Monday, May 23, 2011

மெழுகுவர்த்தி எரிகின்றது

மெழுகுவர்த்தி எரிகின்றது  (கௌரவம்)

ஒரு திரைப்படத்தில் சில பாடல்கள் ஓகோவென்று உச்சத்திற்குப் போகும்போது, மற்ற பாடல்கள் பின்தங்கி, அவற்றுள் சில நல்ல பாடல்கள் நிழலுக்குள் தள்ளப்படுவதுண்டு. நடிப்புச்சக்கரவர்த்தியின் கௌரவம் படத்தில் அப்படி, மற்றவர்களால் போதிய அளவு சிலாகிக்கப்படாத ஒரு பாடல்தான் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' பாடல்.

பெரியவரின் இரண்டு பாடல்களான 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடலும், 'நீயும் நானுமா கண்ணா' பாடலும் ரசிகர்களின் மனதில் டாப்பில் போய் அமர்ந்துகொண்டன. இப்படத்தின் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவோர் யாவரும் இவ்விரண்டு பாடல்களையே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். அதையடுத்து சின்னவரான கண்ணனின் பாடல்களில் கூட சட்டென்று யாவரும் நினைவில் கொண்டுவருவது, அவருக்கும் ராதாவுக்கும் (உஷா நந்தினி) ஒரே டூயட் பாடலான 'யமுனா நதியிங்கே ராதை முகமிங்கே' பாடல்தான். அதற்கு அடுத்த இடத்தைப்பிடிப்பது கூட, மெல்லிசை மன்னர் தன் இசையால் டாமினேஷன் செய்த 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல்தான். ஐந்தாவது இடம் போனால் போகிறதென்று 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடலுக்கு.

ஆனால் பெரியவரின் இரண்டு ஆக்ரோஷமான பாடலுக்கும், சின்னவரின் நளினமான டூயட் பாடலுக்கும், ஈஸ்வரியின் துள்ளல் பாடலுக்கும் இடையே... மனதை வருடும் அமைதியான பாடலாக அமைந்தது மெழுகுவர்த்தி பாடல்தான்.

இதற்கு முன் எத்தனையோ பாடல்களில் பியானோ வாசிப்பவராக நடித்திருக்கிறார் நடிகர்திலகம். பாசமலர், புதிய பறவை, எங்க மாமா இப்படி நிறைய. ஆனால் அவைகளிலெல்லாம் முடிந்த வரையில் தன் உடல் மொழியால் ஸ்டைல் காட்டுவார். ஆனால் இப்பாடலில் அப்படி எந்த ஸ்டைலும் உற்சாகத்துள்ளலும் இல்லாமல் மிக அமைதியாக வாசித்திருப்பார். காரணம் கதைப்படி தொழிலில் கருத்து வேறுபாடால் தன் உயிருக்குயிரான பெரியபாவையும் பெரியம்மாவையும் பிரிந்து ஓட்டலில் தங்கியிருக்கிறார். இருப்பினும் காதலியின் பிறந்தநாளின்போது பாட வேண்டிய சூழல். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டைல் காட்டினால் அது அபத்தமாக அல்லவா ஆகிவிடும். அதை உணர்ந்தே காதலிக்கு வெளிக்காட்டாமல் மனதில் சோகத்தை அடக்கிக்கொண்டு ரொம்பவே இயல்பான பெர்பார்மென்ஸை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஒருபக்கம் காதலி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும்போது, இவர் லேசாக திரும்பிப் பார்த்தபடி, கருமமே கண்ணாக பாடிக்கொண்டிருப்பதும், தனக்கு கேக் ஊட்ட வரும் காதலியின் கையைப்பிடித்து அவளுக்கே ஊட்டி விடுவதும், அந்த நேரத்தில் கூட அளவுக்கதிகமாக சிரித்து விடாமல் அடக்கி வாசித்திருப்பதுமாக நம மனதை அப்படியே உருக வைப்பார்.

மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது

கவியரசரின் என்ன அழகான வரிகள், மெல்லிசை மன்னரின் எவ்வளவு இனிமையாக மனதை வருடும் மென்மையான இசை, இவரா பெரியவருக்கு அவ்வளவு ஆக்ரோஷமாகப்பாடினார் என்று வியக்க வைக்கும் வண்ணம் டி.எம்.எஸ்ஸின் அமைதியான குரல், அமைதி தோய்ந்த முகத்தோடு பாடிக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், அவர் பாடுவதை முகத்தில் ஆவலும் கனிவும் பொங்க பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உஷா நந்தினி, இந்தக்கூட்டத்தின் நடுவே கேக் தின்னுவதும், பரிசுப்பொருளைத் திருடுவதுமாக சேட்டை செய்துகொண்டிருக்கும் நாகேஷ், இப்படி பலதரப்பட்ட விஷயங்களுடன் பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்....

அன்பு என்னும் கோயில்தன்னிலே
பாசம் என்னும் தீபம் தன்னிலே
உள்ளம் ஒன்று மயங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது

இது ஒன்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட பாடல் அல்ல, ஒரு வீட்டின் நடுக்கூடத்தில் படமாக்கப்பட்டதுதான். ஆனாலும் கூட தன்னுடைய கேமராவை லாவகமாக அங்குமிங்கும் சுழற்றி அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக கவர் செய்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குனர் வின்சென்ட், பியானோ பாடல்கள் என்றாலே சிறப்பு கவனம் செலுத்தும் மெல்லிசை மன்னர், இவர்களை ஒருங்கிணைத்து பாடலை அழகுற பாடமாக்கியிருக்கும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இப்படி எல்லோரது கூட்டு முயற்சியில் பாடல் வெகு சூப்பராக அமைந்து விட்டது.

வழக்கமாக கூடத்தின் நடுவே இருக்கும் பெரிய பியானோ, அதனைத் திறந்து வைத்து ஒரு கோலால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் டாப் என்றில்லாமல் சுவரோடு ஒட்டிய அடக்கமான பியானோ, அதன் முன்னே எந்த பந்தாவான உடையும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேண்ட், வெளிர் ரோஸ் நிற அரைக்கை சட்டையணிந்து சிம்பிளாகக் காட்சி தரும் நடிகர்திலகம் என எல்லாம் ஒருங்கிணைந்து நம் மனதைக் கவர்ந்த பாடலாக இப்பாடல் காட்சி அமைந்து விட்டது.

என் மனதைக்கவர்ந்த 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

Saturday, May 21, 2011

ஒரு ரூபாய் சம்பளம்

ஒரு ரூபாய் சம்பளம் துவங்கியது எப்போது...?

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது நமக்குத்தெரியும். ஆனால் அந்த ஒரு ரூபாய் சம்பளம் துவங்கியது எப்போது தெரியுமா?.

கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் சொன்ன விவரம்....

முக்தா வி.சீனிவாசன் இயக்கத்தில், வித்யா மூவீஸின் 'சூரியகாந்தி' படத்துக்கு நான் கதை வசனம் எழுதியிருந்தேன். அது கதாநாயகிக்கு நல்ல ஸ்கோப் உள்ள சப்ஜெக்ட் ஆதலால் அந்த ரோலுக்கு ஒரு பெரிய நட்சத்திரத்தை போடலாம் என்று முடிவடுத்து, யாரைப்போடலாம் என்ற ஆலோசனையின் போது கலைச்செல்வி ஜெயலலிதாவை நடிக்க வைக்கலாம் என்று யோசனை சொன்னேன். முக்தா தயங்கினார். 'என்னுடைய பொம்மலாட்டம் படத்தில் நடித்தபோது அவர் இருந்த ஸ்டேஜ் வேறு. ஆனா இப்போ அவர் பெரிய நட்சத்திரம். இப்போ அவர் வாங்கும் சமபளம் எல்லாம் கொடுக்க நமக்கு கட்டுபடியாகாது' என்றார்.

நல்ல ரோலாக இருப்பதால் ரேட்டில் நான் கன்வின்ஸ் பண்றேன், நீங்க மட்டும் சம்மதம் கொடுங்க என்று நான் சொல்ல முக்தா சம்மதித்தார். ஜெயலலிதா வீட்டுக்குப்போய் கதை சொன்னேன். அவருக்கும் ரோல் பிடித்துப்போகவே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது செல்போனெல்லாம் கிடையாது, ஆகவே ஜெயலலிதா வீட்டிலிருந்தே முக்தா சீனிவாசனுக்கு போன் செய்து ஜெ. நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதைச் சொன்னேன். அதற்கு அவர் 'அம்மு இப்போ ஒரு படத்துக்கு ஒரு லட்சம் வாங்குறாங்க. நமக்கு அதெல்லாம் கட்டுபடியாகாது. நம்ம படத்துக்கு முப்பதாயிரம் ரூபாய்தான் தர முடியும். அதற்கு சம்மதமான்னு கேளுங்க' என்று சொல்ல, நான் போனை கட் பண்ணாமல் கையில் ரிஸீவரை வைத்துக்கொண்டே ஜெயலலிதா அவர்களிடம் விவரத்தைச்சொல்ல, அவர் போனை என் கையிலிருந்து வாங்கி, "டைரக்டர் சார், புரொபஸர் எல்லா விவரமும் சொன்னார். இந்தப்படத்தில் நடிக்க என்னுடைய சம்பளம் 100 நயா பைசா, அதாவது ஒரு ரூபாய். சரியா?. மேற்கொண்டு ஆக வேண்டியதைப்பாருங்க" என்று போனை வைத்து விட்டார்.

'சூரியகாந்தி' படம் வெற்றிகரமாக ஓடி 100வது நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள் கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கினார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து முக்தா சீனிவாசன் ஜெயலலிதா அவர்களுக்கு சம்பளமாக ரூபாய் நாற்பதாயிரத்துக்கு செக் கொடுத்தார். அதைப்பார்த்த ஜெயலலிதா "நான் ஒரு ரூபாய்தானே கேட்டேன்" என்று தமாஷாகச்சொல்ல, முக்தாவும் தமாஷாக "மீதி 39,999 ரூபாய் அடுத்த படத்துக்கான அட்வான்ஸாக வச்சுக்குங்க அம்மு" என்று சொல்ல அந்த சூழ்நிலையே மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஜெயலலிதாவின் ஒரு ரூபாய் சம்பளம் பற்றி எழுதும்போது, அதே போன்ற இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இது திரு வி.சி.குகநாதன் சொன்னது....

தயாரிப்பாளர், இயக்குனர் வி.சி.குகநாதன் தனது 'மஞ்சள் முகமே வருக' படத்தைத் துவங்கியபோது, அவர் கையில் இருந்தது வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே. இதைக்கொண்டுதான் முதல் நாள் படப்பிடிப்பை நடத்த வேண்டும். படப்பிடிப்புக்கு முந்திய நாள் பிரதான நடிகர் நடிகையருக்கு மட்டும் ஆளுக்கு ரூ. 100 அல்லது 150 அட்வான்ஸாகக் கொடுத்து புக் பண்ணினார். அவரது நெருக்கடியான நிலையைப் பார்த்து சிலர் அட்வான்ஸ் வேண்டாம். படம் துவங்கிய பிறகு வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லி விட்டனர். S.N.லட்சுமியம்மாவிடம் 100 ரூபாய் கொடுத்தபோது, அதில் 50 ரூபாயைத் திருப்பிக்கொடுத்து, 'இதை இன்னொருவருக்கு அட்வான்ஸா கொடுத்துக்கோ' என்று சொன்னாராம்.

இறுதியாக படத்தின் கதாநாயகனான நடிகர் முத்துராமனிடம் போய் அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும் என்று கேட்டபோது முத்துராமன், "நான் இரண்டு தொகை மனசுல நினைச்சிருக்கேன். அதுல எதைக்கேட்கலாம்னு பூவா தலையா போட்டுப்பார்ப்போம். அதுக்கு ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் கொடுங்க" என்று குகநாதனிடம் கேட்க, அவரும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டியிருக்கிறார். அதை வாங்கி பூவா தலையா போட்டுப்பார்க்காமல் தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்ட முத்துராமன், "இப்போ நீங்க கொடுத்த ஒரு ரூபாய்தான் என் அட்வான்ஸ். நீங்க போய் மற்ற வேலைகளைப்பாருங்க" என்று சொல்லி விட்டாராம்.

மிச்சமிருந்த பணத்தில் 460 ரூபாய்க்கு கருப்பு வெள்ளை பிலிம் ரோல் ஒன்று வாங்கி, மறுநாள் குறிப்பிட்டபடி ஒரு மரத்தடியில் படப்பிடிப்பைத்துவங்கி விட்டாராம். முதல்நாள் படப்பிடிப்பைப் பார்க்க வந்திருந்த விநியோகஸ்தர்களில் ஒருவர், ஒரு ஏரியாவைத்தான் வாங்கிக்கொள்வதாக விலைபேசி அப்போதே அட்வான்ஸாக ரூ. 25,000-க்கு செக் கொடுக்க, அதைக்கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினாராம் குகநாதன். (கேட்கும் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது).

திரையுலகில் எல்லோரும் இப்படி தாராள மனதுடன் நடந்துகொள்பவர்கள் அல்ல. பலர் ரொம்ப கறார் பேர்வழிகள். படப்பிடிப்பு துவங்கும் முன்னரே முழுப்பணத்தையும் வாங்கிக்கொள்ளும் சில்க் ஸ்மிதா போன்றவர்களும் இத்திரையுலகில்தான் இருந்தனர், இருக்கின்றனர்.

