Friday, March 11, 2011

தங்க சுரங்கம்

இலக்கணப்படி இப்படத்தின் தலைப்பு 'தங்கச் சுரங்கம்' என்றுதான் இருக்க வேண்டும். தமிழ்ப்படங்களை ஆட்டிவைக்கும் செண்டிமெண்ட் காரணமாக, எட்டெழுத்துக்களில் தலைப்பு அமைந்தால், அதில் வரும் ஒற்றெழுத்தை நீக்கி விட்டு, ஏழு எழுத்துக்களில் தலைப்பு வருவதுபோல செய்வார்கள் (உதாரணம்: கல்யாண பரிசு). ஆனால் இப்படத்தில் ஒற்றெழுத்தான 'ச்'சை நீக்கியபின்னர்தான் எட்டெழுத்துக்களே வருகின்றன. அப்படியிருக்க என்ன காரணத்தால் இலக்கணப்பிழை செய்தார்களென்று தெரியவில்லை.

ஒரு காலம் இருந்தது. நடிகர்திலகத்தின் சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண ஏங்கிய நேரம். ஆம் 1964 ல் ஒரு 'புதிய பறவை', 1967 ல் ஒரு 'ஊட்டி வரை உறவு' என்று அத்தி பூத்தாற்போலவே அவரது சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண முடியும். மற்றபடி நடிகர்திலகத்தின் வண்ணப்படங்கள் என்றால் அது திரு ஏ.பி.என். எடுத்த (திருவிளையாடல், சரஸ்வதிசபதம், கந்தன்கருணை, திருவருட்செல்வர், திருமால்பெருமை போன்ற) புராணப்படங்கள்தான்.  அந்த வகையில் இப்போதுள்ள நடிகர், நடிகையர் அதிர்ஷ்டம் செய்தவர்கள். திரைப்படங்கள் என்றாலே வண்ணம்தான் என்று முன்னேறிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் அப்படியில்லை. எப்போதாவது தான் வண்ணப்படங்கள் வரும். 1964ல் அறிமுகமான ஜெய்சங்கர் கூட கிட்டத்தட்ட பதினைந்துக்குமேல் கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப்படமாக 'பட்டணத்தில் பூதம்' படத்தில் நடித்தார். இந்த வகையில் ரவிச்சந்திரன் கொடுத்து வைத்தவர். முதல் படமான 'காதலிக்க நேரமில்லை'யே வண்ணத்தில் அமைந்தது. தொடர்ந்து இதயக் கமலம், நான், மூன்றெழுத்து, உத்தரவின்றி உள்ளே வா, அதே கண்கள் என்று வண்ண நடை போட்டார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு படகோட்டி, எங்கவீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ரகசியபோலீஸ் 115, பறக்கும் பாவை என்று வண்ணத்தில் வந்து கொண்டிருந்தபோது சிவாஜி ரசிகர்கள் வண்ணப்படங்களுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு தீனி போட்டது ஏ.பி.என்னின் புராணப் படங்கள் மட்டுமே. எம்ஜிஆர் அவர்களை வைத்து வண்ணத்தில் ஒளிவிளக்கு, அன்பேவா படங்களை எடுத்த ஜெமினி வாசன், மற்றும் ஏ.வி.எம் செட்டியார் ஆகியோர் கூட நடிகர்திலகத்தை வைத்து 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'உயர்ந்த மனிதன்' ஆகிய படங்களை கருப்பு வெள்ளையில் எடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

மற்றபடி நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக்காட்ட கருப்பு வெள்ளை ஒரு தடையாக இல்லையென்பதோடு அவரது நடிப்புக்கு  சவாலாகவும், திறமைக்கு உரைகல்லாகவும் அமைந்தவை யாவும் (பாவ மன்னிப்பு, பாசமலர், பழனி, நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, தெய்வமகன், வியட்நாம் வீடு உள்ளிட்ட) கருப்பு வெள்ளைப் படங்களே. இருந்தாலும் ரசிகர்களுக்கென்று ஒரு ஆசை இருக்கிறதல்லவா?

எதற்கு இத்தனை பீடிகை போடுகிறாள் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம், நடிகர் திலகத்தின் சமூகப்படங்களில் புதியபறவை, ஊட்டிவரைஉறவு படங்களுக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வந்த வண்ணப்படம்தான் "தங்க சுரங்கம்".

செயற்கைத்தங்கம் உற்பத்தி செய்து, நல்ல தங்கத்தோடு கலந்து விட்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய மோசடியையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் சதிகாரக் கும்பலைப் பிடிக்கும் சி.பி.ஐ.அதிகாரி பாத்திரம் நடிகர் திலகத்துக்கு. அதற்கு ஏற்றாற்போல வாகான ஒல்லியான உடலமைப்பு இருந்தது அப்போது அவருக்கு. அதனால் ரோலுக்கு கனகச்சிதமாக பொருந்தினார். கூடவே வசீகரமான சுருள், சுருளான சொந்த தலைமுடி எல்லாம் சேர்ந்து அப்பாத்திரத்துக்கு மெருகூட்டின. (அப்போதைய  படங்களில் எல்லாம் சி.ஐ.டி.என்பதுதான் புழக்கத்தில் இருந்ததே தவிர சி.பி.ஐ. என்பது ரொம்ப பேருக்கு வித்தியாசமான வார்த்தையாக இருந்தது. இப்போது, சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்படியாக சி.பி.ஐ.என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது).

படம் துவங்கும்போது, இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியோடு துவங்கும். ஆங்காங்கே பீரங்கித்தாக்குதல்கள், அதை விட மோசமாக போர் விமானங்கள் குண்டு வீசி பர்மாவின் தலைநகரான ரங்கூனை தாக்கிக்கொண்டிருக்கும்போது இந்தியர்கள் கப்பலில் தாய்நாடு திரும்பிக்கொண்டிருப்பர். அப்போது தன்னுடைய சின்னஞ்சிறு மகன் ராஜனுடன், கப்பலில் ஏறப்போகும் காமாட்சியம்மாளை (எஸ்.வரலட்சுமி), கப்பலில் இடம் நிறைந்து விட்டது என்று அதிகாரிகள் தடுக்க, தான் பர்மாவில் இருந்து அழிந்தாலும் பரவாயில்லை, தன் மகன் ராஜன் இந்தியாவில் எங்காவது போய் நலமாக இருக்கட்டும் என்று, தனக்கு முன்னர் ஏறிய டாக்டரிடம் (ஜாவர் சீதாராமன்) மகனை கண்கலங்க ஒப்படைக்கிறார். காட்சிகள் அத்துடன் கட் பண்ணப்பட்டு டைட்டில் ஓடத்துவங்குகிறது.

 'தங்கச் சுரங்கம்' படத்தின் எழுத்தோட்டம் (டைட்டில்) வித்தியாசமாகவும், துடி துடிப்புடனும் செய்யப் பட்டிருந்தது. புதுமையாக செய்ய வேண்டும் என்ற ராமண்ணாவின் துடிப்பு அதில் தெரிந்தது.

டைட்டில் முடிந்ததும், படம் தற்காலத்துக்கு வந்து விடும். பள்ளிக் குழந்தைகளோடு வந்துகொண்டிருக்கும் வரலட்சுமி எதிரே வரும் பாதிரியாரைக்கண்டு திகைத்து நிற்க பாதிரியாரும் திகைத்து நிற்பார். அந்தப் பாதிரிர்யார் வேறு யாருமல்ல. ரங்கூனில் கப்பலில் ஏறும்போது வரலட்சுமி தன் மகனை ஒப்படைத்தாரே அந்த டாக்டர் ஜாவர் சீதாராமன் தான். காமாட்சியம்மாள் தன் மகனைப்பற்றி ஆவலுடன் விசாரிக்க, அவன் தற்போது குற்றப்பிரிவு இலாக்காவில் உயர்ந்த பதவியில் இருப்பதாக சொல்ல... உடனே காட்சி மாற்றம். டெல்லியிலிருந்து வரும் விமானத்தில் இருந்து டார்க் ப்ரவுன் கலர் ஃபுல் சூட், மற்றும் கறுப்புக்கண்ணாடியுடன் விமானத்திலிருந்து வெளியே வரும் நடிகர் திலகம் அறிமுகம். விமான அதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு தனக்கே உரிய ஸ்டைலுடன் படிகளில் இறங்கி வருவார்.

