Saturday, April 30, 2011

நூற்றுக்கு நூறு

இந்தியாவில் திரைப்பட சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே' விருது அளிக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் இப்பதிவு சமர்ப்பணம்.

கல்லூரிப்பேராசிரியர் மீது, தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக களங்கம் சுமத்தும் மூன்று மாணவிகள். அதன்காரணமாக அவரை விட்டு விலகிப்போகும் அவரது காதலி. ஒழுக்கமானவர் என்று கருதப்பட்ட பேராசிரியர் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்று வசைபாடும் மாணவிகளின் பெற்றோர், அவரை சந்தேககக்கண்ணொடு பார்க்கும் கல்லூரி நிர்வாகம். அவர்மீது கொஞ்சமும் கருணை காட்டாத சமுதாயம். இத்தனை தடங்கல்களையும் உடைத்தெறிந்து தான் எந்த வித அப்பழுக்கும் இல்லாத பத்தரை மாற்றுத்தங்கம் என்பதை நிரூபிக்கும் கல்லூரி பேராசிரியரின் கதையை தனக்கே உரித்தான பாணியில் சொல்லி நம்மைக் கவந்திருந்தார் இயக்குனர் சிகரம்    கே.பாலச்சந்தர்.

இப்படியும் கூட தன்னால் நடித்து மக்களை ஆச்சரியப்படுத்தத் தெரியும் என்று நிரூபித்துக்காட்டினார் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். வழக்கமாக ஆக்ஷன், அடிதடி, க்ரைம், நகைச்சுவை என்று மட்டுமே நாம் பார்த்துப்பழகியிருந்த ஜெய், தான் ஏற்றிருந்த கணிதப்பேராசிரியர் கதாபாத்திரத்தில் தூள் கிளப்பியிருந்தார். (அவர் மேலுள்ள மரியாதையை அதிகப்படுத்துவது போல அவர் அணிந்திருக்கும் கண்ணாடி). அவர் மீது களங்கம் சுமத்தும் மாணவிகளாக வரும் விஜயலலிதா, ஜெய்குமாரி, ஸ்ரீவித்யா ஆகியோர் தன் மீது அபாண்டமாகவே பழி சுமத்துமின்றனர் என்று தெரிந்தும், அவர்கள் உதவிக்குப்போய் அவர்களின் பிரச்சினைகளை களைந்து, தன்னையும் உத்தமன் என்று நிரூபிக்குமிடத்தில் இமயமாக உயர்ந்து நிற்கிறார் ஜெய்.

அவரது காதலியாக வரும் லட்சுமி, தன் காதலரான பேராசிரியர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை, தன் கண்முன்னே நடக்கும் சம்பவங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகுமிடங்களில் தனக்கே உரித்தான அசாத்தியமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பேராசிரியரை நம்புவதா, அவர்மீது கூறப்படும் பழிகளை நம்புவதா என்று தவிக்குமிடங்களில்.... வாவ்... லட்சுமி, தானும் ஒரு காட்வின் ஆஸ்டினாக விஸ்வரூபம் எடுக்கிறார்.

எந்தக்கல்லிலும் தன்னால் சிலைவடிக்க முடியும் என்று கே.பி. நிரூபிக்கும் இன்னொரு அம்சம், அவர் விஜயலலிதாவிடம் பெற்றிருக்கும் நடிப்பு. அதுவரை கவர்ச்சிப்பாவையாகவே தமிழ்த்திரை யுலகம் பயன்படுத்தி வந்த விஜயலலிதாவை, இப்படியெல்லாம் கூட நடிக்கவைத்து அசத்தமுடியும் என்று காட்டியிருக்கிறார். ஆம், பசுமாட்டில் பால கறக்கத்தெரிந்தவன் சாமர்த்தியசாலியில்லை. காளைமாட்டிலும் பால்கறக்கத்தெரிந்தவனே திறமையாளன். அதில் கே.பி. கைதேர்ந்தவர். அதுவரை சின்னச் சின்ன ரோல்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரீவித்யாவுக்கு, இதில் கனமான ரோல். அவரும் நன்றாக செய்திருந்தார். ரோல்தான் கனமே தவிர அவர் கனமாக ஆகாதிருந்ததால் மாணவி என்று நம்ப முடிந்தது. (அற்புதமான நடிகையை ரொம்ப சீக்கிரம் இழந்துட்டோமோ என்று நினைக்கும்போது நம் மனம் கனக்கிறது). ஜெய்குமாரியும் ஈடு கொடுத்து நடித்திருந்தார். கல்லூரி பிரின்ஸிபாலாக கௌரவ வேடத்தில் ஜெமினி கணேஷ் வந்து போனார்.

படத்தில் இயக்குனரின் குரலாக வந்தவர் நாகேஷ். வழக்கமாக இயக்குனர்கள் தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை இவர் மூலமாகச்சொல்வது வழக்கம். பேராசிரியர்மீது களங்கம் சுமத்துவோர் முன் ஒரு பெரிய வெள்ளைப்பேப்பரில் கருப்புப்புள்ளி வைத்து "இப்போ உங்களுக்கு என்ன தெரிகிறது?" என்று கேட்க, அவர்கள் "கருப்புப்புள்ளி" என்று சொன்னதும் "அதானே பார்த்தேன். அதைச்சுற்றி இவ்வளவு பெரிய வெள்ளை பேப்பர் இருப்பது கண்ணுக்குத்தெரியாதே. சின்ன கருப்புப்புள்ளி மட்டும்தானே தெரியும். அந்த அளவுக்கு எல்லோருக்கும் குறுகிய எண்ணம். அதனால்தான் எங்கள் பேராசிரியர் மேல் களங்கம் சுமத்துறீங்க" என்று மடக்குமிடத்தில் நமக்குத்தெரிவது நாகேஷ் அல்ல, பாலச்சந்தர்.

(காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பேசும் வசனம் நினைவிருக்கிறதா?

"We don’t see Tamil films, we will see only English films. அதாவது இங்கிலீஷ் படம் மட்டும்தான் பார்ப்போம்னு சொல்லிக்கிறது இப்போ ஃபேஷனா போச்சு. என் படம் வந்தால்தான் இந்த நிலைமையே மாறும். நீங்க வேணா பாருங்க. ஒவ்வொருத்தனும் சொல்லப்போறான். We dont see English films, we want only Tamil filmsனு. இது நடக்குதா இல்லையான்னு பாருங்க" என்ற வசனம் வருமே, அது நாகேஷா பேசினார்?. அவர் உடம்புக்குள் புகுந்துகொண்டு இயக்குனர் ஸ்ரீதர் பேசியதுதானே).

1971-ல் நூற்றுக்கு நூறு படம் வெளியானதிலிருந்து, அந்த ஆண்டு முழுக்க எப்போ விவித் பாரதி வானொலியைத் திறந்தாலும் சுசீலாவின் ஒரு பாடல் தவறாமல் ஒலிக்கும். "நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன், நீ வரவேண்டும்" என்ற அந்தப்பாடல் இன்றுவரை எங்காவது ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. 'கலைமாமணி' வி.குமார் இசையில் உருவாகி, ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் தவறாமல் ஒலிக்கும் இப்பாடல், படத்தில் விஜயலலிதா பாடுவதாக வரும். இப்பாடலில் அவருடைய சற்று வித்தியாசமான நடன அசைவுகள் கண்களுக்கு விருந்து.

ஜெய்சங்கர் பல்வேறு பெண்களுடன் டூயட் பாடுவதாக லட்சுமி கற்பனை செய்துபார்க்கும் பாடல் "நித்த நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்" பாடலை ஜெய்யின் குரலாகவே டி.எம்.எஸ். பாடி அசத்தியிருப்பார். பாடலின் முடிவில் லட்சுமியின் மதிப்பில் ஜெய் '0/100' என்று காட்டும் இடத்திலும்,

பாதிப்படம் முடிந்து இடைவேளையின்போது 'இடைவேளை' கார்டுக்கு பதிலாக '50/100' என்று காட்டுமிடத்திலும், கே.பி. என்ற மனிதர் எப்படி எல்லாவற்றையும் வித்தியாசமாகவே சிந்திக்கிறார் என்று தோன்றும்.

கல்லூரி மாணவர்களுடன் பிக்னிக் போகுமிடத்தில், ஜெய் பாடும் "நானும் மாணவன்தான்" என்ற பாடல் சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த பிக்னிக்கிலிருந்துதான் வில்லங்கமே துவங்கும்.