Wednesday, May 18, 2011

சட்டமன்றம் - புதியதும், பழையதும்

புதிய தலைமைச்செயலகக் கட்டிடம் ஒன்றைக்கட்டி, ஏற்கெனவே செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த தலைமைச் செயலகத்தையும், சட்டமன்றத்தையும் அங்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது முந்தைய (2001 - 2006) ஜெயலலிதா ஆட்சியிலேயே தீர்மானிக்கப்பட்டதுதான். அதற்காகத்தான் சென்னை கடற்கரையிலுள்ள ராணி மேரி கல்லூரியை, கையகப்படுத்தி இடிக்க முற்பட்டபோது மு.க.ஸ்டாலின் போன்றோர் போராடி கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கிண்டியிலுள்ள 'அண்ணா பொறியியல் பல்கலைக்கழக' வளாகத்தினுள் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டது. 

செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்றும், கட்டிடம் பழமையாகி விட்டதால் மழை நேரங்களில் தண்ணீர் ஒழுகி, கோப்புகள் வீணாகிறதென்றும், அதனால் இடமாற்றம் அவசியம் என்றும் முந்திய ஜெயலலிதா ஆட்சியில் காரணம் சொல்லப்பட்டது. அதோடு 2006 தேர்தல் நேரத்தில் ஜெயா டி.வி.யின் ஜெயலலிதாவின் சிறப்பு நேர்முகம் நிகழ்ச்சியில் 'உங்கள் ஆட்சியின்போது நீங்கள் செய்ய நினைத்து நிறைவேற்ற முடியாமல் போனது எதுவும் உண்டா?' என்று ரபி பெர்னார்ட் கேட்டபோது, 'புதிய தலைமைச்செயலகம் கட்ட நினைத்து அது இன்னும் நிறைவேறவில்லை. தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதைத்தொடருவோம்' என்று சொல்லியிருந்தார்.ஆனால் 2006-ல் கருணாநிதி தலைமையில் தி.மு.க.ஆட்சி அமைந்தது.

ஆக, புதிய தலைமைச்செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்ட வேண்டுமென்பது ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியிலேயே போடப்பட்ட திட்டம்தானே தவிர, கருணாநிதியின் திட்டம் அல்ல. ஆனால் ஜெ. தேர்ந்தெடுத்த 'அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு பதிலாக, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியை உள்ளடக்கிய அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயகத்தைக் கட்டினார். அதில் என்ன தவறு?.

சென்ற (2006 - 2011) ஆட்சியின்போது சட்டமன்றத்துக்கு வராமல் இருந்த ஜெயலலிதா, பழைய ஜார்ஜ் கோட்டையில் நடந்த கடைசி சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர் புதிய கட்டிடத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு வழக்கம்போல வரவில்லை. ஆனால் அவர் கட்சியைச்சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் 61 பேரும் வந்தனர். (முதல்நாள் கூட்டத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். என்ன துக்கம் நடந்து விட்டது?). ஆக, தனது கட்சியின் உறுப்பினர்கள் ஏற்கெனவே புதிய கட்டிடத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி விட்டதை அவர் அனுமதிக்கத்தானே செய்தார்?.

இப்போது (2011) சட்டமன்ற தேர்தலில் 160-க்கு 146 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் ஜெயலலிதா, புதிய சட்டமன்றக் கட்டிடத்துக்குப் போகமாட்டேன் என்று கூறி, (மிகவும் நெருக்கடியாக இருக்கிறது என்று அவராலேயே முன்பு சொல்லப்பட்ட) பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தைப் புதுப்பித்து, அங்கிருந்த செம்மொழி நூலகத்தை அகற்றிவிட்டு, மீண்டும் செலவழித்து சட்டமன்ற வளாகத்தை அமைத்து வருகிறார்.

இது எதைக்காட்டுகிறது?. ஏற்கெனவே பழைய சட்டமன்றம் நெருக்கடியாக இருந்தது என்பதும், கோடிக்கணக்கில் செலவழித்துக்கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றம், வசதியாகவும், தாராளமாகவும், நவீன வசதிகளுடனும், மற்ற மாநில சட்டமன்றங்களைப்போல அமைந்துள்ளது என்பது தெரிந்தும், வீம்புக்காக பழைய கட்டிடத்துக்கே செல்வேன், அதுவும் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்ட இருக்கைகளுக்குப் பதிலாக புதியவற்றை அமைப்பேன் என்று சொல்லி ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கதா?.

புதிய கட்டிடம் அமைப்பதில் முந்தைய தி.மு.க.அரசு ஊழல் செய்திருப்பதாகத் தெரிந்தால், அதை புதிய கட்டிடத்திலேயே வைத்து விசாரிக்க முடியாதா?.

கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டதை பயன்படுத்த மாட்டேன் என்பது சரியானால், அந்த ஆட்சியின்போது கட்டப்பட்ட பல்வேறு நீதிம்ன்ற கட்டிடங்கள், கலெக்டர் அலுவலகங்கள், பல்வேறு, பாலங்கள், மேம்பாலங்கள் அனைத்தையும் புறக்கணிப்பாரா?. இவ்வளவு ஏன்?, ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் வேனில் பயணம் செய்தாரே, அப்போது கருணாநிதி ஆட்சியின்போது கட்டப்பட்ட பாலங்களிலும் மேம்பாலங்களிலும் பயணிக்காமல் இருந்தாரா?.

தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காக அரசு எந்திரத்தையும், வரிப்பணத்தையும் விரயம் செய்யும் ஜெயலலிதா, தனது முந்தைய நடவடிக்கைகளிலிருந்து மாறிவிட்டார் என்று சொல்லப்படுவதை எப்படி நம்ப முடியும்?.

Wednesday, May 11, 2011

அந்த நாள்

அந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.

ஆனால் "அந்த நாள்" படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில்

"இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோ வென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்..."

இதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் 'அந்த நாள்'.. அந்த நாளேதான்).

கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் 'அந்த நாள்').

பெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்... ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்..!!. நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.

கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.

அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.

( 'இருகோடுகள்'  படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே 'அந்தநாள்'  பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ)

எஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.

படத்தில் பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில் 'பிண்ணனி இசை : ஏ.வி.எம்.இசைக்குழு' என்று மட்டும் காண்பிக்கப்படும்.

'ஆகா..ஓகோ என்று கொண்டாடும் அளவுக்கு இப்படம் வெற்றியடையவில்லை யென்றாலும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் படமாக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் புதிய சிந்தனை அமைந்த படம்தான் "அந்த நாள்".

Monday, May 9, 2011

அவள்

எழுபதுகளில் இந்திய திரையுலகைக் கலக்கிய நியூவேவ் இந்திப்படம் தோரகா. ராம்தயாள் தயாரித்த அப்படம் இளைஞர்களிடையே, குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் கதை என்று பார்த்தால் மிகவும் ஆபாசமான, சர்ச்சைக்குரிய ஒன்று. மாற்றான் மனைவியை, அதுவும் தன் நண்பனின் மனைவியையே திட்டம்போட்டு குறி வைத்து சூறையாடும், மிக மோசமான கலாச்சார சீரழிவு கொண்ட கதை. 'கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று முத்திரைகுத்தப்பட்டு வெளியான அந்தப்படம், இளைஞர்களின் இலக்காக மாறியதில் வியப்பில்லை. அந்தப்படத்தில் நடித்திருந்த நடிகை ராதா சலுஜாவும், நடிகர் சத்ருக்கன் சின்காவும் ஓவர்நைட்டில் பிரபலமாயினர்.  

