போவதாகச் சொல்லி ராஜா அவரை திருப்பி அனுப்பி விட, சோகமாக துவங்கிய படம் சுகமான முடிவு.

தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பாலாஜி தயாரித்த இந்தப்படம், அதிக பொருட்செலவோ, பிரம்மாண்டமான செட்டுக்களோ இல்லாமல், முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்ட படம். கிராமத்தின் வண்ண ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. ஒளிப்பதிவு மஸ்தான். மோகினிப்பிசாசு குடியிருப்பதாகச் சொல்லப்பட்ட மரத்தை வெட்டப்போன ராஜா, காலையில் செத்துப்போய் கிடப்பதாக நடிப்பதும், ஆரம்பத்திலிருந்து பெரிய மீசையுடன் வரும் ராஜாவிடம், மோகினிப்பேய் கதையைக்கேட்டுகொண்டே மீசையை நாவிதன் மழித்து விடுவதும் சுவையான இடங்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதியிருந்தார்.  

கவியரசர் கண்னதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாமே நன்றாக அமைந்திருந்தன. ஷோக்குப் பேர்வழியான டிரைவர் ராஜா, ஆரம்பத்தில் சாராயத்தைப் போட்டுக்கொண்டு ஆட்டக்காரி சி.ஐ.டி.சகுந்தலாவுடன் ஆட்டம் போடும், "மாப்பிள்ளையே பாத்துக்கடி மைனாக்குட்டி" என்ற பாடல். வட இந்திய 'கவாலி' ஸ்டைலில் டி.எம்.எஸ். சோலோ. பாடலின்போது நடிகர்திலகத்தின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் (குறிப்பாக வித்தியாசமான கைதட்டல்கள்) சூப்பர். ரசிகர்களின் கைதட்டல் பறக்கும். பாடல் முடிந்ததும் கே.கண்ணனுடன் ஒரு சின்ன சண்டைக்காட்சி. (இப்பாடல் முடிந்து, லாரி ஓட்டிபபோகும்போதுதான் விபத்து நடக்கும்).

கிராமத்தில் கைதியாக இருக்கும்போது, சாராயக்கடை வாசலில், குடிக்கப் போகும் கணவனைத்தடுக்கும் மனைவிடம் குடிகாரன் ஒருவன், 'நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன் தங்கம், இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிச்சுக்கிறேன்' என்று சத்தியம் செய்துவிட்டுப்போகும் கனவனைப்பார்த்து, அவன் சொன்ன வார்த்தையிலிருந்தே
"நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்" 
என்ற ரொம்ப ஃபேமஸ் பாடலின் பல்லவியைத் துவங்குவார். இந்தப்பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக கைதட்டல்கள். (பெண் ரசிகைகளுக்கு பிடிக்காவிட்டலும் கூட). இதுவும் டி.எம்.எஸ்.சோலோதான்.

இப்பாடல் முடியும் தறுவாயில், தங்கை ஜெயகௌசல்யாவுக்கும் அவருடைய காதலனாக வரும் பாலச்சந்திரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டதும், அவர்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக, தன்னுடைய குடிப்பழக்கத்தை விடுவதாக முடிவெடுப்பார். 'கடவுளே, எல்லாத்தையும் என்கிட்டேயிருந்து பறிச்சிக்கிட்ட மாதிரி, இதையும் பறிச்சிட்டியே' என்று சொல்லிக்கொண்டே சாராய பாட்டிலை, ஆற்றங்கரை கோயில் படிக்கட்டில் வீசியடிப்பார். ரசிகர்களுக்கு சந்தோஷம்.

