Friday, April 29, 2011

மோகமுள் (திரைப்படம்)

இதற்கு முந்திய பதிவொன்றில், தி.ஜானகிராமனின் 'மோகமுள்'  நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றிக்குறிப்பிட்டபோது, அதைப்பற்றிய குறிப்பொன்றை தனிப்பதிவாக இட்டால் என்ன என்று தோன்றியது. தி.ஜானகிராமனின் அவ்வளவு பெரிய நாவலைப்படித்து, அதன் உணர்வுகளை உள்வாங்கியவர்களுக்கு, படத்தைப் பாக்கும்போது ஏமாற்றம் தோன்றுமே தவிர, புதிதாக படத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடித்துப்போகக்கூடும். நாவலில் சொல்லப்பட்டிருக்கும் பல உணர்ச்சிப் பூர்வமான இடங்களை காட்சியமைப்பில் கொண்டுவருவது என்பது சிரமமான காரியம் மட்டுமல்ல, பல சமயங்களில் இயலாத காரியமும் கூட. அதெப்படி மனதில் நினைப்பதையெல்லாம் காட்சியில் கொண்டுவர முடியும்?.

அதுவும் 686 பக்கங்களைக்கொண்ட ஒரு நாவலை வெறும் இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்குவது என்பது பகீரதப்பிரயத்தனம். அதனாலேயே பல விஷயங்களை அவசரப்பட்டு முடிக்க வேண்டிய நிலையும், இன்னும் சிலவற்றை தொங்கலில் விடவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வருடக்கணக்கில் அல்லது குறைந்தபட்சம் மாதக்கணக்கில் இழுக்கக்கூடிய தொலைக்காட்சித்தொடராக எடுக்கப்பட்டிருந்தால் சற்று முழுமையாக சொல்லப்பட்டிருக்க முடியுமோ என்னவோ. ஆனால் இவற்றையும் மீறி படத்தை ரசிக்க முடிகிறதென்றால், அதில் ஒட்டியிருக்கும் யதார்த்தம் எனும் மிகைப்படுத்தப்படாத நிலை, செயற்கைத்தனமில்லாத காட்சியமைப்புக்கள்.

இவ்வளவு பெரிய கதையை படமாக சுருக்க வேண்டியிருந்ததாலோ என்னவோ கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் துண்டு துண்டாக நின்றன. யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் திருமணம் ஆகவேயில்லை. அதற்கான காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை படத்தில். இறுதியில் தஞ்சாவூரில் இருந்து ஒரு மைனர் வருகிறார், திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கைநடத்துகிறேன் என்று. பாபுவின் மனம் யமுனாவினால் ஈர்க்கப்படுவது தெரிகிறது.

படத்தின் முக்கிய பாத்திரமாக வரும் பாபுவின் கேரக்டரில் சற்று குழப்பம் அதிகம். அதைப்புரிந்துகொள்கிற நேரத்திலேயே ஒருபகுதி போய்விடுகிறது. கிழவரைத் திருமணம் செய்துகொண்டு எந்த சுகமும் காணாத தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் பாபு, பின்னர் அவளுக்கு அட்வைஸ் பண்ணுவது பாபு கேரக்டரை கீழே சரித்து விடுகிறது. அத்தகைய நிகழ்வு நேராமல் சுதாரித்து கழன்றுகொண்டு, பின் அட்வைஸ் செய்தானென்றால் இன்னும் அந்த கேரக்டர் எடுபட்டிருக்கும். பாவம் இயக்குனர் என்ன செய்வார். கிடைத்த நேரத்துக்குள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க வேண்டும். (பாபு கேரக்டரில் நடித்திருப்பவர், இன்று சின்னத்திரை சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அபிஷேக். அப்போது சின்னப்பையன்).

கதையில் ரொம்ப சிலாகித்துச்சொல்லப்படுகிற நண்பன் ராஜம் கேரக்டர் ரொம்ப சின்னதாகக் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அவளுக்காக பாபு ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துவதாகக்கூடக் காண்பிக்கப்படவில்லை. தங்கம்மா அலங்கார பூஷிதையாக அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்க, கிழட்டுக்கணவன்  உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் காட்சியிலெல்லாம் நம் மனது ரொம்பவே வலிக்கிறது. இன்னொருபக்கம் யமுனாவுக்கு முப்பத்து நாலு வயது வரை திருமணம் ஆகாத நிலை இவற்றைப்பார்க்கும்போது மேட்டுக்குடிகளில்ரொம்பவே கொடுமைகள் நடந்திருப்பது தெரிகிறது.

அதனால் கதையில் அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கும் பாபுவின் தந்தை வைத்தி ரோல் எல்லாம், போகிறபோக்கில் வந்து போகிறது. ஆனால் பாபுவின் சங்கீதகுருவான ரெங்கண்ணா, கதாநாயகியான யமுனா மற்றும் அவள் அம்மா என்ற நான்கு கேரக்டர்கள் மட்டும் சற்று விலாவரியாக சொல்லப்படுகிறது, இடையில் வந்து மாண்டுபோகும் தங்கம்மாவை தவிர்த்து விட்டுப்பார்த்தால். தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை தன் ஆசைக்குப்ப்லி கொண்டது தவறு என்று தோன்றாது. மாறாக ஒரு அனுதாபமும் அக்கால சம்பிரதாயங்களின் மீது எரிச்சலும் ஏற்படும்.   

படத்துக்கு செலவு என்றால், நடித்தவர்களுக்கு சம்பளமும், பிலிம்ரோல் வாங்கிய காசும் மட்டும்தான் ஆகியிருக்குமோ என்று சொல்லுமளவுக்கு, அப்படியே கேமரா கும்பகோணத்து தெருக்களில் புரண்டு எழுகிறது. அந்த அளவுக்கு யதார்த்தம், இயற்கைத்தன்மை எல்லாம் கொடிகட்டிப்பறக்கிறது. ஸ்டுடியோ செட்என்பதெல்லாம் எப்படியிருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள் படத்தில். கும்பகோணம் வீடுகள் கோயில்கள்,  குளங்கள் என்று எல்லாம் அப்படியே கண்முன்னே.

படத்தை பெரும்பங்கு ஆக்கிரமித்துக்கொண்டு, ஒரு பெரிய இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பவர் 'இசைஞானி' இளைய்ராஜா. நம் உயிரோடு ஒன்றிப்போகும் இசை. அவருக்கு பக்க பலமாக நின்றிருப்பவர்கள் ஜேசுதாஸ், எஸ்.ஜானகி மற்றும் அருண்மொழி. கலக்கியெடுத்து விட்டார்கள் என்ற கடின வார்த்தைப் பிரயோகத்தை விட, மனதை மென்மையாக வருடி, மயக்கியிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.

அன்றைய நாட்களில் பிராமணப்பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதை ஒரு எவரெஸ்ட்டில் ஏறுவது போன்ற கடினமாக்கிக் காட்டியிருப்பது ஏன்?. கடைசியில் கூட யமுனா, திருமணம் செய்துகொள்ளாமல்தான் பாபுவிடம் தன்னை இழக்கிறாள். அவனுள்ளிருக்கும் இசைக்கு உயிர்ப்பூட்டுவதற்காம். புரியவில்லை என்பதைவிட ஒப்பவில்லை என்பது கொஞ்சம் அதிகம் பொருந்தும். அதுமட்டுமல்ல, பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் கையில் கொடுத்து இசைக்கச்சொல்கிறாள். படம் வெளிவந்த நேரத்தில் இது எப்படி ஆட்சேபிக்கப்படாமல் போனது?. இசையென்பது சுத்தமானது அல்லவோ?. அதை இசைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமோ?.

படத்தை இயக்கியிருப்பவர் ஞான ராஜசேகரன். ரொம்பவே கவனமாக கத்திமேல் நடப்பதுபோல கதையைக் கையாண்டிருக்கிறார். கையாண்ட விதத்தில் வெற்றியடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். நேர்த்தியான இயக்கம்.

'மோகமுள்' படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், தி.ஜானகிராமன் எழுதிய நாவலைப்படிக்கும் முன் பார்த்து விடுங்கள். நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.

11 comments:

  1. மோகமுள் - நாவல் பிறந்த கதை

    http://solvanam.com/?p=14107

    ReplyDelete
  2. மோகமுள் - நண்பர் ஞானசேகரின் விமர்சனம்...

    http://puththakam.blogspot.com/2010/02/57.html

    ReplyDelete
  3. மோகமுள் - கிருஷ்ண பிரபு கூறுகிறார்...
    http://online-tamil-books.blogspot.com/2010/01/blog-post_27.html

    ReplyDelete
  4. அன்புள்ள சீனிவாஸ்,

    'மோகமுள்' தொடர்பான மூன்று முத்தான இணைப்புகளைத் தந்துள்ளீர்கள். உங்களது சிரத்தைக்கும், ஆர்வத்துக்கும் மிக்க நன்றி.

    இந்நாவல் பலரது உள்ளங்களைக் கவர்ந்துள்ளது தெரிகிறது. அவரவர் கோணத்தில் நாவலை அணுகியிருக்கும் விதம் தி.ஜானகிராமனின் எழுத்துக்களுக்குக் கிடைத்த வெற்றி. காரணம் அவர், தான் சந்தித்த நிஜ மனிதர்களைக் கதைக்குள் கொண்டுவந்து கோர்த்திருப்பதுதான்.

