Thursday, March 10, 2011

அண்ணன் ஒரு கோயில்-2

காட்சியமைப்புகளில் ஒளிப்பதிவு சிறப்பாகவும், துல்லியமாகவும் இருந்தது. ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் கருப்புவெள்ளைப் படங்களிலேயே வித்தைகள் காட்டுவார். (உதாரணம்: வானம்பாடியில் இடம்பெற்ற 'ஏட்டில் எழுதிவைத்தேன்' பாடல் காட்சி, மற்றும் லட்சுமி கல்யாணத்தில் 'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் காட்சி). வண்ணப்படமான இதில் சொல்லவே வேண்டாம். பின்னியெடுத்திருப்பார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட இரவுக்காட்சிகள். மற்றும் மல்லிகை முல்லை பாடல் காட்சி.


நடிகர்திலகத்தின் 'பெர்பார்மென்ஸ்'

** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...

** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...

** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....

** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...

** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....

** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....

** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....

இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.

இயக்குனர் கே.விஜயன்,  என்.வி.ராமசாமியின் 'புது வெள்ளம்', 'மதன மாளிகை' படங்களை இயக்கியிருந்தபோதிலும் அவர் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது 'ரோஜாவின் ராஜா'வில் துவங்கி, 'தீபம்' படத்திலிருந்துதான். தீபம், அண்ணன் ஒரு கோயில், தியாகம், திரிசூலம் என்று வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர், என்ன காரணத்தாலோ 'ரத்தபாசம்' படப்பிடிப்பின்போது திரு வி.சி.சண்முகத்துடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்தார். பிரிந்த கையோடு இதுபோன்ற சில 'அதிரடி(???)' பேட்டிகளும் கொடுத்தார். கூடவே 'தூரத்து இடி முழக்கம்' என்ற அருமையான தலைப்புடன் (நடிகர்திலகம் அல்லாத) ஒரு படத்தையும் இயக்கினார். நடிகர்திலகத்தின் எதிர்ப்பு பத்திரிகைகள் வரிந்து கட்டிக்கொண்டு, அந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் தந்து விளம்பரப்படுத்தின. ஆனால் பாவம், இடிமுழக்கம் வெறும் 'கேப்' சத்தம் போல ஆகிப்போனது. ஆதரவு தருவதுபோல ஏற்றிவிட்டவர்கள் எல்லாம் அவரைவிட்டு ஓடிப்போயினர்.

பாலாஜியாவது தொடர்ந்து ஆதரவு தருவார் என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது, யதார்த்தமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் ப்ரொடக்ஷன் மேனேஜராக இருந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தியை இயக்குனராகப்போட்டு 'பில்லா' படத்தை தயாரிக்க, பில்லா பெரிய வெற்றியடைந்து கிருஷ்ணமூர்த்திக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது. செண்டிமெண்ட் பிரியரான பாலாஜி தொடர்ந்து தன் படங்களை ஆர்.கே. தலையில் கட்டினார். சில ஆண்டுகள் கழித்து, ஒருநாள் ஸ்டுடியோ செட்டில் நடிகர்திலகத்தை கே.விஜயன் வலியச்சென்று சந்தித்து நலம் விசாரிக்க, பழைய நண்பனைப்பார்த்து, 'என்ன விஜயா இப்போ என்ன பண்றே?' என்று கேட்க, விஜயன் சோர்ந்த முகத்துடன் பதிலேதும் சொல்லாமல் நிற்க, நிலைமையைப்புரிந்துகொண்ட நடிகர்திலகம், 'சரி, இனிமேல் என் படங்களை நீ டைரக்ட் பண்ணு' என்று ஆசி வழங்கி, விஜயனுக்கு மறுவாழ்வளித்தார். 'பந்தம்' படம் மூலம் அவர்களின் பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை நினைவுகூர்வது போல, 'பந்தம்' படத்தில் ஒரு காட்சி அமைத்திருப்பார் விஜயன். தன்னுடைய முன்னாள் டிரைவரை சர்ச்சில் சந்திக்கும் நடிகர் திலகம், 'என்ன டேவிட் எப்படியிருக்கே?' என்று கேட்க, வறுமையில் வாடும் டிரைவர் அழத்துவங்க, சட்டென்று கோட் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை அவரிடம் கொடுத்து 'வண்டியை எடு' என்பார். இந்தக்காட்சியில் நடித்து முடித்த நடிகர்திலகம், 'என்ன விஜயா, இந்த சீன் நம்ம ரெண்டு பேர் சமந்தப்பட்ட விஷய்ம் மாதிரி இருக்கே' என்றாராம் - (கே.விஜயன் முன்னொருமுறை தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காணலில் சொன்னது).

சில மாதங்களுக்கு முன், ஜெயா டிவி 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுமித்ரா, கண்டிப்பாக 'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். அதுபோலவே, ஒருநாள் எபிசோட் முழுக்க இப்படத்துக்கு மட்டுமே ஒதுக்கி, ரொம்ப பெருமையாகப் பேசினார். நடிகர் திலகத்தை 'ஓகோ'வென்று புகழ்ந்தார். இன்னொரு ஆச்சரியம், நடிகர் திலகத்துடன் நடித்த 'ஜஸ்டிஸ் கோபிநாத்' படத்தைப்பற்றியும் (ஜோடி சூப்பர் ஸ்டார்) குறிப்பிட்டார். பாவம் இயக்குனர் பெயரை மறந்து விட்டு, சற்று யோசித்து 'யாரோ ரங்கநாத் என்பவர் இயக்கினார்' என்றார். (படத்தை இயக்கியவர் டி.யோகானந்த் என்ற பழம்பெரும் இயக்குனர்).

நடிகர் பிரேம் ஆனந்த், நடிகர்திலகத்தின் சிறந்த அபிமானியாகவும், மிகச்சிறந்த ரசிகராகவும், எந்நாளும் நடிகர்திலகத்துடன் ஒட்டியே இருந்து வந்தவர். அதனால் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்களில் அவருக்கு ஏதாவது ஒரு ரோல் கண்டிப்பாக இருக்கும். அதுவும் பைலட் பிரேம்நாத் படத்தில், கதாநாயகி ஷ்ரீதேவிக்கு ஜோடியாக, நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக பிரதான ரோல் ஒன்றில் நடித்தார்.
ஜெய்கணேஷைப்பொறுத்தவரை, எனது சிறு வயதில் அவரை நேரிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிட்லண்ட் தியேட்டரில் 'எமனுக்கு எமன்' படத்தின் மேட்னிக்காட்சிக்கு வந்திருந்தவரை (அப்போதைய இளவயது ஜெய்கணேஷை இமேஜின் பண்ணிக்குங்க) இடைவேளையில் வராண்டாவில் நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப அழகாக செயற்கைத்தனமில்லாமல் பேசினார். வெள்ளை ஜிப்பாவும் குர்தாவும் அணிந்திருந்தார். அப்போது சுற்றி நின்ற ரசிகர்கள், அவர்மீது கலர்ப்பொடிகளைத்தூவி கிண்டல் செய்ய, அங்கிருந்து தப்பிக்க மடமடவென்று மாடிக்குப்போய் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்துகொண்டவர், மீண்டும் காட்சி துவங்கியதும்தான் தியேட்டருக்குள் வந்தார்.
பிற்காலத்தில் நல்ல குணசித்திர நடிகராக, குறிப்பாக நகைச்சுவைக்காட்சிகளில் திறம்பட நடித்தவர் ஜெய்கணேஷ். பான்பராக் போடும் பழக்கம் காரணமாக கன்னத்தில் புற்றுநோயால் குழிபறிக்கப்பட்டு வெகுசீக்கிரமாகவே நம்மைவிட்டும் மறைந்து போனார்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இதயங்களில் ஜெய்கணேஷ், பிரேம் ஆனந்த் இருவருக்கும் என்றென்றும் நிரந்தர இடம் உண்டு.