இந்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தப்படத்தை தமிழில் சுந்தர்லால் நகாதா தனது விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார். (ஏ.பி.நாகராஜனின் விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் அல்ல). சர்ச்சைக்குரிய கதாநாயகி ரோலில் நடிக்க அப்போதிருந்த லட்சுமி, உஷா நந்தினி போன்ற பிரபல நடிகைகள் பலரை அணுகியபோது, மறுத்து ஓடினர். பிரமீளா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஒய்.விஜயா போன்றோர் அப்போது அறிமுகமாகியிருக்கவில்லை. (இப்போதைக்கு என்றால் அந்த ரோலில் நடிக்க 'நான், நீ' என்று போட்டிபோட்டிருப்பார்கள்). கடைசியாக வெண்ணிற ஆடை நிர்மலாவை அணுகி, அந்தப்படத்தில் நடித்தால் அபார புகழ்பெற்று அவரது மார்க்கெட் மேலும் உய்ர வாய்ப்புள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட, அப்படியானால் அப்படத்தில் நடிக்க தனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் (???) தர வேண்டும் என்று டிமாண்ட் வைத்தார். தயாரிப்பாளருக்கு ஆச்சரியம். ஏனென்றால் அதுவரை ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பளம் பெற்ற இரண்டே நடிகைகள் கே.ஆர்.விஜயாவும், ஜெயலலிதாவும்தான். (நந்தனார் படத்தில் நடிக்க கே.பி.சுந்தராம்பாள் ரூ. ஒரு லட்சம் வாங்கியதாக தகவல் உண்டு). இருப்பினும் அந்த இன்னஸண்ட் பாத்திரத்துக்கேற்ற அழகான நடிகையாக நிர்மலா கிடைத்ததில் திருப்தியடைந்த தயாரிப்பாளர் அவரையே புக் பண்ணினார்.

கீதா (வெ.ஆ.நிர்மலா) கல்லூரி மாணவி. டி.கே.பகவதியின் (இவருடைய பாத்திரப் பெயர் நினைவில்லை) மகள். எழுத்தாளன் சந்திரநாத் என்பவரைக் (சசிகுமார்) காதலிக்கிறாள். இதையறியாத அவளுடைய தந்தை பெரிய பணக்காரனான பிரகாஷுக்கு (ஏ.வி.எம்.ராஜன்) மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் கீதா, சந்திரநாத்தைக் காதலிப்பதை அறிந்த பிரகாஷ், ஒதுங்கிப்போகிறான். பிரகாஷுக்கும் சந்திரநாத்துக்கும் ஒரு நண்பன் பெயர் சதானந்தம் (ஸ்ரீகாந்த்). பெயருக்கேற்றாற்போல சகல தீய பழக்கங்களுடன் 'சதா ஆனந்தமாக' இருப்பவன். அவனுக்கு திருமணம், சம்பிரதாயம் இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லாதவன். எத்தனை பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியுமோ அப்படியிருப்பவன். அவனுக்கு நண்பனின் காதலி கீதாவின் மீது ஒரு கண்.

இந்நிலையில் தன் மகள், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை எழுத்தாளனைக் காதலிப்பதையறிந்து, காதலுக்கு தடை போடுகிறார். மகள் கேட்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறி காதலனை மணந்து தனிவீட்டில் இருக்கிறாள். கீதாவை அடைவதற்காக சமயம் பார்த்திருக்கும் சதானந்தம் முதலில் சந்திரநாத்தை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கி, அதற்கே அடிமையாக்குகிறான். கீதாவை அடைவதற்காக, நண்பனுக்கு கார் வசதியெல்லாம் செய்து கொடுக்கிறான். தன் மனைவியையும் குடிக்க வற்புறுத்தும் சந்திரநாத், அவள் மறுக்கவே காரைவிட்டு வழியில் இறக்கிவிட்டுப்போய்விடுகிறான். அவள் தனித்து விடப்பட்டதுமே, அவளைச்சூறையாடவும், அவளது வாழ்க்கையை சீரழிக்கவும் ஒரு கும்பல் முயற்சிக்க, இவர்கள் கையில் சிக்கி சீரழிவதைவிட கணவன் பேச்சைக்கேட்டு அவனுடன் இருப்பதுமேல் என்று முடிவெடுத்து அவனிடம் போய், அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுகிறாள். குடிப்பழக்கத்தை மேற்கொண்டு அதற்கு அடிமையும் ஆகிறாள். சதானந்தத்திடமும் சகஜமாகபழகுகிறாள்.

 சதானந்தம் எதிர்நோக்கியிருந்த அந்த சந்தர்ப்பமும் வருகிறது. கீதாவின் பிறந்த நாள் விழாவில் சந்திரநாத்தையும் கீதாவையும் மதுவில் மூழ்கடித்து, கீதாவின் படுக்கையறையில் அவளை சீரழித்துவிடுகிறான். காலையில் 'குமார்னிங்' என்ற குரலுடன் தன் மீது சதானந்தத்தின் கைவிழ, திடுக்கிட்டு எழுகிறாள். பக்கத்தில் படுத்திருக்கும் சதானந்தத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிப்போய்ப்பார்க்க, கணவன் சந்திரநாத் கீழே கூடத்தில் போதையுடன் சோபாவில் படுத்திருப்பதைப் பார்த்து தான் சதானந்தத்தால் சீரழிக்கப்ப்டுவிட்ட நிதர்சனத்தை அறிகிறாள். என்ன செய்வதென்று புரியாத நிலை. கணவனிடம் அவனது நண்பன் சதானந்தத்தின் நம்பிக்கை துரோகம் பற்றி அவள் சொல்ல, அவனோ அதை மிகவும் லைட்டாக எடுத்துக்கொள்கிறான். மீண்டும் வற்புறுத்தவே அவள் மீதே சந்தேகப்படுகிறான். கீதா முடிவெடுக்கிறாள். இந்த கேவலத்துக்குப்பின்னும்  அந்த அயோக்கியனை உயிரோடு விடுவதில் அர்த்தமில்லை. எனவே அவனைக்கொல்வதற்காக, பல ஆண்டுகளுக்குப்பின் தந்தையின் வீட்டுக்குப்போகும் அவள், அப்பாவுக்குத்தெரியாமல் அவரது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வருகிறாள்.

நண்பன் வீட்டிலில்லாத நேரம் மீண்டும் சதானந்தம் கீதாவைச்சூறையாட வரும்போது அவனிடம் போராடும் அவள், தான் பீரோவில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக் குறிவைக்கிறாள். அவன் அதிர்ச்சியடைகிறான். அவளுக்கு தலைசுற்றுகிறது. மயங்கிவிழப்போகும் நேரம், குளோசப்பில் துப்பாக்கி வெடிக்க, நெஞ்சைப்பிடித்துக்கொண்டே கீழே விழும் சதானந்தம் உயிரை விடுகிறான்.

கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. தான் நிரபராதி என்று அவள் வாதாடவில்லை. ஆனால் அதே நேரம் 'யுவர் ஆனர், சதானந்தத்தைச் சுட்டது நான்தான்' என்ற குரல் கேட்கிறது. கோர்ட் மொத்தமும் திரும்பிப்பார்க்க வந்தவன் பிரகாஷ். நடந்த சம்பவத்தை அவன் சொல்லும்போது ப்ளாஷ் பேக், கீதா கையில் துப்பாக்கியுடன் மயங்கிவிழப்போகும் நேரம், ஒரு கைவந்து அவள் கையைப்பிடித்து துப்பாக்கியை வாங்குகிறது. கேமரா அப்படியே உயர வந்தவன் பிரகாஷ். குறி தவறாமல் சதானந்தத்தை சுட்டுத்தள்ளுகிறான். ப்ளாஷ்பேக் முடிய, தான் சுட்ட துப்பாக்கியையும் பிரகாஷ் கோர்ட்டில் ஒப்படைக்க, கீதா விடுதலை செய்யப்படுகிறாள். ஆனால், தான் புனிதத்தை இழந்துவிட்ட சோகத்தால் தவிக்கும் அவள் தூக்கமாத்திரைகள் உட்கொண்டு கணவனின் கைகளிலேயே உயிரை விடுகிறாள்.

ஏற்கெனவே இந்திப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், 'அவள்' படம் வருவதற்கு முன்பே இளைஞர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் அன்றைய சூழ்நிலைக்கு இம்மாதிரி கதை சற்று புதியது. சந்திரநாத் ஆக சசிகுமார், சதானந்தமாக ஸ்ரீகாந்த், கீதாவாக வெண்ணிற ஆடை நிர்மலா, பிரகாஷாக A.V.M.ராஜன், கீதாவின் தந்தையாக டி.கே.பகவதி, கீதாவை வளர்க்கும் ஆயாவாக பண்டரிபாய், பால்காரனாக சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இம்மாதிரி ரோலில் நடித்திருப்பதால் தன் இமேஜ் பெண்கள் மத்தியில் என்னாகுமோ என்று நிர்மலா பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. மாறாக அவர்மீது அனுதாபத்தையே ஏற்படுத்தி இமேஜை உயர்த்தியது. அதுபோலவே, சிறிது காட்சிகளிலேயே வந்தபோதிலும் A.V.M.ராஜன் ஏற்றிருந்த பிரகாஷ் ரோல் ரொம்பவே அற்புதமாக அமைந்தது.

இவர்களையெல்லாம் விட 'அவள்' படத்தின் மூலம் ஜாக்பாட் அடித்தவர் ஸ்ரீகாந்த் தான். இப்படத்துக்குப்பின் அவரது மார்க்கெட் எங்கோ எகிறிப்போனது. பயங்கர பிஸியானார். படங்கள் குவிந்தன. அதே சமயம் இன்னொரு பாதகமும் நிகழ்ந்தது. ஆம், 'கற்பழிப்புக்காட்சியா? கூப்பிடு ஸ்ரீகாந்தை' என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முத்திரை குத்தினர். இந்தியில் சத்ருக்கன் சின்கா ஏற்றிருந்த ரோலில் இவர் நடித்ததாக சிலர் சொல்வார்கள். அது தவறு. சத்ருக்கன் ரோலில் நடித்தவர் A.V.M.ராஜன்தான்.

கண்ணைக்கவ்ரும் வண்ணப்படமான 'அவள்' படத்தை ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கியிருந்தார். கடற்கரையில் நீச்சல் உடையில் சசிகுமார் நிர்மலா இருவரும் பார்த்துக்கொள்ளும் அந்தப் பார்வையைப் பறிமாறிக்கொள்ள, சொல்லித்தந்த இயக்குனருக்கே பாராட்டுக்கள். இன்னிசை 'இரட்டையர்' சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் பாடும் "Boys and Girls வருங்காலம் உங்கள் கையில், வாருங்கள்" என்ற பாடலும், சசிகுமார் நிர்மலா பாடும் டூயட் பாடலான,
"கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழல் அல்ல"
பாடலும் மனதைக்கவர்ந்தன என்றாலும்,

நிர்மலா கிளப்பில் பாடும் (பி.சுசீலா தனிப்பாடல்).....
"அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன்... பாடுகிறேன்...
மதுவை நீ ஊற்றிக்கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்"
என்ற பாடலில் இசையை அள்ளிக்கொட்டியிருப்பார்கள் இரட்டையர்கள். தாங்கள் மெல்லிசை மன்னரின் மாணவர்கள் என்பதை அழுத்தமாக நிரூபித்திருப்பார்கள்.

தொண்ணூறு சதவீதம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவோடு 'அவள்' சுமார் பத்து வாரங்கள் வரை வெற்றிகரமாக ஓடியது.

Sunday, May 8, 2011

தரையில் வாழும் மீன்கள்

1982-ல் இப்படி ஒரு வண்ணப்படம் வந்தது பலருக்குத்தெரிந்திருக்கும். சிலருக்கு தெரியாமலிருக்கலாம். நடிகை அம்பிகா நடித்த இரண்டாவது படம் என்பதாக நினைவு. முதல் படம் சக்களத்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு ஜோடியாக விஜய்பாபு, வில்லனாக ராதாரவி, விஜய்பாபுவின் தங்கையாக வனிதா, நகைச்சுவைக்கு எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நடித்து வெளிவந்த படம். கதை ஒரு சாதாரண காதல் கதை. கடலோரத்தில் வாழ்ந்து மீன்பிடி தொழில் செய்துவரும் விஜய்பாபு, அவருக்கு துணையாக தங்கை வனிதா. வழக்கம்போல பண்ணையார் மகள் அம்பிகா பள்ளி மாணவி வழக்கம்போல ஏழை நாயகனுக்கும் பணக்கார நாயகிக்கும் காதல். வழக்கம்போல காதல் முறிகிறது. குடிகாரரான ராதாரவிக்கு அம்பிகா மணம்செய்து கொடுக்கப் படுகிறார். வழக்கம்போல கணவனிடம் கொடுமைகள். அதையறிந்து பழைய காதலனின் வேதனைகள். ஒருகட்டத்தில் கணவனை விட்டு காதலனிடம் ஓட முயல்கையில், அய்யனார் கோயிலில் கணவனுக்கும் அவளுக்கும் சண்டை, இழுபறி, துரத்தல்கள். அதில் கணவன் 'தானாகவே'(?) அடிபட்டு இறந்துபோகிறான். அப்போது ஒரு கொம்பில் மாட்டிக்கொண்டு அவள் தாலியும் அறுந்துபோகிறது. இப்போது லைன் கிளியர். காதலனிடம் சேரும் முயற்சியில் குற்றுயிரும் குலை உயிருமாக காதலனிடம் வந்து சேர கொஞ்ச நேரத்தில் அவன் கைகளிலேயே பிணமாகிறாள். காதலியின் பிணத்தை கையில் ஏந்தியவாறு கடலுக்குள் இறங்க, திரையில் 'தரையில் வாழ முடியாத மீன்கள் தண்ணீரை நோக்கி' என்ற டைட்டில் கார்டு. 