அவரது மேலதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன், போலித்தங்கம் செய்யும் கும்பலைப் பிடிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார். அது பற்றி மேலும் தகவல்களைச் சேகரிக்க சிறிது நாளாகும் என்பதால் தன் ஊருக்குச் சென்று தன்னை வளர்த்த பாதிரியாரைப்பார்த்து வர விரும்புவதாகச் சொல்லி அனுமதி பெற்று ஊருக்கு வருவார். அங்கே பாதிரியார், அவருக்கு மிகப்பெரிய பரிசு தருவதாகச்சொல்லி ராஜனின் (சிவாஜி) அம்மாவை அவருக்கு அறிமுகம் செய்து வைப்பார். இன்ப அதிர்ர்ச்சியில், பாசத்தைக் கொட்ட சிவாஜிக்கும் வரலட்சுமிக்கும் அருமையான கட்டம். போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். நாள் முழுக்க பேசிக்கொண்டிருந்து விட்டு இரவில் சிவாஜியைத் தூங்கப்போகச்சொல்லும் அம்மாவிடம் சிவாஜி ஒரு அஸ்திரத்தை தூக்கி வீசுவார்.

"அம்மா நானும் காலையில் இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். மகனைப் பாத்த சந்தோஷத்தில எல்லா விஷயத்தையும் பற்றி விவரமா பேசினீங்க. ஒரு பெண்ணுக்கு மகன் எப்படி முக்கியமோ அதுபோல கணவனும் முக்கியமல்லவா? அப்பாவைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே. ஏம்மா?".

மகனின் இந்தக்கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போவார் வரலட்சுமி. எப்படி சொல்ல முடியும்?. சொல்வது போலவா நடந்து கொண்டார் அவர்?. 'ராஜன், இப்போ என்னை எதுவும் கேட்காதே, சமயம் வரும்போது நானே சொல்றேன்' என்று சமாதானப் படுத்துவார்?. ஆனால் அவர் சொன்ன 'அந்த சமயம்' எவ்வளவு தர்ம சங்கடமான, இக்கட்டான சமயமாக அமையும் என்று அவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.

ஆம். எந்த போலித்தங்க கும்பலைப்பிடிக்க சிவாஜி அமர்த்தப்பட்டாரோ, அந்தப்போலித் தங்க கும்பலுக்கு தலைவனே ராஜனின் அப்பா 'மிஸ்டர் பை' (..கே.தேவர்)தான் என்று அறியும்போது வரலட்சுமியே அதிர்ச்சியில் மூழ்கி விடுவார். முன்னதாக தன்னைப் பிடிக்க வந்த சி.பி.ஐ. ஆபீஸர் விட்டுச்சென்ற பர்ஸில் ராஜனின் படமும் தன் மனைவியின் படமும் இருப்பதைப் பார்த்து, அது தன் மகன்தான் என்பதை அறியும் 'பை', பாசத்தையே கேடயமாகக்கொண்டு தப்பிக்க எண்ணி, பர்ஸில் இருந்த விலாசத்தில் வரலட்சுமியை சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக செண்டிமெண்ட் வார்த்தைகள் மூலம் அவரை நிலைகுலையச்செய்து, இறுதியில் தன்னைப்பிடிக்க தன் மகன் போடும் திட்டங்களை தன் மனைவி மூலமாகவே தெரிந்துகொள்ளும் அளவுக்கு தன் மனைவியைப் பக்குவப்படுத்தியிருப்பார். இதையறியாத சி.பி.ஐ ஆபீஸர் ராஜன், மிஸ்டர் பையைப் பிடிக்கப்போகும் திட்டத்தை தன் அம்மாவிடம் சொல்லி விட்டுப்போக, போன இடத்தில் சிவாஜிக்கு தோல்வி. 'மிஸ்டர் பை' தன்னுடைய ஜீப்பில் தனக்கு பதிலாக ஒரு கழுதையை அனுப்பிவைத்து அவமானப்படுத்தியிருப்பார்.

