Friday, March 18, 2011

மாற்றம் வருமா...?.

பின்னூட்டம் இட்ட Bale Bale, Story Teller, Ganpat ஆகியோருக்கு நன்றி. (பின்னூட்டங்களுக்கான பதிலை பதிவாகவே இட்டிருக்கிறேன்)

கன்பத்,

தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல முதல்வர் வரவேண்டும் என்ற ஆதங்கம் இல்லாமலில்லை. ஆனால் அதற்கான விழிப்புணர்வு மக்களிடம் இல்லையே. 'பேயை விட்டால் பிசாசு' என்ற நிலையில்தானே இருக்கிறோம். அந்த அளவுக்கு பாமர மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டனரே.

இன்றைக்கே, கறைபடியாத கட்சிகளை ஒன்று சேர்த்து, மூன்றாவது அணியை உருவாக்கி, அதன் முதல்வர் வேட்பாளராக திரு. இல. கணேசன் அவர்களை அடையாளம் காட்டி நிறுத்தினால் எத்தனை பேர் வாக்களிப்பார்கள்?. தமிழக அளவில் பாரதிய ஜனதா அப்பழுக்கற்ற கட்சியாக இருந்தாலும், அகில இந்திய அளவில் அதுவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான கட்சிதானே. உதாரணம், நம் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் எடியூரப்பா. பதவிக்கு வந்த கொஞ்ச நாளிலேயே பல ஊழல் குற்றச்சாடுக்கு ஆளாகி விட்டாரே.

அதற்காக எடியூரப்பாவையும், இல கணேசனையும் ஒரே தராசில் வைத்து நிறுக்க விரும்பவில்லை. அது நியாயமும் அல்ல. அதே சமயம். கட்டுக்கட்டாக பணத்தை உள்ளே எடுத்து வைக்கும் பங்காரு லக்ஷ்மணன் வீடியோவையும் மறந்துவிட முடியவில்லை. என்ன செய்வது?. அரசியல் என்று வரும்போது எந்தப்பக்கம் திரும்பினாலும் ஊழலற்ற தன்மையைப் பார்க்க முடியவில்லை.

எனவே மக்கள் தயாராக வேண்டியது ஒரு விஷயத்துக்கு மட்டுமே. 'அறவே திருடாதவனைத்தேடி அலையாதே (அந்தப்பெருமையை காமராஜர் கொண்டு போய்விட்டார்). மொத்தமாக திருடுபவனை விட, கொஞ்சமாக திருடுபவனைக் கொண்டுவா. அவன் திருடியது போக நமக்கு மிச்சமாவது இருக்கும்' என்பதுதான்.

திரு. இல. கணேசனை முதல்வராக ஒருமுறை வைத்துப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுவதில் தவறில்லை. சமையல்காரரை மாற்றிப்பார்ப்போமே, நாக்குக்கு சுவையிலாவது ஒரு மாற்றம் கிடைக்கட்டும். ஆனால் அது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் இன்னமும் பல தொகுதிகளில் பாரதிய ஜனதாவினர், செல்லாத ஓட்டுக்களைவிட குறைவாகவே வாங்கிக்கொண்டிருக்கின்றனர். 

Tuesday, March 15, 2011

வெற்றி யாருக்கு?

இன்னும் சரியாக 28 நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் அல்லோல கல்லோலப்பட இருக்கிறது. இம்முறை 'நெட் ப்ராக்டிஸ்' பண்னக்கூட அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்காமல், நேரடியாக 'பேட்டை'க்கையில் எடுத்துக்கொண்டு களமிறங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது தேர்தல் ஆணையம். பிரதான கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் இன்னும் கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் கூட இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. இதன்பிறகு, தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இன்னும் சிக்கல் நீடிக்கும். இன்னும் மூன்று நாட்களில் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஆகவே அரசியல் கட்சிகள் உச்சகட்ட பரபரப்பில் உள்ளன.

ஆனால் ஜெயலலிதாவைப்பொறுத்தவரையில் அவர் ஏற்கெனவே 234 தொகுதிகளுக்கும் தன் கட்சி வேட்பாளர்களைத்தேர்வு செய்து வைத்து விட்டார் என்றும், கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் அடித்துவிட்டு அப்படியே வெளியிட வேண்டியதுதான் என்றும், மற்றபடி இப்போது நடக்கும் நேர்காணல் என்பது வெறும் கண்துடைப்பு என்பதும் அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது. (கொடநாடு ஓய்வுகளின்போது அவர் சும்மா படுத்துத் தூங்கவில்லையென்பதும், இந்த வேலையில்தான் இருந்துள்ளார் என்பதும் தெரிகிறது)

கருணாநிதியின் பாடுதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. இம்முறை கூட்டணிக்கட்சியான காங்கிரஸ், அவர் கழுத்தில் கத்தியை வைத்து 63 தொகுதிகளைப்பெற்றிருக்கிறது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. 'என் அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒரு நெருக்கடியை நான் சந்தித்ததில்லை' என்று அவரே அறிக்கைவிடும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது காங்கிரஸ். தலைவர் படும் வேதனையைக் காணச்சகிக்காத உடன்பிறப்புகள், ஒரு கட்டத்தில் காங்கிரஸுடன் கூட்டு முறிந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டதும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் நிலைக்கு ஆளானார்கள். ஆனாலும்கூட காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு அவரைக்கொண்டு வந்து நிறுத்திய விஷயம் 'திகார் ஜெயிலில் இருக்கும் ஆ.ராசா மற்றும் அவர் சம்மந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் முறைகேடு, அதில் கனிமொழியின் பங்களிப்பு' இப்படிப்பட்ட விஷயங்களே.

