Monday, January 24, 2011

ராமன் எத்தனை ராமனடி ( 2 )


நடிகர் விஜயகுமார் (நடிகர்திலகம்) தலைமை தாங்க, சிறையில் பள்ளிக் குழந்தைகள் பாடி நடிக்கும்' சேர சோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ்நாடு' பாடல், நாட்டின் பிரிவினைக் கோரிக்கைகளைச்சாடி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல். சிறையில் இருப்பது தன் அம்மா என்று தெரியாமலேயே, விஜயாவின் குழந்தை ராணி அவருக்கு இனிப்பு வழங்குவதும், அது உன் குழந்தைதான் என்று நடிகர்திலகம் ஜாடை காட்டுவதும் ரசமான இடம்.

கதை வசனம் பி.மாதவனின் ஆஸ்தான கதாசிரியர் பாலமுருகன் எழுதியிருந்தார். கிராமத்தில் சிறுவர்கள் பேசிக்கொள்ளும் யதார்த்த வசனங்கள். நடிகரானபின் முதன்முதலில் குடிசையில் கைக்குழந்தையுடன் தேவகியைச் சந்திக்கும் ராமு பேசும் வசனங்களில் ஆழமும் கூமையும் அதிகம்.

நடிகர்திலகம் :
படத்தின் முற்பாதியில் சாப்பாட்டு ராமனாகவும், பிற்பகுதியில் நடிகர் விஜயகுமாராகவும் தோன்றும் இவர், நடிப்பின் இரு பரிமாணங்களையும் இருவேறு கோணங்களில் தொட்டுக் காட்டியிருப்பார். ஆயாவைப்பார்த்து 'ஏன் ஆயா கதவை சாத்துறே, ஏன் ஆயா கரண்டியை எடுக்கிறே, ஏன் ஆயா அடுப்புல வைக்கிறே. ஐயோ ஆயா, இனிமேல் தப்பு பண்ணமாட்டேன் ஆயா' என்று வாயில் விரலை வைத்துக்கொண்டு அழுதுகொண்டே, பெட்டிக்குப்பின்னால் போய் ஒளிவதும், கே.ஆர்.விஜயாவின் தோழிகளிடம் 'அடிங்கொப்பன் தன்னானே, அதை நீ சொல்லாதே அவங்க சொல்லட்டும்' என்று வெகுளியாக கலாய்ப்பதுமாக, கிராமத்து அப்பாவி ராமு வேடத்தில் கலக்கியிருப்பார். அவர் நடிகராக மாறியதும் சுத்தமாக வேறு நடிப்புக்கு மாறிவிடுவார். பிற்பகுதியில் அவரது வழக்கமான நடிப்பு பல இடங்களில் தலைகாட்டும்.  

கோடீஸ்வர நடிகராக வந்து மைனரை அசத்தும்போது, மைனரின் பணக்கார நண்பர்களைப்பற்றி, தான் சாப்பாட்டு ராமனாக இருந்தபோது அவர் சொன்னதை நினைவு வைத்து, மைனர் சொல்லி முடிக்கும் முன்பே 'டெல்லி எருமை', 'மாந்தோப்பு', 'வைர வியாபாரம்' என்று மடக்கும் இடம் ரசிகர்களிடம் கைதட்டல் பெறும். (ஆனால், மைனரிடம் தான் யாரென்று வெளிப்படுத்தும் காட்சியை இயக்குனர் இன்னும் கொஞ்சம் நாசூக்காக கையாண்டிருக்கலாமோ என்று தோன்றும். சடாரென்று சட்டையைக்கழற்றி, சாட்டையடித்தழும்புகளைக் காட்டுவது கொஞ்சம் சப்பென்று இருக்கும்).  

மைனராக எம்.என்.நம்பியார்: கிராமத்திலேயே பெரிய பணக்காரன் என்ற திமிர், ஆணவம். இவருக்கு சொல்லணுமா?. ரத்தத்திலேயே ஊறிய பாத்திரம். அவரே பலமுறை நடந்து பழகிய பாதை. அசத்துகிறார். முத்துராமன் விருந்தாளியாக தங்கியிருக்கும் வீட்டுக்காரனைப்பார்த்து ஒருபக்கம் தலையை சாய்த்துக்கொண்டே உருட்டிய விழிகளோடு "ஏண்டா, நீயெல்லாம் நான் கூப்பிட்டு வர்ர அளவுக்கு பெரிய மனுஷன் ஆயிட்டியா?" என்று கேட்குமிடத்தில் பணக்கார திமிர். ஆனால் கிராமத்து மைனர் என்றால் கூட, வடநாட்டு பாணியில் (அதாவது வைரமுத்து பாணியில்) குர்தாதான் அணிய வேண்டுமா?. வேட்டி, சட்டையில் காட்டியிக்கலாமே.