மக்கள் கலைஞர் ஜெய் என்ற கலைஞனுக்குள்ளிருந்த இன்னொரு திறமையை நமக்கு கே.பாலச்சந்தர் வெளிப்படுத்திக் காட்டிய 'நூற்றுக்கு நூறு' திரைப்படம் குடும்பத்தினர், பெண்கள், இளைஞர்கள், அலுவலகம் செல்வோர், மாணவ மாணவியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த வெற்றிப்படமாக அமைந்தது. இன்றைக்கும் இப்படத்துக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.

Friday, April 29, 2011

மோகமுள் (திரைப்படம்)

இதற்கு முந்திய பதிவொன்றில், தி.ஜானகிராமனின் 'மோகமுள்'  நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றிக்குறிப்பிட்டபோது, அதைப்பற்றிய குறிப்பொன்றை தனிப்பதிவாக இட்டால் என்ன என்று தோன்றியது. தி.ஜானகிராமனின் அவ்வளவு பெரிய நாவலைப்படித்து, அதன் உணர்வுகளை உள்வாங்கியவர்களுக்கு, படத்தைப் பாக்கும்போது ஏமாற்றம் தோன்றுமே தவிர, புதிதாக படத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடித்துப்போகக்கூடும். நாவலில் சொல்லப்பட்டிருக்கும் பல உணர்ச்சிப் பூர்வமான இடங்களை காட்சியமைப்பில் கொண்டுவருவது என்பது சிரமமான காரியம் மட்டுமல்ல, பல சமயங்களில் இயலாத காரியமும் கூட. அதெப்படி மனதில் நினைப்பதையெல்லாம் காட்சியில் கொண்டுவர முடியும்?.

அதுவும் 686 பக்கங்களைக்கொண்ட ஒரு நாவலை வெறும் இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்குவது என்பது பகீரதப்பிரயத்தனம். அதனாலேயே பல விஷயங்களை அவசரப்பட்டு முடிக்க வேண்டிய நிலையும், இன்னும் சிலவற்றை தொங்கலில் விடவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வருடக்கணக்கில் அல்லது குறைந்தபட்சம் மாதக்கணக்கில் இழுக்கக்கூடிய தொலைக்காட்சித்தொடராக எடுக்கப்பட்டிருந்தால் சற்று முழுமையாக சொல்லப்பட்டிருக்க முடியுமோ என்னவோ. ஆனால் இவற்றையும் மீறி படத்தை ரசிக்க முடிகிறதென்றால், அதில் ஒட்டியிருக்கும் யதார்த்தம் எனும் மிகைப்படுத்தப்படாத நிலை, செயற்கைத்தனமில்லாத காட்சியமைப்புக்கள்.

இவ்வளவு பெரிய கதையை படமாக சுருக்க வேண்டியிருந்ததாலோ என்னவோ கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் துண்டு துண்டாக நின்றன. யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் திருமணம் ஆகவேயில்லை. அதற்கான காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை படத்தில். இறுதியில் தஞ்சாவூரில் இருந்து ஒரு மைனர் வருகிறார், திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கைநடத்துகிறேன் என்று. பாபுவின் மனம் யமுனாவினால் ஈர்க்கப்படுவது தெரிகிறது.

படத்தின் முக்கிய பாத்திரமாக வரும் பாபுவின் கேரக்டரில் சற்று குழப்பம் அதிகம். அதைப்புரிந்துகொள்கிற நேரத்திலேயே ஒருபகுதி போய்விடுகிறது. கிழவரைத் திருமணம் செய்துகொண்டு எந்த சுகமும் காணாத தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் பாபு, பின்னர் அவளுக்கு அட்வைஸ் பண்ணுவது பாபு கேரக்டரை கீழே சரித்து விடுகிறது. அத்தகைய நிகழ்வு நேராமல் சுதாரித்து கழன்றுகொண்டு, பின் அட்வைஸ் செய்தானென்றால் இன்னும் அந்த கேரக்டர் எடுபட்டிருக்கும். பாவம் இயக்குனர் என்ன செய்வார். கிடைத்த நேரத்துக்குள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க வேண்டும். (பாபு கேரக்டரில் நடித்திருப்பவர், இன்று சின்னத்திரை சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அபிஷேக். அப்போது சின்னப்பையன்).

கதையில் ரொம்ப சிலாகித்துச்சொல்லப்படுகிற நண்பன் ராஜம் கேரக்டர் ரொம்ப சின்னதாகக் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அவளுக்காக பாபு ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துவதாகக்கூடக் காண்பிக்கப்படவில்லை. தங்கம்மா அலங்கார பூஷிதையாக அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்க, கிழட்டுக்கணவன்  உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் காட்சியிலெல்லாம் நம் மனது ரொம்பவே வலிக்கிறது. இன்னொருபக்கம் யமுனாவுக்கு முப்பத்து நாலு வயது வரை திருமணம் ஆகாத நிலை இவற்றைப்பார்க்கும்போது மேட்டுக்குடிகளில்ரொம்பவே கொடுமைகள் நடந்திருப்பது தெரிகிறது.

அதனால் கதையில் அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கும் பாபுவின் தந்தை வைத்தி ரோல் எல்லாம், போகிறபோக்கில் வந்து போகிறது. ஆனால் பாபுவின் சங்கீதகுருவான ரெங்கண்ணா, கதாநாயகியான யமுனா மற்றும் அவள் அம்மா என்ற நான்கு கேரக்டர்கள் மட்டும் சற்று விலாவரியாக சொல்லப்படுகிறது, இடையில் வந்து மாண்டுபோகும் தங்கம்மாவை தவிர்த்து விட்டுப்பார்த்தால். தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை தன் ஆசைக்குப்ப்லி கொண்டது தவறு என்று தோன்றாது. மாறாக ஒரு அனுதாபமும் அக்கால சம்பிரதாயங்களின் மீது எரிச்சலும் ஏற்படும்.   

படத்துக்கு செலவு என்றால், நடித்தவர்களுக்கு சம்பளமும், பிலிம்ரோல் வாங்கிய காசும் மட்டும்தான் ஆகியிருக்குமோ என்று சொல்லுமளவுக்கு, அப்படியே கேமரா கும்பகோணத்து தெருக்களில் புரண்டு எழுகிறது. அந்த அளவுக்கு யதார்த்தம், இயற்கைத்தன்மை எல்லாம் கொடிகட்டிப்பறக்கிறது. ஸ்டுடியோ செட்என்பதெல்லாம் எப்படியிருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள் படத்தில். கும்பகோணம் வீடுகள் கோயில்கள்,  குளங்கள் என்று எல்லாம் அப்படியே கண்முன்னே.

படத்தை பெரும்பங்கு ஆக்கிரமித்துக்கொண்டு, ஒரு பெரிய இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பவர் 'இசைஞானி' இளைய்ராஜா. நம் உயிரோடு ஒன்றிப்போகும் இசை. அவருக்கு பக்க பலமாக நின்றிருப்பவர்கள் ஜேசுதாஸ், எஸ்.ஜானகி மற்றும் அருண்மொழி. கலக்கியெடுத்து விட்டார்கள் என்ற கடின வார்த்தைப் பிரயோகத்தை விட, மனதை மென்மையாக வருடி, மயக்கியிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.

அன்றைய நாட்களில் பிராமணப்பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதை ஒரு எவரெஸ்ட்டில் ஏறுவது போன்ற கடினமாக்கிக் காட்டியிருப்பது ஏன்?. கடைசியில் கூட யமுனா, திருமணம் செய்துகொள்ளாமல்தான் பாபுவிடம் தன்னை இழக்கிறாள். அவனுள்ளிருக்கும் இசைக்கு உயிர்ப்பூட்டுவதற்காம். புரியவில்லை என்பதைவிட ஒப்பவில்லை என்பது கொஞ்சம் அதிகம் பொருந்தும். அதுமட்டுமல்ல, பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் கையில் கொடுத்து இசைக்கச்சொல்கிறாள். படம் வெளிவந்த நேரத்தில் இது எப்படி ஆட்சேபிக்கப்படாமல் போனது?. இசையென்பது சுத்தமானது அல்லவோ?. அதை இசைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமோ?.

படத்தை இயக்கியிருப்பவர் ஞான ராஜசேகரன். ரொம்பவே கவனமாக கத்திமேல் நடப்பதுபோல கதையைக் கையாண்டிருக்கிறார். கையாண்ட விதத்தில் வெற்றியடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். நேர்த்தியான இயக்கம்.

'மோகமுள்' படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், தி.ஜானகிராமன் எழுதிய நாவலைப்படிக்கும் முன் பார்த்து விடுங்கள். நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.