அதனால்தான், மிக விசித்திரமான அனுபவங்களை 'அண்ணா அறிவாலயம்' சந்திக்க வேண்டிய சூழல். ஒருபுறம் துணை முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகிய தேர்தல் பணிக்குழு காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம், வாசன், தங்கபாலு, ஜெயந்தி, ஜெயக்குமார் ஆகியோருடன் தொகுதிப்பங்கீட்டுப்பேச்சில் இருக்க, மறுபுறம் முதல்வர் கருணாநிதி, அன்பழகன், அழகிரி ஆகியோர் கட்சியினருடன் நேர்காணலில் ஈடுபட்டிருக்க, மூன்றாவது விஷயமாக அதே சமயம் அதே அறிவாலய மாடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல்வர் மனைவி தயாளுவிடமும், மகள் கனிமொழியிடமும் விசாரணை நடத்திக்கொண்டிருக்க கூடிய விசித்திர சூழ்நிலை, கூடி நின்ற உடன்பிறப்புக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது என்றால் மிகையல்ல.

'முன்னாள் முதல்வரின் சொத்துக்குவிப்பு வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மத்திய அரசு, கூட்டணிக்கட்சித்தலைவரிடம் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன், இந்த விசாரணைக்கூத்துகளை தேர்தல் முடிந்து வைத்துக்கொள்ள முடியாதா' என்று நினைக்கும் உடன்பிறப்புக்கள் நிச்சயம் பரிதாபத்துக்குரியவர்களே. இந்த விசாரணை என்ற கூத்தே, அதிக தொகுதிகளையும், அவற்றிலும் வேண்டிய தொகுதிகளையும் மிரட்டிப்பெறத்தானே. இவ்விஷயத்தில் சிதம்பரத்துக்கும் மகன் ராகுலுக்கும் சாவி கொடுத்துவிட்டு, சோனியா மறுபக்கம் திரும்பிக்கொண்டார். தொட்டதுக்கெல்லாம் சோனியாவிடம் பேசும் வழக்கமுள்ள க்ருணாநிதிக்கு இம்முறை அதிக பட்சம் பிரணாப் முகர்ஜி வரை மட்டுமே பேச முடிகிறது.  

இம்முறை தேர்தலை சந்திக்க தி.மு.க.கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் அவர்கள் கடந்த ஐந்தாண்டுகள் அளித்த இலவசத்திட்டங்களே. ஒருவிஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பெல்லாம், தேர்தலின்போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கமே. அதில், தாங்கள் வெற்றிபெற்றால் 'யானையைத்தருவோம், பூனையைத்தருவோம்' என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் வெற்றி பெற்றதும் முதல்வேலையாக செய்வது, அந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மறப்பதுதான். ஆனால் அந்த வகையில் பதவியேற்ற ஐந்தாவது நிமிடத்திலிருந்தே தேர்தல் அறிக்கைகளில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கிய ஒரே கட்சி, உலகத்திலேயே தி.மு.க.தான் என்பதை ஜெயலலிதா கூட ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பதையும், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் ரத்து என்பதையும் பதவியேற்ற மேடையிலேயே கையெழுத்திட்டு அதிசயிக்க வைத்தார் கருணாநிதி.

அதுபோல, இலவச தொலைக்காட்சியும் கூட நிறைவேற்ற முடியாத திட்டம் என்பதையும் பொய்யாக்கி, நடத்திக்காட்டினார். இன்னும் கொஞ்சம் பேருக்கே பாக்கி என்கிறார்கள். (ஆனால், அரசுகள் அளிக்கும் இதுபோன்ற இலவசத்திட்டங்களுக்கு நான் பயங்கர எதிர்ப்பாளி என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்). இரண்டு ஏக்கர் நிலம் போன்ற திட்டங்கள் பெரும் தோல்வியடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. சமத்துவபுரங்களும் வெட்டிச்செலவு என்பதில் மற்றுக்கருத்தில்லை. ஊருக்கு 100 வீடுகள் கட்டி 'சமத்துவபுரம்' என்று பெயரிட்டால் உடனே நாட்டில் சமத்துவம் வந்து விடும் என்பது பேதமை என்பதையும், அந்த வீடுகள் ஊரில் இருக்கும் மற்ற மக்களின் உழைப்பில் செலுத்தப்பட்ட வரிப்பணங்கள் என்பதும் உணரப்பட வேண்டும்.

மருத்துவக்காப்பீட்டுத் திட்டமும், 108 ஆம்புலன்ஸ் திட்டமும் பயனுள்ளவை என்றே கருதப்படுகிறது. அதுவும் நள்ளிரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள், விபத்தில் சிக்கியோர் ஆகியோருக்கு உடனே மற்ற வாகனங்கள் கிடைக்காது என்பதும், அப்படி வரத் துணியும் சிலரும் தங்கள் வாகனத்தின் பாதிவிலையை வாடகையாகக் கேட்பார்கள் என்பது நாம் அறியாதல்ல. எந்த ஏழை அழைத்தாலும் 10 நிமிடத்தில் வரக்கூடிய 108 ஆம்புலன்ஸ் திட்டம் ஏழைகளின் வரப்பிரசாதம் என்பது மறுக்கப்படக்கூடியதல்ல. இதிலும் ஊழல் நடக்கிறது என்று யாரேனும் சொன்னால், அவர்களுக்கு ஒரு வார்த்தை, இத்திட்டத்தால் காப்பாற்றப்படும் ஒரு உயிரின் விலை எத்தனை கோடி ஊழலையும் விட மிகப்பெரியது. நம் சொந்த வாகனங்களில் சென்றால் கூட, மருத்துவமனையில் சேர்த்தபின்புதான் சிகிச்சைகள் துவங்கும். ஆனால் இத்திட்டத்தில் நம் வீட்டு வாசலில் நோயாளி ஏற்றப்பட்ட மறு நிமிடத்திலிருந்து, அவசர சிகிச்சை துவங்குகிறது. இதற்கு முன் பத்து நிமிடம் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இதுவரை போய்க்கொண்டிருந்த எத்தனையோ உயிர்கள், இத்திட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இருக்கக்கூடும்.