பயாஸ்கோப் படம் காட்டும் ஜெயலலிதா பாடும் பாடல்
"ஓடுது பார நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்போண்ணு"
பி.சுசீலா தனித்துப்பாடியிருப்பார். இப்பாடலின் இடையே வரும் வரிகள்... (அப்போது வங்கதேசப்போர் முடிந்து, இந்தியா வெற்றியடைந்து, தனி வங்கதேசம் உருவாகியிருந்த நேரம்)
"வங்காளத்தில் சேனை போகும் வேகம் பாருங்க
இந்திராகாந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க"
இந்தக்கட்டத்தில், கோவையில் நடந்த நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் கூட்டமும், அதில் நடிகர்திலகம், பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசும் காட்சியும் காட்டப்படும். ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேட்கணுமா

கிளைமாக்ஸுக்கு சற்று முன்னால் வரும் பாடல்...
"எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி"
கிராம மக்கள் மொத்தமும் திரண்டு நடிகர்திலகத்தை வாழ்த்திப்பாடுவதாக அமைந்திருக்கும். பி.சுசீலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடன், மனோரமா, சந்திரபாபு ஆகியோரும் பாடியிருப்பார்கள். படம் முழுக்க ஒரே உடையுடன் வரும் நடிகர்திலகம், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தங்கை ஜெயகௌசல்யா எடுத்துக்கொடுத்த வெள்ளை ஜிப்பா, பைஜாமாவுடன் ஆடுவார். பின்னர் மீண்டும் கிளைமாக்ஸ் வரையில் பழைய கருநீல ஜீன்ஸ், ஷர்ட்தான்.

செண்டிமென்ட், சீரியஸ், பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் சி.வி.ராஜேந்திரன்.

சென்னையில் தேவிபாரடைஸ், பிரபாத், சரவணா அரங்குகளில் திரையிடப்பட்ட நீதி 99 நாட்களில் மாற்றப்பட்டது. அதற்கு கீழ்வரும் காரணத்தை சொல்வார்கள்....  

இந்தியில் இருந்து இப்படத்தின் கதையை வாங்கும்போது, இப்படம் நூறுநாட்கள் ஓடினால், கதைக்காக மேற்கொண்டு ஐந்து லட்சம் ரூபாய் (72-ல் அது பெரிய தொகை) தருவதாக பாலாஜி ஒப்பந்தம் போட்டிருந்தார் என்றும், அந்த ஒப்பந்தத்திலிருந்து தப்பிக்க, வேண்டுமென்றே '99' நாட்களில் படத்தை திரையரங்கிருந்து தூக்கி விட்டார் என்றும் பரவலாக ஒரு பேச்சு உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் இதை மெய்ப்பிப்பது போல தேவிபாரடைஸ் 'ஷீல்ட் காலரி'யில், மற்ற வெற்றிப்படங்களின் ஷீல்டுகளோடு, 'நீதி' படத்தின் '99வது நாள்'  PECULIAR  SHIELD ஒன்றை இன்றைக்கும் காணலாம்.  
நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான 'நீதி' திரைப்படத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

திருவள்ளுவர் சிலை

1968-ல் தமிழ்நாட்டில் திரு அண்ணாதுரை அவர்களை முதலவராகக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்தபோது, சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மும்முரமாயின. (முதல் மாநாடு மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் நடந்திருந்தது). இதையொட்டி நடத்தப்படவிருந்த பிரம்மாண்டமான ஊர்வலத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு, திரைப்படத்தயாரிப்பாளர் ஜெமினி அதிபர் திரு எஸ்.எஸ்.வாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்காக வாசன் அமைத்த குழுவில் ஏ.வி.மெய்யப்பச்செட்டியார், ஏ.எல்.சீனிவாசன், சாண்டோ சின்னப்பாதேவர் போன்றோர் இடம் பெற்றனர்.