இதைப்பற்றி ஆலோசிக்கும் மேஜரும் சிவாஜியும், 'நம் இருவரைத்தவிர யாருக்கும் தெரியாத இத்திட்டம் 'பை'க்கு தெரிந்தது எப்படி?. நீங்கள் யாரிடமும் சொன்னீர்களா?' என்று மேஜர் கேட்க இல்லையென்று மறுக்கும் சிவாஜிக்கு சட்டென்று ஒரு பொறிதட்டும். அம்மாவிடம் மட்டும் தானே இதைச்சொன்னோம். 'பை'க்கு தெரிந்தது எப்படி?. சந்தேகம் என்று வந்து விட்டால் யாரையும் சந்தேக வட்டத்தில் இருந்து நீக்க முடியாதே. சிறிது நேரத்தில் திரும்புவதாகச்செல்லும் சிவாஜி நேராக தன் அம்மாவைப் போய்ப்பார்ப்பார். அப்போது நடக்கும் உரையாடல்கள் உணர்ச்சி மயமானவை.

மகனுடைய கூரிய பார்வையின் உக்கிரத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியாத தாய், தலையைத் தாழ்த்திக்கொண்டு கடைக்கண்ணால் பார்க்க, மகனின் கேள்விக்கணகள்....

"அம்மா, நான் பார்க்கும் உத்யோகம் எவ்வளவு பொறுப்பானது, ஆபத்தானதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே?"  அவள் ஆம் என்று தலையாட்டுவாள்.

"இன்னைக்கு 'பை'யைப் பிடிக்கப்போகும் விஷயத்தை நான் தானே வாய் தவறி உங்களிடம் சொன்னேன்?".   அவள் மீண்டும் தலையாட்டல்

"அதை நீங்க யார்கிட்டேமா சொன்னீங்க?"

"ராஜன், நான் யார்கிட்டேயும் சொல்லலைப்பா"

"பொய்.... நீங்க பை கிட்டே சொல்லியிருக்கீங்க...ஏன்...ஏன்.., அதுக்கென்ன அவசியம் வந்தது?. தலைக்கு ஒசந்த மகனை வச்சுகிட்டு அந்த 'பை' கூட ரெண்டாவது வாழ்க்கை வாழறீங்களா அம்மா?"

(ஒரு மகன் தன் தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனால் தோல்வியின் பாதிப்பு, மனத்திலிருந்து இப்படி கேள்வியாக வெடித்துக் கிளம்ப)

"அய்யோ ராஜன், அவர்தாண்டா உங்க அப்பா"

அதிர்ச்சியின் உச்சிக்குப்போவார் நடிகர் திலகம். என்னது அப்பாவா?. நான் பிடிக்கணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்த தேசத்துரோகியா என் அப்பா?.

மகனிடம் விவரத்தைச்சொல்லத் துவங்க, மீண்டும் ஃப்ளாஷ் பேக்கில் ரங்கூனில் நடந்த இரண்டாம் உலகப்போர். இடிபாடுகளில் சிக்கிய காமாட்சியும் கனகசபையும் தப்பிக்கும் சமயம், காமாட்சி மகன் ராஜனை தேடிக்கொண்டிருக்கும்போது கனகசபைக்கு ஒரு பெட்டி நிறைய பணம் கிடைக்க, மனைவியையும் மகனையும் உதாசீனப்படுத்தி விட்டு தான் மட்டும் தப்பித்துப்போய்விட, வேறு வழியிறி மகன் ராஜனுடன் இந்தியா வரும் கப்பலில் காமாட்சி ஏறப்போகும்போதுதான் மகனை டாக்டரிடம் ஒப்படைக்கிறார் (படத்தின் முதல் காட்சியில் வந்தது).

அதன்பிறகு ராஜன் தன் தாயையே கைது செய்வதும், பாதிரியார் அவரை ஜாமீனில் விடுவித்து அழைத்து வருவதும், தொடர்ந்து 'பை' யைப்பிடிக்க ராஜன் முனைந்து ராஜன் வெற்றி பெறுவதும் சுவாரஸ்யமானவை.

பாடலும் இசையும்...

இப்படத்துக்கு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.

விடுமுறையில் கிராமத்துக்கு வரும் நடிகர் திலகம், தலையில் தொப்பியும் கையில் பெட்டியுமாக பாடிக்கொண்டு வரும் பாடல்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்னீரும் விளையாடுது
மூன்று தமிழ் ஓங்கும் இடம் எங்கள் நாடு.... ஓய்...

பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக் காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திருமஞ்சள் முக சிலையல்லவா

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

யானைகட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
திருக்கோயில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

அருமையான பாடல். பாடியவர்.... வேறு யார்? கம்பீரக்குரலோன் டி.எம்.எஸ் அண்ணாதான். ராமமூர்த்தியின் அருமையான இசையில்.  துரை-அமிர்தத்தின் கண்ணில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு. அழகான ஒல்லியான உடல்வாகுடன் வெள்ளை பேண்ட், சந்தன வண்ண சட்டை, தொப்பி, கையில் சின்ன பெட்டி மற்றும் ஒரு குச்சியுடன் வழக்கமான ஸ்டைல் நடையில் நடிகர் திலகம்...  ராமண்ணா.... அற்புதம் அண்ணா...

பெங்களூரில் இருந்து காரில் வரும்போது, நள்ளிரவில் நடிகர் திலகத்திடமிருந்து தப்பிக்க எண்ணி, சேற்றில் விழுந்துவிடும் பாரதியை கிண்டல் செய்து நடிகர் திலகம் பாடும் "கட்டழகு பாப்பா கண்ணுக்கு... கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு" பாடல் ரசிக்க வைக்கும். பாடலின் துவக்கத்தில் வரும் சிரிப்பில், நடிகர்திலகம் வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிப்பது அவரது முத்திரை.

ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து தேவையில்லை. ஆஸ்திரேலியா தேவையில்லை, நயாகரா நீர்வீழ்ச்சி தேவையில்லை. பத்தடிக்கு பத்தடியில் ஒரு இடத்தைக்கொடுத்து விட்டால் போதும். அருமையாக படமாக்கி தந்துவிடுவார்.

குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டிக்குள் 'வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'
நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் காருக்குள் 'போதுமோ இந்த இடம்'
மூன்றெழுத்தில் சிறிய பெட்டிக்குள் ரவி-ஜெயாவை வைத்து 'பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி' போன்ற பாடல்களை அருமையாகத் தந்த இயக்குனர் ராமண்ணா 'தங்க சுரங்க'த்திலும் தன்னுடைய சேட்டையை விடவில்லை.

ஆம்.  நடிகர்திலகமும் பாரதியும் பாடும் டூயட் பாடலான
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"

பாடலை முழுதும் கிணற்றுக்குள்ளேயே எடுத்திருப்பார். கிணற்றுக்குள் படிக்கட்டில் நின்றுகொண்டும், கயிற்றில் தொங்கிக்கொண்டும் பாடும் அந்தப்பாடல் கண்களுக்கு விருந்து.


மயக்க ஊசி ஏற்றப்பட்டு நடிகர் திலகத்துக்கு மயக்க ஊசி போட ஏவி விடப்பட்ட்ட பாரதி, நடிகர் திலகத்தை மயக்க பாடும்..
"உன் நினைவே நதியானால்.. என் உடலே படகானால்
அந்த நதியினிலே... இந்த படகினிலே.. ஆடு... ஆட வா"

பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். ஊட்டி கார்டனில் எடுக்கப்பட்ட பாடல் இது. அதிகம் பிரபலம் ஆகாத பாடலும் கூட.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள்.  பாரதி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா. முதலில் நிர்மலா நல்லவராகவும் பாரதி போலித்தங்கக் கும்பலைச் சேர்ந்தவராகவும் தோன்றும். ஆனால் இடையிலேயே பாரதிதான் நல்லவர் என்றும் நிர்மலா மோசடிக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வரும். போலித்தங்க கும்பலின் தலைவன் 'மிஸ்டர் பை' ஆக (சி.பி.ஐ.ஆபீஸர் ராஜைன் தந்தையாக) ஓ.ஏ.கே. தேவரும், அவரது கையாள் வேலாயுதமாக ஆர்.எஸ்.மனோகரும் நடித்திருப்பார்கள். நகைச்சுவைக்கு நாகேஷ். இவர் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.