நகைச்சுவைக்காட்சிகளும், அரங்கில் சிரிப்பலையை பரவ விட்டன, சுருளியின் 'கிளி கத்துற ஊரெல்லாம் கிளியனூரா', 'எல்லோரும் பீடி மட்டும்தான்யா வாங்குவாங்க, யாரும் தீப்பெட்டி வாங்குறதில்லை. தீப்பெட்டி என்னய்யா தீப்பெட்டி. இவர் மட்டும் கிடைச்சிட்டாருன்னா ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையே வச்சிடுவேன்' போன்ற வசனங்களூம், மனோரமாவின் ஒரு மாதிரியான அழுகை மற்றும் 'எவர்சில்வர் பாத்திரத்திலேயே சமையலா? அப்போ மொத்த வியாபாரிதான்' என்று தேங்காயை கலாய்ப்பதுமான இடங்களும், காட்டில் யானை துரத்தும்போது, யானைகளைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் சுருளியும் கருணாநிதியும் விழுந்து அலறுவதும், அதை மேட்டில் நின்று யானை பார்க்கும் இடமும் கலகலப்பான இடங்கள்.

ஒரு வெற்றிப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படம் வெற்றிபெற்றதில் வியப்பில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருந்தால்தான் அது வியப்பு மற்றும் வேதனை அளித்திருக்கும். தமிழ் ரசிகர்கள் அந்த அளவுக்கு விடவில்லை.

5 comments:

  1. அட்டகாசம் செய்யறீங்க

    frame by frame படம் பார்த்த effect கிடைக்குது

    கடினமான உழைப்பு,தலைவர் மேல் உள்ள பக்தி,
    சிறிய விவரங்களைக்கூட சேகரித்துள்ள அக்கறை
    எல்லாம் தெளிவாக தெரிகிறது.

    Sincerity
    Articulation
    Rage
    Allegiance
    Diligence
    Hard work
    Accentuation
    எல்லாம் சேர்ந்த M'am

    You Rock

    ReplyDelete
  2. Dear Ganpat,
    உங்கள் பாராட்டால் என் மனம் உரமிடப்பட்ட பயிரானது. மிக்க நன்றி.
    ஒரு பதிவுக்கான தலைப்பை எடுத்துக்கொண்டு, அது சம்மந்தமாக நாம் பார்த்த, அறிந்த, படித்த, கேள்விப்பட்ட விஷயங்களை ஒன்று சேர்த்து தொகுக்கும்போது, அது ஒரு பதிவாகி விடுகிறது.

    அதை பெரிய மனதுடன் பாராட்டுவது தங்களின் பெருந்தன்மை.
    மீண்டும் நன்றியுடன்.... சாரூ....

    ReplyDelete
  3. சாரதாஜி,

    உங்கள் திறமைக்கு, இப்போ நீங்க சினிமா விமரிசனம் என்ற வட்டத்திலிருந்து மெதுவாக வெளியில் வரணும்.

    சினிமாவின் பல்வேறு ஆளுமை மற்றும் துறைகளை விவரிக்கும் வண்ணம் உங்கள் பதிவுகளை அமைக்கவேண்டும்.உதாரணத்திற்கு.......

    "சிவாஜியும் நவரசமும்"

    "சிவாஜியும் தொழில் ஒழுக்கமும்"

    "விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மேதமை"

    போன்ற சுவையான தலைப்புகளில் விளாசலாம்

    மேலும் ஒரு முக்கிய வேண்டுகோள்.
    ஒரு மாதம் ஆறு பதிவுகள்; அடுத்த ஆறு மாதம் ஒன்றுமில்லாமல் இருப்பது போன்ற நிலையைவிட மாதம் இரண்டு (1 & 15 தேதிகளில்) அல்லது
    மூன்று (1,10 & 20 தேதிகளில்)அல்லது
    நான்கு(ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்)
    என்று செளகரியத்திற்கு
    ஏற்றால் போல ஆனால் தவறாமல்
    பதிவு இடுவது உங்களுகென்று ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கும்.அவர்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்.