உலகத்தமிழ் மாநாட்டின் இன்னொரு முக்கிய அம்சமாக, சென்னையில் தமிழறிஞர்கள் மற்றும் சான்றோர்களுக்கு சிலை அமைத்து பெருமைப் படுத்துவது என்ற தீர்மானத்தின் படி திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், பாரதியார், பாரதிதாசன், அவ்வையார், ஜி.யு.போப், வீரமாமுனிவர், கண்ணகி, வ.உ.சிதம்பரனார் இவர்களின் சிலைகளை அமைப்பதோடு முதலமைச்சர் அண்ணாவின் சிலையையும் நிறுவுவது என்று முடிவு செய்யப்பட்டது. கம்பர் சிலையை அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் கருத்திருமன் முன்னின்று செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். கண்ணகி சிலையை தமிழ்நாட்டு மாணவர்கள் நிதியளித்து நிறுவ முற்பட்டனர். திரு எம்.ஜி.ஆர். தங்கள் தலைவர் அண்ணாவின் சிலையை செய்து தர ஒப்புக்கொண்டார் (தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் அண்ணாசிலை அதுதான்). இளங்கோவடிகள் சிலை அமைக்கும் பொறுப்பை பூம்புகார் படத்தயாரிப்பாளர் முரசொலி மாறன் ஏற்றுக்கொண்டார்.

இந்த வரிசையில் திருவள்ளுவரின் முழு உருவச்சிலையை செய்து தரும் பொறுப்பை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஏற்றுக்கொண்டார். அதுவும் மற்ற சிலைகளெல்லாம் வெண்கலப்பூச்சு கொண்ட சிலைகளாக அமைந்திருக்க, திருவள்ளுவர் சிலை மட்டும் முழுக்க முழுக்க கருங்கல்லினால் செதுக்கப்பட்டு நிறுவப்பட்டது. ஏற்கெனவே சென்னை மயிலையில் ஒரு திருவள்ளுவர் இருந்தபோதிலும் உலகத்தமிழ் மாநாட்டின்போது மீண்டும் நிறுவக்காரணம், மயிலையில் உள்ள சிலையில் நெற்றியில் விபூதிப்பட்டை மற்றும் மார்பில் பூணூல் போன்றவை அணிந்திருப்பது போல அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் வள்ளுவரை அடக்கிவிட்டது போன்ற தோற்றம் தந்தது. மேலும் எல்லோருடைய சிலைகளும் சென்னை மெரீனா கடற்கரையில் வரிசையாக அமைக்கப்பட்டதால் திருவள்ளுவர் சிலையும் அங்கு நிறுவப்பட்டது.


திருவள்ளுவர் சிலையை முழுக்க முழுக்க தன் செலவில் செய்து தந்ததோடல்லாமல், அச்சிலை அமைக்க தானே வள்ளுவராக வேடம் தரித்து அதற்கு மாடலாக நின்றார் நடிகர்திலகம். சிலைவடிக்கும் வேலை நடந்துகொண்டிருத சமயம் தமிழறிஞர் ஒருவரை நடிகர்திலகம் ஆலோசனை கேட்டபோது, வள்ளுவரின் பக்கத்தில் முழங்கால் உயர பேழையொன்றை அமைத்து அதன்மீது ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டிருப்பது போல அமைக்குமாறு அவ்வறிஞர் சொல்ல, நடிகர்திலகம் அந்த யோசனையை ஏற்று அவ்வாறே செய்யுமாறு ஸ்தபதியைக் கேட்டுக்கொள்ள அப்படியே அமைக்கப்பட்டது

சென்னை மெரீனா கடற்கரையில், விவேகாநந்தர் இல்லம் எதிரே கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை, வள்ளுவரின் புகழையும், இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் நினைவையும், சிலை வழங்கிய நடிகர்திலகத்தின் பெருமையையும் என்றென்றும் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது.

Saturday, February 5, 2011

ஸ்ரீதர் VS ஜெயலலிதா

மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்கும் அவரால் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கும் இடையேயான உரசல், 1996 விகடனின் 'காலப்பெட்டகத்தில்' வெளியாகியிருந்தது.
இயக்குநர் ஸ்ரீதர், ஜெயலலிதா பற்றிய தன் மனக் குறையைச் சொல்லி விகடனுக்குப் பேட்டியளிக்க, அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. இந்தச் சர்ச்சையில், தயாரிப்பாளர் கோவை செழியனும் தனது கருத்தைச் சொல்ல, பரபரப்பானது விஷயம். இதோ, அந்தக் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்…

        “என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!”

புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது.கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ பட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்…

“என் உடம்பு நிலைமை இப்படி ஆகிப்போச்சுனு தெரிஞ்சதும், நான் எதிர்பார்த்த முக்கால்வாசிப்பேர் வந்து எனக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டுப் போனாங்க. முந்தாநாள் ரஜினி வந்து ரொம்ப நேரம் பேசிட்டுப் போனார். ஆனா, அஞ்சு வருஷம் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா போன்லகூட ‘என்ன’னு ஒரு வார்த்தை விசாரிக்கலே!

‘வெண்ணிற ஆடை’ படத்துக்காக நிர்மலாவையும் ஜெயலலிதாவையும் ஃபிக்ஸ் பண்ணிட்டோம். கடைசி நேரத்தில், ஜெயலலிதா அந்த ரோலுக்கு சரிப் படாதுன்னு நான் ஒதுக்கிட்டேன். அவங்க அம்மா சந்தியா ஓடிவந்து என்கிட்டே எப்படியெல்லாம் மன்றாடினாங்கனு பசுமையா நினைவிருக்கு! ‘வெண் ணிற ஆடை’ படத்துல ஜெயலலிதாவை நான் அறி முகப்படுத்தியது அவங்களுக்கு ஒரு திருப்புமுனை. அப்புறம்தான் வரிசையான சினிமா வாய்ப்புகள், எம்.ஜி.ஆர். அறிமுகம், அரசியல் வாழ்க்கை எல்லாம் வந்தது!” – தடித்த தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் துடைத்துக்கொண்டார் ஸ்ரீதர்.

“தெரிஞ்சவங்களுக்கு உடல்நலக் குறைவுன்னா நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்டே எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார். ‘கான்வென்ட்’ படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்குபோல!

தன்னோட வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த போது அவங்க எத்தனையோ பழைய நண்பர்களை எல்லாம் நினைப்பு வெச்சுக்கிட்டு அழைப்பிதழ் அனுப்பினாங்க. அப்பவும் எதிர்பார்த்தேன், நமக்கும் பத்திரிகை வரும்னு. ஏமாந்துட்டேன். சிவாஜி சார் வீட்டுலேர்ந்து பத்திரிகை வந்தது.

இருந்தாலும், அந்தக் கல்யாணத்துக்குப் போக என் மனசு ஒப்புக்கலே!
கடைசியா நான் படிச்ச அவங்களோட ஒரு பேட்டியில், ஏதோ ஒரு கன்னடப் படத்தில்தான் அவங்க அறிமுகம் ஆன மாதிரி சொல்லியிருக்காங்க. அந்தக் கன்னடப் படத்தோட அப்படியே விட்டிருந்தா, தமிழ்நாட்டு முதல்வர் பதவி வரை வந்திருப்பாங்களா? ‘வெண்ணிற ஆடை’ படம் பற்றியோ, என்னைப் பற்றியோ அவங்க எங்கேயும் சொல்லலை! அப்படிச் சொல்லணும்னு நானும் எதிர்பார்க்கலை. ஆனா, இப்படிப்பட்ட நாகரிகம் உள்ள ஒருத்தரைத்தான் நாம அறிமுகப்படுத்தினோம்னு நினைக் கறப்ப கஷ்டமா இருக்கு!”
விடைபெறும்போது ஸ்ரீதர் அழுத்தமாகச் சொன்னார்: “என்மேல் அனுதாபப்படற மாதிரி எதுவும் எழுதிடாதீங்க. நான் தன்னம்பிக்கையோட தைரியமாத்தான் இருக்கேன்!”

“யூ டூ மிஸ்டர் ஸ்ரீதர்?” – ஜெயலலிதா விளக்கம்!

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
உங்கள் 15.9.1996 ஆனந்த விகடனில், டைரக்டர் ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டியில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி, உங்கள் வாசகர்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதனால் சில விளக்கங்கள் அளிக்கவேண்டியது அவசியமா கிறது.