Wednesday, April 27, 2011

எத்தனை கோணம் எத்தனை பார்வை

ஜெயகாந்தனின் 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' வண்ணத்திரைப்படம், அழகான ஒரு படைப்பு. மிக மிக யதார்த்தமான ஒரு படம். எந்த ஒரு கட்டத்திலும் செயற்கைக்கோணம் தட்டாது. நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்ததாலும், ஒரே ஒருமுறை மட்டுமே பார்த்திருந்ததாலும் கதையமைப்பு கோர்வையாக நினைவில் இல்லை. ஆனால் மிக நல்ல படம் என்பது மட்டும் மனதில் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது.

சாருஹாசன், வடிவுக்கரசி, ஸ்ரீபிரியா, சுரேஷ், நளினி, தியாகராஜன், வி.கோபால கிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஒருவிரல் கிருஷ்ணாராவ் என நிறைய பழையமுகங்களே நடித்திருந்தபோதிலும், உருவாக்கத்தில் புதுமையிருந்தது. தி.க.தலைவர் வீரமணி போல கருப்புச்சட்டையில் வரும் பத்திரிகை ஆசிரியர் வி.கோபாலகிருஷ்ணன் மட்டும் படம் முழுக்க செந்தமிழில் பேசுவது மிக நன்றாக இருக்கும். மனைவியை விட்டுப்பிரிந்து, இசைக்காக தன்னை அர்ப்பணித்து தன் தோழர்களுடன் தனியாக வாழும் சாருஹாசன்தான் படத்தின் முதுகெலும்பு. மது அருந்துவதை ஒரு தவறாக எண்ணாமல் அன்றாட சடங்காக கருதும் கூட்டம் அது.   

தியாகராஜனுக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் நடக்கும் சுயமரியாதை திருமணம் எல்லாம் ரொம்ப இயற்கையாக, தெருமுனையில் பந்தல்போட்டு நடத்தப் படுவது போன்ற பல காட்சிகள் மனதுக்கு இதமாக அமைந்தவை. பாடல்களும் ஜெயகாந்தன் எழுதியதாக நினைவு. 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' என்ற பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை. ஆனால் அப்பாடலின் நடுவே, துறைமுகத்தில் பெரிய பெரிய இரும்பு பிளேட்கள் இறக்கப்படுவதை ஏன் காண்பித்தனர் என்பது தெரியவில்லை. இதுபோக தேங்காயும், கிருஷ்ணாராவும் பாடும் 'என்ன வித்தியாசம' என்ற பாடலும், சாருஹாசன் பாடும் 'அலைபாயுதே கண்ணா' பாடலும் உண்டு.

அதிர்ஷ்டவசமாக இப்படம் பார்க்கநேர்ந்தது ஒரு கதை.  

எங்கள் குடும்ப நண்பரொருவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தபோது அவரைப்பார்க்க நானும் என் கணவர் பிரகாஷும் சென்ற இடத்தில், 'ஏதாவது திரைப்பட வீடியோ கேஸட் இருந்தால் கொடுங்கள் (அப்போது சி.டி.வரவில்லை) பார்த்துவிட்டு தருகிறோம்' என்று கேட்டபோது, மூன்று பட கேஸட்டுகளைக் கொடுத்தார். அவற்றில் இந்த 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' படமும் ஒன்று. கேள்விப்படாத படமாக இருக்கிறதே என்று நினைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்று படத்தைப்பார்த்தபோது படம் அருமையாக இருந்தது.

ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 31 தினத்தந்தி செய்தித்தாளில், அந்த ஆண்டு வெளியான படங்களைப்பற்றிய விவரமான கட்டுரை வெளியாகியிருந்தது. (வருடா வருடம் தினத்தந்தியில் வருடக்கடைசியில் இப்படி ஒரு கட்டுரை போடுவார்கள்). அதில் 'சென்ஸார் ஆகியும் இன்னும் வெளிவராத திரைப்படங்கள்' என்ற தலைப்பில் மூன்று படங்களின் பெயர்கள் இருந்தன. அவற்றில் ஒன்றாக 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' பெயரும் இருந்தது. மை காட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் பார்த்துவிட்ட படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகவே இல்லையா?. என்ன காரணம்?. இவ்வளவு நல்ல படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இல்லையா?. தயாரிப்பாளரே வெளியிடத்தயக்கமா?. இப்படியிருந்தால் நல்ல் படங்கள் எப்படி நம் பார்வைக்கு வரும்?. இன்றுவரை அப்படம் வெளியானதா இல்லையா என்பது தெரியவில்லை. வெளியாகியிருந்தால் எப்படி ஓடியது?. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Tuesday, April 26, 2011

தரையில் இறங்கும் விமானங்கள்

எழுத்தாளர் இந்துமதியின் பல்வேறு நாவல்களில், என் மனதை மிகவும் கவர்ந்த ஒன்று என்றால் என் மனதில் பளிச்சென்று நினைவுக்கு வருவது 'தரையில் இறங்கும் விமானங்கள்' தான். (அவரது பல நாவல்கள் எனக்குப்பிடிக்காது என்பது வேறு விஷயம்)

பொதுவாக நாவல்கள் என்றால் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். அல்லது கதாசிரியர் தனது வார்த்தைகளில் காட்சிகளை விவரித்துக்கொண்டு போவார். இது இன்னொரு ரகம். அல்லது கதாசிரியர் தனது கற்பனை வளத்தைக்காட்ட, எல்லை தாண்டி அதீதமாக வர்ணித்துக்கொண்டு போவார். இவையெல்லாம் இல்லாமல் கதாபாத்திரங்களின் மன உணர்வுகள் மூலமாகவே ஒரு கதையை, நாவலை நகர்த்திக்கொண்டு போக முடியுமா?. அப்படி அபூர்வமாக அமைந்த ஒரு நாவல்தான், இந்துமதி எழுதிய "தரையில் இறங்கும் விமானங்கள்". 

இதில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் மன உணர்வுகள் நம்முடன் பேசும். மிகக்குறைந்த அளவே பாத்திரங்கள். பரமு என்கிற பரமசிவம் அண்ணன். அவனுக்கு விஸ்வம் என்றொரு தம்பி. விஸ்வத்துக்கு பாசமே உருவான ஒரு அண்ணி, ரொம்ப கண்டிக்காமல் பொறுப்பை உணரவைக்க எத்தனிக்கும் அப்பா. பாதியில் மறைந்துவிடும் அம்மா. விஸ்வம், வாழ்க்கையை எந்திரமாக அல்லாது கலையாக ரசித்து வாழத்துடிப்பவன். அவனுக்கு காதல், திருமணம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் கூட இல்லை, பல பட்சங்களுக்கு கீழே. படிப்பு, படித்தபின் வேலை, வேலை கிடைத்ததும் திருமணம், திருமணத்தைத் தொடர்ந்து குழந்தைகள், பின் அவர்களை ஆளாக்க போராட்டம்..... இவ்வளவுதான் வாழ்க்கையா?. இதுக்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாமே என்று ஆதங்கப்படும் வித்தியாசமான வாலிபன்.

அவனுடைய உலகமே வேறு. அதனுள் தனக்குத்தானே மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு அதிலேயே சஞ்சரித்துக்கொண்டு இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வாழும் அவனுக்கு முதல் இடியாக வந்தது அம்மாவின் மறைவு. ஆனால் அதையும் கூட பேரிழப்பாக தோன்றாதவாறு அவனுக்கு இன்னொரு தாயாய் அண்ணி இருந்து ஈடுகட்ட, அவன் தொடர்ந்து தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு தாக்குதலுக்கு ஆட்பட்டது அண்ணனின் வேலை மாற்றலின்போது. இனியும் அவன் கற்பனை உலகில் உலவிக்கொண்டிருக்க முடியாது என்று அப்பா பக்குவமாக எடுத்துச்சொல்லி குடும்பப்பொறுப்புக்களை சுமக்க வைக்க, அதுவரை வானத்திலேயே பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறங்குகிறது.

எவ்வளவுதான் வானத்திலேயே பறந்துகொண்டிருந்தாலும், அது அங்கேயே பறந்துகொண்டிருக்க முடியாது ஒருசமயத்தில், குறைந்தபட்சம் எரிபொருள் தீரும் நிலையிலாவது அது தரையிறங்கியே தீர வேண்டும். இறங்கிய பின்னும் அது தன் பழைய நினைப்பில் சிறிது தூரம் மூச்சிரைக்க ஓடி ஒரு நிலைக்கு வந்தே தீர வேண்டும் என்ற ய்தார்த்த உண்மையை விளக்கும் அருமையான நாவல்.