    திரைப்படமும் சோடையென்று சொல்ல முடியாது, நாவலைப்படிப்பதற்கு முன் பார்த்துவிட்டால். இந்தச்சிதைவு பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு நேர்ந்திருக்கின்றன. இருந்தபோதிலும் படமாக்கத்துணிந்தவரை பாராட்டத்தான் வேண்டும்.

    ReplyDelete
  5. சாரதா
    மோக முள் படம் ஏனோ எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏன் என்று சொல்ல தெரியலை . நீங்கள் குறிப்பிட்டது போல் கதையை படிக்காமல் படம் பார்த்து இருந்தால் ரசித்து இருக்கலாம் .ஆயினும் ஆர்ட் direction அற்புதம். அறுபதுகளில் நான் பார்த்த கும்பகோணம் அப்பிடியே replicate ஆகி இருந்தது.

    அன்புடன்.

    ராஜு-துபாய்

    ReplyDelete
  6. இன்று காலைதான் இப்படத்தை கே டிவியில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. நாவல் இதுவரை வாசித்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். படம் என்னை எங்கும் நகரவிடாமல் செய்துவிட்டது. நேர்த்தியான படைப்பு.

    ReplyDelete
  7. //யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் திருமணம் ஆகவேயில்லை. அதற்கான காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை – படத்தில்//

    சில விஷயங்களை வசனங்களால் சொல்லி நிரப்புவது என்பதை விட குறிப்பால் சொல்லுவது சிறந்தது. அவர்கள் குடும்பம் மிக வறுமையில் வாடுவதும், யமுனா முறையாக திருமணம் செய்யாத பெற்றோருக்குப் பிறந்தவளாக இருப்பதும்தான். இது படத்தில் அழுத்தமாகவே சொல்லப்பட்டுள்ளது.

    ReplyDelete
  8. //தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் பாபு, பின்னர் அவளுக்கு அட்வைஸ் பண்ணுவது பாபு கேரக்டரை கீழே சரித்து விடுகிறது. அத்தகைய நிகழ்வு நேராமல் சுதாரித்து கழன்றுகொண்டு, பின் அட்வைஸ் செய்தானென்றால் இன்னும் அந்த கேரக்டர் எடுபட்டிருக்கும். //

    எந்தப் பதின்ம வயதினருக்கும் இருக்கும் இயல்பான கவனச்சிதறலினாலேயே பாபு தடம்புரள்கிறான். ஆனாலும் அதிலிருந்தே அவன் உடனே மீண்டுவிடவும் செய்கிறான். காரணம் யமுனாவின் மீது அவனுக்கிருந்த ஈர்ப்பு, காதல்தான் என்பது அவனுக்குப் புலனாகிறது. இதுவே நாலைந்துமுறை அவளை அனுபவித்துவிட்டு அதன்பின் இதுபோல வசனம் பேசியிருப்பானேயாகில், நிச்சயம் நீங்கள் சொல்வதுபோல அவன் மீதான் நம் மதிப்பு குறைந்திருக்கும்.

    ReplyDelete
  9. //தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அவளுக்காக பாபு ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துவதாகக்கூடக் காண்பிக்கப்படவில்லை. //

    காண்பிக்கப்பட்டதே! பாபு தேம்புவதுபோல காட்சியொன்று இருந்ததே! அதன்பின் அவளது நினைவுகள் பல தருணங்களில் அவனுக்கு வரும்போதேல்லாம் ஒருவித குற்ற உணர்வுக்கு அவன் ஆட்படுவதை நாம் உணரலாம். என்னைப் பொருத்தவரை தங்கம்மா ஒரு அருமையான பாத்திரம். ஆனால் சூழலையோ, அவன் இருக்கும் நிலையையோ யதார்த்தமாய் அவள் புரிந்துகொள்ளவில்லை.

    ReplyDelete
  10. //தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை தன் ஆசைக்குப்ப்லி கொண்டது தவறு என்று தோன்றாது. மாறாக ஒரு அனுதாபமும் அக்கால சம்பிரதாயங்களின் மீது எரிச்சலும் ஏற்படும்//

    உண்மை. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  11. //பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் கையில் கொடுத்து இசைக்கச்சொல்கிறாள். படம் வெளிவந்த நேரத்தில் இது எப்படி ஆட்சேபிக்கப்படாமல் போனது?. இசையென்பது சுத்தமானது அல்லவோ?. அதை இசைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமோ?. //

    நிச்சயமாகத் தேவையில்லை. அரசர்கள் காலத்தில் தாசிப்பெண்கள் இருந்தனர். அவர்கள் கலைகளில் சிறந்து விளங்கியவர்கள்தான். இசையும், செக்ஸும் கலாப்பூர்வ விஷயங்கள். ஒன்றை மீட்டினால் தானே இன்னொன்றும் நிகழும் என்பது யதார்த்தம். அதனாலேயே யமுனா அவ்வாறு செய்தாள்.

    ReplyDelete