Monday, April 4, 2011

பாட்டும் பரதமும்

கலை, நாட்டியம் இவைபற்றிய சிந்தனையோ, அவற்றில் ஈடுபாடோ இல்லாத, சதா தன் தொழில் பற்றியே சிந்தனையும் செயலுமாக இருக்கும் ஒருவர், நாட்டியமங்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக அவரே ஒரு நாட்டியக் காரராக மாறி, கடைசிவரை நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்து விடுவதாக முடியும் கதை.

                                                     
தொழிலதிபர் ரவிசங்கர் (நடிகர்திலகம்) சதா தன் தொழில் நிறுவன முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பவர். தன் தொழிலைத்தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர். அவருக்கு வில்லங்கம் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூலம் வருகிறது. தங்கள் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு தலைமைதாங்க அழைக்கிறார். அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என  மறுக்கும் ரவிசங்கரை கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். காரணம், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாணியில் "அது அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்கூடம்". ஆகவே மறுக்க முடியவில்லை. நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற லலிதா (கலைச்செல்வி ஜெயலலிதா)வின் பரதநாட்டியம் நடக்கிறது. அப்போதும் அவர் மனம் நாட்டியத்தில் செல்லவில்லை. (ஆடிட்டோரியத்தில் தன் அருகே அமர்ந்திருக்கும் அத்தைமகன் விஜயகுமாரிடம், "ஏண்டா, நாமும் இதுபோல நாலு ஆடிட்டோரியம் கட்டி வாடகைக்கு விட்டா தனியாக வருமானம் வருமில்லே?" என்று கேட்க அதற்கு விஜயகுமார் 'மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா?").

நாட்டியம் முடிந்து விழாவில் ரவிசங்கர் பேசும்போது, 'ஒரு பொண்ணு கையை காலை ஆட்டி நடனம் ஆடிச்சு. எனக்கு அதிலெல்லாம் ஒண்ணும் பெரிசா இஷ்ட்டம் இல்லை. சொல்லப்போனா இந்த நாட்டியம் என்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்' என்று பேசப்போக, அடுத்துப்பேசும் லலிதா, ரவிசங்கரை ரசிப்புத் தன்மையற்ற மனிதர் என்று குத்திக்காட்ட இவருக்கு மனது சுருக்
கென்றாகிறது. வற்புறுத்தி அழைத்து வந்த தலைமை ஆசிரியருக்கோ தர்ம சங்கடமாகப்போகிறது. பின்னர் மேக்கப் அறையில் தனியே சந்திக்கும் ரவி சங்கரிடம், அவரைத் தன் நாட்டியக்கலைக்கு அடிபணிய வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் லலிதா. அது அவளால் முடியாது என்று மறுக்கும் ரவி, இன்னொரு முறை லலிதாவின் நாட்டியத்தைக்காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சலனமடைந்து அவள் பால் ஈர்க்கப்பட, வந்தது வினை. லலிதாவின் நாட்டியம் எங்கு நடந்தாலும் ஓடிச்சென்று பார்க்கத்துவங்குகிறார். ஒருமுறை அரங்கத்தின் வாயிலில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட, மேடையின்மீது வந்து நின்று பார்க்கும்,  லலிதாவின் தந்தையும் அவரது நாட்டிய குருவுமான மனோகருக்கு அதிர்ச்சி. அரங்கத்தில் ரவிசங்கரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா டிக்கட்டுகளையும் அவரே வாங்கிவிட்டிருக்கிறார்.

ரவிசங்கருக்கு தன்மீதுள்ள அபிமானத்தைப்பார்த்து லலிதாவின் மனமும் மெல்ல மெல்ல ரவியின் பக்கம் ஈர்க்கப்பட, ரவி மீது காதல் வயப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகிய்தன் விளைவாக லலிதா கருவுறுகிறாள். ரவி லலிதா காதல் மட்டும்  லலிதாவின் தந்தைக்குத் தெரியவர, அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்புத்தெரிவிப்பதோடு, இனிமேலும் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று முடிவெடுத்து நாட்டியக்குழுவை வேறு ஊருக்கு கிளப்புகிறார். அவரது எதிர்ப்புக்குக் காரணம், ஏற்கெனவே அவரது தங்கை சுகுமாரியுடன் ஒரு பணக்காரர் பழக்கம் வைத்து பின்னர் ஏமாற்றியது தான். (அந்தப்பணக்காரர் வேறு யாரும் அல்ல, ரவிசங்கரின் தந்தையாக வரும் மேஜர்தான்).