இதில் மனதை கொள்ளைகொள்ளும் விஷயம், நான் முன்பே குறிப்பிட்டதுபோல உரையாடல்கள் மிகக்குறைவாக, உள்ளத்துக்குள்ளே தோன்றும் எண்ண ஓட்டங்களையே அதிகமாகக்கொண்டு புனையப்பட்டிருப்பதால், இந்துமதியின் மற்றைய நாவல்களினின்றும் இது தனித்து நிற்கிறது. கதையில் வரும் வர்ணனைகள்தான் எவ்வளவு யதார்த்தமானவை, எவ்வளவு ஜீவனுள்ளவை. வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போகும் விஸ்வம், அந்த அலுவலக வெளிவராந்தாவில் காத்திருக்கும் நேரத்தில் பார்த்து ரசிக்கும் மரக்கூட்டமும், அதில் துள்ளி விளையாடும் அணிலும் அப்படியே தத்ரூபமாக நம் கண்முன்னே தோன்றுகின்றன. மீண்டும் அதே அலுவலகத்துக்கு இண்ட்டர்வியூவுக்குப்போகும்போது விஸ்வத்தின் மனம் குதூகலிக்கிறது, வேலை கிடைக்கும் என்பதை எண்ணி அல்ல, மறுபடியும் அந்த காம்பவுண்டில் நிற்கும் மரக்கூட்டத்தையும் அதில் விளையாடும் அணிலையும் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்தில். அந்த அளவுக்கு இயற்கையை நேசிக்கும் அவன் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்த எந்திர வாழ்க்கைக்கு ஆட்படுகிறான் என்பதை இந்துமதி விவரிக்கும் அழகே தனி.

மனதைக்கவரும் பல இடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் தெருப்பக்கம் விளக்கை அணைத்து விட்டு விஸ்வமும் அண்ணியும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அப்போது தூரத்தில் மெல்ல ஒலிக்கும் வண்டி மாடுகளின் கழுத்து மணிச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து, மாட்டுவண்டிகள் வரிசையாக தங்கள் வாசலைக்கடந்து போகும்போது மணல் நறநறவென்று அரைபடுவதும், மெல்ல மெல்ல மணிச்சத்தம் தூர தூரமாகப்போய் அடங்கிப்போக, ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த்து போல விஸ்வம் நினைத்துக்கொண்டிருக்க, 'விஸ்வம் கொஞ்ச நேரம் எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்ததுபோல தோன்றியதில்லையா?' என்று அண்ணி கேட்க அவன் அதிர்ச்சியடைவது.  

ஒரு அண்ணிக்கும் கொழுந்தனுக்குமான உறவை தாய்க்கும் பிள்ளைக்குமான உறவுபோல சித்தரிப்பதில் கதாசிரியை பெரும் வெற்றி கண்டுள்ளார். விஸ்வம், அண்ணன் பரமு, அண்ணி, அப்பா, அம்மா என்று எல்லோருமே கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாத, நம் கண்முன்னே நடமாடிக்கொண்டிருக்கும் கள்ளம் கபடமில்லாத வெகுளியான பாத்திரங்கள். அதுமட்டுமல்ல இக்கதையில் வரும் எல்லோரும் நல்லவர்கள். யாரும் யாருக்கும் குழிபறிக்காதவர்கள். அதனால் இக்கதையில் திடீர் திருப்பம் போன்ற சுனாமிகள், சூறாவளிகள் எதுவுமின்றி, சம்பவங்கள் மனதை தென்றலாய் வருடிப்போகும். கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது.

இக்கதை தூரதர்ஷன் சேனலில் தொலைக்காட்சித் தொடராகக்கூட வந்ததாகச்சொன்னார்கள். பார்க்கவில்லை, பார்க்காததற்கு வருந்தவுமில்லை. காரணம், நான் படித்திருந்த சில நல்ல நாவல்கள் தொடராகவோ, திரைப்படமாகவோ உருவானபோது அதன் ஜீவன் பலமாக சிதைந்துபோனதைப் பார்த்து வேதனை அடைந்தவள் நான். (ஜெயகாந்தனின் படங்கள் விதிவிலக்கு, நாவலைவிட மேலும் அவற்றின் மெருகு கூடியிருக்கும்). ஆனால் அகிலனின் 'சித்திரப்பாவை' நாவல், தொடராக வந்தபோதும், தி.ஜானகிராமனின் 'மோகமுள்' திரைப்படமாக வந்தபோதும் பெருத்த ஏமாற்றம் அளித்தன. அதிலும் மோகமுள், ஒரு மூன்றாந்தர மலையாளப்படம் போல எடுக்கப்பட்டிருந்தது.

'தரையில் இறங்கும் விமானங்கள்' நாவலை பலர் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் வாய்ப்புக்கிடைத்தால் படியுங்கள்.

Sunday, April 24, 2011

இவர்கள் வித்தியாசமானவர்கள்

எழுபதுகளின் இறுதிப்பகுதிகளில், முழுநேர நாடக நிறுவனங்களில் மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் போன்ற ஒரு சிலவே தொடர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டிருக்க, சென்னை நாடக அரங்குகளில் பெரும்பாலும் அமெச்சூர் நாடகமன்றங்களே கோலோச்சிக்கொண்டிருந்தன. அப்படியான அமெச்சூர் நாடகக்குழுவில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருவர் கதாசிரியர், வசனகர்த்தா, மற்றும் இயக்குனர் என்ற முப்பரிமாணங்களுடன் 1979-ல் திரையுலகில் கால் பதித்தார். அவர்தான் இன்றைக்கும் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கும் "மௌலி". அவருடைய வித்தியாசமான சிந்தனையில் உருவானதுதான் 'இவர்கள் வித்தியாசமானவ்ர்கள்'  திரைப்படம்.

ஒரு அலுவலகத்தில் மாதச்சம்பளத்தில் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த். அவருக்கு பாந்தமான மனைவியாக ஸ்ரீவித்யா மற்றும் இரண்டு குழந்தைகள் என அழகான அளவான குடும்பம். வித்யாவின் சித்தப்பாவாக நாகேஷ். இந்நிலையில் அதே அலுவலகத்துக்கு உதவி மேனேஜராக தலைமை அலுவலகத்திலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு வந்து சேரும் 'படாபட்' ஜெயலட்சுமி. திருமணம் ஆகியிராத அவருக்கு ஆதரவு நிழகாக இருக்கும் தந்தை பூர்ணம் விஸ்வநாதன்.  அலுவலகத்தில் மேனேஜர் ஸ்ரீகாந்துக்கும், உதவி மேனேஜர் ஜெயலட்சுமிக்கும் 'ஈகோ' பிரச்சினை படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போது, அங்கிருந்தே மாற்றல் வாங்கி சென்றுவிடத்துடிக்கும் ஜெயலட்சுமி. அவரை அப்படியே ஸ்ரீகாந்த் போக விட்டிருந்தாரானால் படம் மூன்றாவது ரீலில் முடிந்துவிட்டிருக்கும் (?). ஆனால் போகாமல் தடுக்கும்போது, ஸ்ரீகாந்தின் நல்ல மனம் ஜெயலட்சுமியின் மனதில் சலனத்தை ஏற்படுத்த, வந்தது வினை. ஸ்ரீகாந்த் திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்பவர் என்று தெரிந்தும் ஜெயலட்சுமி அவரைக் காதலிக்க, அதைத்தவிர்க்க முடியாத நிலையில் ஸ்ரீகாந்தும் ஏற்றுக் கொள்ள, இதற்கு அப்பாவியான முதல் மனைவி ஸ்ரீவித்யாவும் சம்மதிக்க, தந்தை பூர்ணம் ஊரில் இல்லாத நேரம் அவர்கள் திருமணம் நடந்துவிடுகிறது. அதைத்தொடர்ந்து இரண்டு பெண்டாட்டிக்காரரான ஸ்ரீகாந்த் வாழ்வில் படும் அவஸ்தைகளை வைத்து சுவையாக படத்தைக்கொண்டு சென்றிருப்பார் மௌலி. இன்னொன்றைக் குறிப்பிட விட்டுவிட்டேன். கதை, வசனம், இயக்கத்தோடு நிற்காமல் நான்காவது பரிமாணமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் உருவெடுத்திருப்பார் மௌலி. மனைவியிழந்தவராக வரும் இவர், கைவிடப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் கிடைத்த பொறுப்புமிக்க கதாபாத்திரம், ஏற்கெனவே அவர்மேல் திணிக்கப்பட்டிருந்த இமேஜை உடைத்து, எந்த ரோலிலும் தன்னால் சோபித்துக்காட்ட முடியும் என்ற புதிய முகவரியைத்தந்தது என்றால் மிகையல்ல. இரண்டு வீட்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடும் நிலையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். கடைசியில் இரண்டு வீடுமே இல்லாமல் போய், தனியாளாக அலையும் போது (பின்னணியில் மெல்லிசை மன்னரின் குரலில் 'இரண்டு வீடு இரண்டு கட்டில், படுக்க இடமில்லை' பாடல் ஒலிக்க) கடற்கரை மணலில் அலையும் அவர், ஒன்றுமாற்றி ஒன்று அறுந்து போகும் இரண்டு செருப்புக்களையும் உதறி எறிந்துவிட்டு வெறும் காலுடன் செல்வது நல்ல டைரக்டோரியல் டச்.  

