எழுத்தாளர் இந்துமதியின் பல்வேறு நாவல்களில், என் மனதை மிகவும் கவர்ந்த ஒன்று என்றால் என் மனதில் பளிச்சென்று நினைவுக்கு வருவது 'தரையில் இறங்கும் விமானங்கள்' தான். (அவரது பல நாவல்கள் எனக்குப்பிடிக்காது என்பது வேறு விஷயம்)
பொதுவாக நாவல்கள் என்றால் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். அல்லது கதாசிரியர் தனது வார்த்தைகளில் காட்சிகளை விவரித்துக்கொண்டு போவார். இது இன்னொரு ரகம். அல்லது கதாசிரியர் தனது கற்பனை வளத்தைக்காட்ட, எல்லை தாண்டி அதீதமாக வர்ணித்துக்கொண்டு போவார். இவையெல்லாம் இல்லாமல் கதாபாத்திரங்களின் மன உணர்வுகள் மூலமாகவே ஒரு கதையை, நாவலை நகர்த்திக்கொண்டு போக முடியுமா?. அப்படி அபூர்வமாக அமைந்த ஒரு நாவல்தான், இந்துமதி எழுதிய "தரையில் இறங்கும் விமானங்கள்".
இதில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் மன உணர்வுகள் நம்முடன் பேசும். மிகக்குறைந்த அளவே பாத்திரங்கள். பரமு என்கிற பரமசிவம் அண்ணன். அவனுக்கு விஸ்வம் என்றொரு தம்பி. விஸ்வத்துக்கு பாசமே உருவான ஒரு அண்ணி, ரொம்ப கண்டிக்காமல் பொறுப்பை உணரவைக்க எத்தனிக்கும் அப்பா. பாதியில் மறைந்துவிடும் அம்மா. விஸ்வம், வாழ்க்கையை எந்திரமாக அல்லாது கலையாக ரசித்து வாழத்துடிப்பவன். அவனுக்கு காதல், திருமணம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் கூட இல்லை, பல பட்சங்களுக்கு கீழே. படிப்பு, படித்தபின் வேலை, வேலை கிடைத்ததும் திருமணம், திருமணத்தைத் தொடர்ந்து குழந்தைகள், பின் அவர்களை ஆளாக்க போராட்டம்..... இவ்வளவுதான் வாழ்க்கையா?. இதுக்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாமே என்று ஆதங்கப்படும் வித்தியாசமான வாலிபன்.
அவனுடைய உலகமே வேறு. அதனுள் தனக்குத்தானே மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு அதிலேயே சஞ்சரித்துக்கொண்டு இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வாழும் அவனுக்கு முதல் இடியாக வந்தது அம்மாவின் மறைவு. ஆனால் அதையும் கூட பேரிழப்பாக தோன்றாதவாறு அவனுக்கு இன்னொரு தாயாய் அண்ணி இருந்து ஈடுகட்ட, அவன் தொடர்ந்து தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு தாக்குதலுக்கு ஆட்பட்டது அண்ணனின் வேலை மாற்றலின்போது. இனியும் அவன் கற்பனை உலகில் உலவிக்கொண்டிருக்க முடியாது என்று அப்பா பக்குவமாக எடுத்துச்சொல்லி குடும்பப்பொறுப்புக்களை சுமக்க வைக்க, அதுவரை வானத்திலேயே பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறங்குகிறது.
எவ்வளவுதான் வானத்திலேயே பறந்துகொண்டிருந்தாலும், அது அங்கேயே பறந்துகொண்டிருக்க முடியாது ஒருசமயத்தில், குறைந்தபட்சம் எரிபொருள் தீரும் நிலையிலாவது அது தரையிறங்கியே தீர வேண்டும். இறங்கிய பின்னும் அது தன் பழைய நினைப்பில் சிறிது தூரம் மூச்சிரைக்க ஓடி ஒரு நிலைக்கு வந்தே தீர வேண்டும் என்ற ய்தார்த்த உண்மையை விளக்கும் அருமையான நாவல்.