பொதுவாழ்வில் 14 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த போதிலும், நான் அவ்வளவாகப் பிறர் வீடுகளுக்கு விஜயம் செய்யும் பழக்கம் இல்லாதவள் என்பதனை, தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் அறிவார்கள். அதனாலேதான் எத்தனையோ முக்கிய நண்பர்களின் குடும்ப வைபவங்களுக்குக்கூட நான் போகாமல் இருந் திருக்கிறேன். என்னை நன்கு புரிந்துகொண்ட எவரும் என்னை வற்புறுத்துவதும் இல்லை. சிறு வயது முதல் நான் ஒரு சங்கோஜியாகவும், தனிமை விரும்பியாகவும் இருந்திருக்கிறேன். அது எனது உரிமை. முதலமைச்சர் ஆனதால், எனது வேலைப்பளுவும் 1991-க்குப் பின் அதிகரித்து வந்துள்ளது என்பதையும் மறந்துவிடலாகாது. டைரக்டர் ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்க இயலாமல் போனதன் காரணம் வேறேதுமில்லை. எனினும், அவர் தேறி வருகிறார் என்று உங்கள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் திரு.ஸ்ரீதரைப் பார்க்கவில்லை என்று அவர் வேதனைப்படலாம்; நியாயம்! ஆனால், தேவையில்லாமல் உண்மைக்குப் புறம்பான சில சம்பவங்களைக் கூறி என்னை வேதனைப்படுத்தியுள்ளாரே திரு.ஸ்ரீதர் என்று வருந்துகிறேன். You too Mr.Sridhar? ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, என்னைத் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் திரு.ஸ்ரீதர் என்பதனை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், அதனால்தான் நான் பின்னர் பொது வாழ்வில் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. திரு.ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகை களில் எத்தனை பேர் முதலமைச்சராகி உள்ளார்கள்? எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்துள்ளார்கள்? எத்தனை பேர் பேரும் புகழும் பெற்றுள்ளார்கள் என்பதனை அவரே கூறட்டும்.

நான் எனது நடன ஆற்றலால் சிறந்த நாட்டியக் கலைஞராக இருந்தேன்; நடிப்பாற்றலால் சிறந்த நடிகையாக இருந்தேன்; அறிவாற்றலால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரகாசித்தேன்; அரசியல் ஆற்றலால் முதலமைச்சராக வீற்றிருந்தேன் என்பது என் கருத்து. இக்கால கட்டங்களில் எனக்கு உறுதுணையாக, ஆசானாக, நண்பர்களாக, ஊன்று கோலாக, ஆலோசகர்களாக இருந்த வர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அத்தனை பேர் மீதும் அன்பும், பரிவும், பாசமும், நேசமும் கொண்டு நன்றி மறவாமல் வாழ்ந்து வருகி றேன். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதை நான் நன்கு அறிவேன். திரு.ஸ்ரீதர் போன்றோர் கூறும் கூற்றுக்களில் ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்பதனையும் நான் அறிவேன்.
என் தாயார் அவரிடம் போய் எனக்காக மன்றாடினார் என்று அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய். நடிகை ஹேமமாலினி, அதே படத்தில் வேறு பாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹேம மாலினியின் தாயார் திரு.ஸ்ரீதரைப் பார்த்து சந்தர்ப்பம் கேட்டார் என்று திரு.ஸ்ரீதரே என்னிடம் கூறியுள்ளார். அவ்வாறு திரு.ஸ்ரீதரால் உதாசீனப் படுத்தப்பட்ட ஹேமா, பம்பாய் சென்று அகில இந்திய அளவில் பெரிய நடிகையாகப் பேரெடுத்து, பேரும் புகழும் பெற்று வளர்ந்தாரே, அதுவும் திரு.ஸ்ரீதரால்தானா என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
‘இனிய உளவாக இன்னாத கூறல்’ அவசியமா திரு.ஸ்ரீதர்?