இவ்வளவு சொதப்பலான ஒரு காதல் கதையைப் பார்ப்பது அரிது. அம்பிகாவுக்கு திருமணம் ஆகாதவாறு காட்டியிருக்க வேண்டும். திருமணம் ஆன பின்பும் காதலன் நினைவாக இருப்பதும் அவனோடு ஓடிவிட எத்தனிப்பதும், காதலனும் அதை விரும்புவதும் அந்தப் பாத்திரப் படைப்புகளை குறைவடையச் செய்துவிட்டன. படத்தில் கிட்டத்தட்ட அனைவரும் புதுமுகங்கள். அதனால் படப்பிடிப்பின்போது இழுத்த இழுப்புக்கு வந்தனர்.

கோரையாற்றங்கரையில் அமைந்துள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் முகம்மது அலி. அவர்தான் இப்படத்தின் இயக்குனர். படத்துறையில் ஈடுபட்டதும் தன் பெயரை 'கலை அலி' என்று மாற்றிக்கொண்டார். சைட் பிஸினசாக, வளைகுடாநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் பணியையும் செய்து வந்தார். இப்படத்துக்காக பெயரை மீண்டும் 'பாபு மகாராஜா' என்று மாற்றிக்கொண்டார்.

இப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்புக்குக் கதைக்களமாக அவர் தேர்ந்தெடுத்தது, அவரது ஏரியாவைச்சேர்ந்த பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள "மனோரா" என்ற இடம். அப்பகுதியில் பிரபலமான சுற்றுலாத்தலம். தஞ்சாவூரை மராட்டிய மன்னர் சரபோஜி மகாராஜா ஆண்டபோது, அதிராம்பட்டினத்தை அடுத்த மல்லிபட்டினம் கடற்கரையில் ஒரு ஏழு அடுக்கு மாளிகையைக் கட்டினார். சுற்றிலும் அகழி வைத்து, நடுவில் மடக்குப்பாலம் அமைத்து பெரிய கோட்டை வடிவில் அமைக்கப்பட்ட இதன் ஏழாவது தளத்தில் ஏறி நின்றால், சுற்றுவட்டாரம் முழுக்க நன்கு தெரியும். அதனால் இவ்விடத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வர்.

ஏற்கெனவே இந்தக்கோட்டை, கலைஞரும் நடிகர்திலகமும் இணைந்த 'புதையல்' படத்தில் காண்பிக்கப்படும். இருந்தாலும் அதிக காட்சிகளில் அல்ல. பின்னர் 1967-ல் ரவிச்சந்திரனும், பாரதியும் நடித்த ஒரு டூயட் பாடல் மட்டும் இதில் படமாக்கப் பட்டது. இருந்தாலும், இந்தக்கோட்டை முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டது இந்த 'தரையில் வாழும் மீன்கள்' வண்ணப் படத்தில்தான்.

பக்கத்திலுள்ள பெரிய நகரம் என்ற வகையில், பட்டுக்கோட்டையில்தான் படப்பிடிப்புக்குழுவினர் தங்கினர். பேருந்து நிலையம் எதிரே, காவல் நிலையத்தின் பக்கத்திலிருந்த ஏ.வி.லாட்ஜில்தான் கலைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதனால் அந்த லாட்ஜைச்சுற்றி எப்போதும் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்கும். காலையில் ஷூட்டிங் புறப்படும் முன்பு, லாட்ஜில் வைத்தே எல்லோருக்கும் மேக்கப் போட்டு ரெடியாக்கி விடுவார்கள். கார்களிலும் வேன்களிலும் அவர்கள் படப்பிடிப்புக்குப் புறப்பட்டதும், பின்னாடியே ரசிகர்கள் கூட்டம் பைக்கில் பின் தொடர்வார்கள்.

புறப்பட்டுப்போகும் வழியில் மணிக்கூண்டு சந்திப்பு பழனியப்பன் தெரு, தலையாரித்தெரு வளைவில் அசோக் ஸ்டுடியோவின் கீழேயிருந்த ஒரு ஒட்டுக்கடையின் அருகில் கார்களை நிறுத்தி கலைஞர்களுக்கு 'டீ' வாங்கிக்கொடுப்பார்கள். (இன்றைக்கு அந்த டீக்கடையில் அம்பிகா டீ குடிப்பாரா தெரியாது).

பைக்குகளில் பின்தொடர்ந்த்வர்கள் போக, அந்த வசதியில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக ஒரு பஸ் கம்பெனி இரண்டு ஷூட்டிங் ஸ்பெஷல் பஸ்களை பட்டுக்கோட்டையில் இருந்து மனோராவுக்கு விட்டது. அவற்றிலும் கூட்டம் கூட்டம் நிரம்பி வழிய பஸ் ஓனர் நன்றாக கல்லா கட்டினார். படப்பிடிப்பு நடந்த இருபது நாட்களும் அந்தப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரிசுகள் கூட்டம் முழுக்க மனோராவில்தான் டேரா போட்டது.

இப்படத்துக்காக மனோரா முழுதும் சுத்தம் செய்யப்பட்டு பொலிவாக விளங்கியது. அத்துடன் ஒரு பாடல் காட்சியின்போது இரவு நேரத்திலும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஒரு பாடல் காட்சியின்போது விஜயபாபுவும், அம்பிகாவும் ராஜா ராணி உடையில் கடற்கரையோரம் குதிரையில் சவாரி செய்து வரும் காட்சிக்காக, அப்பகுதியில் பிரபலமான ஆவணம் என்ற ஊரிலிருந்து வெள்ளைக்குதிரை கொண்டுவரப்பட்டு படமாக்கப்பட்டது. அதற்குப்பெயரே 'ஆவணத்துக்குதிரை' என்பதுதான். அப்ப்குதியின் முக்கிய விழாக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தது.

இப்படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். 'மணிமாளிகை கண்ட மகராணியே' என்ற பாடலை ஜெயச்சந்திரன், சுசீலாவும், 'அன்பே சிந்தாமணி இன்பத்தேமாங்கனி' என்ற பாடலை மலேசிய வாசுதேவன், ஜானகியும், 'அழகான சின்னக்குட்டி ஆட்டம் ஆடுது' என்ற பாடலை எஸ்.ஜானகியும் பாடியிருந்தனர்.

கதை சரியாக அமையாமல் போனதால் படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

Monday, May 2, 2011

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் அதே கூட்டணியால் (ஜெயகாந்தன் - பீம்சிங் - எம்.எஸ்.வி - ஸ்ரீகாந்த் - லட்சுமி) மீண்டும் ஒரு கருப்பு வெள்ளைச் சித்திரமாக உருவானது. (இப்படம் முடிவதற்குள் இயக்குனர் பீம்சிங் மறைந்து விட்டார் என்பதாக நினைவு. 'பா'வன்னா பிரியரான அவரது இறுதிப்படம் 'பாதபூஜை' என்பதாகவும் நினைவு. இதை உறுதிப்படுத்துவது போல ஒரு நடிகை நாடகம்.பார்க்கிறாள்' படத்தின் டைட்டிலில் 'டைரக்ஷன் 2வது யூனிட் திருமலை மகாலிங்கம்' என்று காண்பிக்கப்படும்). படத்தின் தலைப்பு எதைச்சொல்கிறது என்பது படம் பார்க்கும்போதுதான் விளங்குகிறது. ஒரு நாடக நடிகை தன் வாழ்க்கையையே நாடகமாகப் பார்க்கிறாள் என்பதை உணர்த்துகிறது.

நாடகக்குழு நடத்தும் அண்ணாசாமி (ஒய்.ஜி.பார்த்தசாரதி)யின் நாடகங்களில் நடிக்கும் பிரதான நடிகை கல்யாணி (லட்சுமி). தாய் தந்தை உற்றார் உறவினர் யாருமில்லாத கல்யாணிக்கு ஆதரவாக இருந்து வருபவரும் அண்ணாசாமிதான். கல்யாணியின் வீட்டிலேயே ஒரு பகுதியில் நாடகத்துக்கான இசைக்குழு வைத்து ஒத்திகை பார்க்கும் தாமு (ஒய்.ஜி.மகேந்திரன்). கல்யாணியின் ஒரே துணையாக வேலைக்காரி மற்றும் சமையல்காரி பட்டு. நாடகங்களை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதும் விமர்சகர் ரெங்கா (ஸ்ரீகாந்த்). தன் நாடகங்களை விமர்சித்து ரெங்கா எழுதுவது அண்ணாசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்யாணிக்கு விமர்சகர் ரெங்கா மீது ஈர்ப்பு. தன்னை சந்திக்க வருமாறு கையெழுத்தில்லாத கடிதமொன்றை அவள் அனுப்ப,  குழம்பிப்போகும் ரெங்கா, தன் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியுமா என்று கேட்டு கல்யாணிக்கு கடிதமெழுத, கல்யாணி சம்மதிக்க ரெங்கா அவள் வீட்டுக்குப்போகிறான். பேட்டி நடக்கிறது. இடையில் கல்யாணிக்கு ஒரு சந்தேகம், ரெங்காவுக்கு திருமணம் ஆகியிருக்குமா என்று. பேச்சோடு பேச்சாக அண்ணாசாமி 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?' என்று கேட்க, 'ஐந்து வயதில் ஒறே பெண் குழந்தை'யென ரெங்கா சொன்னதும், அவள் முகம் ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அடுத்த வினாடியே தன் மனைவி முதல் குழந்தையின் பிரசவத்தில் இறந்துபோய்விட்டதாகவும், குழந்தை தன் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் சொல்ல, மீண்டும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. பேட்டியை எழுத்து வடிவில் முடித்து கல்யாணியிடம் காண்பிக்க மறுநாள் வரும்போது வீட்டில் பட்டுவும் இல்லை, தாமுவும் இல்லை, அண்ணாசாமியும் இல்லை. தனிமையில் இருவரும் மனம் விட்டுப்பேச, அவர்களுக்குள் ரெஜிஸ்ட்டர் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுக்கின்றனர். இது கல்யாணியின் சொந்த வாழ்க்கை என்பதால் அண்ணாசாமியால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.

ஆனால் தாய், தந்தை, முதல் மனைவி யாவரையும் இழந்து சித்தப்பாவோடும் சித்தியோடும் வாழும் ரெங்காவின் மறுமணம் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மறுமணம் கூடாதென்பதல்ல அவர்கள் எண்ணம், ஆனால் வரப்போகும் புது மருமகள் தங்கள் ஜாதியாக இருக்கவேண்டும் என்று எண்ணும் பிற்போக்குத்தனத்தில் ஊரியவர்கள். அதுபோல  ஊரிலிருக்கும் அவருடைய (முன்னாள்) மாமனாருக்கும், (அக்காவின் கணவர் தன்னையே மறுமணம் செய்வார் என்ற எண்ணத்தோடு அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து வரும்) ரெங்காவின் கொழுந்தியாளுக்கும் ரெங்காவின் மறுமணம், பிடிக்கவில்லை, அவர்கள் குழந்தையையும் ரெங்காவிடம் தர மறுத்து அனுப்பிவிடுகின்றனர்.

ஓரளவு வசதியான வீட்டில், ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாணியை, தானும் தன் சித்தப்பா (தேங்காய் சீனிவாசன்) மற்றும் தொத்தா என்று த்ன்னால் அழைக்கப்படும் சித்தி (காந்திமதி) ஆகியோர் வாழும் ஓட்டுவீட்டில் குடிவைத்து சங்கடப்படுத்த விரும்பாத ரெங்கா, தானும் அவளோடு அந்த வசதியான வீட்டிலேயேயே தங்கி வாழ்க்கை நடத்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிந்ததும், ரெங்காவின் மனதில் தாழ்வுணர்ச்சி  தலைதூக்குகிறது. தானும் சம்பாதித்து அவளும் சம்பாதித்து வாழ்வதை விட, தன் சம்பாத்தியத்தில் அவளும் வாழ்வதே சரிப்படும் என நினைக்கிறான். ஆனால் கல்யாணிக்கோ உயிரை விடுகிறாயா, நாடகத்தை விடுகிறாயா என்ற கேள்வி வரும்போது உயிரையே விடுகிறேன் என்று தேர்ந்தெடுக்கும் ரகம். அந்த அளவுக்கு நாடகமேடை அவளது உயிர்நாடி. விளைவு..?. சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினை தலைதூக்குகிறது. கல்யாணி எதையும் விட்டுக்கொடுத்துப் போகிற ரகம். ஆனால் அதே சமயம் பேரம் பேசி வாழ்வதல்ல வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சின்ன ரோஜாச்செடி வளர்ப்பதில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு.

