Tuesday, June 28, 2011

ஆக்கம் பெறுமா 'ஹாக்கி'

நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது வரையில் நமக்குத்தெரியும். ஆனால் இவ்விளையாட்டுக்கு அரசுகள் தரும் ஊக்கம் (?), ஸ்பான்ஸர்கள் தரும் ஆதரவு(?), ரசிகர்கள் அளிக்கும் உற்சாகம் (?) இவற்றைக் காணும்போது நான் சொன்ன முதல் வரியை நம்புவது கடினம். அரபு நாடுகளின் தேசிய விளையாட்டான கால்பந்துதான் அந்நாடுகளின் ரசிகர்கள் மனதிலும், அரசின் ஊக்குவிப்பிலும் முதலிடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பாஸ்கட் பாலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பேஸ்பாலும் அப்படியே. ஏன் எல்லா நாடுகளிலும் தேசிய விளையாட்டுக்கே முதலிடம். 

ஆனால், நமது இந்திய ரசிகர்களின் மனதில் முதலிடம் பெறுவது கிரிக்கெட் என்பது 200 சதவீதம் உண்மையென்பதில் ஐயமில்லை. இரண்டாம் இடம் கால்பந்து, மூன்றாவது இடம் டென்னிஸ், பின்னர் கபடி, குத்துச்சண்டை...... உண்மையில் நமது தேசிய விளையாட்டான ஹாக்கி எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத புதிர். எப்படி இந்த அவல நிலை உருவானது?. ஒரு காலத்தில் ஹாக்கியில் கொடிகட்டிப்பறந்த நமது பாரம்பரியம் என்னவாயிற்று?. ஒருகாலத்தில் நமது ஹாக்கி வீரரான பியான்சந்த் போன்றவர்களைப் பார்த்து, உலக ஹாக்கி அணி வீரர்கள் நடுங்கிய காலம் ஏன் மலையேறிப்போனது?.  

பியான்சந்திடம் பந்து கிடைத்துவிட்டால் அது நிச்சயம் கோல்தான் என்று ரசிகர்கள் முடிவு செய்யும் வண்ணம், தன் வளைந்த மட்டையால் பந்தை சுழற்றி சுழற்றிக் கொண்டுபோய் எதிரணி கோல்கீப்பரை கிலியடையவைப்பதன் மூலம், 'இவர் கையில் இருப்பது மட்டையா அல்லது மந்திரக்கோலா' என்று ரசிகர்களை வியப்படைய வைத்த காலம் எல்லாம் போய், இப்போது பாஸிங் என்பதே அரிதாகிப்போன நிலையில், இப்போது வீரர்களிடம் பந்து கிடைத்தால் Hit & Run என்ற முறையில், (அடித்து விட்டு பந்தின் பின்னால் ஓடுவது) என்பது என்ன வகையான பயிற்சிமுறை?. 'தாக்குதல் ஆட்டம்' ஆடுவதற்குப்பதில் 'தடுப்பாட்டம்' ஆடினால் போதும், அதாவது தான் கோல் போடுவதைவிட, எதிரணி கோல் போடாமல் தடுப்பதுதான் ஆட்டம் என்பது போல பயிற்சிமுறைகள் கீழிறங்கிய பின்னும், நமது வீரர்கள் நன்றாகவே ஆடுகிறார்கள் என்பது ஆறுதல் என்றால், அவர்களுக்குப் போதுமான ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்பது நிச்சயம் வேதனையே.

போதுமான ஊக்கம், உற்சாகம், ஆதரவு இவற்றைத்தராமல் சும்மா போய் மெடலை அள்ளிக் கொண்டுவா என்று நிர்ப்பந்தப்படுத்தினால் அவர்களும் என்ன செய்வார்கள்?. சென்ற முறை உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 'சூப்பர் எட்டுக்குள்' கூட நுழைய முடியாமல் திரும்பிய இந்திய அணியை, ரசிகர்களும், ஸ்பான்ஸர்களும் கைவிட்டு விட்டார்களா?. தொடர்ந்து ஊக்கம் தந்து இம்முறை கோப்பையை வெல்ல வைக்கவில்லையா?. ஆனால் ஹாக்கியில் இந்தியா தோற்றால் போச்சு, ஆயிரத்தெட்டு குறை சொல்லி சவக்குழியில் தள்ள தயாராக இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லும் குறையென்ன?. 'இவங்க என்னப்பா, ஒரு மேட்ச் முடிந்து வந்து மட்டையை (ஸ்டிக்) கீழே வைத்தால், அடுத்த மேட்சுக்குத்தான் கையில் எடுக்கிறாங்க' என்பதுதானே. வாதத்துக்கு அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், அவர்களை ஊக்கப்படுத்தாதது யார் குற்றம்?. எத்தனை இடங்களில்தான் அவர்கள் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் ஆடிக்கொண்டிருப்பார்கள்?. தங்கள் கண்முன்னே மாவட்ட அளவிலான கிரிக்கெட்டுக்குக்கூட ரசிகர்கள் கூட்டம் திரளும்போது, ஹாக்கிக்கு தேசிய அளவிலான போட்டிகளில்கூட காலரிகள் காலியாக இருப்பதைப் பார்த்து ஹாக்கி வீரர்கள் விரக்தி அடைவது இயற்கைதானே.

கிரிக்கெட் வீரர்களில் பட்டோடி நவாப் மன்ஸூரலிகானில் துவங்கி சுரேஷ் ரெய்னா வரையில் குறைந்தது நூறு கிரிக்கெட் வீரர்களின் பெயரை மூச்சுவிடாமல் சொல்லத்தெரிந்திருக்கும் நமது இளைஞர்களுக்கு நமது ஆக்கி வீரர்கள் எத்தனை பேரை சொல்லத்தெரியும்?. (அன்றைக்கு ஒரு மேட்சில் ரசிகர்கள் கேலரி பக்கம் கேமரா திரும்பியபோது அங்கிருந்த ஒரு மாணவி ஒரு அட்டையில் ‘Hi Raina, Marry me என்று எழுதி, அதைக் கேமராவுக்கு காட்டியபோது ஆச்சரியம் அடைந்தேன்). டென்னிஸில்கூட லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா என்று உள்நாட்டவர் மட்டுமல்லாது ரோஜர்பெடரர், ரபேல் நடால், வீனஸ் வில்லியம்ஸ், மரிய ஷரபோவா என்று சர்வதேச நட்சத்திரங்களைக் கூட அனாயாசமாகச் சொல்கின்றனர். ஆனால் ஹாக்கி வீரர்களை யாருக்குமே தெரியவில்லை.

ஒருகாலத்தில் ஒலிம்பிக் பதக்கத்துக்கு ஹாக்கியையே நம்பியிருந்த நமது நாடு, தற்போது துப்பாக்கி சுடும் வீரர்களாலும், குத்துச்சண்டை வீரர்களாலும் ஒருசில பதக்கங்களைப்பெற்று அதன்மூலம் கௌரவம் காப்பாற்றப்பட்டு வருகிறது.  

பாஸ்கரன் தலைமையில் ஒலிம்பிக்கில் தங்கத்தையும், தன்ராஜ்பிள்ளை தலைமையில் ஆசிய கோப்பையையும் வென்ற பிறகு நமது ஹாக்கி சொல்லிக்கொள்ளும்படியான இடத்தைத் தக்க வைக்கவில்லை. ஒருமுறை 'ஹாங்காங்கில் நடந்த போட்டியில் மலேசியாவை இந்திய அணி தோற்கடித்தது' என்ற செய்திக்கு கமெண்ட் எழுதிய ஒருவர் 'இப்படி ஆங்காங்கே கிடைக்கின்ற சில வெற்றிகளின் மூலம்தான் இந்திய அணியின் மானம் காப்பாற்றப்படுகிறது' என்று கிண்டலடித்திருந்தார். கிரிக்கெட்டில் எவ்வளவு மோசமாகத் தோற்றபோதிலும் (தொடர் வெற்றிகள் எல்லாம் சமீப காலமாகத்தான்) ஆறுதல் அளித்து ஆதரவு தரத் தயாராக இருக்கும் நமது ரசிகர்கள், மற்ற விளையாட்டுக்கு, குறிப்பாக தேசிய விளையாட்டான ஆக்கிக்கு ஆதரவு அளிக்கத் தயங்குவது... ஸாரி... ஆதரவு அளிக்க மறுப்பது ஏனென்று தெரியவில்லை.

'ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' என்று கவிஞர் வாலி பாடல் எழுதினார். அந்த வரிகள் விளையாட்டுக்கும் பொருந்தும். மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற ககன் அஜீத்சிங், மற்றும் தீபக் தாகூர், அர்ஜுன் ஹாலப்பா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் நமது ஹாக்கி அணி சோர்வுற்றிருப்பது போதிய ஊக்கமும், ஆதரவும் அளிக்கப்படாமையினால்தான்.

இன்னொரு விளையாட்டை குறை சொலவதாக நினைக்க வேண்டாம். மற்ற் வீரர்கள் மைதானம் முழுக்க தேமேயென்று நின்றிருக்க, ஒவ்வொரு பந்தும் வீசும் முன் பெரிய ஆலோசனைகள் செய்த பின் வீச, அவர்கள் ஆலோசனை முடியும்வரை பேட்ஸ்மேன் மட்டையால் தரையைக் கொத்திக் கொண்டிருக்கும்படியான ஒரு விளையாட்டுக்கு இவ்வளவு ஆதரவு தரும் ரசிகர்களும், ஸ்பான்ஸர்களும், வாரியங்களும்... ஒரே நேரத்தில் அனைத்து வீரர்களும் சுறுசுறுப்பாக விளையாடும் ஹாக்கி விளையாட்டுக்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்தலாமே.

நடக்குமென்று நம்புவோமா...?.  

3 comments:

 1. நல்ல பதிவு; ஆனா
  sorry,நான் இந்த விளையாட்டுக்கு வரல!
  :-))

  ReplyDelete
 2. என்ன ஆச்சு சாரு?
  ஏன் இந்த நீண்ட நாள் ஒய்வு?
  நலந்தானே?

  ReplyDelete
 3. என்ன ஆயிற்று சாருவிற்கு?
  அவ்வளவு நன்றாக,விடாமல எழுதுபவர்
  மூன்று மாதங்களாக எதுவும் பதிவு செய்யவில்லை!
  எங்கிருந்தாலும் வாழ்க!

  ReplyDelete