ஸ்ரீவித்யா அப்படியே ஒரு அப்பாவி மனைவியை கண்முன் கொண்டு வந்திருப்பார். கணவர் ஸ்ரீகாந்தை 'ராமுப்பா... ராமுப்பா..' என்று அழைத்தவண்ணம் படத்தின் முற்பகுதியில் வளைய வரும்போதே அனைவரது அபிமானத்தையும் பெற்றுவிடுகிறார். (அதென்ன ராமுப்பா?. தன் மகன் ராமுவுடைய அப்பாவாம்). கணவரின் இரண்டாவது மனைவியான படாபட் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்ததைப் பார்க்கச்செல்லும் அவர், தன் கணவர் தன்னையும் தன் குழந்தைகளையும் மறந்து இரண்டாவது மனைவியே கதி என்று இருப்பதைச் சுட்டிக்காட்ட, அங்கு கிடக்கும் தூசி படிந்த தலையணையைத் தட்டி, 'அப்பப்பா தலையணையெல்லாம் ஒரே தூசி படிஞ்சு கிடக்கு' என்று சொல்லும் இடத்தில் மௌலி தெரிகிறார்.

இவரது சித்தப்பாவாக வரும் நாகேஷ் பற்றி சொல்லவே வேண்டாம். பிரமாதப்படுத்தியிருப்பார். அத்தானின் இரண்டாவது திருமணத்துக்கு ஸ்ரீவித்யா சம்மதித்து விட்டார் என்பதையறிந்து கொடுப்பாரே ஒரு பஞ்ச் டயலாக்.. சூப்பர். கடைசியில் ஸ்ரீவித்யாவிடம் 'உன் புருஷனோட  கல்யாணத்தில் நீ எங்கே இருப்பே?. புருஷனோட ரெண்டாவது கல்யாணத்துல முதல் மனைவி எங்கே இருக்கணும்னு இந்து தர்மத்துல சொல்லலியேம்மா' என்று கேட்கும் இடத்தில் அவர் முகத்தில் தெரியும் அந்த ஏக்கமும் ஏமாற்றமும்.. யப்பா.

'படாபட்' ஜெயலட்சுமியிடம் நல்ல பாந்தமான நடிப்பு. அந்த நேரத்தில் அவர் முள்ளும் மலரும், தியாகம், 6 லிருந்து 60 வரை என அசத்திக்கொண்டிருந்த நேரம். இந்தப்படத்திலும் அசத்தியிருந்தார். தேனிலவுக்காக ஸ்ரீகாந்துடன் வெளியூர் சென்று ஓட்டல் அறையில் நுழைந்த சற்று நேரத்திலேயே, வித்யாவின் குழந்தைக்கு விபத்து என்று போன் வர, முகத்தில் தோன்றும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, 'புறப்படுங்க.. போகலாம்' என்று சொல்வாரே, அந்த இடத்தில் அவர் பார்வையும், அதற்கு பதிலளிப்பது போல 'என்னை மன்னித்துவிடு, வேறு வழியில்லை' என்பது போல ஸ்ரீகாந்த் அவரைப் பார்ப்பாரே அந்தப்பார்வையும் வசனமின்றி உணர்ச்சிகளைக்கொட்டும். அதேபோல இன்னொரு கட்டத்தில், வெளியூரிலிருந்து வரும் பூர்ணம் தன் வீட்டில் ஸ்ரீகாந்த் குளித்துக்கொண்டிருப்பதை கேள்விக்குறியுடன் பார்க்க, 'அவர் யாருடைய வீட்டிலோ குளிக்கிறார்னு பார்க்காதீங்கப்பா. அவருக்கு உரிமையான வீட்டில்தான் குளிச்சிக்கிட்டிருக்கார்' என்று சொல்லி, தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்துவிட்டதை நாசூக்காக உணர்த்துமிடமும் அப்படியே. ஆனால் அதைக்கேட்டதும் அதிரும் பூர்ணம் மகளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், நேராகச்சென்று சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்தை உடைப்பதும், அதைப்பார்த்து ஜெயலட்சுமி அதிர்வதும் உணர்ச்சிகளின் உச்சம். 

மனதில் எதையும் மறைக்கத்தெரியாத வெள்ளந்தியான அப்பாவாக வரும் 'பூர்ணம்' விஸ்வநாதனுக்கு யார் அந்தப்பெயர் வைத்தார்களோ தெரியாது. ஆனால் பெயருக்கேற்றாற்போல நடிப்பில் பரி'பூரணம்'. மகளின் திருமணத்துக்கு முன் மகளின் மேலதிகாரியான ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வரும் அவர், அங்கிருக்கும் நாகேஷ் ஒரு பழைய பட்டாளத்து வீரர் எனப்தையறிந்து, பட்டாளத்திலிருக்கும் யாரோ (நாகேஷுக்கு முன்பின் தெரியாத) தன் பழைய நண்பனைப்பற்றி அசால்ட்டாக விசாரிக்கும்போது தெரியும் அப்பாவித்தனம் அவரது தேர்ந்த நடிப்புக்கு ஒரு சான்று.

ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா, 'படாபட்'ஜெயலட்சுமி, மௌலி, நாகேஷ், பூரணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்துக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வித்யாவுக்காக வாணி ஜெயராம் பாடிய பாடலும் (முதலடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்), எம்.எஸ்.வி. பாடிய (நான் முன் குறிப்பிட்ட) பாடலும் மனதைக்கவர்ந்தன. குடும்பக்கதைக்கேற்ற சுகமான ரீ-ரிக்கார்டிங். படம் துவங்கும்போது ஆகாசவாணியின் இசையை மெல்ல பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பது ஜோர்.

வித்தியாசமான ஒரு படத்தைத்தந்த 'இவர்கள்' நிச்சயம் 'வித்தியாசமானவர்கள்'தான்.

Thursday, April 7, 2011

நடிகை சுஜாதா

பல்வேறு தமிழ்த்திரைப்படங்களின் மூலம் நம்மை பரவசப்படுத்திய, சந்தோஷப்படுத்திய, நெகிழச்சியூட்டிய சுஜாதா என்னும் ஒரு சாயங்கால மேகம் நேற்று கலைந்து விட்டது என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எல்லோருக்கும் ஒரு கிளைமாக்ஸ் உண்டு என்றாலும், அவர் 58 வயதே நிரம்ப்பபெற்றவர் என்ற ஒரு காரணமே, 'அதற்குள்ளாகவா' என்று வருத்தமுறச்செய்கிறது.

1974-ல் 'அவள் ஒரு தொடர்கதை' பார்த்தபோது, இதோ ஒரு புதிய யதார்த்த நாயகி தமிழ்த்திரைக்கு கிடைத்துவிட்டார் என்று திரைப்பட ஆர்வலர்கள் குதூகலித்தனர். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் அறிமுகத்தில் அடியெடுத்து வைத்த சுஜாதா, முதல் படத்திலேயே குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்ற கனமான பாத்திரத்தை அநாயாசமாக வென்றெடுத்தார். சினிமா விசிறிகள், குடும்பத்தலைவிகள், மாணவ சமுதாயம் என அனைத்துத்தரப்பு மக்களின் பேராதரவோடு, முதல் படத்திலேயே வெற்றி நாயகியானார். தொடர்ந்து வந்த 'மயங்குகிறாள் ஒரு மாது' எனும் திரைத்தென்றலின் மூலம் நம்பிக்கைக்குரிய நாயகியானார். 'வாழ்ந்து காட்டுகிறேன்' படத்தில் நடித்துக்காட்டாமல் பாத்திரமாக வாழ்ந்து காட்டினார்.

அடுத்த தலைமுறைக் கலைஞர்களுக்கு கதவைத்திறந்து விட்ட 'அன்னக்கிளி' வந்தது. பண்ணைபுரத்து நாயகனின் 'பண்'ணைத்தாங்கி வந்து வெற்றிநடைபோட்டது. பட்டி தொட்டியெங்கும் 'மச்சானைப் பாத்தீங்களா' பாடலும், அதற்கு சுஜாதாவின் ஆட்டமும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அதைப்பாடிய இசைக்குயில் ஜானகி தன் திரை வாழ்க்கையில் மறுபிறவியெடுத்தார்.

திரையுலகில் நுழையும் எல்லா நாயகியரின் அப்போதைய இலக்குகளில் ஒன்று, இரு பெரும் திலகங்களுடன் இணைய வேண்டுமென்பது. மக்கள் திலகத்துடன் நடிக்க இவருக்கு கடைசி வரை வாய்ப்பு வரவேயில்லை.

நடிகர்திலகத்துடன் இவர் இணைந்த "தீபம்" திரைக்காவியம் இவருக்கு ஒரு புதிய கதவைத்திறந்து வரவேற்றது. நடிகர்திலகத்துடன் பலர் இணையாக நடித்திருந்த போதிலும் அவர்களில் பொருத்தமான ஜோடிகள் என்று அமைந்தவர்கள நாட்டியப்பேரொளி பத்மினி, எழிலரசி தேவிகா, புன்னகையரசி கே.ஆர்.விஜயா போன்ற ஒரு சிலரே. அந்த வரிசையில் இடம்பெற்றார் சுஜாதா. நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த தீபம், அண்ணன் ஒரு கோயில், அந்தமான் காதலி என வரிசையாக வெற்றியடைய, இவர் பொருத்தமான ஜோடி மட்டுமல்ல ராசியான வெற்றி நாயகியும் கூட என்று ரசிகர்களால் போற்றப்பட்டார். தொடர்ந்து நடிகர்திலகத்துடன் விஸ்வரூபம், வா கண்ணா வா, தீர்ப்பு, தியாகி, திருப்பம், சந்திப்பு உள்பட பல வெற்றிப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன.


உலக நாயகன் கமலுடன் இவர் நடித்த 'ஒரு உதாப்பூ கண் சிமிட்டுகிறது' ஒரு வித்தியாசமான படைப்பு. அதுபோல இருவரும் காது கேளாத, வாய் பேசாதவர்களாய் நடித்த உயர்ந்தவர்கள், மற்றும் கடல் மீன்கள் ஆகியவையும், சூப்பர் ஸ்டாருடன் நடித்த பல படங்களில் 'அவர்கள்' படமும் சுஜாதாவின் புகழ்க்கிரீடத்தின் வைரங்கள். மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் பல்வேறு படங்களில் நடித்திருந்த போதிலும் பளிச்சென்று தெரியும்படியான படம் திரு. பாலாஜி தயாரித்த "விதி". இப்படத்தின் கோர்ட் காட்சியின்போது இருவரும் மோதிக்கொள்ளும் விவாதக்காட்சி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைத்தது. அதுபோல இயக்குனர் சிகரத்துடன் இவர் மீண்டும் இணைந்த 'நூல் வேலி' படமும் இவரது சாதனைப்பயணத்தில் ஒரு மைல் கல். சிறந்த  கலைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் 'கலைமாமணி' விருதையும் பெற்றிருக்கிறார் சுஜாதா.

சுஜாதா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்பதை, சென்னை சாந்தி திரையரங்கில் நடந்த 'விஸ்வரூபம்' படத்தின் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டபோது நேரிடையாகக் கண்டேன். விழா முடிந்து, ரசிகைகள் கூட்டத்தில் வந்து நின்றுகொண்டு வெகு இயல்பாக பேசிக்கொண்டிருந்தார். தமிழ் வசன உச்சரிப்பு தெளிவாகவும், வசீகரிக்கும்படியாகவும் இருக்கக்கூடிய வெகுசில நடிகையரில் சுஜாதாவும் ஒருவர். இத்தனை காலம் திரையுலகில் இருந்தும் எந்த ஒரு ஆபாசக்காட்சியிலோ, முகம் சுளிக்கும்படியான தோற்றத்திலோ இவர் நடித்ததில்லையென்பது இவர் பெற்றிருக்கும் பெரிய வெகுமதி.

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதே தொழிலதிபரான ஜெயகர் என்பவரைத்திருமணம் செய்துகொண்டு, குழந்தைப் பேற்றுடன் சிறந்த குடும்பத்தலைவியாகவும் விளங்கியவர். சமீபகாலமாக இதய நோயின் தாக்குதலுக்குள்ளாகியிருந்த சுஜாதா, வெளி உலகத்தொடர்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவர் நமக்காக விட்டுச்சென்ற அற்புதத் திரைப்படங்களே அவரது நினைவைப்போற்றும் சிறந்த நினைவுச் சின்னங்களாக விளங்கும்.  

அழியாத ஓவியமாய் நம் நெஞ்சங்களில் உறைந்துவிட்ட திருமதி சுஜாதாவை இனி எப்போது பார்க்கப்போகிறோம்?. கண்ணீருடன்.... சாரூ....

Tuesday, April 5, 2011

பாட்டும் பரதமும் (கூடுதல் விவரங்கள்)

'பாட்டும் பரதமும்' பற்றி நண்பர்களின் பின்னூட்டங்கள், அப்படம் வெளியான காலகட்டத்தின் நிகழ்வுகளை விவரிப்பதால், அவை இங்கு தனிப்பதிவாக இடப்பட்டுள்ளன. முதலில் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர், அன்புச்சகோதரர் திரு. ராகவேந்தர் அவர்களின் பதிலுரை.....

அன்புச் சகோதரி சாரதா,என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற உன்னத திரைக்காவியமான பாட்டும் பரதமும் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு நெஞ்சைத் தொடுகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய My Song is For You என்ற பாடலே நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீப்ரியாவுடனான பாடலாகும். பல காட்சிகள் இப்படத்தில் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கற்பனைக்கு மேனி தந்து பாடல் அப்போதைய மெல்லிசை மேடைகளில் மிகவும் பிரசித்தம். பல டி.எம்.எஸ். ரசிகர்கள் இப்பாடலை மேடை தவறாமல் பாடியதுண்டு.
அரசியலால் பாதிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று. திரையரங்கில் இப்படம் பார்க்க விடாமல் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றதுண்டு. இப்படம் வெளியான நேரத்தில் தான் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தை விமர்சித்து சுவரொட்டி வெளியிட்டு பரபரப்பூட்டினார். அது மட்டுமின்றி சாந்தி திரையரங்கிலேயே ரசிகர்களிடையே புகுந்து நடிகர் திலகத்தை தாறுமாறாக விமர்சித்தவர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளத்தின் அடித்தளத்தில் அப்படியே தங்கி விட்டன. அப்போதும் நான் நடிகர் திலகத்தின் பால் உள்ள பாசமும் பற்றும் மாறாமல் அவரை விட்டுக் கொடு்க்காமல் பேசுவேன். அது மட்டுமன்றி அவர்களிடம் சவாலும் விட்டிருக்கிறேன். உங்களுடைய அரசியலை நம்பி நடிகர் திலகம் இல்லை. அவருடைய படங்களை உங்கள் கட்சியினர் பார்த்துக் கூட இருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் இனிமேல் தான் அவர் பல சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறேன் (இவையெல்லாம் உண்மையில் நடந்தது, வெறும் வார்த்தைக்காக கூறியதில்லை.) அதே சாந்தி திரையரங்கில் இன்றும் நாம் கூடுகிறோம். அதே சாந்தியில் இன்றும் நடிகர் திலகத்தின் படம் வெற்றி நடை போட்டிருக்கிறது. ஆனால் அன்று அவரை இழித்தோரும் பழித்தோரும் காணாமல் போயினர். பாட்டும் பரதமும் படம் மட்டுமன்றி அதைத் தொடர்ந்து வந்த உனக்காக நான் படமும் பாதிக்கப் பட்டது. ஆனால் உத்தமன் படம் பெற்ற வெற்றி ஓரளவு மன சாந்தி தந்தது. 1977ல் தீபம் அடைந்த மகத்தான வெற்றி, அதைத் தொடர்ந்து அண்ணன் ஒரு கோயில் மகளிரிடம் பெற்ற அபிமானம், இவையெல்லாம் தாண்டி திரிசூலம் அடைந்த இமாலய வெற்றி என்னுடை கணிப்பை சரியானதாக்கி இன்றளவும் உள்ளத்துள் அந்த சோதனையான நாட்களை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

(இதற்கு நான் அளித்த பதிலுரை)

சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....