கண்ணுக்கு அழகான ரோஜச்செடியல்ல மனிதனின் தேவை, அதைவிட பசியைப்போக்கும் காய்கறிச் செடியே பயன் தரும் என்கிற ரீதியில் ரெங்கா வாதிக்க , தொட்டதுக்கெல்லாம் கருத்து வேறுபாடு. விரிசல் பலமாகிக்கொண்டே போக, ரெங்கா தன் பெட்டியோடு சித்தப்பா இருக்கும் தன் வீட்டுக்குப்போய் விடுகிறான். சண்டைபோட்டுக்கொண்டு அல்ல. அவர்களிருவரின் மனதின் ஆழத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இழையோடிக்கொண்டே இருக்கிறது. எப்போதாவது தேடி வருவான், கல்யாணியும் எதுவுமே நடக்காததுபோல முகம் சுழிக்காமல் நடந்துகொள்வாள்.

இடையே, தாங்கள் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே அடங்கிப்போவோம் என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் நாகேஷிடம் போக, அவர் தன் வீட்டில் வைத்தே இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். அவரது நியாயமான கேள்விகளூக்கு இருவராலும் பதில்சொல்ல முடியவில்லை. அவர்கள் கூறும் காரணங்களெல்லாம் சட்டத்தின் முன் எடுபடாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும் என்று கூறி, ஆனால் அவர்களுடன் பேசியதில் இருவரும் என்னைக்கும் பிரியமாட்டார்களென்றும், இருவரும் சேர்ந்து வாழவேண்டுமென்பதே சட்டத்தின் விருப்பம், தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல, அவர்கள் மனதின் அடித்தளத்திலும் அதுதான் உள்ளது என்றும் சொல்லியனுப்புகிறார். கல்யாணிக்கு இந்த பந்தத்திலிருந்து விடுபட கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் ரெங்காவின் முடிவை எதிர்த்து அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ரெங்கா போய்விட்டான். மாதக்க்கணக்கில் அவள் வீட்டுக்கு வரவில்லை. அண்ணாசாமியும் பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர்.

இதனிடையே கல்யாணி உடல் நலிவுறுகிறது. ஒருநாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அலறுகிறாள். அண்ணாசாமி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்று அட்மிட் செய்கிறார். அவள் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் உடனடியாக நடக்காது என்று டாக்டர் சொல்கிறார். மனதுகேட்காத அண்ணாசாமி, ரெங்காவிடம் சென்று விஷயத்தைச்சொல்ல, அவன் நாலுகால் பாய்ச்சலில் மனைவியைக்காண வருகிறான். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் அவளுக்கு ரெங்காவே கால்களாக இருக்கிறான். அவளது தேவைகளை அவனே நிறைவேற்றுகிறான். அப்போது கல்யாணியைக்காண வரும் வக்கீல் நாகேஷ் ரெங்காவிடம், அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை காரணம் காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் அதை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல, ரெங்கா வெகுண்டெழுகிறான்.

'என்ன சார் உங்க சட்டம்?. இரண்டுபேரும் திடகாத்திரமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழமுடியும் என்றிருந்தபோது விவாகரத்து அளிக்காத சட்டம், இப்போ ஒருவரில்லாமல் ஒருவர் வாழமுடியாது என்ற  அளவுக்கு உடலில் குறை வந்தபிறகு அந்தக்குறையையே காரணமாக வைத்து, பிரிக்க முடியும் என்றால் அந்த சட்டம் எங்களுக்குத் தேவையில்லை' என்று கூற வக்கீலுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருவருக்கும் இடையில் நந்தியாக இருக்க வேண்டாம் என்று அண்ணாசாமியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்போது நடக்கமுடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரெங்காவுக்கு மனநிறைவைத் தருகிறது. அவளை சக்கரநாற்காலியில் தள்ளிக்கொண்டே நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறான். தன் உயிரான நாடகமேடையைப் பார்த்ததும், தனக்கு கால்களே வந்துவிட்டதுபோல அவள் உணர்ந்து மகிழ்வதுபோல படம் நிறைவடைகிறது.

ஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலைகாட்டாமல், முழுக்க முழுக்க யதார்த்த மாக படத்தை மிக அருமையாகக்கொண்டு சென்றிருப்பதன்மூலம், காட்சி வடிவிலேயே நாடகத்தைப்படித்த திருப்தி நமக்கு. கதாபாத்திரங்கள் யாரும் அந்நியமாகத்தோன்றவில்லை, நம் அன்றாட வாழ்வில் நம் கண்முன்னே வளைய வரும் இயற்கை மனிதர்கள் அத்தனைபேரும்.

ஒவ்வொருவருடைய நடிப்பைப்பற்றியும் தனித்தனியாகச்சொல்லிப் பாராட்ட வேண்டியதில்லை. ரெங்காவாக ஸ்ரீகாந்தும், கல்யாணியாக லட்சுமியும், அண்ணாசாமியாக ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக தேங்காய் சீனிவாசனும், சித்தியாக காந்திமதியும், வக்கீலாக நாகேஷும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யதார்த்தம். அதிலும் தேங்காயும், நாகேஷும்.... வாவ்... என்ன ஒரு பெர்பாமென்ஸ். இவர்கள் நடிக்கவில்லை. கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துவிட்டார்கள். அதுபோல ஒய்.ஜி.பி. நம் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர்.

வசனங்கள் எல்லாம் வாள்பிடித்து நறுக்குகிறாற்போல தெள்ளத்தெளிவு. இந்த இடம்தான், அந்த இடம்தான் என்று தனித்தனியாகவெல்லாம் குறிப்பிட முடியாது. சென்ஸார் சர்டிபிகேட் துவங்கி, சுபம் என்ற எழுத்துக்கள் வரையில், திரைப்படங்களுக்கென்று எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளை யெல்லாம் மீறி, படம் எங்கோ போய்விடுகிறது.  

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மனதை வருடும் பின்னணி இசை. கூடவே  இரண்டு அழகான பாடல்கள். ஸ்ரீகாந்த் - லட்சுமி ரெஜிஸ்ட்டர் திருமணத்தின்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல்...
'எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மனங்கள் திருமணங்கள்'
T.M. சௌந்தர்ராஜன் மற்றும் வாணி ஜெயராம் பாடியிருப்பார்கள். மற்றும், படத்தின் நிறைவுப்பகுதியில் ஜாலி ஆபிரகாம் பாடிய..
'நடிகை பார்க்கும் நாடகம் - அதில்
மனிதர்கள் எல்லாம் பாத்திரம்'
ஆர்ப்பாட்டமில்லாத இதமான மெட்டு. இப்படத்தின் கதை வசனத்தை மட்டுமல்ல, பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதியதாக டைட்டில் சொல்கிறது.

படத்தின் தொண்ணூறு சதவீத கதைக்களம் என்றால், அது சாப்பாட்டு மேஜையும், கல்யாணியின் படுக்கையறையும்தான் (அதிலும்கூட குறிப்பாக கட்டில்தான்). இவற்றையே திருப்பித் திருப்பி காண்பித்தபோதிலும்   போரடிக்காமல் படம் செல்கிறதென்றால், அதற்குக் காரணம் கதையைக் கையாண்ட விதம்தான்.

பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத்தூண்டும் படம் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'.