Monday, June 27, 2011

சிவாஜி பற்றி ஸ்ரீதர்

எனது பதிவுகளைப் படித்து, தங்களது மேலான பின்னூட்டங்களையும், பதிவுகள் சம்மந்தமான கூடுதல் விவரங்களையும் பதித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நன்றி.

(முன்பு இதே தளத்தில் பதிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்த இப்பதிவு மீண்டும் இடம் பெறுகிறது. ஏற்கெனவே படித்தவர்களுக்கு பழையது, படிக்காதோருக்கு புதியது)

தமிழ் சினிமா இதழ்களில் முதன்மை வாய்ந்த 'பொம்மை' மாத இதழில் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் முன்னொருமுறை தன் மனம் திறந்த கருத்துக்களைக் கூறியிருந்தார். அவற்றுள் நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப்பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கள் ம்னதைக் கவர்ந்ததால், அப்பகுதி மட்டும் இங்கு இடம் பெறுகிறது. அதே கட்டுரையில் இயக்குனர் ஸ்ரீதர் தனது 'தேன் நிலவு' திரைப்படத்தை காஷ்மீரில் படமாக்க பட்ட கஷ்ட்டங்கள் பற்றிக்கூறியிருந்தது அடுத்த பதிவாக இடம் பெறுகிறது.

எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் 'கர்ணன்' படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளச்செய்தார். திருமணச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப்பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்துச்சொன்னார். அத்துடன் 'நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச்சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?' என்றுகேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லியிருந்தது நினைவுக்கு வர, 'ஆமாண்ணே, வந்திருக்காங்க' என்றேன். 'உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே' என்றார். சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச்சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி 'இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்' என்றவர் என்னைப்பார்த்து, 'இதோ பாரு, இதுவரைக்கும் சதா ஸ்டுடியோ விலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்கோடு வீட்டுக்கு வந்துசேர். அதுமட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப்பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்' என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு படம் எதுவும் பண்ணவில்லை. மற்றவர்களோடுதான் படம் பண்ணிக்கொண்டிருந்தேன்.

('காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை....')

'
காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார். 'அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன். சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.  

('பூமாலையில்... ஓர் மல்லிகை...')
சில பல காரணங்களால் நான் அவரை வைத்து தயாரித்து இயக்கி வந்த ஹீரோ 72' படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோதிலும், (பின்னாளில் இப்படம் 'வைர நெஞ்சம்' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியானது) எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. 'உரிமைக்குரல்' பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். 'பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (MGR) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இதுவரைக்கும் ஒருநாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வரமுடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் உண்டு' என்று வாழ்த்தினார்.

இவ்வாறு இயக்குனர் ஸ்ரீதர் கூறியிருந்தார். (என்ன காரணத்தாலோ நடிகர்திலகத்தை வைத்து அவர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண் படங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. சொல்ல மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விட்டாரா என்பது தெரியவில்லை).

2 comments:

  1. இதுவரை அறியாத தகவல்கள்
    சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete