எழுபதுகளில் இந்திய திரையுலகைக் கலக்கிய நியூவேவ் இந்திப்படம் தோரகா. ராம்தயாள் தயாரித்த அப்படம் இளைஞர்களிடையே, குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் கதை என்று பார்த்தால் மிகவும் ஆபாசமான, சர்ச்சைக்குரிய ஒன்று. மாற்றான் மனைவியை, அதுவும் தன் நண்பனின் மனைவியையே திட்டம்போட்டு குறி வைத்து சூறையாடும், மிக மோசமான கலாச்சார சீரழிவு கொண்ட கதை. 'கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று முத்திரைகுத்தப்பட்டு வெளியான அந்தப்படம், இளைஞர்களின் இலக்காக மாறியதில் வியப்பில்லை. அந்தப்படத்தில் நடித்திருந்த நடிகை ராதா சலுஜாவும், நடிகர் சத்ருக்கன் சின்காவும் ஓவர்நைட்டில் பிரபலமாயினர்.
இந்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தப்படத்தை தமிழில் சுந்தர்லால் நகாதா தனது விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார். (ஏ.பி.நாகராஜனின் விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் அல்ல). சர்ச்சைக்குரிய கதாநாயகி ரோலில் நடிக்க அப்போதிருந்த லட்சுமி, உஷா நந்தினி போன்ற பிரபல நடிகைகள் பலரை அணுகியபோது, மறுத்து ஓடினர். பிரமீளா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஒய்.விஜயா போன்றோர் அப்போது அறிமுகமாகியிருக்கவில்லை. (இப்போதைக்கு என்றால் அந்த ரோலில் நடிக்க 'நான், நீ' என்று போட்டிபோட்டிருப்பார்கள்). கடைசியாக வெண்ணிற ஆடை நிர்மலாவை அணுகி, அந்தப்படத்தில் நடித்தால் அபார புகழ்பெற்று அவரது மார்க்கெட் மேலும் உய்ர வாய்ப்புள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட, அப்படியானால் அப்படத்தில் நடிக்க தனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் (???) தர வேண்டும் என்று டிமாண்ட் வைத்தார். தயாரிப்பாளருக்கு ஆச்சரியம். ஏனென்றால் அதுவரை ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பளம் பெற்ற இரண்டே நடிகைகள் கே.ஆர்.விஜயாவும், ஜெயலலிதாவும்தான். (நந்தனார் படத்தில் நடிக்க கே.பி.சுந்தராம்பாள் ரூ. ஒரு லட்சம் வாங்கியதாக தகவல் உண்டு). இருப்பினும் அந்த இன்னஸண்ட் பாத்திரத்துக்கேற்ற அழகான நடிகையாக நிர்மலா கிடைத்ததில் திருப்தியடைந்த தயாரிப்பாளர் அவரையே புக் பண்ணினார்.
கீதா (வெ.ஆ.நிர்மலா) கல்லூரி மாணவி. டி.கே.பகவதியின் (இவருடைய பாத்திரப் பெயர் நினைவில்லை) மகள். எழுத்தாளன் சந்திரநாத் என்பவரைக் (சசிகுமார்) காதலிக்கிறாள். இதையறியாத அவளுடைய தந்தை பெரிய பணக்காரனான பிரகாஷுக்கு (ஏ.வி.எம்.ராஜன்) மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் கீதா, சந்திரநாத்தைக் காதலிப்பதை அறிந்த பிரகாஷ், ஒதுங்கிப்போகிறான். பிரகாஷுக்கும் சந்திரநாத்துக்கும் ஒரு நண்பன் பெயர் சதானந்தம் (ஸ்ரீகாந்த்). பெயருக்கேற்றாற்போல சகல தீய பழக்கங்களுடன் 'சதா ஆனந்தமாக' இருப்பவன். அவனுக்கு திருமணம், சம்பிரதாயம் இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லாதவன். எத்தனை பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியுமோ அப்படியிருப்பவன். அவனுக்கு நண்பனின் காதலி கீதாவின் மீது ஒரு கண்.
