Thursday, January 20, 2011

எங்கிருந்தோ வந்தாள்

தீபாவளி திருநாட்களில் 1967 தீபாவளியும், 1970 தீபாவளியும் நடிகர்திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாதவை. அந்த இரண்டு தீபாவளியிலும் ஒரே நாளில் நடிகர்திலகத்தின் இரண்டு படங்கள் வெளியிடப்பட்டு இரண்டுமே நூறு நாட்களைக் கடந்து ஓடி சாதனை புரிந்தன. கே.பாலாஜி தன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த ஐந்தாவது படம் 'எங்கிருந்தோ வந்தாள்'. நடிகர் திலகத்துடன் (தங்கை, என் தம்பி, திருடன் படங்களைத் தொடர்ந்து) நான்காவது படம். இந்தியில் சஞ்சீவ்குமார் நடித்த 'கிலோனா' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. பின்னாளில் எங்கிருந்தோ வந்தாள் படத்தைப் பார்த்த சஞ்சீவ் 'நல்லவேளை சிவாஜிக்கு முன்னால் நான் நடித்து விட்டேன். இல்லாவிட்டால் அதே நடிப்பை என்னிடமும் மக்கள் எதிர்பார்த்திருப்பார்கள்' என்று சொல்லிக் கொண்ட படம். தன் கண் முன்னேயே தன் காதலி மரணத்தை தழுவியதால், மனநிலை பாதிக்கப்பட்ட நாயகனின் உணர்வுகளைக்காட்டும், கத்தி மீது நடப்பது போன்ற கதாபாத்திரம். இந்தியில் அவராலும், தமிழில் இவராலும் மட்டுமே செய்ய முடியும் என்று அனைவரும் சான்றிதழ் வழங்கிய படம்.

பாலாஜியின் படங்களிலேயே நாயகனுக்கு இணையாக நாயகிக்கும் சம வாய்ப்பும், நடிப்பில் பரிணமிக்க சவாலான பாத்திரமும் அமைந்த படம். (பின்னாளில் 'நல்லதொரு குடும்ப'த்தில் வாணிக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது). நடிகர்திலகம் பிய்த்து உதறுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ஜெயலலிதாவிடமும் இவ்வளவு திறமைகளா என்று வியக்க வைத்தது. 'கலைச்செல்வி' ஜெயலலிதாவின் சிறந்த பத்து படங்களை பட்டியலிடும்போது முதலில் எழுதப்பட வேண்டிய படமாக அமைந்தது. (பட்டியல் சவாலே சமாளி, சூரியகாந்தி, அடிமைப்பெண், திருமாங்கல்யம்... என்று தொடரும்)

ஐதராபாத் நாட்டியக்காரியாக, ஜெயலலிதா அறிமுகமாகும் பாடலுடன் படம் துவங்கும். அங்கே வரும் பட்டவராயர் (மேஜர்) பைத்தியமாக இருக்கும் தன் மகனை குணப்படுத்த தன்னோடு தன் வீட்டுக்கு வருமாறு அழைக்க, ஜெயலலிதாவும் திகைப்புடன் ஒப்புக்கொண்டு வர, அவர் வருகையைப் பிடிக்காத மேஜரின் மூத்தமகன் (பாலாஜி) உள்ளிட்டோரின் வெறுப்பையும் பொருட்படுத்தாது, மாடியறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் சேகரைக் காணச் செல்லும்போது  (திரையில்) நடிகர் திலகத்தின் அறிமுகம். 

சேகருடன், அவருக்கு ஏற்றாற்போலவே பேசி அறிமுகமாகும் ராதா, மெல்ல மெல்ல அவரைத் தன் பேச்சைக்கேட்கும் அளவுக்கு மாற்றுகிறார். அவர் ஏன் பைத்தியமானார் என்பது ஃப்ளாஷ்பேக்காக சொல்லப்படுகிறது. கவிதாவை (ஜெய்குமாரி) உயிருக்குயிராக காதலிக்கும் சேகர், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவள் வேறொருவனுக்கு மாலையிடும் சூழ்நிலையில் காண நேரிடும்போது, அவளை நினைத்து உருகி பாட, அதில் கரைந்துபோன அவள், மற்றவனுக்கு மனைவியாவதைவிட மாய்ந்துபோவதே மேல் என முடிவெடுத்து, கையில் நெருப்போடு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள, அதை கண்ணெதிரே காணும் சேகருக்கு சித்தம் கலங்கிப் போகிறது. சேகரின் கடந்துபோன சம்பவங்களைக் கேட்ட ராதா (ஜெ) அவரைக் குணப்படுத்தும்வரை அவருடனேயே இருப்பது, அதனால் எந்த எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பது என்று தங்கி விடுகிறார். அதைத் தொடர்ந்து சேகர் குணமாகும்வரை அவர் செய்யும் சேட்டைகளும், அதைப்பொறுத்துக்கொண்டு ராதா சேகரை குணமாக்கும் முயற்சியிலேயே குறியாக இருக்கிறார்.

இதனிடையே படத்தை இழுத்துச் செல்வதற்காக நாகேஷ், அவர் மனைவி ரமாபிரபா, 'போலிச்சாமியார்' குலதெய்வம் ராஜகோபால், இது போதாதென்று தன் ஆஃபீஸ் டைப்பிஸ்ட் சச்சுவிடம் வழியும் பாலாஜி என்று அங்கங்கே கதை காடு மேடெல்லாம் சுற்றுகிறது. ஒரு கட்டத்தில் சேகரின் சேட்டைகள் தாங்க முடியாமல் வீட்டைவிட்டுப் போக நினைக்கும் ராதாவை போக விடாமல் தடுக்க, பூட்டிய அறைக்குள்ளிருந்து சேகர் "நான் உன்னை அழைக்கவில்லை... என் உயிரை அழைக்கிறேன்" என்று உருகிப்பாட, அதில் மனம் மாறிய ராதா, போகும் முடிவைக்கைவிட்டு திரும்புகிறார். ஆனால் அதைத்தொடர்ந்து மழையில் நனைந்துவிடும் ராதா, சூழ்நிலை காரணமாக சேகரிடம் தன் கற்பை பறிகொடுத்து விடுகிறார். சேகரின் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் ராதாவை, விஷயம் புரியாமல் சேகரின் தம்பி (முத்துராமன்) ஒருதலையாக காதலிக்கிறார். ராதாவோடு தனித்திருக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் அவரிடமிருந்து, ராதா நாசூக்காக கழன்று கொண்டு விடுகிறார்.

சேகருக்கு காளிதாசனின் 'சாகுந்தலம்' கவிதையை வாசித்துக்காட்டும் ராதா, அப்படியே கற்பனை விரிந்து... தானே சகுந்தலையாகவும், சேகரை துஷ்யந்தனாகவும் பாவித்து, அந்தப்பாடலின்போது துஷ்யந்தனோடு கலந்துவிட, துர்வாச முனிவரது சாபத்தால் துஷ்யந்தன் தன்னை மறந்து சென்றுவிடுவதாக கனவு கண்டு திடுக்கிட்டு எழுவது... கதையோட்டத்துடன் கலந்த அற்புதமான இடைச்செருகல். கிளைமாக்ஸில் சேகர் என்ன சொல்லப்போகிறான் என்பதை முன்கூட்டியே சொல்வது போலவும் அமைந்திருந்தது. (ராதா கவிதை வாசித்துக்காட்டும் இந்தக்காட்சி, நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல'த்தின் முன் படமாக்கப்பட்டிருக்கும்).

எந்த சண்டாளன் சேகரிடமிருந்து கவிதாவைப் பிரித்தானோ, அதே சுகுமார் சேகரின் தங்கையையும் (எம்.பானுமதி) தன் வலையில் வீழ்த்தி, அவளை இழுத்துக்கொண்டு ஓடப்போகும் சமயம், அதைப்பார்த்த ராதா, சேகரை உசுப்பி விட, அவர் பைத்திய நிலையிலேயே சுகுமாரை அடித்து, நொறுக்கி, கடித்து துன்புறுத்த (இந்த கட்டத்தில் ஒரு அசல் பைத்தியக்காரன் சண்டை போட்டால் எப்படி போடுவான் என்பதை கண்முன்னே கொண்டு வருவார் நடிகர் திலகம்) அவரிடமிருந்து தப்பிக்க, தவறுதலாக மாடியின் கைப்பிடி சுவரில் ஏறும் சுகுமார், பேலன்ஸ் இல்லாமல் நிலை தடுமாறி மாடியில் இருந்து விழுந்து இறக்க, மாடியில் இருந்து எட்டிப்பார்க்கும் சேகருக்கு (அதே பழைய காட்சியைக் கண்டு விட்ட நிலையில்) பாதிக்கப்பட்ட மனநிலை சீராகி பைத்தியம் தெளிய... சரி அப்புறம்?.

அப்புறம்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் விஸ்வரூபம்...

"பார்த்தீங்களா..? உங்க பிள்ளைக்கு குணமாயிடுச்சு, என்னங்க... இதோ பார்த்தீங்களா உங்க தம்பிக்கு குண்மாயிடுச்சு" என்று மேஜர், பாலாஜி போன்றோரிடம் ஒவ்வொருவராக அழைத்துச்சென்று காண்பிக்கும்போது அவர் காட்டும் முக மலர்ச்சி என்ன?. ஒவ்வொருவராகப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு வரும் சிவாஜி, கடைசியில் அண்ணி தேவிகாவிடம் "அண்ணி யார் இந்தப்பொண்ணு?" என்று கேட்கும்போது, அதிர்ச்சியில் அப்படியே முகம் மாறும் பாவனை என்ன?. (அப்போது மெல்லிசை மன்னர் டிரம்ஸ் அதிர கொடுக்கும் அந்த 'பாங்' சவுண்ட்).

நடிகர் திலகத்தை ஒவ்வொரு இடமாக கூட்டிக்கொண்டு போய் "என்னங்க இது நினைவு இருக்கிறதா? அது நினைவு இருக்கிறதா?" என்று கேட்க "ஓ... நான் பைத்தியமாக இருக்கும்போது உங்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுத்தேனா?" என்று கேட்க, அதற்கு ஜெ. "ஆங்... இப்ப நினைவு வருதுல்ல?" என்று ஒரு குழந்தையின் முகமலர்ச்சியுடன் கேட்க, அதற்கு நடிகர் திலகம் இல்லை என்பது போல கையை விரிக்க, அப்படியே முகம் மாறி "ஒண்ணுமே நினைவில்லையா...ஐயோ" என்று தலையில் கைவைத்து நிற்கும் இடம்... அம்மாடியோ. (பாவி மகளே... அஞ்சு வருஷமா இந்த நடிப்பையெல்லாம் எங்கேம்மா ஒளிச்சு வச்சிருந்தே). அதற்கு முன் ஜெயலலிதாவுக்கு தியேட்டரில் இவ்வளவு பலத்த கைதட்டல் விழுந்து பார்த்திருக்க முடியாது.

(இந்த இடத்தில் சேகரின் இடத்தில் 'விஜி'யையும், ராதாவின் இடத்தில் 'சீனு'வையும் வைத்துப்பாருங்கள். மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் வந்து விடும்)

தான் பைத்தியமாக இருக்கும்போது என்ன நடந்தது என்று நினைவில்லா விட்டாலும், என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொண்ட சிவாஜி, தான் குணமாக உறுதுணையாக இருந்த ஜெ.வை மேஜரும் பாலாஜியும் பணம் கொடுத்து செட்டில் பண்ணி விரட்ட துணியும் நேரத்தில், அவருக்காக உதவிக்கு வருவது அருமையான திருப்பம். (ஆனால் அதைத்தொடர்ந்து, முத்துராமன், பக்கத்து வீட்டு சுகுமாருக்கும் எம்.பானுமதிக்கும் என்ன உறவு, சச்சுவுடன் பாலாஜியின் லீலைகள், நாகையாவுக்கும் ஜெ.வுக்கும் என்ன உறவு என்று  ஒவ்வொரு குழப்பமாக தீர்த்து வைப்பது சுத்த சினிமாத்தனம்). எல்லாம் முடிந்து அனைவரும் ராதாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள... முடிவு சுபம்.

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அருமையாக இசை வடிவம் கொடுத்திருந்தார். முதல் பாடல் ஜெயலலிதா அறிமுகக்காட்சி. ஐதராபாத் நாட்டியக்காரியாக வரும் ஜெயலலிதாவுக்காக எஸ்.ஜானகி பாடிய "வந்தவர்கள் வாழ்க.. மற்றவர்கள் வருக" பாடலில் ஆர்மோனியம், சாரங்கி, தபேலா அனைத்தும் துள்ளி விளையாடும்.

ஃப்ளாஷ்பேக் காட்சியில் சிவாஜி பாடுவதாக வரும். "ஒரே பாடல் உன்னை அழைக்கும்... உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்" பாடலில், இதுவரை பார்க்காத ஜெய்குமாரி. ஆம்.. புடவையை இழுத்து போர்த்திக்கொண்டு கண்களில் கண்ணீர் வழிய, சோக பாவம் காட்டும் ஜெய்குமாரி நமக்கு புதுசு. 'எந்த ரோல் கொடுத்தாலும் பின்னியெடுப்போம். ஆனால் எங்களை வெறும் கவர்ச்சிப்பாவைகளாகவே காட்டி வந்து விட்டீர்களே பாவிகளா' என்று இரண்டு 'ஜெ' க்களும்  திரையுலகினரைப் பார்த்து கேட்பது போலிருக்கும் இப்படத்தில்.

ஜெயலலிதா, சிவாஜியை மனமாற்றத்துக்காக அழைத்துச்செல்லும் பிருந்தாவனம் பூங்காவில் (டி.எம்.எஸ்., சுசீலா இருவரும்) பாடும் "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே... பிறக்கும் சங்கீதமே" பாடலில், சுசீலாவின் சிரிப்புக்கு மெல்லிசை மன்னர் சந்தம் அமைத்திருப்பது அருமை மட்டுமல்ல புதுமையும் கூட.

தன் மீது கோபம் கொண்டு வீட்டை விட்டு போகும் ஜெயலலிதாவை திரும்ப அழைக்க சிவாஜி பாடும் "நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்" பாடல், மெல்லிசை மன்னரின் 'ஷெனாய் ஸ்பெஷல்' என்றால் அது மிகையல்ல. ஷெனாய் பேசும், பாடும், நம் மனதை கிறங்கடிக்கும். கண்ணதாசன் மட்டும் என்ன சாமானியப்பட்டவரா...

'என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் தெரியவில்லை
வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழ தெரியவில்லை'

அதே போல அடுத்த சரனத்தில்... .

'என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்னை திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணையில்லை'

கவியரசர், மெல்லிசை மன்னர், குரல் வித்தகர், நடிகர் திலகம் ஆகியோர் சேர்ந்து செதுக்கிய நேர்த்தியான சிற்பம் இப்பாடல். அதிலும் 'நா.............ன்' என்று இரண்டெழுத்து வார்த்தையை, ராக ஆலபனையோடு இவ்வளவு அழகாக இழுத்துப் பாட டி.எம்.எஸ்.ஸை விட்டால் வேறுயார்.

சேகருக்கு ராதா 'சாகுந்தலம்' படித்துக்காட்டும் காட்சியில் கற்பனையில் உருவாகும் "காளிதாச மகாகவி காவியம்" பாடல், கணீர் குரல் மன்னன் சீர்காழியும், (ரொம்ப நாளைக்குப் பிறகு) பி.லீலாவும் பாடியிருப்பார்கள். துஷ்யந்தனாக நடிகர் திலகம் தோன்றும் காட்சியில் பலத்த கைதட்டல். ஜெயலலிதாவின் 'சகுந்தலை' பாத்திரம் நம் மனதில் ரொம்பவே இரக்கத்தை ஏற்படுத்தும்.

கூடவே இடைச்செருகலாக நாகேஷ் - சச்சு பாடும் 'அலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு' பாடலை சாய்பாபா மற்றும் ஈஸ்வரி பாடிருந்தனர்.

தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில், கே.பாலாஜி தயாரித்து ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இப்படம் 1970 தீபாவளி திருநாளில் வெளியாகி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றியைக் குவித்தது.

'எங்கிருந்தோ வந்தாள்' பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி

2 comments:

  1. Saradha madam,

    Thanks for writting about our NT's year 72's sucessfull movies.

    Plesae write more about TMM.

    Sathish

    ReplyDelete