(108 ஆம்புலன்ஸ் திட்டம் சிறந்துது என்று கூறுவதால், அது 'ஸ்பெக்ட்ரம் ஊழல் சரியானது' என்று அளிக்கப்படும் சர்டிபிகேட் அல்ல). பயனடைந்த, மற்றும் பயனைக்கேள்விப்பட்ட மக்களின் கேள்வி, 'குறை சொல்வோர் ஏன் இதற்கு முன் இத்திட்டங்களை சிந்தித்து, அவற்றை அமுல்படுத்தவில்லை?' என்பதுதான்.

மக்களின் இன்னொரு கேள்வி, மன்மோகனின் அனுமதியுடன், சோனியாவின் ஆசியுடன் நடந்த (அல்லது நடந்ததாக சொல்லப்படுகிற) ஒரு மாபெரும் ஊழலின் மொத்தச்சுமையையும் தி.மு.க. தலையில் மட்டுமே சுமத்தி, காங்கிரஸ் நல்லவன் வேடம் போடுகிறதே எப்படி? என்பதுதான்.

வெற்றி யாருக்கு..? தொடரும்.

Friday, March 11, 2011

தங்க சுரங்கம்

இலக்கணப்படி இப்படத்தின் தலைப்பு 'தங்கச் சுரங்கம்' என்றுதான் இருக்க வேண்டும். தமிழ்ப்படங்களை ஆட்டிவைக்கும் செண்டிமெண்ட் காரணமாக, எட்டெழுத்துக்களில் தலைப்பு அமைந்தால், அதில் வரும் ஒற்றெழுத்தை நீக்கி விட்டு, ஏழு எழுத்துக்களில் தலைப்பு வருவதுபோல செய்வார்கள் (உதாரணம்: கல்யாண பரிசு). ஆனால் இப்படத்தில் ஒற்றெழுத்தான 'ச்'சை நீக்கியபின்னர்தான் எட்டெழுத்துக்களே வருகின்றன. அப்படியிருக்க என்ன காரணத்தால் இலக்கணப்பிழை செய்தார்களென்று தெரியவில்லை.

ஒரு காலம் இருந்தது. நடிகர்திலகத்தின் சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண ஏங்கிய நேரம். ஆம் 1964 ல் ஒரு 'புதிய பறவை', 1967 ல் ஒரு 'ஊட்டி வரை உறவு' என்று அத்தி பூத்தாற்போலவே அவரது சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண முடியும். மற்றபடி நடிகர்திலகத்தின் வண்ணப்படங்கள் என்றால் அது திரு ஏ.பி.என். எடுத்த (திருவிளையாடல், சரஸ்வதிசபதம், கந்தன்கருணை, திருவருட்செல்வர், திருமால்பெருமை போன்ற) புராணப்படங்கள்தான்.  அந்த வகையில் இப்போதுள்ள நடிகர், நடிகையர் அதிர்ஷ்டம் செய்தவர்கள். திரைப்படங்கள் என்றாலே வண்ணம்தான் என்று முன்னேறிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் அப்படியில்லை. எப்போதாவது தான் வண்ணப்படங்கள் வரும். 1964ல் அறிமுகமான ஜெய்சங்கர் கூட கிட்டத்தட்ட பதினைந்துக்குமேல் கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப்படமாக 'பட்டணத்தில் பூதம்' படத்தில் நடித்தார். இந்த வகையில் ரவிச்சந்திரன் கொடுத்து வைத்தவர். முதல் படமான 'காதலிக்க நேரமில்லை'யே வண்ணத்தில் அமைந்தது. தொடர்ந்து இதயக் கமலம், நான், மூன்றெழுத்து, உத்தரவின்றி உள்ளே வா, அதே கண்கள் என்று வண்ண நடை போட்டார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு படகோட்டி, எங்கவீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ரகசியபோலீஸ் 115, பறக்கும் பாவை என்று வண்ணத்தில் வந்து கொண்டிருந்தபோது சிவாஜி ரசிகர்கள் வண்ணப்படங்களுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு தீனி போட்டது ஏ.பி.என்னின் புராணப் படங்கள் மட்டுமே. எம்ஜிஆர் அவர்களை வைத்து வண்ணத்தில் ஒளிவிளக்கு, அன்பேவா படங்களை எடுத்த ஜெமினி வாசன், மற்றும் ஏ.வி.எம் செட்டியார் ஆகியோர் கூட நடிகர்திலகத்தை வைத்து 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'உயர்ந்த மனிதன்' ஆகிய படங்களை கருப்பு வெள்ளையில் எடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

மற்றபடி நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக்காட்ட கருப்பு வெள்ளை ஒரு தடையாக இல்லையென்பதோடு அவரது நடிப்புக்கு  சவாலாகவும், திறமைக்கு உரைகல்லாகவும் அமைந்தவை யாவும் (பாவ மன்னிப்பு, பாசமலர், பழனி, நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, தெய்வமகன், வியட்நாம் வீடு உள்ளிட்ட) கருப்பு வெள்ளைப் படங்களே. இருந்தாலும் ரசிகர்களுக்கென்று ஒரு ஆசை இருக்கிறதல்லவா?

எதற்கு இத்தனை பீடிகை போடுகிறாள் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம், நடிகர் திலகத்தின் சமூகப்படங்களில் புதியபறவை, ஊட்டிவரைஉறவு படங்களுக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வந்த வண்ணப்படம்தான் "தங்க சுரங்கம்".

