Thursday, January 20, 2011

தர்மம் எங்கே

(சில எண்ணங்கள், சில நினைவலைகள்)

இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில் '1972ன் திருஷ்டிப்பொட்டு' என்ற் செல்லப்பெயர் உண்டு. காரணம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரையில் நடிகர்திலகத்தின் வெற்றிநடை தொடர்ந்தது (அவற்றில் பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நான்கும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவற்றில், 72 மத்தியில் வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதற்கு முதற்காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் ஓட்டை விழுந்த திரைக்கதை இவைகளே.

கதாநாயகன் படம் முழுவதும் வில்லனுடன் போராடி, இறுதியில் அவனிடமிருந்து ஆட்சியை மீட்பதாக இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் முரளி அவர்கள் சொன்னது போல, இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் படம் நகர்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் தோன்ற, கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது.  

தர்மம் எங்கே பற்றி விரிவாக விளக்கமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த முயற்சி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம், காட்சிகள் கோர்வையாக வரவேண்டும். படம் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதால், காட்சிகளை வரிசையாக நினைவுக்கு கொண்டு வருவதில் சற்று சிரமம். ஆனால் படத்தின் முக்கியமான, விசேஷமான காட்சிகளைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். இப்படத்தின் வீடியோ கேஸட், அல்லது CD அல்லது DVD எங்குமே கிடைக்கவில்லை. தியேட்டர்களிலும் வெகுநாட்களாக திரையிடப்படவில்லை.

இப்படம் பற்றி முன்னொருமுறை என் தந்தையுடன் பேசும்போது அவர் சொன்ன தகவல்கள்.  (தர்மம் எங்கே வெளியான காலத்தில் தனக்கேற்பட்ட உணர்வுகளை அவரே சொல்கிறார். அவர்து வார்த்தைகளில்.. இதோ)

"நான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த சமயத்தில் வெளியான படம் இது. நாங்கள் (சிவாஜி ரசிகர்கள்) யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ அல்லது வசந்த மாளிகையோ இந்த அளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான பட்டிக்காடா பட்டணமா பெற்ற பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகிறது என்று எதிர்நோக்கினோம். அப்போதைய 'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி எங்கள் உற்சாகத்துக்கு தீனி போட்டன.

நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் மாலையில் அண்ணாசாலை 'சாந்தி' திரையரங்கின் கார் பார்க்கிங் வளாகத்தில் கூடி அப்போதைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய படங்களைப் பற்றி விவாதிப்போம். இந்த நடைமுறை எங்களுக்குப் பிறகும் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாந்தியில் 'பட்டிக்காடா பட்டணமா', பக்கத்தில் தேவி பாரடைஸில் 'ராஜா', அதையடுத்த பிளாசாவில் 'ஞான ஒளி' என்று அனைத்தும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்க, 'தர்மம் எங்கே' படம் பற்றித்தான் எங்களுக்குள் ஒரே பேச்சு. இதனிடையே 'ஓடியன்' திரையரங்கில் (தற்போது 'மெலோடி') தர்மம் எங்கே ஸ்டில்கள் வைக்கப்பட்டு விட்டன என்று அறிந்ததும், நாங்கள் கூடும் ஜாகை ஓடியனுக்கு மாறியது. தினமும் மாலையில் கூடி, அந்தப்படத்தைப் பற்றித்தான் பேச்சு. ரிசர்வேஷன் தொடங்கியபோதே படம் வெளியாகும் நாள் போல கூட்டம். மளமளவென டிக்கட்டுகள் பல நாட்களுக்கு விற்று தீர்ந்தன. அப்போதெல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யப்படும். மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலேயே கியூவில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