முத்துராமன்: கிராமத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க மைனர் தங்கையையே மணந்துகொண்டு, அண்ணன் செய்த தவறுக்காக அப்பாவி மனைவியை பழிவாங்குவது கொடுமை என்றால், மனைவியின் கற்புக்கு ராமதாஸினால் களங்கம் ஏற்படநேரும்போது, துப்பாக்கிக்கு பயந்து ஓடிவிடுவதும், பின்னர் மனைவியை சந்தேகப்படுவதும் அதைவிட கொடுமை. இவரே பின்னர், பள்ளிக்கூட பஸ் டிரைவராகவும், டாக்ஸி டிரைவராகவும் வருவது கொஞ்சம் நெருடுகிறது.

கே.ஆர்.விஜயா: கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு காரில் வரும் முதல் காட்சியிலேயே பளிச்சென்று இருக்கிறார். பின்னர் சாப்பாட்டு ராமனை சந்திக்கும்போதெல்லாம் தனது ட்ரேட்மார்க் புன்னகையை வீசுகிறார். முற்பாதியில் வாய்ப்புக்குறைவு. பிற்பாதியில் அவரது வழக்கமான சோக நடிப்பு. இரண்டு அருமையான தனிப்பாடல்கள் இவருக்கு.

சின்ன வயது மகளாக பேபி ராணி, வளர்ந்த மகளாக எம்.பானுமதி, ஆயாவாக எஸ்.என்.லட்சுமி, கிராமத்தில் சாப்பாட்டுராமனோடு சுற்றும் சில்லுண்டிகளாக 'பக்கோடா' காதர், சதன், மாஸ்டர் பிரபாகர் மற்றும் இரண்டு சிறுவர்கள். இவர்க்ளோடு செந்தாமரை, பத்மினி, நாகையா, ராமதாஸ் ஆகியோரும் கௌரவமாகத் தலைகாட்டியிருப்பார்கள்.

இயக்கம் பி. மாதவன்: எங்க ஊர் ராஜா, வியட்நாம் வீடு, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா,   மன்னவன் வந்தானடி, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம் போன்ற, நடிகர்திலகத்தின் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இவர்தான், இந்த படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். நடிகர்திலகத்தின் வெற்றி சூட்சுமங்களை அறிந்த வெகு சில இயக்குனர்களில் ஒருவர். ஸ்ரீதரின் சித்ராலயா என்ற கூத்துப்பட்டறையில் வடிவமைக்கப்பட்ட இயக்குனர். முதல் படமான மணி ஓசை படத்திலேயே பேசப்பட்டவர். மிகச்சிக்கனமாக படமெடுக்கத்தெரிந்த வித்தகர்

அருண்பிரசாத் மூவீஸுக்கு இது இரண்டாவது படம். முதல் படமான எங்க ஊர் ராஜா 70 நாட்களைக் கடந்து ஓட,  இப்படம் 100 நாட்களைக்கடந்து வெற்றியடைந்தது. மூன்றாவது படமான பட்டிக்காடா பட்டணமா வெள்ளிவிழாப்படமாக அமைந்தது. (ஆகா, ஒரு நிறுவனத் துக்கு வளர்ச்சியென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்). ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15-ல் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போது சரியாக 76-வது நாளன்று தீபாவளி வந்தது. அதனால் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும்போதும் பல ஊர்களில் தீபாவளி புதிய படங்களுக்காக இப்படம் 75 நாட்களில் மாற்றப்பட்டது. இருந்தும் சென்னை பாரகன், மற்றும் மதுரை நியூசினிமா அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றி நடைபோட்டது.

'ராமன் எத்தனை ராமனடி' படம் பற்றிய என் கருத்துக்களைப்படித்த அனைவருக்கும் என் நன்றி.

3 comments:

  1. தங்களின் பதிவுகள்- குறிப்பாக ஒவ்வொரு படத்தையும் பற்றி குறிப்பிடும் போது பல பின்னணி தகவல்களையும் குறிப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் நடிகர் திலகம் எப்படி பங்காற்றியுள்ளார் என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் உள்ளது.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. டியர் ராகவேந்தர் (NTFan)

    உங்களின் பதில்கள் ஒவ்வொன்றும், மேலும் எழுத ஊக்கம் தரத்தக்கதாக அமைந்துள்ளன. ஒரு படத்தைப்பற்றி எழுதும்போது, அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் சேர்த்து அளிக்கும்போது, சுவாரஸ்யம் அதிகமாவதோடு, இதுவரை அறிந்திராதோருக்கு கொண்டு சேர்த்த திருப்தியும் ஏற்படுகிறது. தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. இடைவேளைக்கு முன் வலிப்பு வந்ததும் அவர் நடிப்பு...எல்லாப் படங்களைப் பற்றி எழுதும் போதும் அந்தப் படத்தின் சில முக்கிய வசனங்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. தெய்வ மகன், ராஜபார்ட் ரங்கதுரை பற்றியெல்லாம் எழுதவில்லையோ...

    ReplyDelete