நடிகர்திலகம், பாரதி, நிர்மலா, ஓ.ஏ.கே.தேவர், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன், முத்தையா (போலித்தங்க விஞ்ஞானி) ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர் நடிகையர் தேர்வில் ராமண்ணா கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத்தூண்டும் அளவுக்கு வீக்னஸ். நடிகர் திலகத்துக்கு பொருத்தமில்லாத ஜோடிகளில் பாரதிக்கு நிச்சயம் இடம் உண்டு. கொஞ்சம் கூட ஒட்டவில்லை. அது மட்டுமல்லாது மெயின் வில்லனாக ஓ.ஏ.கே.தேவரும் ரசிகர்கள் மனத்தில் நிற்கவில்லை. பாரதிக்கு பதிலாக ஜெயலலிதாவும், ஓ.ஏ.கே.தேவருக்கு பதிலாக நம்பியாரும் இடம் பெற்றிருந்தால் படத்தின் ரிஸல்ட்டே வேறு என்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயம்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டிருந்தது. அன்றைய காலத்தில் சென்னைக்கும் மலேசியா, சிங்கப்பூருக்கும் இடையே 'ஸ்டேட் ஆப் மெட்ராஸ்' என்ற பயணிகள் கப்பல் சென்று வரும் ('சிதம்பரம்' கப்பலுக்கு முன்பு). இந்தக்கப்பலிலேயே சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

'தங்கச்சுரங்கம்' என்றாலே நமக்கு தவறாமல் நினைவுக்கு வருவது, கிளைமாக்ஸில் சர்ச்சில் (மாதாகோயிலில்) நடிகர்திலகத்தின் அற்புத நடிப்பு.  சர்ச்சுக்குள் ஆயுதங்கள் எடுத்துப்போக பாதிரியார் தடை விதித்ததால், சர்ச்சுக்குள் ஒளிந்திருக்கும் தந்தையைப் பிடிக்க நிராயுதபாணியாக உள்ளே போகும் நடிகர்திலகத்தை,  துப்பாக்கியோடு ஒளிந்திருக்கும் 'மிஸ்டர் பை' இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் மாறி மாறி சுட, அப்படியே பெஞ்சிலும் தரையிலும் விழுந்து நடிகர் திலகம் துடிக்கும்போது நம் கண்ணில் ரத்தம் வராத குறை. அத்துடன் ஒரு சந்தேகமும் வரும். "காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்ற பேராசையில் நிஜமான துப்பாக்கியால் சுட்டுட்டாங்களோ?"

"தங்கச்சுரங்கம்"  பற்றிய என் இனிய நினைவுகளைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

2 comments:

 1. Dear சாரூஜி,

  இன்று "அசத்த போவது யாரு" நிகழ்ச்சியில்,
  நடிகர் வடிவேலு கூறிய ஒரு நெகிழவைக்கும் சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.அவர் கூறியது அப்படியே:

  "சிவாஜி சாரின் இறுதி ஊர்வலம்.சினிமா உலகமே திரண்டுள்ளது.ரசிகர்கள் கதறிகொண்டிருக்கிறார்கள்.
  அவர் உடலின் தலைமாட்டில் கமல்,ரஜினி அமர்ந்திருக்க,ஒரு பக்கம் சத்தியராஜூம்,மறுபக்கம் பார்த்திபனும் கால் பகுதியில் நான் என சுற்றி பல நடிக நடிகையர்..அப்போ கீழே இருந்து ஒரு ரசிகர் துக்கம் தாளாது எங்களை நோக்கி 'அடப்பாவிகளா! நம்மிடம் இருந்த ஒரே நடிகனையும் இப்படி அநியாயமா சாகடிச்சுடீங்களாடா'என்று கூவி அழ நான் அப்படியே உறைந்து போனேன்."

  இப்போ நான்:
  என் மதிப்பில் வடிவேலு பல மடங்கு உயர்ந்து போனார்.(ஒருவர் எதை ரசிக்கிறார் என்பதை வைத்து அவரை எடை போடுபவன் நான்.)

  ReplyDelete
 2. Dear Ganpat,
  நடிகர்திலகத்தின் மறைவு பற்றிய வடிவேலுவின் நினைவுகூரல், இதயத்தைக் கனக்க வைத்தது. பதிப்பித்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete