Tuesday, June 28, 2011

காஷ்மீரில் 'தேன் நிலவு'

அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் 'தேன் நிலவு' படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதரும் அவரது சித்ராலயா யூனிட்டாரும் எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டனர் என்பதை முன்னொருமுறை 'பொம்மை' சினிமா மாத இதழில் தெரிவித்திருந்தார். அந்தப்பகுதி இங்கே...

ஸ்ரீதர் சொல்கிறார்:

"தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதியல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப்பார்த்து சரியாக வரவில்லை யென்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றையெல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விருமிபினோம்.சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாமே என்பதனால்.

காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங்  எடுத்தவற்றை போட்டுப்பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டுமுறை மட்டும் 'டக்கோட்டா' விமானம் டெல்லிக்குப்போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச்சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னைசென்று, அங்கு விஜயா லேபட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

அவ்வாறு சென்னையிலிருந்து பிரிண்ட் போட்டு, கொண்டுவரப்பட்ட அந்த படப்பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப்போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக்காட்சி முடிந்தபிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி (மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என்சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தியில்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம்.

உண்மையில் 'தேன் நிலவு' படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்புக்காக நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து, அந்த தியேட்டர் இருக்கும் கிராமம் வரையில் காரிலேயே செல்லும் அளவுக்கு ஒழுங்கான பாதை கிடையாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப்போகும்போது,  திரு M.N.நம்பியார், தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது".

 இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்..

எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களை அப்படங்களை உருவாக்கியவர்கள் வாயிலாகக் கேட்கும்போது உண்மையில் மலைப்பு ஏற்படுகிறது.

இதே போல பெரிய கேமராமேனாக இருந்து பிற்காலத்தில் கௌபாய் டைப் படங்களின் இயக்குனராக மாறிய எம்.கர்ணன், தான் கேமராமேனாக இருந்தபோது நிகழ்ந்த அனுபவங்களை ஒருமுறை சொல்லியிருந்தார். அவர் சொன்னது.....

'நான் மாடர்ன் தியேட்டர்ஸில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியபோது, அப்போது ட்ராலி வசதிகள் எல்லாம் கிடையாது. கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு கதாபாத்திரங்களை எதிரில் நிற்க வைத்து நடிக்க வைப்போம். முடிந்ததும் கேமராவை வேறு இடத்துக்கு மாற்றுவோம். ஆனால் நடிகர்கள் நடிக்கும்போது கேமராவும் அங்குமிங்கும் மூவ் ஆனால் நன்றாயிருக்குமே என்று நானும் இயக்குனர் திரு டி.ஆர் சுந்தரமும் யோசித்தோம். அதன்படி, நான் கேமராவை கையில் வைத்துக்கொண்டு காரின் முன்புற பேனட்டில் உட்கார்ந்துகொள்ள, இயக்குனர் காரை ஸ்டார்ட் செய்து மெல்ல முன்னோக்கிப்போவதும், பின்னர் ரிவர்ஸில் எடுப்பதுமாக ஓட்டிக்கொண்டிருப்பார். அதுபோல இன்னொரு ஷாட்டில் கதாபாத்திரங்களை திறந்தவெளியில் நடிக்க வைத்துவிட்டு, அதேபோல் நான் கேமராவுடன் பேனட்டில் அமர்ந்துகொள்ள, அவர் நடிகர், நடிகையரைச்சுற்றி வட்ட வடிவத்தில் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டிருப்பார். படம் முடிந்து திரையிடப்பட்டபோது, இத்தகைய மூவ்மெண்ட் காட்சிகள் அப்போது திரைத்துரையினர், பத்திரிக்கைகள், ரசிகர்கள் என அனைவராலும் பாராட்டப்பட்டன"

இவ்வாறு எம்.கர்ணன் தெரிவித்திருந்தார். தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் அவை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அப்போது அது சாதனைதானே.

4 comments:

 1. அந்தகால படங்களை 'எடுக்க' அவர்கள் பட்ட கஷ்டங்களை விட,இந்த காலப்படங்களை 'பார்க்க' நாம் படும் கஷ்டங்கள் அதிகம்!

  ReplyDelete
 2. மிகவும் நல்ல பதிவு
  இன்னும் உங்களிடம்
  நல்ல பல
  பதிவ்கள்
  எதிர்பார்க்கிறோம் .
  அன்புடன்
  யானைக்குட்டி

  ReplyDelete
 3. அந்தக் காலத்தில்
  படம் எடுப்பதை லாபம் ஈட்டித்தரும் தொழிலாக நினைக்கவில்லை
  அதை ஒரு தவமாகச் செய்தார்கள்
  தாங்கள் விளக்கிச் சென்ற விதம் அருமையாக இருந்தது
  அவ்வளவு மெனக்கெட்ட்டவர்கள் ஏன் தேன் நிலவை
  கருப்பு வெள்ளையில் எடுத்தார்கள் என்பதுதான்
  எனக்கு பெரிய புதிராக உள்ளது
  அது நிச்சயம் கலரில்தானே எடுக்கப் பட்டிருக்கவேண்டும்
  இது குறித்த தகவல் ஏதும் தங்களுக்குத் தெரிந்தால் பதிவிடவும்
  சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete