பல்வேறு தமிழ்த்திரைப்படங்களின் மூலம் நம்மை பரவசப்படுத்திய, சந்தோஷப்படுத்திய, நெகிழச்சியூட்டிய சுஜாதா என்னும் ஒரு சாயங்கால மேகம் நேற்று கலைந்து விட்டது என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எல்லோருக்கும் ஒரு கிளைமாக்ஸ் உண்டு என்றாலும், அவர் 58 வயதே நிரம்ப்பபெற்றவர் என்ற ஒரு காரணமே, 'அதற்குள்ளாகவா' என்று வருத்தமுறச்செய்கிறது.
1974-ல் 'அவள் ஒரு தொடர்கதை' பார்த்தபோது, இதோ ஒரு புதிய யதார்த்த நாயகி தமிழ்த்திரைக்கு கிடைத்துவிட்டார் என்று திரைப்பட ஆர்வலர்கள் குதூகலித்தனர். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் அறிமுகத்தில் அடியெடுத்து வைத்த சுஜாதா, முதல் படத்திலேயே குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்ற கனமான பாத்திரத்தை அநாயாசமாக வென்றெடுத்தார். சினிமா விசிறிகள், குடும்பத்தலைவிகள், மாணவ சமுதாயம் என அனைத்துத்தரப்பு மக்களின் பேராதரவோடு, முதல் படத்திலேயே வெற்றி நாயகியானார். தொடர்ந்து வந்த 'மயங்குகிறாள் ஒரு மாது' எனும் திரைத்தென்றலின் மூலம் நம்பிக்கைக்குரிய நாயகியானார். 'வாழ்ந்து காட்டுகிறேன்' படத்தில் நடித்துக்காட்டாமல் பாத்திரமாக வாழ்ந்து காட்டினார்.
அடுத்த தலைமுறைக் கலைஞர்களுக்கு கதவைத்திறந்து விட்ட 'அன்னக்கிளி' வந்தது. பண்ணைபுரத்து நாயகனின் 'பண்'ணைத்தாங்கி வந்து வெற்றிநடைபோட்டது. பட்டி தொட்டியெங்கும் 'மச்சானைப் பாத்தீங்களா' பாடலும், அதற்கு சுஜாதாவின் ஆட்டமும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அதைப்பாடிய இசைக்குயில் ஜானகி தன் திரை வாழ்க்கையில் மறுபிறவியெடுத்தார்.
திரையுலகில் நுழையும் எல்லா நாயகியரின் அப்போதைய இலக்குகளில் ஒன்று, இரு பெரும் திலகங்களுடன் இணைய வேண்டுமென்பது. மக்கள் திலகத்துடன் நடிக்க இவருக்கு கடைசி வரை வாய்ப்பு வரவேயில்லை.
நடிகர்திலகத்துடன் இவர் இணைந்த "தீபம்" திரைக்காவியம் இவருக்கு ஒரு புதிய கதவைத்திறந்து வரவேற்றது. நடிகர்திலகத்துடன் பலர் இணையாக நடித்திருந்த போதிலும் அவர்களில் பொருத்தமான ஜோடிகள் என்று அமைந்தவர்கள நாட்டியப்பேரொளி பத்மினி, எழிலரசி தேவிகா, புன்னகையரசி கே.ஆர்.விஜயா போன்ற ஒரு சிலரே. அந்த வரிசையில் இடம்பெற்றார் சுஜாதா. நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த தீபம், அண்ணன் ஒரு கோயில், அந்தமான் காதலி என வரிசையாக வெற்றியடைய, இவர் பொருத்தமான ஜோடி மட்டுமல்ல ராசியான வெற்றி நாயகியும் கூட என்று ரசிகர்களால் போற்றப்பட்டார். தொடர்ந்து நடிகர்திலகத்துடன் விஸ்வரூபம், வா கண்ணா வா, தீர்ப்பு, தியாகி, திருப்பம், சந்திப்பு உள்பட பல வெற்றிப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன.
உலக நாயகன் கமலுடன் இவர் நடித்த 'ஒரு உதாப்பூ கண் சிமிட்டுகிறது' ஒரு வித்தியாசமான படைப்பு. அதுபோல இருவரும் காது கேளாத, வாய் பேசாதவர்களாய் நடித்த ‘உயர்ந்தவர்கள்’, மற்றும் ‘கடல் மீன்கள்’ ஆகியவையும், சூப்பர் ஸ்டாருடன் நடித்த பல படங்களில் 'அவர்கள்' படமும் சுஜாதாவின் புகழ்க்கிரீடத்தின் வைரங்கள். மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் பல்வேறு படங்களில் நடித்திருந்த போதிலும் பளிச்சென்று தெரியும்படியான படம் திரு. பாலாஜி தயாரித்த "விதி". இப்படத்தின் கோர்ட் காட்சியின்போது இருவரும் மோதிக்கொள்ளும் விவாதக்காட்சி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைத்தது. அதுபோல இயக்குனர் சிகரத்துடன் இவர் மீண்டும் இணைந்த 'நூல் வேலி' படமும் இவரது சாதனைப்பயணத்தில் ஒரு மைல் கல். சிறந்த கலைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் 'கலைமாமணி' விருதையும் பெற்றிருக்கிறார் சுஜாதா.
சுஜாதா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்பதை, சென்னை சாந்தி திரையரங்கில் நடந்த 'விஸ்வரூபம்' படத்தின் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டபோது நேரிடையாகக் கண்டேன். விழா முடிந்து, ரசிகைகள் கூட்டத்தில் வந்து நின்றுகொண்டு வெகு இயல்பாக பேசிக்கொண்டிருந்தார். தமிழ் வசன உச்சரிப்பு தெளிவாகவும், வசீகரிக்கும்படியாகவும் இருக்கக்கூடிய வெகுசில நடிகையரில் சுஜாதாவும் ஒருவர். இத்தனை காலம் திரையுலகில் இருந்தும் எந்த ஒரு ஆபாசக்காட்சியிலோ, முகம் சுளிக்கும்படியான தோற்றத்திலோ இவர் நடித்ததில்லையென்பது இவர் பெற்றிருக்கும் பெரிய வெகுமதி.
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதே தொழிலதிபரான ஜெயகர் என்பவரைத்திருமணம் செய்துகொண்டு, குழந்தைப் பேற்றுடன் சிறந்த குடும்பத்தலைவியாகவும் விளங்கியவர். சமீபகாலமாக இதய நோயின் தாக்குதலுக்குள்ளாகியிருந்த சுஜாதா, வெளி உலகத்தொடர்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவர் நமக்காக விட்டுச்சென்ற அற்புதத் திரைப்படங்களே அவரது நினைவைப்போற்றும் சிறந்த நினைவுச் சின்னங்களாக விளங்கும்.
மிகவும் நன்றி சாருஜி!
ReplyDeleteஒரு அருமையான நடிகைக்கு ஒரு சிறந்த அஞ்சலியாக உங்கள் பதிவு இருந்தது.God Bless You
1974 தீபாவளி தினத்தன்று அவள் ஒரு தொடர்கதை தி.நகர் கிருஷ்ணவேணி அரங்கில் வெளிவந்தது.அதற்கு முந்தைய தினம் வரை அந்த அரங்கு இருந்த மன்னர் ரெட்டி தெருவில் சுஜாதா ஒரு குடையை ஏந்தி நடந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.ஆனால் அந்த தீபாவளிக்கு பிறகு அவர் எங்கும் அவ்வாறு நடந்து செல்ல முடியாத வகையில் ஒரு பிரசித்தி பெற்ற நடிகையானார்.தங்கள் முதல படத்தில் இவ்வாறு புகழ் அடைந்த நடிக நடிகையர் மிகச்சிலரே.அவர்களில் சுஜாதாவும் ஒருவர்.அந்த கவிதாவை யாரால் மறக்க முடியும்?
அதே போல் "அவர்கள்" படத்தில் சிக்கலான பெண்மையை மிக அற்புதமாக காண்பித்திருப்பார்.
கடைசியில் தன மாமியார் முன் ட்ரெயினில் மனம் உடைந்து அழும் காட்சி காண்போரை கண்கலங்க அடித்துவிடும்(என்ன இருந்தாலும் பாலசந்தர் கண்டுபிடிப்பு அல்லவா?)
என்ன! செளகாருக்கு ஒரு காவியத்தலைவி கிடைத்து போல இவருக்கு heroine dominated role கிடைக்காதது ஒரு குறையே.
நன்றி சுஜாதா M'am!
கலங்கிய கண்களோடு உங்களுக்கு பிரியா விடைகொடுக்கிறோம்.
நடிப்பாளுமையும் நல்ல குரல் வளமும் கொண்டவர் சுஜாதா. அவருக்குச் செய்யப்பட்ட அருமையான நினைவஞ்சலி இது.
ReplyDeleteநண்பர் கீதப்ப்ரியன் உங்கள் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். மிக நல்ல கட்டுரைகள் இந்தத் தளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. தொடர்ந்து நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.
கீதப்ப்ரியனுக்கு எனது நன்றி.
ஒரு நல்ல நடிகைக்கு மிகச் சிறந்த அஞ்சலி. அவருடைய அருமையான திரைப்படங்கள் அனைத்தையும் cover செய்து விட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteடியர் கன்பத், சரவணக்குமார் மற்றும் சீனிவாஸ்....
ReplyDeleteசுஜாதா அஞ்சலியில் பங்கேற்று தங்களது மேலான பின்னுட்டங்களை இட்டமைக்கு மிக்க நன்றி.
சாரதா.
Wonderful post madam. She deserves more than a mention when discussing Tamizh cinema history.
ReplyDeleteமிகவும் வருந்துகிறேன்,அவரின் இழப்பு கலையுலகத்துக்கே இழப்பு,அவர் மட்டுமே செய்யக்கூடிய சில கம்பீரமான வேடங்களை செய்ய யார் இருக்கிறார்?:(
ReplyDeleteசுஜாதாவின் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பு. இது சம்பந்தமான உண்மைத்தமிழன் கட்டுரை படித்தீர்களோ?
ReplyDeleteHi Madame,
ReplyDeleteIt has been quite sometime that we part took in forums. Btw, I may sound belated to comment here regarding the late Sujatha but I came here by accident. You see, my brother says authoritatively that Sujatha did not act in the film 'Ayirathil Oruthi' (1975) but I am saying otherwise. I remember she acted as a lawyer and I am damn sure about it. A futile search in the Internet did not provide results and that was how I came to your Blog. Btw, in the filmography of Sujatha films many earlier Tamil films were left out like 'Maru Piravi' etc. Therefore could you please confirm whether she acted in 'Ayirathil Oruthi'?