- ஜெ.ஜெயலலிதா
பொதுச்செயலாளர், அ.இஅ.தி.மு.க.,
முன்னாள் தமிழக முதலமைச்சர்.

ஜெயலலிதாவுக்கு ஸ்ரீதர் பதில்!

ஜெயலலிதா விகடனுக்கு (29.9.96 இதழ்) எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, “என் தரப்பில் மேலும் சில விளக்கங்கள் சொல்ல விரும்பு கிறேன்!” என்று டைரக்டர் ஸ்ரீதரிடமிருந்து போன். நேரில் சந்தித்தபோது ஸ்ரீதர் சொன்னார்…

“என் உடல்நிலை பற்றி பத்திரிகை வாயிலாகத் தெரிந்து, பத்திரிகை மூல மாகவே நலம் விசாரித்ததற்கு ஜெயலலிதாவுக்கு என் நன்றி! ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவல் களைச் சொல்லியிருப்பது அவர் தான்; நான் அல்ல!
ஜெயலலிதாவின் தாயார் திருமதி சந்தியா, என்னைச் சந்தித்துத் தன் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டபோது, தயாரிப்பாளர் கோவை செழியன் என்னுடன் இருந்தார். அவரைக் கேட்டால் உண்மையைச் சொல்வார்!

மேலும், ஜெயலலிதா சொல்வது போல், ஹேமமாலினியை நான் தேர்வு செய்தது ‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு அல்ல; ‘காதலிக்க நேர மில்லை’ படத்துக்கு! அப்போது அவர் முகம் குழந்தைத்தனமாக இருந்ததால், அறிமுகம் செய்ய வில்லை. ஆனால், அவர் இந்தியில் ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் அறிமுகமாகி நடிப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு நானும் ஒரு திருக்குறளை நினைவுபடுத்த விரும் புகிறேன் – ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு!”

தயாரிப்பாளர் கோவை செழியனைச் சந்தித்தோம்.

“டைரக்டர் ஸ்ரீதருக்கு ஜெயலலிதா பதில் எழுதிய கடிதத்தை விகடனில் நானும்
படித்தேன். ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.
நான் தயாரித்த ‘சுமைதாங்கி’ படம் வெளியான பிறகு, டைரக்டர் ஸ்ரீதர் முழுக்க முழுக்கப் புதுமுகங்களை வைத்து ‘வெண்ணிற ஆடை’ படத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.மற்ற தேர்வுகள் முடிந்து கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான், சிவாஜி தலைமையில் நடிகை சந்தியாவின் மகள் நடன அரங்கேற்றம் நடந்தது. ‘அவரை ஏன் கதாநாயகியாக்க முயற்சிக்கக் கூடாது?” என்று சந்தியாவுக்கு போன் செய்து வரவழைத்துப் பேசி னோம். அப்போது ஜெயலலிதாவுக்கு 14 வயது. கதாநாயகி பாத்திரத்துக்குப் பொருந்திவரமாட்டார் என்ற முடிவில், வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்துவிட்டோம்.

சித்ராலயா ஆபீஸில் பாடல் கம்போஸிங். டைரக்டர் ஸ்ரீதர், நான், எம்.எஸ்.விஸ்வநாதன், சி.வி. ராஜேந்திரன், சித்ராலயா கோபு அனைவரும் இருந்தபோது, சந்தியா அங்கு வந்தார். ‘வேறு நடிகை தேடுகிறீர்களாமே… நீங்கள் அவசியம் என் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண் டார். ‘என் மகள் வயது குறைந்தவள் என்றாலும், நல்ல முறையில் நடிப்பாள். அவள் நடிப்பில் திருப்தி இல்லாவிட்டால் பிறகு மாற்றிவிடுங் கள்!’ என்று சொன்னபோது, சந்தியாவின் கண்களில் நீர் பெருகி விட்டது. அதன்பிறகுதான் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடங்கி னோம்!” என்றார்.