Sunday, March 6, 2011

அண்ணன் ஒரு கோயில்

தமிழ்த்திரைப்படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழக மக்களால், குறிப்பாக தாய்மார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போன்று நடிகர்திலகமும், நடிகையர்திலகமும் அண்ணன் தங்கையாக நடித்த... (ஸாரி) வாழ்ந்த 'பாசமலர்' திரைக்காவியம் இன்றளவும் தமிழ்ப்படங்களில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாசப்பிணைப்பைக் கிண்டல் செய்யும்போது கூட, 'அடேயப்பா என்னமோ பெரிய பாசமலர் அண்ணன் தங்கை மாதிரியல்லவா உருகுறீங்க?' என்ற சொற்றொடர் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று நடிகர்திலகமும், மற்றைய கதாநாயகர்களும் நடித்த, அண்ணன் தங்கை பாசத்தை அச்சாணியாகக்கொண்ட பல படங்களும் வெற்றிக்கனியை ஈட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் வந்து மாபெரும் வெற்றியடைந்த படம்தான், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான 'அண்ணன் ஒரு கோயில்' வண்ணத்திரை ஓவியம்.

இப்படத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. இப்படம் 1977-ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்தது. இதற்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1952 தீபாவளியன்று, தமிழ்த்திரையுலகின் புரட்சி கீதமாய், எழுச்சிப்பேரலையாய், சமுதாயக்கருத்துக்களை உள்ளடக்கிய காவியமாய் 'பராசக்தி' வெளிவந்து தமிழ்த்திரை வரலாற்றைத் திருப்பிப்போட்டதுடன், அதுவரை நாடக மேடைகளில் கலக்கி வந்த நடிப்புலகின் நாயகனை வெள்ளித்திரையில் காண வைத்தது. எனவே சரியாக 25 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெற்றிநடைபோட்ட நடிகர்திலகத்தின் வெள்ளிவிழா காணிக்கையாக வந்த படம்தான் 'அண்ணன் ஒரு கோயில்'.

படத்தின் துவக்கத்தில், பெரிய மனிதன் போலத்தோற்றம் தரும் ஒருவர், தலையில் தொப்பியும், கண்களில் கண்ணாடியும், முழங்காலுக்கும் கீழே நீண்ட முழுக்கோட்டும் அணிந்து, போலீஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். யார் அவர்? ஏன் ஓடுகிறார்?. அவர் ஒளிந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கட்டில்லா பயணியாக ஒரு பெண் ஸ்டேஷன் மாஸ்ட்டரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்திக்கு உடல்நலக்குறைவு என்று செய்தி வர, அந்தப்பெண்ணையும் அழைத்துப்போகும்போது, இவரும் கூடவே செல்ல, அந்தக்குழந்தைக்கு வைத்தியம் செய்யும்போது இவர் ஒரு டாக்டரென்று தெரிகிறது. அவருடைய கையெழுத்தைப்பார்த்ததும், அந்தப்பெண்ணுக்கு இவர் யாரென்பது பற்றி சந்தேகம் எழ, சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள அவரிடமே கேட்கும்போது அவர்தான் தன்னை மணக்கவிருந்த, சூரக்கோட்டை சின்னையா மன்றாயர் மகன் டாக்டர் ரமேஷ் என்பது தெளிவாக, தான்தான் அவரை மணக்கவிருக்கும் முரளிப்பாளையம் சேதுபதியின் மகள் ஜானகி என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.. (மணக்கவிருந்தவர் என்றால் எப்படி? பெற்றோர் நிச்சயித்த திருமணமா?. அப்படியானால் இருவரும் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டது எப்படி?. காதல் திருமணம் என்றால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதுமே தெரிந்துகொள்ளாமல் போனது எப்படி?. என்பதற்கான விவரம் இல்லை).

தான் ஏன் இப்படி போலீஸ்கண்ணில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் விளக்க, ப்ளாஷ்பேக் விரிகிறது....