சனிக்கிழமையன்று படமும் வெளியானது. (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் முதல் மேட்னிக்காட்சிக்கு போயிருந்தோம்.ரிலீஸ் தினத்தன்று சீக்கிரமே அரங்குக்கு போனோம். (எங்கள் அலுவலகம்  சனிக்கிழமை களில் அரைநாள் மட்டுமே). 'ஓடியன்' அரங்கின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கட்-அவுட்டுகள் வைக்கப் பட்டிருந்தன. அது போக கொடிகள், தோரணங்கள், பல்வேறு மன்றங்களின் பேனர்கள். (அப்போதெல்லாம் இதுபோன்ற திருவிழாக்கள் "அந்த இரண்டு ஜாம்பவான்களின்" படங்களுக்கு மட்டும் தான்). மேட்னி ஷோ துவங்கியது. படம் துவங்கியதிலிருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தன. குறிப்பாக முதல் ஒரு மணிநேரம் படம் டெர்ரிஃபிக். நடிகர்திலகத்தின் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படமாக இருந்தது. அதற்கேற்றாற்போல சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் சூப்பர் ஜோடி ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனதிலும் ஒரு எண்ணம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

ஆனால் இடைவேளைக்குப்பின்னர், படத்தின் போக்கு அப்படியே மாறிப்போனது. நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது திரைக்கதை. ஒரு நல்ல் மக்கள் தலைவனாக காட்டாமல், ஒரு அகம்பாவம் பிடித்தவராக காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குன்றிப்போனது. பொது மக்களும் இப்படி ஒரு கதையின் போக்கை எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரையும் தலை மறைவாக்கி விட்டனர். படம் தொய்ந்து போனது. படம் முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. இதனிடையில் படம் நன்றாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ, பத்திரிகை விமர்சனங்களும் காலை வாரிவிட.... சரியாக 48 நாட்களில் 'ஓடியன்' அரங்கில் படம் தூக்கப்பட்டு, ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்பட்டது".

.........என் தந்தை 'தர்மம் எங்கே' நினைவுகளில் ஆழ்ந்து போனார். 
இனி எனது விளக்கம் தொடர்கிறது
தர்மம் எங்கே முழுக்ககதையும் வரிசையாக நினைவுக்கு கொண்டுவர முடியாமல் போனாலும், சில முக்கியமான காட்சிகள் நினைவில் வந்துபோகிறது. அதில் சில....

படத்தின் முன்பாதியில், நள்ளிரவில் சர்வாதிகாரி நம்பியாரின் ஆட்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் சிவாஜி, பூட்டியிருக்கும் ஒவ்வொரு வீட்டு கதவாக தட்டி, அடைக்கலம் கேட்டுக் கதற, யாருமே கதவைத் திறக்க மறுக்க, தாகத்தால் ஒருவீட்டின் வாசலில் இருக்கும் மண்பானையை எடுத்து வாயில் கவிழ்ப்பார். அதில் சொட்டு நீரும் இல்லாமல் காலியாக இருக்க, சோர்வுடன் தன் வீட்டுக் கதவு கூட பூட்டியிருப்பது கண்டு, கதவைப்போட்டு அடிப்பார், உள்ளே கதவைத் திறக்கவிடாமல் அவருடைய அம்மாவையும், தங்கையையும் (குமாரி பத்மினி) வீட்டிலுள்ளோர் கையைக் கட்டி வாயைப்பொத்தி அமுக்கிப் பிடித்திருப்பார்கள். அதற்குள் துரத்தி வரும் வீரர்கள் நெருங்கி விட, வேறு வழியின்றி காட்டுக்குள் ஓடிப்போவார். இந்த இடத்தில் திரைக்கதையும், சிவாஜியின் நடிப்பும் நம்மை பதை பதைக்க வைக்கும். (நைட் எஃபெக்டில் சூப்பரான வண்ண ஒளிப்பதிவு கண்களை கொள்ளைகொள்ளும்).

சர்வாதிகாரி நம்பியார், தன்னை எதிர்ப்பவர்களின் பெயர்களைக் கேட்டு ஒரு ஏட்டில் குறித்து வைத்து, அவர்களைப் பழிவாங்குவார். சிவாஜி பதவிக்கு வந்ததும், தன்னை எதிர்க்கும் ஒருவனின் பெயர்கேட்டு முதன்முதலாக ஏட்டில் குறிக்கப்போகும் சமயம், பின்னணியில் இடியோசை போல நம்பியாரின் சிரிப்பொலி கேட்டு திகைத்து பின்வாங்குவது, திருலோகசந்தரின் டைரக்ஷனைக் காட்டும் நல்ல இடம்.

படத்தின் கிளைமாக்ஸ், செஞ்சிக்கோட்டையில் படமாக்கியிருப்பார்கள். நம்பியாரும் அவரது ஆட்களும் சுற்றி நின்று துப்பாக்கியால் சுட (நம்பியார் இடைவேளைக்குப்பின்னால் மீண்டும் தோன்றுவது இந்த இடத்தில்தான்) சிவாஜி தன் தங்கையை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு தூணாக மறைந்து மறைந்து முன்னேறுவதும், இறுதிக்காட்சியில் பாம்புகள் இருக்கும் கொட்டடிக்குள் விழுந்து விடும் நம்பியார் அந்த பாம்புகள் கடித்து இறப்பதும் நல்ல கட்டங்கள். (அவ்வளவு பெரிய, பெரிய பாம்புகள், தன் உடம்பின் மீது ஏறி ஊரும்போது நம்பியார் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாரே. எவ்வளவு தைரியம் வேண்டும்?. நடிக்க என்று வந்துவிட்டால் எதையெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது?) 

நம்பியாரிடமிருந்து அதிகாரத்தை நடிகர்திலகம் கைப்பற்றுவதோடு நிறுத்தி 'இடைவேளை' கார்டு போடுவார்கள். இடைவேளை முடிந்து, முதல் பாடல் 'நான்கு காலமும் உனதாக' என்ற பாடல்தான். தலைமைப் பொறுப்பில் அமர்ந்த நாயகனைப் பாராட்டி, ஜெயலலிதாவும் குழுவினரும் பாடி ஆட, அதை சிம்மாசனத்தில் அமர்ந்து நாயகன் ரசிப்பதாக படமாக்கப் பட்டிருக்கும். அதில் நான்கு வித பருவங்களைப்பற்றி ஜெயலலிதா பாடும்போது, அதற்கேற்ப பின்னணி காட்சிகளும் மாறும். ஆனால் பாடல் சுமார் ரகம்தான்.

'சுதந்திர பூமியில்', 'பள்ளியறைக்குள் வந்த', 'வீரம் என்னும் பாவைதன்னை' பாடல்கள் மனதைக் கவர்ந்த அளவுக்கு இது கவரவில்லை. இவை மூன்றும் மூன்று முத்துக்கள். ஆனால் கண்ணில் காணக்கிடைக்கவில்லை. 'SHIVAJI HITS' என்ற பெயரில் VCD / DVD தயாரிப்பவர்கள் கூட இதுபோன்ற பாடல்களைக் கண்டுகொள்வதில்லை.  

'பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே' பாடல் இரவு நேர சூழ்நிலையில் ('நைட் எஃபெக்ட்'), படகில் நடிகர் திலகமும் கலைச்செல்வியும் பயணிக்கும்போது, சுற்றிலும் வாண வேடிக்கைகள் கண்ணைக்கவரும் (அதற்கு ஏற்றாற்போல அற்புதமான ஒளிப்பதிவும், கலரும்).

அதுபோல 'சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்' பாடல் அவுட்டோரில் அழகான லொக்கேஷன்களில், மலர்நிறைந்த கூடையை நடிகர்திலகம் முதுகில் சுமந்துகொண்டு, புன்னகை மாறாத முகத்துடன் பாடிவரும் அழகு. (இப்பாடல் முழுக்க அவர் முகத்தில் ஒரு கம்பீரமான புன்னகை தவழும்).

இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...

'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'

நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).

'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்'   திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.

1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar Kamaraj) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.

'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......

'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...

நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.

3 comments:

  1. As you said DHARMAM ENGE had a ver good opening in chennai In MAHARANI terrific cut outs were stationed and the road was very narrow it has attracted other side hero's fans very much visible. somehow the movie has not succeded for the reasopns mentioned. NADIGAR THILAGAM AND JAYA LALITHA WERE quite handsome.

    ReplyDelete
  2. Thanks I could read out your fantastic review about the movie at least now. It exactly reflects the mind set of so many sivaji fans. Even now it is hard to digest the movie ended up on failure note. Hats off to your vireo graphic writing. Please please continue to entertain readers like me.
    S.Ravi

    ReplyDelete
  3. Sun life தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது இப்போது

    ReplyDelete