Sunday, June 5, 2011

பட்டுக்கோட்டை பிரபாகர்

சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், என் சொந்த ஊரைப்பற்றிக் கேள்விப்படும் தோழிகள் பெரும்பாலோர் தவறாமல் கேட்பது, 'உங்க ஊர் பக்கத்துலதானே பட்டுக்கோட்டை பிரபாகர் இருக்கார். அவரை சந்திச்சிருக்கியா? பேசியிருக்கியா?' என்ற கேள்வியைத்தான். சந்தித்ததில்லை என்று மொட்டையாகச்சொல்லி அவர்களின் கிண்டலுக்கு ஆளாவதை விட, மடக்குவோம் என்ற நினைப்பில், 'ஏண்டி, நீங்கள்ளம் சென்னையில்தானே இருக்கீங்க?. சென்னையிலுள்ள ஏராளமான எழுத்தாளர்களில் எத்தனை பேரை நீங்க சந்திச்சிருக்கீங்க?' என்று பதில் கேள்வி கேட்டு தப்பிப்பதுண்டு.

இருந்தாலும் திரு. பிரபாகரின் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்தபோது எனக்கே ஒரு ஆசை தோன்றியது. இவ்வளவு சுவாரஸ்யமான எழுத்தாளராக இருக்காரே. அடுத்தமுறை ஊருக்குப்போகும்போது அவரை சந்திக்க முயற்சித்தால் என்ன என்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் அந்த ஆவல் உடனே நிறைவேறவில்லை. இடையில் பலமுறை ஊர் சென்று வந்தபோதும் இந்த விருப்பம் மட்டும் கைகூடவில்லை. அவருடைய எழுத்துக்களைப் படிப்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. கல்லூரி முடிந்தது, வேலை கிடைத்தது, திருமணமும் ஆனது. வாழ்க்கை வேறுபக்கம் பயணிக்கத்துவங்கியதும் பட்டுக்கோட்டையாரை சந்திக்கும் ஆவல் இதயத்தின் ஒரு மூலையில் கிடத்தப்பட்டது. ஒருநாள் என் கணவர் பிரகாஷ் சொன்னார், 'சாரூ சேதி தெரியுமா?. உன் அபிமான எழுத்தாளர் பிரபாகரை இன்னைக்கு எதிர்பாராமல் சந்திச்சேன். சென்னை வந்தவர் இன்னைக்கே ஊர் திரும்புவதாகச்சொன்னார். இன்னும் ஒருநாள் இருந்திருந்தால் உன்னையும் அழைச்சிக்கிட்டுப் போயிருப்பேன்' என்றார்.

அவ்வளவுதான், பிரபாகரைசந்திக்கும் எண்ணம் மீண்டும் மனதின் பிரதான இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல அடுத்த மாதம் என் உறவினர் இல்லத் திருமணத்துக்கு ஊர் செல்ல வேண்டியிருந்தது. துரதிஷ்டவசமாக பிரகாஷ் வர முடியவில்லை. நாம் மட்டும் சென்றேன். என் அண்ணனின் நண்பரான கொழும்பு ஸ்டோர் பஷீர் அவர்களிடம் சொல்லி போனில் அப்பாயிண்மென்ட் வாங்கினேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு தலையாரித்தெருவில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றேன். வாசலிலேயே ஒரு பெர்ப்யூம் கடை வைத்து வேறொருவர் அதைக்கவனித்து வருகிறார்.

என்னைவிட இளைய வயதுடைய பெண் வந்து, 'நீங்கதான் சாரதாவா?. அண்ணன் இருக்கிறார் வாங்க என்று என்று அழைத்துச்சென்றார். கூடத்தில் பிரம்பு சோபாக்களில் ஒன்றில் அமர்ந்திருந்த பட்டுக்கோட்டை பிரபாகர் சற்று எழுந்து கைகூப்பினார். நானும் பதிலுரைத்ததோடு, அப்போது அவர் ஏதோ ஒரு விருது வாங்கியிருந்ததற்கு வாழ்த்துச் சொன்னேன். எதிர் சோபாவில் உட்காரச் சொன்னவர்அவரே பேச்சை ஆரம்பித்தார்.

'வழக்கமாக வர்ரவங்க சும்மா காலின் பெல்லை அடிச்சுட்டு உள்ளே வருவாங்க. நீங்க போனில் அப்பாயின்மெண்டெல்லாம் கேட்டு ஒரு வி.ஐ.பி. சூழ்நிலை கிரியேட் பண்ணிட்டீங்க. ரொம்ப நன்றி' என்றார். 'என்ன சார் நீங்க, இவ்வளவு எழுதிட்டு இன்னும் அடக்கமாக இருக்கீங்க. சென்னையில் பாருங்க. நாலு சிறுகதை எழுதி பிரசுரம் ஆனதும் ரொம்ப பிஸிம்பாங்க' என்றேன். பதிலுக்கு 'ஐயோ, அந்த பந்தாவெல்லாம் எனக்கு வேண்டாம்' என்று கூச்சமானார்.

என் கல்லூரி நாட்களில் இருந்து அவருடைய எழுத்துக்கள் மீது இருந்த ஈர்ப்பு, தோழிகளின் விசாரணை, சந்திக்க விரும்பிய ஆவல், காலப்போக்கில் இல்லற வாழ்வில் திரும்பியதும் அவரது சந்திப்பு இரண்டாம் பட்சமாகப் போனது எல்லாவற்றையும் சொன்னேன். ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவரைப்பற்றிய விசாரிப்புகளுக்கும் வெளிப்படையாக பதில் சொன்னார். ஒருமாதம் முன்பு சென்னையில் என் கணவர் சந்தித்ததைச் சொன்னேன். அதற்கு அவர், 'சென்னையில் என்னை பலபேர் சந்திச்சாங்க, உங்க வீட்டுக்காரர் யாருன்னு சரியாக நினைவில்லை ஸாரி, இப்போ சாரும் கூட வந்திருக்கலாமே' என்றார். அவருக்கு அலுவலகத்தில் லீவு கிடைக்கவில்லை என்று சொன்னதும் சற்று யோசித்தவர், ', அப்படீன்னா அந்த இன்கம் டாக்ஸ் பார்ட்டியா?' என்று கேட்க நான் குதூகலத்துடன் அவரேதான் என்றேன்.

பல்வேறு விஷயங்களையும் ரொம்ப சுவாரஸ்யமாகப்பேசினார். இடையிடையே நான் சம்பிரதாயத்துக்காக 'ஸாரி சார், உங்க நேரத்தை ரொம்ப எடுத்துக்கிறேனோ' என்று கேடுக்கொண்டேன். 'நோ, நோ அப்படியெல்லாம் இல்லை'ன்னு சொல்வார்னு தெரியும். அப்படியேதான் சொன்னார். ஒரு நடுத்தர வயது பெண்மணி இருவருக்கும் தட்டுக்களில் சூடான மசால்வடை கொண்டு வந்து வைத்தார். என்னை சாப்பிடச்சொல்லி விட்டு தானும் சாப்பிட்டுக்கொண்டே பேசினார் பிரபாகர்.

'ஒரு கதைக்கான கருவை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'கதைக்கரு என்பது எங்கிருந்தும் எடுப்பது அல்ல. நம்மைச்சுற்றி நடப்பவற்றை கூர்ந்து கவனித்தாலே போதும். அதற்கு கைகால் வைத்து கதையாக்கி விடலாம். இப்போது நாம் இருவரும் பேசிக் கொண்டிருப்பதையே நான் ஒரு கதையாக்கி விடுவேன். அப்படி ஒரு கதை பண்ணி அது பிரசுரமானால் போன் பண்றேன். படிச்சுப்பாருங்க' என்றவர் மேலும் தொடர்ந்தார்...

'உதாரணமாக, இங்கிருந்து த்ஞ்சாவூருக்கு பஸ்ல போறீங்க. ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்ட்லே நிற்கும்போது அங்கே ரெண்டுபேருக்கிடையில் வாய்ச்சண்டை நடக்குது. நீங்கன்னா ஏதோ சண்டை நடக்குதுன்னு விட்டுடுவீங்க. ஆனா நாங்க (எழுத்தாளர்கள்) அந்தச்சண்டையைக் கூர்ந்து கவனிப்போம். எதுக்காக அந்த சண்டை, அதன் பின்னனி என்ன, அதன் முடிவு என்ன என்பதெல்லாம் அவர்கள் சண்டையிலேயே கிடைக்கும். அவங்க பேச்சைக்கவனிங்க 'ஏண்டா நீ பெரிய பண்ணைக்காரனா இருந்தா நாங்க பயப்படனுமோ. ஒழுங்கா வாங்கின கடனை வச்சிட்டு வேலையைப்பார் (ஓகோ, இவனிடம் அவன் கடன் வாங்கியிருக்கான்). சரிதான் நிறுத்துடா, பேராவூரணி சேர்வை வீட்டுல சம்பந்தம் வச்சிக்கிட்ட திமிரோ (ஓகோ, அப்போ இவன் பேராவூரணியில் பெரிய புள்ளி வீட்டில் சம்பந்தம் பண்ணியிருக்கான்). ஏண்டா, உன் தம்பியை துபாய்க்கு அனுப்பனும்னு பணம் கடன் வாங்கி எத்தனை மாசமாச்சு (ஓகோ அவனுக்கு ஒரு த்ம்பி, அவனும் துபாயில்) பணத்தைக்கொடுக்க முடியலைன்னா மதுக்கூர்ல இருக்கிற நிலத்தை எழுதிக்கொடுடா (ஓகோ, கடன் வாங்கியவனுக்கு மதுக்கூரில் நிலம் இருக்கிறது)  இப்படியே சண்டையில் கிடைக்கின்ற விஷயங்களை சேகரிச்சு, அதில் ஒவ்வொருத்தனுக்கும் குடும்பம், குழந்தை குட்டிகள்னு உருவாக்கி.... இப்படியே கைகால் வச்சு, ஊர், பெயரையெல்லாம் மாற்றி அதை ஒரு சுவையான கதையாக்கிடுவோம்' என்றார். கேட்கவே பிரமிப்பாக இருந்தது.

முதலில் வாசலில் வந்து அழைத்த பெண்ணை அழைத்து அறிமுகப்படுத்தினார். 'இவள் என் தங்கை. கிட்டத்தட்ட எனக்கு செக்ரட்டரி மாதிரி. என்னுடைய பேனாவுக்கு இங்க் ஊற்றி வைப்பதிலிருந்து, என் கதைகளை கோர்வையாக பைல் பண்ணுவது வரை எல்லாம் இவள்தான்' என்றார்.

இப்போது திரு பிரபாகர் திரையுலகில் நுழைந்து ஒருபக்கம் கதை, மறுபக்கம் திரை என்று மிகவும் பிஸியாகிவிட்டார். இப்போது அவரை நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடியாது. இருந்தாலும், சமீபத்தில் அவருடைய நாவலொன்றைப் படித்தபோது, பழைய சந்திப்பு நினைவுக்கு வந்து ஏனோ மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் போல மனம் ஆவல் மேலிடுகிறது.

6 comments:

 1. Saaroo,*
  மிகவும் சுவாரசியமான பதிவு..
  நடை மிக இயல்பாக இருக்கிறது..
  வாழ்த்துக்கள்.
  *ஒரு மேடத்தின் பெயர் "சார்" என்று ஆரம்பிக்கறதே?
  ;-))

  ReplyDelete
 2. மிகவும் நல்ல,அண்டர்ரேட்டட் எழுத்தாளர்,இவர் கதைகளில் விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமே இராது.நேர்காணல் சம்பவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. "Pazhaiya Nagesh" theater - this was really the "Pazhaiya Rajakumari" theater in Pondy Bazaar!

  ReplyDelete