பெற்றோரின் மறைவுக்குப்பின் தன் ஒரே தங்கை லட்சுமி (சுமித்ரா)வுக்கு தாயாக, தந்தையாக, ஏன் அவளுக்கு உலகமே தானாக வாழ்ந்துவந்தவர் டாக்டர் ரமேஷ் (நடிகர்திலகம்). அவருக்கு நல்ல நண்பனாக, மற்றும் உதவியாளராக டாக்டர் ஆனந்த் (ஜெய்கணேஷ்), மற்றும் பொல்லா நண்பனாக ரவி(மோகன்பாபு) மற்றும் அவனுக்கும் ஒரு நண்பன் (பிரேம் ஆனந்த்). அமைதியாக, அழகாக சென்று கொண்டிருந்த ரமேஷ், லட்சுமி வாழ்க்கையில் நாகம் புகுந்தது போல ரவியின் கழுகுப்பார்வை லட்சுமியின்மீது விழுகிறது.

தனது பிறந்தநாளன்று, டாக்டர் ஆனந்த் தபேலா வாசிக்க, சிதார் இசைத்தவாறு பாடும் லட்சுமியை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் ரவி, பாரவையாலேயே அவளை விழுங்குகிறான். பின்னொருமுறை ரவி, டாக்டர் ரமேஷைச்சந்தித்து, தான் லட்சுமியை விரும்புவதாகவும் அவளைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறும் கேட்க, அனைத்து தீய பழக்கங்களுக்கும் புகலிடமாக இருக்கும் அவனுக்கு தன் தங்கையை மணமுடிப்பதைவிட பாழுங்கிணற்றில் அவளைத்தள்ளுவது மேல் என்று நினைக்கும் ரமேஷ், திருமணத்துக்கு மறுக்க, வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்கை லட்சுமியைக்குறித்து கேவலமாக பேசும் ரவியை  கன்னத்தில் அறைந்து விரட்டி விடுகிறார். அடிபட்ட பாம்பாக அலையும் ரவி, ஒரே கல்லில் இரண்டுமாங்காயாக, தான் விரும்பிய லட்சுமியை தகாத முறையில் அனுபவிக்கவும், தன்னை அவமானப்படுத்திய டாக்டர் ரமேஷைப் பழிதீர்க்கவும் சமயம் பார்த்திருக்கிறான். அந்தநாளும் வந்தது...

தன் தங்கையின் திருமணம் பற்றி, தனக்கு உறுதுணையாக இருந்து வரும் அப்பத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரிடமிருந்தோ ஒரு போன் வருகிறது, டாக்டர் ரமேஷின் தங்கை லட்சுமியை, ரவி தன்னுடைய கெஸ்ட் அவுஸுக்கு கடத்திச்சென்று, சீரழிக்க முயல்கிறான் என்று. (போன் செய்தவர் யாரென்பது கிளைமாக்ஸில் தெரியவருகிறது). காரில்  பறந்துசெல்லும் ரமேஷ், காரோடு ரவியின் கெஸ்ட் அவுஸ் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அதற்குள் லட்சுமி சீரழிக்கப்பட்டுவிடுகிறாள். கோபாவேசமாக ரமேஷ் ரவியைத்தாக்க, சண்டையின் முடிவில் ரவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான்.

ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தினால் லட்சுமியின் புத்தி பேதலித்துப்போய், அண்ணன் ரமேஷையே யார் என்று கேட்க, ரமேஷின் மனம் நொறுங்கிப்போகிறது. நடந்த விஷயங்கள் வெளியே தெரிந்தால் தன் குடும்ப மானம், தங்கையின் எதிர்காலம் எல்லாம் பாழாகிவிடுமென்று எண்ணும் ரமேஷ், தனக்கு மிக மிக நம்பிக்கையான நண்பன் டாக்டர் ஆனந்தின் பொறுப்பில் தங்கையை ஒப்படைத்துவிட்டு போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிறார். அப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஓடும்போதுதான், தனக்கு மனைவியாக வரவிருந்த ஜானகியை (சுஜாதா) சந்திக்கிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது....

காட்டில் சுற்றியலையும்போது, ஒரு மரத்தடி சாமியின் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிற்றை எடுத்து ஜானகிக்கு ரமேஷ் தாலி கட்டிய மறுநிமிடம், போலீஸ் அவர்களை சுற்றி வளைக்கிறது. ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கணவனை எப்படியும் விடுதலை செய்வது என்ற வைராக்கியத்துடன் வக்கீல் மேஜரிடம் போக, அவரோ இந்த வழக்குக்கான காரண காரியங்களை கோர்ட்டில் சொல்லி, ரமேஷ் கொலை செய்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று நிரூபித்தால் மட்டுமே ரமேஷை விடுவிக்க முடியும் என்று கூற, சம்பவத்துக்கு ஒரே சாட்சியான லட்சுமியை கோர்ட்டில் பேச வைப்பது ஒன்றே ரமேஷைக்காப்பாற்றும் வழியென்ற எண்ணத்துடன் டாக்டர் ஆனந்தை சந்தித்து, தான் ரமேஷின் மனைவி ஜானகியென்று அறிமுகப்படுத்திக் கொள்ள, 'என்னது, ரமேஷுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று ஆனந்துக்கு அதிர்ச்சி.

ஆனால் தன் கழுத்தில் தாலியேறிய அடுத்த நிமிடமே, ரமேஷ் கையில் விலங்கேறிய சோகத்தை விவரித்த ஜானகி, தற்போது லட்சுமியைக் கொண்டு நடந்த அசம்பாவிதத்தைக் கோர்ட்டில் சொல்ல வைத்தால் மட்டுமே ரமேஷைக்காப்பாற்ற ஒரே வழியென்று சொல்ல, ஆனந்த் மறுத்துவிடுகிறார். காரணம், லட்சுமி தற்போது பழைய நினைவுகளை அறவே நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருப்பதும், தன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதென்று ரமேஷ் வாங்கிய சத்தியமும்தான். ஆனால் ஜானகியோ என்னவிலை கொடுத்தாகிலும் தன் கணவனை விடுத்லை செய்வேன் என்று ஆனந்திடம் சூளுரைத்துப்போகிறாள்.

ஜானகி போன சிறிது நேரத்தில்,  ‘RAPE’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலத் திரைப்பட விளம்பரம் ஆனந்தின் கண்ணில் பட, லட்சுமிக்கு பழைய நினைவு திரும்ப இப்படம் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் லட்சுமியை அழைத்துப்போகிறார். திரையில், தன் வாழ்க்கையில் நடந்து கொடுமையான சம்பவம் நடப்பதைப்பார்க்கும் லட்சுமியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருப்பு சம்பவம் நினைவுக்கு வர ஒரு கட்டத்தில் கத்திக்கதறி மூர்ச்சையாகிறாள்.

மயக்கம் தெளிந்து எழுந்ததும், தன் அருகே ஆனந்த் அமர்ந்திருப்பதையும், தன் கழுத்தில் தாலி இருப்பதையும் அறிந்து திடுக்கிடுகிறாள். ஆம், அவளுக்கு பழைய நினைவு திரும்பி விட்டது. ஆனந்த் மெல்ல மெல்ல அவளுக்கு நேர்ந்த கொடுமையையும், அதைத்தொடர்ந்து நடந்த ரவியின் கொலையின் காரணமாக அவளது அண்ணன் ரமேஷ் சிறையில் இருப்பதையும், விசாரணை நடந்து வருவதையும் எடுத்துச்சொல்ல, தனக்கு எல்லாமாக இருந்த தன் அண்ணனைக் காப்பாற்ற லட்சுமி, ஆனந்துடன் கோர்ட்டுக்குக் கிளம்புகிறாள்.