'பாட்டும் பரதமும்' ஆய்வுக்கட்டுரைக்கு நீங்கள் அளித்துள்ள பதிலுரையில் பல நிகழ்வுகளைச்சுட்டிக்காட்டி, பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளீர்கள். அவை என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் மாறாத நினைவுகள் என்பதைவிட ஆறாத வடுக்கள் என்பதே பொருத்தம். குறிப்பாக இந்தப்படத்துக்கு எதிராக நடந்த சதிகள் நிறைய. டாக்டர் சிவாவும், வைர நெஞ்சமும் அவர் முடிவெடுக்கும் முன் வெளிவந்து பல நாட்களைக் கடந்து விட்டன. அதுபோல 'உனக்காக நான்' வந்தபோது சூடு சற்று ஆறிப்போய் விட்டிருந்தது. ஆனால் 'பாட்டும் பரதமும்'தான் மிகவும் சிக்கலான தருணத்தில் வெளிவந்து, தாக்குதலில் மாட்டியது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக நின்றது அவரது ரசிகர் கூட்டம்தான். ஆனால் அதிலும் கூட பிளவு ஏற்பட்டிருந்தது.

தமிழகம் முழுக்க இப்படி சிக்கல் என்றால், திருச்சி - தஞ்சாவூர் விநியோக ஏரியாவில் கூடுதலாக இன்னொரு பிரச்சினை. பிரச்சினை என்பதைவிட சதி, வியாபாரக் காழ்ப்புணர்ச்சி என்பவையே சரியான பதங்களாயிருக்கும்.

ஏ.வி.எம்.நிறுவனத்தின் பல கிளைகளில் ஒன்று, திருச்சியில் இயங்கி வரும் 'ஏ.வி.எம்.லிமிடட்' என்ற விநியோக நிறுவனம். 'பாட்டும் பரதமும்' பாதித் தயாரிப்பில் இருக்கும்போதே விநியோகஸ்தர்களுக்கான காட்சியைப்பார்த்து விட்டு, அப்படத்தை திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஏரியா உரிமையை வாங்க முயற்சித்தனர். ஆனால் அதைவிட கூடுதல் தொகைக்குக்கேட்ட வேறொரு விநியோகஸ்தருக்கு படம் வழங்கப்பட்டுவிட்டது. இதற்காகவே படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து, நடிகர்திலகத்தின் 'தில்லானா மோகனாம்பாள்' படத்திற்கு அந்த ஏரியா உரிமையை A.V.M.Ltd (Trichy) வாங்கி, சுமார் ஏழெட்டு புதிய பிரிண்ட்கள் எடுத்து 'பாட்டும் பரதமும்' படத்தைத் தோற்கடிப்பதற்காக, அதே 1975 டிசம்பர் 6 அன்று திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பை பெரிதாகப்போட்டு அடைப்புக் குறிக்குள் சிறியதாக (தில்லானா மோகனாம்பாள்) என்ற தலைப்பிட்டு பெரிய பெரிய போஸ்ட்டர்கள் அடித்து வெளியிட்டனர். அதுமட்டுமல்லாது திருச்சி 'தினத்தந்தி' பதிப்பிலும், கடைசி பக்கத்தில் முழுப்பக்க 'பாட்டும் பரதமும்' விளம்பரம் வெளியிடப்பட, அதே இதழில் முதற்பக்கத்தில் கால் பக்க விளம்பர மாக, நடிகர்திலகம் நாதசுரம் வாசிக்க, பத்மினி நாட்டியமாடும் போஸுடன், இன்றுமுதல் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பிட்டு விளம்பரம் செய்திருந்தனர். அதாவது, புதியபடத்தின் விநியோக உரிமை கிடைக்கவில்லை என்பதற்காக, நடிகர்திலகத்தின் கையை எடுத்தே அவர் கண்ணைக் குத்தினார்கள். அதிலும் பெரிய கொடுமை, பட்டுக்கோட்டையில் 'தில்லானா' படம் திரையிடப்பட்ட 'நீலா' திரையரங்கின் உரிமையாளர் ஒரு காங்கிரஸ் காரராம். (பாட்டும் பரதமும் 'முருகையா' என்ற தியேட்டரில் வெளியானதாம்).

அதுபோக தமிழகம் முழுவதும் இப்படம் ஓடிய அரங்கின் முன் பா.ராமச்சந்திரன் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸார் கூடி நின்று, 'படம் டப்பா, போகாதீர்கள்' என்று படம் பார்க்க வந்த பொதுமக்களை திசை திருப்பிவிட்டனர். காங்கிரஸ் இணைப்பு மாநாட்டுக்கு முன் எமர்ஜென்ஸியில் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்டிருந்ததால், அவர்களின் எதிர்ப்பும் நடிகர் திலகத்துக்கு எதிராக அமைந்தது. எதிர்வாதத்தில் ஈடுபட்ட நடிகர் திலகத்தின் ரசிகர்களை அடித்து விரட்டினர். எந்தவித சப்போர்ட்டும் இல்லாத ரசிகர்கள் அடிதாங்க முடியாமல் விரண்டோடினர். சென்னையில் மட்டுமல்ல, மதுரை சினிப்ரியா அரங்கின் முன்னும் தினமும் இதே கலாட்டா நீடித்ததாம். (முரளியண்ணா விவரிப்பார் என்று நம்புகிறேன்). ஆனால் மதுரையில் ரசிகர்படை சற்று பலமானது என்பதால் எதிர்ப்பு அவ்வளவாக எடுபடவில்லை. இருப்பினும் கலாட்டாவுக்குப் பயந்த மக்கள் இப்படம் ஓடிய தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கத்துவங்கினர். எதிர்ப்பாளர்களின் எண்ணம் பெருமளவு நிறைவேறியது.

அந்த நேரத்தில் இப்பட வெளியீட்டைத் தவிர்த்திருந்தால் படம் நிச்சயம் பெரிய வெற்றியடைந்திருக்கும். அதற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன. இப்படத்துக்காக நடன மேதை கோபிகிருஷ்ணாவிடம் நடிகர்திலகம் குறுகிய காலம் பிரத்தியேகமாக நடனம் கற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல்.

நடிகர்திலகத்தின் மற்றொரு தீவிர ரசிகரும் நம் அன்புச் சகோதரருமான மதுரை திரு. முரளி சீனிவாஸ் அவர்கள் அளித்த பதிலுரையில் காணக்கிடக்கும் மேற்கொண்ட தகவல்கள்....

சாரதா,
பாட்டும் பரதமும் படத்தை அழகாக எழுதியிருகிறீர்கள். அது உங்களுக்கு கை வந்த கலை. முதல் நாட்டியத்தை பார்க்க வரும் நடிகர் திலகம் அருகில் அமர்ந்திருக்கும் விஜயகுமாரிடம் சொல்லும் வசனம் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அண்மையில் கூட அந்த வசனத்தை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
பாடல்கள் தேனாறு என்றால் மிகையாகாது. எங்கள் வீட்டில் இந்த படத்தின் எல்.பி. ரெகார்ட் வாங்கி போட்டுக் கேட்டுக் கொண்டே இருந்த நினைவுகள் எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன. மாந்தோரண வீதியில் பாடல் கவியரசு கொஞ்சம் இலக்கியமாகவே எழுதியிருப்பார். அதாவது அவரது எளிய நடையை விட்டு விட்டு,உறவு நிலையை கவிஞர் விளக்கும் இரண்டாவது சரணம் இலக்கியம் பேசும்.
ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக
வந்து விட்டேன் கண்ணா மணமகளாக
  
தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு பாடல் டி.எம்.எஸ் அற்புதம் காட்டியிருப்பார். அதிலும் அவர் ஹை பிட்சில் போகும்
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவள் இல்லையென்றால் நான் வெறும் கூடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நான் ஒரு கோடு
பாடி பறந்ததம்மா இளங்குயில் பேடு
அப்படியே சிலிர்க்க வைக்கும். கவியரசுவின் தமிழ் விளையாட்டையும் ["மாமழை மேகமொன்று கண்களில் இருப்பு"] இந்த பாடலில் தரிசிக்கலாம்.
இனி அரசியல் உள்ளே புகுந்த கதை. நீங்கள் சொன்ன நாட்டியமும் நாதஸ்வரமும் எனக்கு புதிய செய்தி. ஆக, தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களே படத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கின்றனர்.
பெருந்தலைவர் மறைந்து இரண்டு மாதங்களே ஆன சூழ்நிலையில் படம் வெளி வந்தது என்றாலும் கூட அந்நேரத்தில் நடிகர் திலகம் தன் அரசியல் முடிவை அறிவிக்கவில்லை. நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேரப் போகிறார் என்றும் இல்லையென்றும் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம். [அதற்குள் சென்னையில் போஸ்டர் அடித்த செய்திகள் ஆச்சரியமளிக்கின்றன].
பெரும்பான்மையான ரசிகர்களுக்கு நடிகர் திலகம் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே அவா. இந்த நேரத்தில் அன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பா.ரா. மற்றும் குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றார் ஸ்தாபன காங்கிரஸ் தன் நிலையில் தொடர வேண்டும் என்று நினைத்த போது, நெடுமாறன், தஞ்சை ராமமூர்த்தி, குடந்தை ராமலிங்கம் போன்றவர்கள் இந்திரா காங்கிரஸில் சேர வேண்டும் என்று பிரசாரம் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த மகாதேவன் பிள்ளையை தலைவர் போலக் கொண்டு வந்தனர் [இணைப்பு நடந்த பிறகு இவர் கழட்டி விடப்பட்டது வேறு விஷயம்].
இந்நிலையில் வேறு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நெடுமாறன் அந்த காலக்கட்டத்தில் தினசரி என்று ஒரு நாளிதழ் நடத்திக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை நெடுமாறனுக்கு நடிகர் திலகத்தின் மீதும் அவரது ரசிகர் மன்றத்தின் மீதும் கோவம். அவர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அது கூடாது என்றும் கட்டுரைகள் எழுதினார். இவருக்கு ஒத்து ஊதினார் தஞ்சை ராமமூர்த்தி. இது நடப்பது 1975-ம் ஆண்டு ஜனவரியில். அந்நேரம் நடிகர் திலகம் மொரிஷியஸ் தீவுகளுக்கு சென்றிருந்தார். ரசிகர்கள் கொந்தளித்து பதில் அறிக்கை கொடுக்க காங்கிரசிலும் ஒரு 1972 புரட்சி ஏற்படுமோ என்று யூகங்கள்கிடையில் நடிகர் திலகம் திரும்பி வந்தவுடன் பெருந்தலைவரை சந்திக்க சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி விழுந்தது. [இன்னும் சொல்லப் போனால் 1972 -ம் ஆண்டு அக்டோபரில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கூட நடிகர் திலகமும் ரசிகர்களும் ஓரம் கட்டப்பட்டது நெடுமாறனால்தான் என்ற குற்றசாட்டு கூட உண்டு].
இப்போது மீண்டும் 1975 நவம்பர், டிசம்பருக்கு வருவோம். நடிகர் திலகத்தை தாக்கி எழுதிய நெடுமாறன் தன் செய்தி தினசரியில் அவரை உயர்த்தி எழுத ஆரம்பித்தனர். பல இடங்களிலும் நடிகர் திலகத்தின் மன்றங்கள் இந்திரா காங்கிரஸில் சேருவதாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவும் இவர்களே செய்திகள் வெளியிட ஆரம்பித்தார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் கேள்வி பதில் பகுதியில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை வெளியிட்டார்கள். எப்படி என்றால்
கேள்வி: நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேர விரும்புகிறாரா?
பதில்: சேர விரும்புவது மட்டுமல்ல, அதுதான் நாட்டிற்கு நன்மை பயக்கும் என உளமார நம்புகிறார்.
எந்த நெடுமாறன் நடிகர் திலகத்தை வசை பாடினாரோ அந்த நெடுமாறன் பேச்சை கேட்டு நடிகர் திலகம் நடக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. நடிகர் திலகமும் வாயே திறக்கவில்லை. பேசிய ஒரு கூட்டத்தில் [அன்று அவசர நிலை அமலில் இருந்ததால் பொதுக் கூட்டங்கள் கிடையாது. ஏதோ கல்யாணம் அல்லது ஊழியர் கூட்டம் என நினைவு] ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க போவது போல பேசினார்.
இந்த நேரத்தில் சபரி மலை செல்வதற்காக மாலை போட்டிருந்த அவர் கொல்லம் எக்ஸ்ப்ரஸில் மதுரை வழியாக வந்த போது வெள்ளமென ரசிகர் கூட்டம் அவரை ரயில்வே நிலையத்தில் சந்தித்து தங்கள் உள்ளக்குமுறலை சொன்ன போது உங்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று உறுதி கூறினார். கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடமும் இதையே சொன்னார். அந்த நேரத்தில் ரசிகர்களில் ஒரு பிரிவினர் நடிகர் திலகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடப்பதாக ரத்தக் கையெழுத்து இட்டு மனுக் கொடுத்தனர்.
இவையெல்லாம் பாட்டும் பரதமும் வருவதற்கு ஒரு பத்து நாட்கள் முன்பு நடந்தது. ஆனால் சபரி மலை சென்று விட்டு வந்த பிறகு அவர் எதுவுமே சொல்லவில்லை என்பதுடன் செய்தி நாளிதழில் வெளியான செய்திகளுக்கு மறுப்பும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது. அதுவே படம் வெளியான போது அதற்கு வினையாக மாறியது. படம் வெளியான 15 நாட்களில் படப்பிடிப்பில் அவருக்கு காலில் அடிப்பட்டு விட்டது. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் [டிசம்பர் கடைசி] டெல்லியிலிருந்து இந்திராவின் சிறப்பு தூதுவராக வந்த மரகதம் சந்திரசேகர் அவர்கள் அன்னை இல்லத்திற்கு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விஜயம் செய்து நடிகர் திலகத்தையும், வி.சி.சண்முகம் அவர்களையும் மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்தார். இவர் வந்ததும் பேசியதும் வெளியில் வராமல் பாதுகாக்கப்பட்டன.[எமர்ஜென்சி வேறு]. தன்னோடு நடிகர் திலகத்தையும் டெல்லி அழைத்து சென்ற மரகதம்மாள் ஜனவரி 1 அன்று இந்திராவிடம் அழைத்து செல்கிறார். அந்த சந்திப்பும் புகைப் படமும் வெளி வரும் போதுதான் அனைவருக்கும் நிலவரம் புரிகிறது. ஏற்கனவே நொண்டிக் கொண்டிருந்த பாட்டும் பரதமும் படம் ரசிகர்களால் அடியோடு கைவிடப் படுகிறது

ஆனால் பெருந்தலைவரின் மீதும் ஸ்தாபன காங்கிரஸ் மீதும் பெறும் பற்றுக் கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு படத்தை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுக்க படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு ஒன்பது வாரப் படமாக மாறிப் போனது. 

(முரளியண்ணாவின் பதிவுக்கு நான் (சாரதா) அளித்த பதிலுரை)

தாங்கள் சொல்லும் வரலாற்று நிகழ்வுகள் அசர வைக்கின்றன. மதுரையில் நெடுமாறன் எப்போதுமே நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு எதிராக செயல் பட்டவர். இந்த விஷயத்தில் மட்டும் அவர் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள நடிகர்திலகத்தை பகடையாக உபயோகப்படுத்தியிருக்கிறார். (அதே நேரம்தான் மதுரை முத்து, தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வுக்கு மாறினார்). மதுரையில் பெரிய அளவில் கலாட்டாக்கள் நடைபெறவில்லை என்ற போதிலும் வரிசையில் நின்ற ரசிகர்கள் மத்தியிலேயே, படம் பார்க்க வந்தவர்கள் போல பேச்சை ஆரம்பித்து, நடிகர்திலகத்தின் மீது வசை பாடத் துவங்கி, அவை கலாட்டாக்களில் முடிந்துள்ளன. போதாக்குறைக்கு, ஸ்தாபன காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நெல்லை ஜெபமணி மதுரையில் பேசும்போது, 'இன்னும் அந்தப்படம் (பாட்டும் பரதமும்) தியேட்டரில் ஓடிக்கொண்டிருப்பது ஸ்தாபன காங்கிரஸ்காரர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது" என்று பேசி வன்முறையைத் தூண்டி விட்டுள்ளார். (அதே ஸ்தாபன காங்கிரஸின் வளர்ச்சிக்காகத்தான் நடிகர்திலகம் காலமெல்லாம் பாடுபட்டார் என்ற நன்றியை மறந்தனர்).