இதில் மனதை கொள்ளைகொள்ளும் விஷயம், நான் முன்பே குறிப்பிட்டதுபோல உரையாடல்கள் மிகக்குறைவாக, உள்ளத்துக்குள்ளே தோன்றும் எண்ண ஓட்டங்களையே அதிகமாகக்கொண்டு புனையப்பட்டிருப்பதால், இந்துமதியின் மற்றைய நாவல்களினின்றும் இது தனித்து நிற்கிறது. கதையில் வரும் வர்ணனைகள்தான் எவ்வளவு யதார்த்தமானவை, எவ்வளவு ஜீவனுள்ளவை. வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போகும் விஸ்வம், அந்த அலுவலக வெளிவராந்தாவில் காத்திருக்கும் நேரத்தில் பார்த்து ரசிக்கும் மரக்கூட்டமும், அதில் துள்ளி விளையாடும் அணிலும் அப்படியே தத்ரூபமாக நம் கண்முன்னே தோன்றுகின்றன. மீண்டும் அதே அலுவலகத்துக்கு இண்ட்டர்வியூவுக்குப்போகும்போது விஸ்வத்தின் மனம் குதூகலிக்கிறது, வேலை கிடைக்கும் என்பதை எண்ணி அல்ல, மறுபடியும் அந்த காம்பவுண்டில் நிற்கும் மரக்கூட்டத்தையும் அதில் விளையாடும் அணிலையும் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்தில். அந்த அளவுக்கு இயற்கையை நேசிக்கும் அவன் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்த எந்திர வாழ்க்கைக்கு ஆட்படுகிறான் என்பதை இந்துமதி விவரிக்கும் அழகே தனி.
மனதைக்கவரும் பல இடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் தெருப்பக்கம் விளக்கை அணைத்து விட்டு விஸ்வமும் அண்ணியும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அப்போது தூரத்தில் மெல்ல ஒலிக்கும் வண்டி மாடுகளின் கழுத்து மணிச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து, மாட்டுவண்டிகள் வரிசையாக தங்கள் வாசலைக்கடந்து போகும்போது மணல் நறநறவென்று அரைபடுவதும், மெல்ல மெல்ல மணிச்சத்தம் தூர தூரமாகப்போய் அடங்கிப்போக, ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த்து போல விஸ்வம் நினைத்துக்கொண்டிருக்க, 'விஸ்வம் கொஞ்ச நேரம் எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்ததுபோல தோன்றியதில்லையா?' என்று அண்ணி கேட்க அவன் அதிர்ச்சியடைவது.
ஒரு அண்ணிக்கும் கொழுந்தனுக்குமான உறவை தாய்க்கும் பிள்ளைக்குமான உறவுபோல சித்தரிப்பதில் கதாசிரியை பெரும் வெற்றி கண்டுள்ளார். விஸ்வம், அண்ணன் பரமு, அண்ணி, அப்பா, அம்மா என்று எல்லோருமே கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாத, நம் கண்முன்னே நடமாடிக்கொண்டிருக்கும் கள்ளம் கபடமில்லாத வெகுளியான பாத்திரங்கள். அதுமட்டுமல்ல இக்கதையில் வரும் எல்லோரும் நல்லவர்கள். யாரும் யாருக்கும் குழிபறிக்காதவர்கள். அதனால் இக்கதையில் திடீர் திருப்பம் போன்ற சுனாமிகள், சூறாவளிகள் எதுவுமின்றி, சம்பவங்கள் மனதை தென்றலாய் வருடிப்போகும். கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது.
இக்கதை தூரதர்ஷன் சேனலில் தொலைக்காட்சித் தொடராகக்கூட வந்ததாகச்சொன்னார்கள். பார்க்கவில்லை, பார்க்காததற்கு வருந்தவுமில்லை. காரணம், நான் படித்திருந்த சில நல்ல நாவல்கள் தொடராகவோ, திரைப்படமாகவோ உருவானபோது அதன் ஜீவன் பலமாக சிதைந்துபோனதைப் பார்த்து வேதனை அடைந்தவள் நான். (ஜெயகாந்தனின் படங்கள் விதிவிலக்கு, நாவலைவிட மேலும் அவற்றின் மெருகு கூடியிருக்கும்). ஆனால் அகிலனின் 'சித்திரப்பாவை' நாவல், தொடராக வந்தபோதும், தி.ஜானகிராமனின் 'மோகமுள்' திரைப்படமாக வந்தபோதும் பெருத்த ஏமாற்றம் அளித்தன. அதிலும் மோகமுள், ஒரு மூன்றாந்தர மலையாளப்படம் போல எடுக்கப்பட்டிருந்தது.
எனக்கும் மிகவும் பிடித்த நாவல். சமீபத்தில் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் கூறியது போல் விஸ்வத்துக்கும் அவன் மன்னிக்குமான உறவை விகல்பமில்லாமல் எடுத்துச் சென்றிருப்பார். மன்னி விஸ்வத்திடம் கூறும் கீழ்க்காணும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
ReplyDelete"நமக்கு யார் கூடவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்; சந்தோஷமா இருக்கத்தான் நாமெல்லாம் பிறந்திருக்கோம்னு. சிரிச்சுண்டே இருந்துட்டா சந்தோஷமா இருந்துடலாம் பார். அந்தச் சிரிப்பு மூஞ்சிலேயும், மனசுலேயும் வந்துட்டா சந்தோஷத்துக்குக் குறைச்சலே இல்லேம்பார். அவர்தான் எனக்குச் சிரிக்கக் கத்துக் கொடுத்தார்; எதுக்கும் -- எப்போதும் சிரிக்கணும்னு சொல்லிச் சொல்லிப் பயிற்சியாகவே மாத்திட்டார்.
டியர் ஸ்ரீநிவாஸ்,
ReplyDeleteதங்களின் பின்னூட்டப்பதிவுக்கும், மேலதிக தகவல்களுக்கும் நன்றி. இந்நாவல் தங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி.
நன்றியுடன்... சாரூ...
இங்க்லீஷ் விங்க்லீஷ் படத்துக்கு என் தளத்தில் போட்ட பின்னூட்டம் மூலம் உங்கள் ப்ளாக் பார்த்தேன்
ReplyDeleteமிக அருமையாய் எழுத்து நடை கொண்ட நீங்கள் இப்போது ஏன் எழுதுவதில்லை. ப்ளாக் தான் அப்படியே இருக்கே மீண்டும் எழுதலாமே?
தரையில் இறங்கும் விமானங்கள் எனக்கும் மிக பிடித்த நாவல்களில் ஒன்று இங்கு அது பற்றி எழுதியிருக்கிறேன் : http://veeduthirumbal.blogspot.com/2011/06/blog-post.html
மன்னிக்க. எனது பதிவில் பின்னூட்டம் இட்ட நண்பர் கண்பத். அவரது profile-ல் இருக்கும் ப்ளாக் அவரது ப்ளாக் என்று நினைத்து இங்கு வந்து விட்டேன். இப்போது தான் தெரிகிறது அவர் பாலோ செய்யும் ப்ளாக் உங்களுடையது என..
ReplyDeleteஉங்களின் பதிவுகள் சில படிதேன். நீங்கள் மீண்டும் எழுதலாமே மேடம்
அருமையான கதை. நான் அதனை படிக்கும் போதே அழுதிருக்கிறேன். இத்தனைக்கும் அதனை எனது இளமைக் காலத்தில்தான் படித்தேன். தங்களது விமர்சனத்தை படுக்கும் போது தங்களுக்குள்ளும் ஒரு கதாசிரியர் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. எனக்குத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான கதை. நான் அதனை படிக்கும் போதே அழுதிருக்கிறேன். இத்தனைக்கும் அதனை எனது இளமைக் காலத்தில்தான் படித்தேன். தங்களது விமர்சனத்தை படுக்கும் போது தங்களுக்குள்ளும் ஒரு கதாசிரியர் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. எனக்குத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான கதை. நான் அதனை படிக்கும் போதே அழுதிருக்கிறேன். இத்தனைக்கும் அதனை எனது இளமைக் காலத்தில்தான் படித்தேன். தங்களது விமர்சனத்தை படுக்கும் போது தங்களுக்குள்ளும் ஒரு கதாசிரியர் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. எனக்குத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
ReplyDelete