அப்போது அவரைப்பார்த்து லலிதாவை தனக்கு மணமுடிக்குமாறு கேட்கும் ரவிடம், தன் மகளை மணக்க விரும்புபவனும் நாட்டியக் கலைக்கு மதிப்புக் கொடுத்து நாட்டியம் ஆடத் தெரிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல, தானும் நாட்டியம் கற்றுக் கொண்டு வந்து அவளை மணப்பதாக சவால் விட்டுப்போகிறார். ஒருநாட்டியப்போட்டியில் தன் அண்ணன் மனோகரின் மகள் லலிதாவை, தன்னிடம் நாட்டியம் பயிலும் ஒரு கத்துக் குட்டியைக் கொண்டு தோற்கடிப்பதாக, அவரது தங்கை சுகுமாரி சவால் விட, அந்தக்கத்துக்குட்டி வேறு யாருமல்ல, ரவிசங்கர்தான். போட்டியின்போது நடனமாடிக்கொண்டே யானையின் உருவம் வரையும் போட்டியில் லலிதா வரையும் யானையின் படத்தில் கண் வைக்கத்தவறிவிட, போட்டியில் லலிதா தோற்று, ரவிசங்கர் வெற்றிபெற, போட்டியின் நிபந்தனையின்படி லலிதாவை ரவிசங்கருக்கு மணம் முடிக்க அவளது தந்தை சம்மதிக்கிறார்.

இதனிடையே இன்னொரு பக்கம் ரவிசங்கர் - லலிதா காதல் விவகாரம் ரவியின் தந்தை மேஜருக்குத் தெரியவர, அவர் பணக்காரர்களுக்கே உரிய குறுக்குப் புத்தியில் யோசித்து அவர்களைப்பிரிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, ஒருபக்கம் லலிதா ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் பெண்ணென்றும் அதை சோதிக்க வேண்டுமானால் ஓட்டலில் ஒரு நாள் தங்கியிருக்கும்படியும் சொல்லி ரவியைத் தங்க வைக்க, இன்னொருபக்கம் ரவி அழைப்பதாக லலிதாவிடம் சொல்லி வரவழைக்க, லலிதா ஓட்டலுக்கு வரக்கூடிய பெண்ணல்ல என்று உறுதியாக நம்பும் ரவி, கதவைத்தட்டியது யாரென்று திறந்து பார்க்க, அங்கு லலிதா நிற்க...... அவ்வளவுதான், ரவிசங்கரின் நம்பிக்கை உடைந்து சிதறுகிறது. ராதா சொல்ல வரும் காரணத்தை ரவி கேட்கத் தயாராயில்லை. (அப்படி கேட்பதாக இருந்தால், முக்கால்வாசிப்படங்களுக்கு மூணாவது ரீலுக்குப்பிறகு கதையை நகர்த்தவே முடியாது).

இதனிடையே ரவியின் தங்கைக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் நடக்கிறது.  ரவியிடம் விவரத்தைச்சொல்ல, ரவியின் வீட்டுக்கு அவரைத்தேடி வரும் லலிதா, அங்கு திருமண ஏற்பாடு நடப்பதையறிந்து யாருக்கு திருமணம் என்று அங்குள்ளவரிடம் விசாரிக்க, அழையா விருந்தாளியாக திருமணத்துக்கு வந்த அந்த நபர் 'ரவிக்குத்தான் திருமணம்' என்று தப்பாகச்சொல்ல  மனமுடைந்து போன லலிதா, தன் வயிற்றில் ரவியின் குழந்தையை சுமந்திருந்த போதும் ரவியை விட்டு நிரந்தரமாக விலகிப் போகிறாள். ரவி லலிதாவைத் தேடி யலைகிறான்.  ரவி வீட்டைவிட்டு வெளியேறியதும், அவரது தந்தை மேஜர் மரணமடைகிறார். லலிதாவின் நினைவாக நாட்டியப்பள்ளி நடத்திவரும் ரவியிடம், அவரது தங்கை மகள் (விஜயகுமாரின் மகள்) மாணவியாகச் சேர்கிறாள். லலிதாவைத்தேடியலையும் ஒரே பாடலில் ரவிசங்கருக்கு மளமளவென்று வயதாகிக்கொண்டு போகிறது. அந்தப்பாடலின்போதே சுகுமாரி இறக்கிறார். மனோகர் இறக்கிறார். ரவியின் மாணவியும் வளர்ந்து பெரியவராகிறாள். (அவர்தான் ஸ்ரீப்ரியா).