செயற்கைத்தங்கம் உற்பத்தி செய்து, நல்ல தங்கத்தோடு கலந்து விட்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய மோசடியையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் சதிகாரக் கும்பலைப் பிடிக்கும் சி.பி.ஐ.அதிகாரி பாத்திரம் நடிகர் திலகத்துக்கு. அதற்கு ஏற்றாற்போல வாகான ஒல்லியான உடலமைப்பு இருந்தது அப்போது அவருக்கு. அதனால் ரோலுக்கு கனகச்சிதமாக பொருந்தினார். கூடவே வசீகரமான சுருள், சுருளான சொந்த தலைமுடி எல்லாம் சேர்ந்து அப்பாத்திரத்துக்கு மெருகூட்டின. (அப்போதைய  படங்களில் எல்லாம் சி.ஐ.டி.என்பதுதான் புழக்கத்தில் இருந்ததே தவிர சி.பி.ஐ. என்பது ரொம்ப பேருக்கு வித்தியாசமான வார்த்தையாக இருந்தது. இப்போது, சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்படியாக சி.பி.ஐ.என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது).

படம் துவங்கும்போது, இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியோடு துவங்கும். ஆங்காங்கே பீரங்கித்தாக்குதல்கள், அதை விட மோசமாக போர் விமானங்கள் குண்டு வீசி பர்மாவின் தலைநகரான ரங்கூனை தாக்கிக்கொண்டிருக்கும்போது இந்தியர்கள் கப்பலில் தாய்நாடு திரும்பிக்கொண்டிருப்பர். அப்போது தன்னுடைய சின்னஞ்சிறு மகன் ராஜனுடன், கப்பலில் ஏறப்போகும் காமாட்சியம்மாளை (எஸ்.வரலட்சுமி), கப்பலில் இடம் நிறைந்து விட்டது என்று அதிகாரிகள் தடுக்க, தான் பர்மாவில் இருந்து அழிந்தாலும் பரவாயில்லை, தன் மகன் ராஜன் இந்தியாவில் எங்காவது போய் நலமாக இருக்கட்டும் என்று, தனக்கு முன்னர் ஏறிய டாக்டரிடம் (ஜாவர் சீதாராமன்) மகனை கண்கலங்க ஒப்படைக்கிறார். காட்சிகள் அத்துடன் கட் பண்ணப்பட்டு டைட்டில் ஓடத்துவங்குகிறது.

 'தங்கச் சுரங்கம்' படத்தின் எழுத்தோட்டம் (டைட்டில்) வித்தியாசமாகவும், துடி துடிப்புடனும் செய்யப் பட்டிருந்தது. புதுமையாக செய்ய வேண்டும் என்ற ராமண்ணாவின் துடிப்பு அதில் தெரிந்தது.

டைட்டில் முடிந்ததும், படம் தற்காலத்துக்கு வந்து விடும். பள்ளிக் குழந்தைகளோடு வந்துகொண்டிருக்கும் வரலட்சுமி எதிரே வரும் பாதிரியாரைக்கண்டு திகைத்து நிற்க பாதிரியாரும் திகைத்து நிற்பார். அந்தப் பாதிரிர்யார் வேறு யாருமல்ல. ரங்கூனில் கப்பலில் ஏறும்போது வரலட்சுமி தன் மகனை ஒப்படைத்தாரே அந்த டாக்டர் ஜாவர் சீதாராமன் தான். காமாட்சியம்மாள் தன் மகனைப்பற்றி ஆவலுடன் விசாரிக்க, அவன் தற்போது குற்றப்பிரிவு இலாக்காவில் உயர்ந்த பதவியில் இருப்பதாக சொல்ல... உடனே காட்சி மாற்றம். டெல்லியிலிருந்து வரும் விமானத்தில் இருந்து டார்க் ப்ரவுன் கலர் ஃபுல் சூட், மற்றும் கறுப்புக்கண்ணாடியுடன் விமானத்திலிருந்து வெளியே வரும் நடிகர் திலகம் அறிமுகம். விமான அதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு தனக்கே உரிய ஸ்டைலுடன் படிகளில் இறங்கி வருவார்.

அவரது மேலதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன், போலித்தங்கம் செய்யும் கும்பலைப் பிடிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார். அது பற்றி மேலும் தகவல்களைச் சேகரிக்க சிறிது நாளாகும் என்பதால் தன் ஊருக்குச் சென்று தன்னை வளர்த்த பாதிரியாரைப்பார்த்து வர விரும்புவதாகச் சொல்லி அனுமதி பெற்று ஊருக்கு வருவார். அங்கே பாதிரியார், அவருக்கு மிகப்பெரிய பரிசு தருவதாகச்சொல்லி ராஜனின் (சிவாஜி) அம்மாவை அவருக்கு அறிமுகம் செய்து வைப்பார். இன்ப அதிர்ர்ச்சியில், பாசத்தைக் கொட்ட சிவாஜிக்கும் வரலட்சுமிக்கும் அருமையான கட்டம். போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். நாள் முழுக்க பேசிக்கொண்டிருந்து விட்டு இரவில் சிவாஜியைத் தூங்கப்போகச்சொல்லும் அம்மாவிடம் சிவாஜி ஒரு அஸ்திரத்தை தூக்கி வீசுவார்.

"அம்மா நானும் காலையில் இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். மகனைப் பாத்த சந்தோஷத்தில எல்லா விஷயத்தையும் பற்றி விவரமா பேசினீங்க. ஒரு பெண்ணுக்கு மகன் எப்படி முக்கியமோ அதுபோல கணவனும் முக்கியமல்லவா? அப்பாவைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே. ஏம்மா?".