    பின்னூட்டங்களை முதலில் நீங்கள் பார்த்து முடிவு செய்து பிறகு பதிவேற்றம் செய்வதும் ஒரு நல்ல வழிமுறை.அனாவசிய பிரச்சினைகளை தவிர்க்கலாம்

    உங்களிடம் இருக்கும் அபாரத்திறனை சரிவர பயன்படுத்தினால் மிகவும் பிரசித்தி வாய்ந்த பதிவாளராக வருவது திண்ணம்.சற்றே மெனக்கிடுங்களேன்

    God Bless

    அன்புடன்,
    Ganpat

    ReplyDelete
  4. Dear Ganpat,
    தங்கள் அன்பான ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி. நானும் அதுகுறித்து யோசித்து வருகிறேன். நான் வலைப்பதிவு இடத்துவங்கியது கடந்த டிசம்பர் மத்தியிலிருந்துதான். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குள் 34 பதிவுகள் இட்டிருக்கிறேன். எனவே பெரிய அளவில் இடைவெளி எதுவும் விடவில்லை.

    தவிர, பதிவுகள் அனைத்துமே திரைப்பட விமர்சனங்கள் அல்ல. 34 பதிவுகளில் 16 மட்டுமே திரைப்பட விமர்சனங்கள். (அவற்றை விமர்சனம் என்பதைவிட, இன்றைய இளைய தலைமுறையினருக்கு பழைய படங்களை அறிமுகம் செய்தல் எனக்கொள்ளலாம்). மற்றவை வேறு விஷயங்களைப்பற்றியவை. குறிப்பாக டிசம்பரில் விமர்சனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை. அதே சமயம், நடிகர்திலகத்தின் அரசியல் ஈடுபாடு குறித்து எழுதியுள்ளேன். பார்த்திருப்பீர்கள்.

    இப்போதே பலர் FOLLOWERS ஆக பதிவிட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோரை எனக்கு பரிச்சயம் இல்லையென்றாலும் என் எழுத்தின்பால் அவர்கள் வைத்துள்ள அபிமானத்துக்காக அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நான் அதிகமதிகம் நன்றி செலுத்துகிறேன்.

    தங்களின் தொடர்ந்த ஊக்கப்படுத்தலுக்கும், வழிகாட்டலுக்கும் மீண்டும் நன்றிகள்.
    சாரூ......

    ReplyDelete
  5. Good Morning & நன்றி சாரூ ஜி

    இங்குள்ள உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து விட்டேன்.என்னுடைய ஒரே கவலை உங்களின் இந்த உற்சாகம்/வேகம் நாளடைவில் தேய்ந்துவிடக்கூடாது. எனவே ஜனவரி 12 டிசம்பர் 3 என்பதை விட ஜனவரி to டிசம்பர் மாதா மாதம் 4 அ 5 பதிவுகள் better.மற்றவை உங்கள் உபரி நேரத்தைப்(surplus time)பொருத்தது

    இன்னும் ஒன்று.உங்கள்(அதாவது இந்த தளத்தின்) motto என்னவென்று சுருக்கமாக இந்த தளத்தில் நிரந்தரமாக போட்டுவிடுங்கள் something like vision/mission statement in ISO

    ஒரு பதிவின் முடிவில்,அடுத்து வருவது எந்த பதிவு என ஒரு promo கொடுத்தால் படிப்பவர் ஆர்வத்தை அது தூண்டிவிடும்.

    ReplyDelete