வெளிநாட்டிலிருந்து தன் மகனுடன் (இரண்டாவது சிவாஜி) சென்னை வந்திறங்கும் லலிதா (ஜெயலலிதா) ஒரு ஓட்டலில் தங்கியிருக்க, அந்த மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தும் இளைஞன் தன்னைக்கேலி செய்து விட்டதாக, தன் குருவாகிய ரவியிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அதைத்தட்டிக் கேட்கச்செல்லும் இடத்தில் அந்த இளைஞன் தன்னைப்போலவே இருப்பது கண்டு ரவிசங்கர் ஆச்சரியமடைகிறார். அந்த இளைஞனோ இவர் யாரென்று தெரியாமல் போட்டி நடனத்துக்கு அழைக்க, போட்டியில் அந்த இளைஞனை வெல்ல, அப்போது வெளியில் வரும் லலிதாவைக்கண்டு திகைப்பதோடு, அந்த இளைஞன் தன் மகன்தான் என்று அறிய, அனைவரும் ஒன்று சேர்வதோடு படம் நிறைவடைகின்றது. 

படம் முழுவதிலும் ஒருவிதமான சோகம் இழையோடிக்கொண்டே இருப்பது இப்படத்தின் சிறப்பு. எங்கஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்ட அருண்பிரசாத் மூவீஸார் வண்ணத்தில் எடுத்த படம் இது. நடிகர்திலகத்தை வைத்து அவர்கள் தயாரித்த கடைசிப்படம். இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் நடிகர்திலகம் நடித்த கடைசிப்படமும் இதுவே. இப்படம் சரியாகப்போகததன் விளைவாக நடிகர்திலகத்தைப்பற்றி, பி.மாதவன் சில வார்த்தைகளை வெளியில் விட, அதனால் திரு வி.சி.சண்முகத்துக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, நடிகர்திலகத்தை விட்டு நிரந்தரமாகப்பிரிந்தார். 1971-ல் படப்பிடிப்பு துவங்கி இவரது இயக்கத்தில் வளர்ந்து வந்த 'சித்ரா பௌர்ணமி' படம் கூட இறுதியில் இவரது உதவியாளர்களான தேவராஜ் - மோகன் இயக்கத்திலேயே முடிக்கப்பட்டு வெளியானது.

'பாட்டும் பரதமும்' படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பள்ளியின் ஆண்டுவிழாவின்போது ஜெயலலிதாவின் அறிமுக நடனத்துக்காக, வாணி ஜெயராம் பாடிய 'மழைக்காலம் வருகின்றது, தேன் மலர்க்கூட்டம் தெரிகின்றது'
என்ற பாடல். இப்பாடலின்போது உடலமைப்பிலும், உடையமைப்பிலும் கலைச்செல்வி சற்று குண்டாகத்தெரிவார். இந்த நடனத்துக்காக மேடையில் இடுப்பளவு பிரமாண்டமான நடராஜர் சிலை, கண்ணைக்கவரும்.

இரண்டாவது பாடல், நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் பாடும் டூயட் பாடல். இதுவரை படம் பிடித்திராத அழகான அவுட்டோரில் எடுக்கப்பட்டிக்கும்.
'மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்'
டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். (இப்படியும் கூட பாடல்கள் இருக்கின்றன என்று தொலைக்காட்சிகள் தெரிந்துகொண்டால் நல்லது. 'மயக்கம் என்ன', 'மதன மாளிகையில்' பாடல்களுக்கு நடுவே இவற்றையும் கொஞ்சம் தேடிப்பாருங்கள்).

மூன்றாவது பாடல், நடிகர்திலகமும், கலைச்செல்வியும் போட்டியிட்டு ஆடும் பாடல்....
'சிவகாமி ஆடவந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப்பார்க்கட்டுமே - கண்கள் உறவாடிப் பார்க்கட்டுமே

தூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
பாக்கியை நான் ஆடுவேன் - அந்த பாக்கியம் நான் காணுவேன்'
இதுவும் டி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பாடிய பாடல்தான். மனதை அள்ளிக்கொண்டு போகும்.

நான்காவது பாடல், தன்னைவிட்டு மறைந்து போன கதாநாயகியைத்தேடி நடிகர்திலகம் பாடும் 'கற்பனைக்கு மேனி தந்து கால்சலங்கை போட்டுவிட்டேன்' என்ற தொகையறாவோடு துவங்கும்...
'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'
என்ற மனதை உருகவைக்கும் பாடல். டி.எம்.எஸ். தனித்துப்பாடியிருப்பார்.
இப்பாடலின் துவக்கத்தில் இளைஞராக இருக்கும் நடிகர்திலகம், பாட்டினூடே கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக்கொண்டே போவார். இதனிடையே கால மாற்றங்களும் காண்பிக்கப்படும். சுகுமாரியின் மரணம், மனோகரின் மரணம் இவற்றை, அவர்களது போட்டோக்களுக்கு மாலை அணிவித்து, காண்பித்துக் கொண்டே போவார்கள்.

ஐந்தாவது பாடல், இளம்பருவ நினைவுகளோடு இரண்டு மயில்களைப்பார்க்கும் போது, காணாமல் போன காதலியின் நினைவு வாட்ட, அவரது கற்பனையில் இருவரும் மயில்களாகத்தோன்றும்..
'உலகம் நீயாடும் சோலை
உறவைத் தாலாட்டும் மாலை'
இனிய அழகான மெலோடி. பாடலின் இறுதியில் பெண்மயிலை வல்லூறு பறித்துக்கொண்டு செல்லும்போது இயலாமையில் ஆண் மயில் பரிதாபமாகப் பார்ப்பதை நடிகர்திலகம் முகத்தில் காண்பிக்கும்போது நம் விழியோரங்களில் கண்ணீர்.

(ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது). இவைபோக இரண்டாவது நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் ஓட்டலில் ஒரு பாடலும் உண்டு

நடிகர்திலகமும், கலைசெல்வியும் ஏற்றிருந்த பாத்திரங்கள் நம் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. கூடவே விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுகுமாரி மற்றும் நகைச்சுவை பகுதிக்கு எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படம் 1975 டிசம்பர் 6 அன்று வெளியானது. நன்றாக ஓடி பெரும் வெற்றி யடைந்திருக்க வேண்டிய இப்படம், அந்நேரத்தில் நடிகர்திலகத்துக்கு அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, வைர நெஞ்சம் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சரிவு நிலை காரணமாகவும், அதைவிட முக்கியமாக பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்குப்பின் அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பெரிய வெற்றியைப்பெற முடியாமல் போனது. ஒரு ஆண்டு முன்னர், அல்லது ஓராண்டு கழித்து வெளியாகியிருந்தால் நிச்சயம் பல இடங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடி பெரிய வெற்றியடைந்திருக்கும். காரணம், ஒரு வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் இது.

'பாட்டும் பரதமும்' திரைப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப்படித்த அத்தனை அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

3 comments:

  1. மிக நல்ல விமர்சனம்.
    இதை சிறுவயதில் டிடி ஒளிபரப்பில் ஞாயிறு மாலை பார்த்திருக்கிறேன்.நல்ல கதையமைப்பை கொண்டுள்ளது,இதைப்பின்பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது புரிகிறது.

    ReplyDelete
  2. அந்த படம் வெற்றியடையாமல் போனதில் சிவாஜி ரசிகனான எனக்கும் வருத்தம் தான்! பழைய நினைவுகளை அசை போட வைத்ததிற்கு நன்றி!!

    ReplyDelete
  3. அன்புள்ள கீதப்ரியன் மற்றும் 'ஆரண்ய நிவாஸ்' ராமமூர்த்தி...

    தங்களின் மேலான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. இப்பதிவு தொடர்பாக மேலும் சில விவரமான பின்னூட்டங்கள் வர இருக்கின்றன. அவை கடந்தகால நினைவுகளை அசை போட வைக்கும் என்பதில் ஐயமில்லை.
    நன்றியுடன்...சாரூ....

    ReplyDelete