மகனின் இந்தக்கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போவார் வரலட்சுமி. எப்படி சொல்ல முடியும்?. சொல்வது போலவா நடந்து கொண்டார் அவர்?. 'ராஜன், இப்போ என்னை எதுவும் கேட்காதே, சமயம் வரும்போது நானே சொல்றேன்' என்று சமாதானப் படுத்துவார்?. ஆனால் அவர் சொன்ன 'அந்த சமயம்' எவ்வளவு தர்ம சங்கடமான, இக்கட்டான சமயமாக அமையும் என்று அவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.

ஆம். எந்த போலித்தங்க கும்பலைப்பிடிக்க சிவாஜி அமர்த்தப்பட்டாரோ, அந்தப்போலித் தங்க கும்பலுக்கு தலைவனே ராஜனின் அப்பா 'மிஸ்டர் பை' (..கே.தேவர்)தான் என்று அறியும்போது வரலட்சுமியே அதிர்ச்சியில் மூழ்கி விடுவார். முன்னதாக தன்னைப் பிடிக்க வந்த சி.பி.ஐ. ஆபீஸர் விட்டுச்சென்ற பர்ஸில் ராஜனின் படமும் தன் மனைவியின் படமும் இருப்பதைப் பார்த்து, அது தன் மகன்தான் என்பதை அறியும் 'பை', பாசத்தையே கேடயமாகக்கொண்டு தப்பிக்க எண்ணி, பர்ஸில் இருந்த விலாசத்தில் வரலட்சுமியை சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக செண்டிமெண்ட் வார்த்தைகள் மூலம் அவரை நிலைகுலையச்செய்து, இறுதியில் தன்னைப்பிடிக்க தன் மகன் போடும் திட்டங்களை தன் மனைவி மூலமாகவே தெரிந்துகொள்ளும் அளவுக்கு தன் மனைவியைப் பக்குவப்படுத்தியிருப்பார். இதையறியாத சி.பி.ஐ ஆபீஸர் ராஜன், மிஸ்டர் பையைப் பிடிக்கப்போகும் திட்டத்தை தன் அம்மாவிடம் சொல்லி விட்டுப்போக, போன இடத்தில் சிவாஜிக்கு தோல்வி. 'மிஸ்டர் பை' தன்னுடைய ஜீப்பில் தனக்கு பதிலாக ஒரு கழுதையை அனுப்பிவைத்து அவமானப்படுத்தியிருப்பார்.

இதைப்பற்றி ஆலோசிக்கும் மேஜரும் சிவாஜியும், 'நம் இருவரைத்தவிர யாருக்கும் தெரியாத இத்திட்டம் 'பை'க்கு தெரிந்தது எப்படி?. நீங்கள் யாரிடமும் சொன்னீர்களா?' என்று மேஜர் கேட்க இல்லையென்று மறுக்கும் சிவாஜிக்கு சட்டென்று ஒரு பொறிதட்டும். அம்மாவிடம் மட்டும் தானே இதைச்சொன்னோம். 'பை'க்கு தெரிந்தது எப்படி?. சந்தேகம் என்று வந்து விட்டால் யாரையும் சந்தேக வட்டத்தில் இருந்து நீக்க முடியாதே. சிறிது நேரத்தில் திரும்புவதாகச்செல்லும் சிவாஜி நேராக தன் அம்மாவைப் போய்ப்பார்ப்பார். அப்போது நடக்கும் உரையாடல்கள் உணர்ச்சி மயமானவை.

மகனுடைய கூரிய பார்வையின் உக்கிரத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியாத தாய், தலையைத் தாழ்த்திக்கொண்டு கடைக்கண்ணால் பார்க்க, மகனின் கேள்விக்கணகள்....

"அம்மா, நான் பார்க்கும் உத்யோகம் எவ்வளவு பொறுப்பானது, ஆபத்தானதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே?"  அவள் ஆம் என்று தலையாட்டுவாள்.

"இன்னைக்கு 'பை'யைப் பிடிக்கப்போகும் விஷயத்தை நான் தானே வாய் தவறி உங்களிடம் சொன்னேன்?".   அவள் மீண்டும் தலையாட்டல்

"அதை நீங்க யார்கிட்டேமா சொன்னீங்க?"

"ராஜன், நான் யார்கிட்டேயும் சொல்லலைப்பா"

"பொய்.... நீங்க பை கிட்டே சொல்லியிருக்கீங்க...ஏன்...ஏன்.., அதுக்கென்ன அவசியம் வந்தது?. தலைக்கு ஒசந்த மகனை வச்சுகிட்டு அந்த 'பை' கூட ரெண்டாவது வாழ்க்கை வாழறீங்களா அம்மா?"

(ஒரு மகன் தன் தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனால் தோல்வியின் பாதிப்பு, மனத்திலிருந்து இப்படி கேள்வியாக வெடித்துக் கிளம்ப)

"அய்யோ ராஜன், அவர்தாண்டா உங்க அப்பா"

அதிர்ச்சியின் உச்சிக்குப்போவார் நடிகர் திலகம். என்னது அப்பாவா?. நான் பிடிக்கணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்த தேசத்துரோகியா என் அப்பா?.

மகனிடம் விவரத்தைச்சொல்லத் துவங்க, மீண்டும் ஃப்ளாஷ் பேக்கில் ரங்கூனில் நடந்த இரண்டாம் உலகப்போர். இடிபாடுகளில் சிக்கிய காமாட்சியும் கனகசபையும் தப்பிக்கும் சமயம், காமாட்சி மகன் ராஜனை தேடிக்கொண்டிருக்கும்போது கனகசபைக்கு ஒரு பெட்டி நிறைய பணம் கிடைக்க, மனைவியையும் மகனையும் உதாசீனப்படுத்தி விட்டு தான் மட்டும் தப்பித்துப்போய்விட, வேறு வழியிறி மகன் ராஜனுடன் இந்தியா வரும் கப்பலில் காமாட்சி ஏறப்போகும்போதுதான் மகனை டாக்டரிடம் ஒப்படைக்கிறார் (படத்தின் முதல் காட்சியில் வந்தது).