குற்றவாளிக்கூன்டில் நிற்கும் ரமேஷ், லட்சுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளை அழைத்து வந்ததற்காக ஆனந்தைக் கடிந்துகொள்ள, அவளோ தனக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆனந்தே பொருட்படுத்தாமல், தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது தனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை, அண்ணனை காப்பாற்றுவதே தன் ஒரே எண்ணம் என்று கூற, இதனிடையே ஜானகி தன் வக்கீலிடம், இதோ இந்தப்பெண்தான் ரமேஷின் தங்கை, அவரைக்காப்பாற்றக் கிடைத்த ஒரே சாட்சி என்று சொல்ல, வக்கீல் மேஜர், லட்சுமியை பிரதான சாட்சியாக கூண்டில் நிறுத்துகிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை கோர்ட்டில் சொல்லியழும் லட்சுமி, இந்தக்கொலை தன் அண்ணன் செய்யவில்லை என்றும் தானே செய்ததாகவும் கூறினாலும், அரசுத்தரப்பு வழக்கறிஞர், இது எதிர்த்தரப்பு வக்கீலால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மறுக்கிறார். அப்போது கோர்ட்டுக்குள் வரும் ரவியின் நண்பன் பிரேம் ஆனந்த் (கோர்ட் காட்சியின்போது நடிகர் பிரேம் ஆனந்துக்குப் போடப்பட்டிருக்கும் மேக்-அப் மிகவும் அற்புதம். தெய்வமகன் நடிகதிலகத்தின் மேக்-அப்பை நினைவுபடுத்தும்), லட்சுமி சொல்வது முழுக்க உண்மையென்றும், லட்சுமியை தானும் ரவியும்தான் கடத்திச்சென்றதாகவும், அவளை யார் முதலில் அடைவது என்ற சர்ச்சையில், ரவி தன் தலையில் பாட்டிலால் அடித்துக்கீழே தள்ளிவிட்டு லட்சுமியின் கற்பைச்சூறையாட முயலும்போது, தானே ரமேஷுக்கு போன் செய்ததாகவும், பின்னர் ரமேஷ் வந்து ரவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, புத்தி சுவாதீனமில்லாத நிலையில் லட்சுமியே ரவியைச்சுட்டதாகவும், தங்கையின் மானத்தைக்காப்பாற்ற ரமேஷ் கொலைப்பழியை தான் ஏற்றுக்கொண்டு நிற்பதாகவும் சாட்சி சொல்ல, ரமேஷ் விடுதலை செய்யப்படுகிறார்.

தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச்செல்லும் இப்படத்தின் துவக்கத்தில் வரும் ரயில்நிலையக்காட்சிகள் ரொம்பவே அருமையாக சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும். இரவுநேரத்தில், டாக்டர் ரமேஷ் ஒரு அறையில் ஒளிந்துகொண்டிருக்க, ரயில் வரும்நேரம் ஒரு பெண் (ஸ்வர்ணா) பாடிக்கொண்டே, ரயில் நிலையத்தில் இங்குமங்குமாக ஓடி யாரையோ தேடும் காட்சிகள் அருமையான துவக்கமாக இருக்கும். அந்தப்பெண்ணும் ரவியாக வரும் மோகன் பாபுவால் ஏமாற்றப்பட்ட பெண். அவள் ஏமாந்ததன் விளைவாக உருவானதுதான் ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்தி.

கதையின் போக்கு ரொம்பவே சீரியஸாக அமைந்துவிட்டதால், 'காமெடி ட்ராக்' தனியாக சேர்க்கப்பட்டிருக்கும். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக (கௌரவத்தோற்றத்தில்) தேங்காய் சீனிவாசனும், கான்ஸ்டபிளாக ஏ.கருணாநிதியும், பாயிண்ட்மேனாக சுருளியும், கொள்ளைக்காரியாக மனோரமாவும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். டாக்டர் ரமேஷைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்ற காவல்துறை விளம்பரத்தை வைத்துக்கொண்டு சுருளி அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. அதுபோல, அப்பாவிப்பெண் போல வந்து போலியான கதைசொல்லி ஏமாற்றி கொள்ளையடித்துப்போகும் மனோரமாவும், அவளை மடக்கிப்பிடிக்கும் தேங்காயும் கூட நன்றாகவே சிரிக்கவைப்பார்கள்.

இதற்கு முன் நிறைகுடம், சிவந்தமண், எங்கமாமா, சுமதி என் சுந்தரி என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிகர்திலகத்தின் படங்களில் நடித்து வந்த தேங்காய் சீனிவாசன், சுமதி என் சுந்தரி (14.04.1971) க்குப்பிறகு, கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லை. இதுகுறித்து தேங்காய் கூட பல்வேறு பத்திரிகைப் பேட்டிகளில் குறைசொல்லி வந்தார். இவர் மாற்றுமுகாம் அபிமானி என்பதால் நடிக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் இவரைவிட மாற்றுமுகாம் அபிமானிகளான வில்லன் நடிகர் கே.கண்ணன், ராமதாஸ் போன்றவர்கள் நடிகர்திலகத்துடன் அதிகமான படங்களில் நடித்து வந்தனர்.