அதன்பிறகு ராஜன் தன் தாயையே கைது செய்வதும், பாதிரியார் அவரை ஜாமீனில் விடுவித்து அழைத்து வருவதும், தொடர்ந்து 'பை' யைப்பிடிக்க ராஜன் முனைந்து ராஜன் வெற்றி பெறுவதும் சுவாரஸ்யமானவை.

பாடலும் இசையும்...

இப்படத்துக்கு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.

விடுமுறையில் கிராமத்துக்கு வரும் நடிகர் திலகம், தலையில் தொப்பியும் கையில் பெட்டியுமாக பாடிக்கொண்டு வரும் பாடல்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்னீரும் விளையாடுது
மூன்று தமிழ் ஓங்கும் இடம் எங்கள் நாடு.... ஓய்...

பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக் காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திருமஞ்சள் முக சிலையல்லவா

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

யானைகட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
திருக்கோயில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

அருமையான பாடல். பாடியவர்.... வேறு யார்? கம்பீரக்குரலோன் டி.எம்.எஸ் அண்ணாதான். ராமமூர்த்தியின் அருமையான இசையில்.  துரை-அமிர்தத்தின் கண்ணில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு. அழகான ஒல்லியான உடல்வாகுடன் வெள்ளை பேண்ட், சந்தன வண்ண சட்டை, தொப்பி, கையில் சின்ன பெட்டி மற்றும் ஒரு குச்சியுடன் வழக்கமான ஸ்டைல் நடையில் நடிகர் திலகம்...  ராமண்ணா.... அற்புதம் அண்ணா...

பெங்களூரில் இருந்து காரில் வரும்போது, நள்ளிரவில் நடிகர் திலகத்திடமிருந்து தப்பிக்க எண்ணி, சேற்றில் விழுந்துவிடும் பாரதியை கிண்டல் செய்து நடிகர் திலகம் பாடும் "கட்டழகு பாப்பா கண்ணுக்கு... கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு" பாடல் ரசிக்க வைக்கும். பாடலின் துவக்கத்தில் வரும் சிரிப்பில், நடிகர்திலகம் வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிப்பது அவரது முத்திரை.

ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து தேவையில்லை. ஆஸ்திரேலியா தேவையில்லை, நயாகரா நீர்வீழ்ச்சி தேவையில்லை. பத்தடிக்கு பத்தடியில் ஒரு இடத்தைக்கொடுத்து விட்டால் போதும். அருமையாக படமாக்கி தந்துவிடுவார்.

குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டிக்குள் 'வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'
நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் காருக்குள் 'போதுமோ இந்த இடம்'
மூன்றெழுத்தில் சிறிய பெட்டிக்குள் ரவி-ஜெயாவை வைத்து 'பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி' போன்ற பாடல்களை அருமையாகத் தந்த இயக்குனர் ராமண்ணா 'தங்க சுரங்க'த்திலும் தன்னுடைய சேட்டையை விடவில்லை.

ஆம்.  நடிகர்திலகமும் பாரதியும் பாடும் டூயட் பாடலான
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"

பாடலை முழுதும் கிணற்றுக்குள்ளேயே எடுத்திருப்பார். கிணற்றுக்குள் படிக்கட்டில் நின்றுகொண்டும், கயிற்றில் தொங்கிக்கொண்டும் பாடும் அந்தப்பாடல் கண்களுக்கு விருந்து.


மயக்க ஊசி ஏற்றப்பட்டு நடிகர் திலகத்துக்கு மயக்க ஊசி போட ஏவி விடப்பட்ட்ட பாரதி, நடிகர் திலகத்தை மயக்க பாடும்..
"உன் நினைவே நதியானால்.. என் உடலே படகானால்
அந்த நதியினிலே... இந்த படகினிலே.. ஆடு... ஆட வா"

பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். ஊட்டி கார்டனில் எடுக்கப்பட்ட பாடல் இது. அதிகம் பிரபலம் ஆகாத பாடலும் கூட.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள்.  பாரதி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா. முதலில் நிர்மலா நல்லவராகவும் பாரதி போலித்தங்கக் கும்பலைச் சேர்ந்தவராகவும் தோன்றும். ஆனால் இடையிலேயே பாரதிதான் நல்லவர் என்றும் நிர்மலா மோசடிக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வரும். போலித்தங்க கும்பலின் தலைவன் 'மிஸ்டர் பை' ஆக (சி.பி.ஐ.ஆபீஸர் ராஜைன் தந்தையாக) ஓ.ஏ.கே. தேவரும், அவரது கையாள் வேலாயுதமாக ஆர்.எஸ்.மனோகரும் நடித்திருப்பார்கள். நகைச்சுவைக்கு நாகேஷ். இவர் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.

நடிகர்திலகம், பாரதி, நிர்மலா, ஓ.ஏ.கே.தேவர், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன், முத்தையா (போலித்தங்க விஞ்ஞானி) ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர் நடிகையர் தேர்வில் ராமண்ணா கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத்தூண்டும் அளவுக்கு வீக்னஸ். நடிகர் திலகத்துக்கு பொருத்தமில்லாத ஜோடிகளில் பாரதிக்கு நிச்சயம் இடம் உண்டு. கொஞ்சம் கூட ஒட்டவில்லை. அது மட்டுமல்லாது மெயின் வில்லனாக ஓ.ஏ.கே.தேவரும் ரசிகர்கள் மனத்தில் நிற்கவில்லை. பாரதிக்கு பதிலாக ஜெயலலிதாவும், ஓ.ஏ.கே.தேவருக்கு பதிலாக நம்பியாரும் இடம் பெற்றிருந்தால் படத்தின் ரிஸல்ட்டே வேறு என்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயம்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டிருந்தது. அன்றைய காலத்தில் சென்னைக்கும் மலேசியா, சிங்கப்பூருக்கும் இடையே 'ஸ்டேட் ஆப் மெட்ராஸ்' என்ற பயணிகள் கப்பல் சென்று வரும் ('சிதம்பரம்' கப்பலுக்கு முன்பு). இந்தக்கப்பலிலேயே சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

'தங்கச்சுரங்கம்' என்றாலே நமக்கு தவறாமல் நினைவுக்கு வருவது, கிளைமாக்ஸில் சர்ச்சில் (மாதாகோயிலில்) நடிகர்திலகத்தின் அற்புத நடிப்பு.  சர்ச்சுக்குள் ஆயுதங்கள் எடுத்துப்போக பாதிரியார் தடை விதித்ததால், சர்ச்சுக்குள் ஒளிந்திருக்கும் தந்தையைப் பிடிக்க நிராயுதபாணியாக உள்ளே போகும் நடிகர்திலகத்தை,  துப்பாக்கியோடு ஒளிந்திருக்கும் 'மிஸ்டர் பை' இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் மாறி மாறி சுட, அப்படியே பெஞ்சிலும் தரையிலும் விழுந்து நடிகர் திலகம் துடிக்கும்போது நம் கண்ணில் ரத்தம் வராத குறை. அத்துடன் ஒரு சந்தேகமும் வரும். "காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்ற பேராசையில் நிஜமான துப்பாக்கியால் சுட்டுட்டாங்களோ?"

"தங்கச்சுரங்கம்"  பற்றிய என் இனிய நினைவுகளைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

Thursday, March 10, 2011

அண்ணன் ஒரு கோயில்-2

காட்சியமைப்புகளில் ஒளிப்பதிவு சிறப்பாகவும், துல்லியமாகவும் இருந்தது. ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் கருப்புவெள்ளைப் படங்களிலேயே வித்தைகள் காட்டுவார். (உதாரணம்: வானம்பாடியில் இடம்பெற்ற 'ஏட்டில் எழுதிவைத்தேன்' பாடல் காட்சி, மற்றும் லட்சுமி கல்யாணத்தில் 'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் காட்சி). வண்ணப்படமான இதில் சொல்லவே வேண்டாம். பின்னியெடுத்திருப்பார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட இரவுக்காட்சிகள். மற்றும் மல்லிகை முல்லை பாடல் காட்சி.


நடிகர்திலகத்தின் 'பெர்பார்மென்ஸ்'

** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...

** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...

** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....

** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...

** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....

** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....

** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....

இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.

இயக்குனர் கே.விஜயன்,  என்.வி.ராமசாமியின் 'புது வெள்ளம்', 'மதன மாளிகை' படங்களை இயக்கியிருந்தபோதிலும் அவர் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது 'ரோஜாவின் ராஜா'வில் துவங்கி, 'தீபம்' படத்திலிருந்துதான். தீபம், அண்ணன் ஒரு கோயில், தியாகம், திரிசூலம் என்று வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர், என்ன காரணத்தாலோ 'ரத்தபாசம்' படப்பிடிப்பின்போது திரு வி.சி.சண்முகத்துடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்தார். பிரிந்த கையோடு இதுபோன்ற சில 'அதிரடி(???)' பேட்டிகளும் கொடுத்தார். கூடவே 'தூரத்து இடி முழக்கம்' என்ற அருமையான தலைப்புடன் (நடிகர்திலகம் அல்லாத) ஒரு படத்தையும் இயக்கினார். நடிகர்திலகத்தின் எதிர்ப்பு பத்திரிகைகள் வரிந்து கட்டிக்கொண்டு, அந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் தந்து விளம்பரப்படுத்தின. ஆனால் பாவம், இடிமுழக்கம் வெறும் 'கேப்' சத்தம் போல ஆகிப்போனது. ஆதரவு தருவதுபோல ஏற்றிவிட்டவர்கள் எல்லாம் அவரைவிட்டு ஓடிப்போயினர்.

பாலாஜியாவது தொடர்ந்து ஆதரவு தருவார் என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது, யதார்த்தமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் ப்ரொடக்ஷன் மேனேஜராக இருந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தியை இயக்குனராகப்போட்டு 'பில்லா' படத்தை தயாரிக்க, பில்லா பெரிய வெற்றியடைந்து கிருஷ்ணமூர்த்திக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது. செண்டிமெண்ட் பிரியரான பாலாஜி தொடர்ந்து தன் படங்களை ஆர்.கே. தலையில் கட்டினார். சில ஆண்டுகள் கழித்து, ஒருநாள் ஸ்டுடியோ செட்டில் நடிகர்திலகத்தை கே.விஜயன் வலியச்சென்று சந்தித்து நலம் விசாரிக்க, பழைய நண்பனைப்பார்த்து, 'என்ன விஜயா இப்போ என்ன பண்றே?' என்று கேட்க, விஜயன் சோர்ந்த முகத்துடன் பதிலேதும் சொல்லாமல் நிற்க, நிலைமையைப்புரிந்துகொண்ட நடிகர்திலகம், 'சரி, இனிமேல் என் படங்களை நீ டைரக்ட் பண்ணு' என்று ஆசி வழங்கி, விஜயனுக்கு மறுவாழ்வளித்தார். 'பந்தம்' படம் மூலம் அவர்களின் பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை நினைவுகூர்வது போல, 'பந்தம்' படத்தில் ஒரு காட்சி அமைத்திருப்பார் விஜயன். தன்னுடைய முன்னாள் டிரைவரை சர்ச்சில் சந்திக்கும் நடிகர் திலகம், 'என்ன டேவிட் எப்படியிருக்கே?' என்று கேட்க, வறுமையில் வாடும் டிரைவர் அழத்துவங்க, சட்டென்று கோட் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை அவரிடம் கொடுத்து 'வண்டியை எடு' என்பார். இந்தக்காட்சியில் நடித்து முடித்த நடிகர்திலகம், 'என்ன விஜயா, இந்த சீன் நம்ம ரெண்டு பேர் சமந்தப்பட்ட விஷய்ம் மாதிரி இருக்கே' என்றாராம் - (கே.விஜயன் முன்னொருமுறை தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காணலில் சொன்னது).

சில மாதங்களுக்கு முன், ஜெயா டிவி 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுமித்ரா, கண்டிப்பாக 'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். அதுபோலவே, ஒருநாள் எபிசோட் முழுக்க இப்படத்துக்கு மட்டுமே ஒதுக்கி, ரொம்ப பெருமையாகப் பேசினார். நடிகர் திலகத்தை 'ஓகோ'வென்று புகழ்ந்தார். இன்னொரு ஆச்சரியம், நடிகர் திலகத்துடன் நடித்த 'ஜஸ்டிஸ் கோபிநாத்' படத்தைப்பற்றியும் (ஜோடி சூப்பர் ஸ்டார்) குறிப்பிட்டார். பாவம் இயக்குனர் பெயரை மறந்து விட்டு, சற்று யோசித்து 'யாரோ ரங்கநாத் என்பவர் இயக்கினார்' என்றார். (படத்தை இயக்கியவர் டி.யோகானந்த் என்ற பழம்பெரும் இயக்குனர்).

நடிகர் பிரேம் ஆனந்த், நடிகர்திலகத்தின் சிறந்த அபிமானியாகவும், மிகச்சிறந்த ரசிகராகவும், எந்நாளும் நடிகர்திலகத்துடன் ஒட்டியே இருந்து வந்தவர். அதனால் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்களில் அவருக்கு ஏதாவது ஒரு ரோல் கண்டிப்பாக இருக்கும். அதுவும் பைலட் பிரேம்நாத் படத்தில், கதாநாயகி ஷ்ரீதேவிக்கு ஜோடியாக, நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக பிரதான ரோல் ஒன்றில் நடித்தார்.
ஜெய்கணேஷைப்பொறுத்தவரை, எனது சிறு வயதில் அவரை நேரிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிட்லண்ட் தியேட்டரில் 'எமனுக்கு எமன்' படத்தின் மேட்னிக்காட்சிக்கு வந்திருந்தவரை (அப்போதைய இளவயது ஜெய்கணேஷை இமேஜின் பண்ணிக்குங்க) இடைவேளையில் வராண்டாவில் நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப அழகாக செயற்கைத்தனமில்லாமல் பேசினார். வெள்ளை ஜிப்பாவும் குர்தாவும் அணிந்திருந்தார். அப்போது சுற்றி நின்ற ரசிகர்கள், அவர்மீது கலர்ப்பொடிகளைத்தூவி கிண்டல் செய்ய, அங்கிருந்து தப்பிக்க மடமடவென்று மாடிக்குப்போய் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்துகொண்டவர், மீண்டும் காட்சி துவங்கியதும்தான் தியேட்டருக்குள் வந்தார்.
பிற்காலத்தில் நல்ல குணசித்திர நடிகராக, குறிப்பாக நகைச்சுவைக்காட்சிகளில் திறம்பட நடித்தவர் ஜெய்கணேஷ். பான்பராக் போடும் பழக்கம் காரணமாக கன்னத்தில் புற்றுநோயால் குழிபறிக்கப்பட்டு வெகுசீக்கிரமாகவே நம்மைவிட்டும் மறைந்து போனார்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இதயங்களில் ஜெய்கணேஷ், பிரேம் ஆனந்த் இருவருக்கும் என்றென்றும் நிரந்தர இடம் உண்டு.


நகைச்சுவைக்காட்சிகளும், அரங்கில் சிரிப்பலையை பரவ விட்டன, சுருளியின் 'கிளி கத்துற ஊரெல்லாம் கிளியனூரா', 'எல்லோரும் பீடி மட்டும்தான்யா வாங்குவாங்க, யாரும் தீப்பெட்டி வாங்குறதில்லை. தீப்பெட்டி என்னய்யா தீப்பெட்டி. இவர் மட்டும் கிடைச்சிட்டாருன்னா ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையே வச்சிடுவேன்' போன்ற வசனங்களூம், மனோரமாவின் ஒரு மாதிரியான அழுகை மற்றும் 'எவர்சில்வர் பாத்திரத்திலேயே சமையலா? அப்போ மொத்த வியாபாரிதான்' என்று தேங்காயை கலாய்ப்பதுமான இடங்களும், காட்டில் யானை துரத்தும்போது, யானைகளைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் சுருளியும் கருணாநிதியும் விழுந்து அலறுவதும், அதை மேட்டில் நின்று யானை பார்க்கும் இடமும் கலகலப்பான இடங்கள்.

ஒரு வெற்றிப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படம் வெற்றிபெற்றதில் வியப்பில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருந்தால்தான் அது வியப்பு மற்றும் வேதனை அளித்திருக்கும். தமிழ் ரசிகர்கள் அந்த அளவுக்கு விடவில்லை.