காரணம் என்னவாக இருந்தபோதிலும், மிக நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர்திலகத்தின் 'மறப்போம், மன்னிப்போம்' கொள்கையின் காரணமாக, நடிகர்திலகத்தின் சொந்தப்படமான இப்படத்தில் நடித்தாலும் நடித்தார், இதிலிருந்து தேங்காய் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு வரிசையாக அத்தனை படங்களிலும் இடம்பெறத் துவங்கினார். அதிலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சொந்தப்படங்களான திரிசூலத்துக்காக காஷ்மீருக்கும், ரத்தபாசத்துக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும் தேங்காய் அழைத்துச்செல்லப்பட்டார். அத்துடன் பைலட் பிரேம்நாத் படத்துக்காக இலங்கைக்கும், இமயம் படத்துக்காக நேபாளத்துக்கும் சென்று வந்தார். (இவர் நடித்த "மற்றவர்கள்" படங்களில் சென்னையில் வைத்தே இவர் ரோல்களை முடித்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்க, மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். முதல் பாடல், ரயில் நிலையத்தில், கைவிட்டுப்போன காதலனைத் தேடியலையும் ஸ்வர்ணாவுக்காக, வாணி ஜெயராம் பாடிய 'குங்குமக்கோலங்கள் கோயில் கொண்டாள கோதை நாயகன் வருவானடி' என்ற மனதை மயக்கும் பாடல். இரவுக்காட்சிக்கேற்ற திகிலூட்டும் இசையுடன் கலந்து தந்திருப்பார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்ட கதையாயிற்றே அதனால் பாசமலரில் இடம்பெற்ற 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்' பாடலைப்போல அமைந்த பாடல், 'மல்லிகை முல்லை பொன்மணி கிள்ளை, அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை' என்ற மிக அருமையான பாடல். தங்கையின் வருங்கால வாழ்க்கையைப்பற்றி அண்ணன் கனவுகாண, அவனது கனவில் அவள் மதுரை மீனாட்சியாக, கோதையாக, ஆண்டாளாக, சீதையாக வடிவெடுத்து வருகிறாள். பாடல், இசை மட்டுமல்ல, இவற்றைத்தூக்கி நிறுத்தும் ஒளிப்பதிவும் அற்புதம்.

தன்னுடைய பிறந்தநாளன்று, கையில் சிதார் மீட்டியவாறு சுமித்ரா பாடும், 'அண்ணன் ஒரு கோயிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ' இசைக்குயில் பி.சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. தங்கை அண்ணன் மீது கொண்ட பாசப்பிணைப்பை விவரிக்கும் ஒரு வரி.....
'கண்ணன் மொழி கீதையென்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ'

இதே பாடலை, சுயநினைவற்று இருக்கும் சுமித்ராவின் நினைவு திரும்புவதற்காக திரைக்குப்பின்னால் இருந்து ஜெய்கணேஷ் பாடுவார். அவருக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.  

நடிகர்திலகமும் சுஜாதாவும் காட்டுக்குள் போலீஸுக்கு மறைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, போலீஸ் ஜீப் வந்துவிட, அவர்கள் கண்களில் படாமல் இருக்க மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட இடைவெளிக்குள் நுழைந்துகொள்ள, அங்கே இருவரும் காதல் வயப்படும்போது, பின்னணியில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் 'நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு... காதல், இன்பக்காதல்'. எஸ்.பி.பி.யும், வாணிஜெயராமும் பாடியிருந்தனர்.

நடிகர்திலகத்தின் வீடாகக் காண்பிக்கப்படும் இடம் ஊட்டியிலுள்ள அரண்மனையின் உட்புறம். இப்படத்துக்காக அக்கட்டிடத்தின் உட்பகுதி புதுப்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை பழம்பெரும் ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் செய்திருக்க, நடிகர்திலகத்தின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.விஜயன் இயக்கியிருந்தார்.

இப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் 'எங்க வீட்டு தங்க லட்சுமி'. படம் உருவாகிக்கொண்டிருந்தபோது, இப்படத்தின் பெயர் 50 களில் ஏ.நாகேஸ்வரராவ் நடித்து பெரும்வெற்றிபெற்ற 'எங்கவீட்டு மகாலட்சுமி' பெயர் போல இருக்கிறது என்றும், மிகவும் பழங்கால டைட்டில் போல இருக்கிறதென்றும் பலரும் அபிப்பிராயம் சொல்ல, படத்தின் பெயரை மாற்றுவதென்று முடிவு செய்து என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் அவரை பாசத்தோடு 'அண்ணன்' என்று அழைப்பதாலும், படத்தின் கதையும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக்கொண்டதாலும், 'அண்ணன் ஒரு கோயில்' என்று வைக்கலாம் என்று முடிவு செய்தபோது அனைவராலும் இந்த டைட்டில் வரவேற்கப்பட்டது.

1977-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த 'அண்ணன் ஒரு கோயில்', நடிகர்திலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டின் நிறைவுப்படமாகவும் அமைந்து மாபெரும் வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்தது. கீழ்க்கண்ட அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடைபோட்டது.

சென்னை  - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
மதுரை - நியூ சினிமா
கோவை - கீதாலயா
திருச்சி - பிரபாத்
சேலம் - சாந்தி
தஞ்சை -அருள்
குடந்தை - செல்வம் (நூர்மஹால்).

(Nadigar Thilagam presents the '114 th Day' Shield to the Singer Mrs. Vani Jayaram, on the Victory Day Function)

வெற்றிகரமாக 100 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்த ஆண்டின் வெள்ளிவிழாப்படமாக இப்படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கதாநாயகன் என்றால் வில்லன் வேண்டுமல்லவா?. எனவேதான் கதாநாயகனின் சொந்தப்படத்தை தடுக்க வில்லனின் சொந்தப்படம் வந்தது. ஆம், அண்ணன் ஒரு கோயில் வெற்றிகரமாக 114 நாட்களைக்கடந்தபோது, 115 வதுநாளன்று பாலாஜியின் 'தியாகம்' படம் இதே திரையரங்குகளில் ரிலீஸாவதாக செய்தி வந்தது. (இதற்கிடையே 'அந்தமான் காதலி' வேறு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது). வெகுண்டுபோன ரசிகர்கள் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அவரோ, தான் படத்தை விநியோகஸ்தரிடம் விற்றுவிட்டதாகவும், விநியோக விஷயத்தில் தலையிட முடியாதென்றும் கழன்றுகொண்டார்.

சாந்தி தியேட்டருக்கு வந்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் மேனேஜர் மோகன்தாஸை ரசிகர்கள் சுற்றிவளைத்து, சாந்தியில் மட்டுமாவது அண்ணன் ஒரு கோயில் தொடர்ந்து ஓடி வெள்ளிவிழாவைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்க, அவரும் ஏற்கெனவே புக் பண்ணியதை மாற்ற முடியாதென்றும், சாந்திக்கு பக்கத்து அரங்குகளான அண்ணா தியேட்டர் அல்லது பிளாஸாவுக்கு கண்டிப்பாக மாற்றப்படும் என்றும் சொல்லி அகன்றுபோனார். ஆனால் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 'அண்ணன் ஒரு கோயில்' 114-ம் நாள் விழாவோடு மாற்றப்பட்டு, 'தியாகம்' திரையிடப்பட்டது. 

'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிய என் கருத்துக்களைப் படித்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

3 comments:

 1. Marvelous!
  உங்கள் கதை சொல்லும் திறமை வியக்கவைக்கிறது!
  சொர்க்கத்தில் இருந்து தலைவர் உங்களை
  ஆசீர்வதிப்பார் சாரூ!
  அன்புடன்,
  Ganpat

  ReplyDelete
 2. http://www.tamilpaper.net/?p=2890
  சாரதாஜி,
  மேலேயுள்ள link ஐ படித்தாகிவிட்டதா?
  இல்லையென்றால்,எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் ,உதறித்தள்ளிவிட்டு,
  கம்ப்யூட்டர் நோக்கி ஓடவும்.மிக அவசரம்.

  இந்த கட்டளை இங்கு வரும் அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் கூட சேர்த்துதான்!!

  ReplyDelete
 3. Dear Ganpat,
  தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி. சிறந்த நண்பரான தங்கள் வருகையால் இவ்வலைப்பூ பெருமை பெறுகிறது. நீங்கள் கொடுத்துள்ள இணைப்பு, ஏற்கெனவே ஒருவர் Forum Hub -ல் கொடுத்திருந்தார். இருப்பினும் மீண்டும் படிக்கும்போதும் சுவாரஸ்யமாகவே உள்ளது. மீண்டும் நன்றி.

  ReplyDelete