இந்நிலையில் தன் மகள், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை எழுத்தாளனைக் காதலிப்பதையறிந்து, காதலுக்கு தடை போடுகிறார். மகள் கேட்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறி காதலனை மணந்து தனிவீட்டில் இருக்கிறாள். கீதாவை அடைவதற்காக சமயம் பார்த்திருக்கும் சதானந்தம் முதலில் சந்திரநாத்தை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கி, அதற்கே அடிமையாக்குகிறான். கீதாவை அடைவதற்காக, நண்பனுக்கு கார் வசதியெல்லாம் செய்து கொடுக்கிறான். தன் மனைவியையும் குடிக்க வற்புறுத்தும் சந்திரநாத், அவள் மறுக்கவே காரைவிட்டு வழியில் இறக்கிவிட்டுப்போய்விடுகிறான். அவள் தனித்து விடப்பட்டதுமே, அவளைச்சூறையாடவும், அவளது வாழ்க்கையை சீரழிக்கவும் ஒரு கும்பல் முயற்சிக்க, இவர்கள் கையில் சிக்கி சீரழிவதைவிட கணவன் பேச்சைக்கேட்டு அவனுடன் இருப்பதுமேல் என்று முடிவெடுத்து அவனிடம் போய், அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுகிறாள். குடிப்பழக்கத்தை மேற்கொண்டு அதற்கு அடிமையும் ஆகிறாள். சதானந்தத்திடமும் சகஜமாகபழகுகிறாள்.
சதானந்தம் எதிர்நோக்கியிருந்த அந்த சந்தர்ப்பமும் வருகிறது. கீதாவின் பிறந்த நாள் விழாவில் சந்திரநாத்தையும் கீதாவையும் மதுவில் மூழ்கடித்து, கீதாவின் படுக்கையறையில் அவளை சீரழித்துவிடுகிறான். காலையில் 'குமார்னிங்' என்ற குரலுடன் தன் மீது சதானந்தத்தின் கைவிழ, திடுக்கிட்டு எழுகிறாள். பக்கத்தில் படுத்திருக்கும் சதானந்தத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிப்போய்ப்பார்க்க, கணவன் சந்திரநாத் கீழே கூடத்தில் போதையுடன் சோபாவில் படுத்திருப்பதைப் பார்த்து தான் சதானந்தத்தால் சீரழிக்கப்ப்டுவிட்ட நிதர்சனத்தை அறிகிறாள். என்ன செய்வதென்று புரியாத நிலை. கணவனிடம் அவனது நண்பன் சதானந்தத்தின் நம்பிக்கை துரோகம் பற்றி அவள் சொல்ல, அவனோ அதை மிகவும் லைட்டாக எடுத்துக்கொள்கிறான். மீண்டும் வற்புறுத்தவே அவள் மீதே சந்தேகப்படுகிறான். கீதா முடிவெடுக்கிறாள். இந்த கேவலத்துக்குப்பின்னும் அந்த அயோக்கியனை உயிரோடு விடுவதில் அர்த்தமில்லை. எனவே அவனைக்கொல்வதற்காக, பல ஆண்டுகளுக்குப்பின் தந்தையின் வீட்டுக்குப்போகும் அவள், அப்பாவுக்குத்தெரியாமல் அவரது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வருகிறாள்.
நண்பன் வீட்டிலில்லாத நேரம் மீண்டும் சதானந்தம் கீதாவைச்சூறையாட வரும்போது அவனிடம் போராடும் அவள், தான் பீரோவில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக் குறிவைக்கிறாள். அவன் அதிர்ச்சியடைகிறான். அவளுக்கு தலைசுற்றுகிறது. மயங்கிவிழப்போகும் நேரம், குளோசப்பில் துப்பாக்கி வெடிக்க, நெஞ்சைப்பிடித்துக்கொண்டே கீழே விழும் சதானந்தம் உயிரை விடுகிறான்.
கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. தான் நிரபராதி என்று அவள் வாதாடவில்லை. ஆனால் அதே நேரம் 'யுவர் ஆனர், சதானந்தத்தைச் சுட்டது நான்தான்' என்ற குரல் கேட்கிறது. கோர்ட் மொத்தமும் திரும்பிப்பார்க்க வந்தவன் பிரகாஷ். நடந்த சம்பவத்தை அவன் சொல்லும்போது ப்ளாஷ் பேக், கீதா கையில் துப்பாக்கியுடன் மயங்கிவிழப்போகும் நேரம், ஒரு கைவந்து அவள் கையைப்பிடித்து துப்பாக்கியை வாங்குகிறது. கேமரா அப்படியே உயர வந்தவன் பிரகாஷ். குறி தவறாமல் சதானந்தத்தை சுட்டுத்தள்ளுகிறான். ப்ளாஷ்பேக் முடிய, தான் சுட்ட துப்பாக்கியையும் பிரகாஷ் கோர்ட்டில் ஒப்படைக்க, கீதா விடுதலை செய்யப்படுகிறாள். ஆனால், தான் புனிதத்தை இழந்துவிட்ட சோகத்தால் தவிக்கும் அவள் தூக்கமாத்திரைகள் உட்கொண்டு கணவனின் கைகளிலேயே உயிரை விடுகிறாள்.
ஏற்கெனவே இந்திப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், 'அவள்' படம் வருவதற்கு முன்பே இளைஞர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் அன்றைய சூழ்நிலைக்கு இம்மாதிரி கதை சற்று புதியது. சந்திரநாத் ஆக சசிகுமார், சதானந்தமாக ஸ்ரீகாந்த், கீதாவாக வெண்ணிற ஆடை நிர்மலா, பிரகாஷாக A.V.M.ராஜன், கீதாவின் தந்தையாக டி.கே.பகவதி, கீதாவை வளர்க்கும் ஆயாவாக பண்டரிபாய், பால்காரனாக சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இம்மாதிரி ரோலில் நடித்திருப்பதால் தன் இமேஜ் பெண்கள் மத்தியில் என்னாகுமோ என்று நிர்மலா பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. மாறாக அவர்மீது அனுதாபத்தையே ஏற்படுத்தி இமேஜை உயர்த்தியது. அதுபோலவே, சிறிது காட்சிகளிலேயே வந்தபோதிலும் A.V.M.ராஜன் ஏற்றிருந்த பிரகாஷ் ரோல் ரொம்பவே அற்புதமாக அமைந்தது.
இவர்களையெல்லாம் விட 'அவள்' படத்தின் மூலம் ஜாக்பாட் அடித்தவர் ஸ்ரீகாந்த் தான். இப்படத்துக்குப்பின் அவரது மார்க்கெட் எங்கோ எகிறிப்போனது. பயங்கர பிஸியானார். படங்கள் குவிந்தன. அதே சமயம் இன்னொரு பாதகமும் நிகழ்ந்தது. ஆம், 'கற்பழிப்புக்காட்சியா? கூப்பிடு ஸ்ரீகாந்தை' என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முத்திரை குத்தினர். இந்தியில் சத்ருக்கன் சின்கா ஏற்றிருந்த ரோலில் இவர் நடித்ததாக சிலர் சொல்வார்கள். அது தவறு. சத்ருக்கன் ரோலில் நடித்தவர் A.V.M.ராஜன்தான்.
கண்ணைக்கவ்ரும் வண்ணப்படமான 'அவள்' படத்தை ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கியிருந்தார். கடற்கரையில் நீச்சல் உடையில் சசிகுமார் நிர்மலா இருவரும் பார்த்துக்கொள்ளும் அந்தப் பார்வையைப் பறிமாறிக்கொள்ள, சொல்லித்தந்த இயக்குனருக்கே பாராட்டுக்கள். இன்னிசை 'இரட்டையர்' சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் பாடும் "Boys and Girls வருங்காலம் உங்கள் கையில், வாருங்கள்" என்ற பாடலும், சசிகுமார் நிர்மலா பாடும் டூயட் பாடலான,
"கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழல் அல்ல"
பாடலும் மனதைக்கவர்ந்தன என்றாலும்,
நிர்மலா கிளப்பில் பாடும் (பி.சுசீலா தனிப்பாடல்).....
"அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன்... பாடுகிறேன்...
மதுவை நீ ஊற்றிக்கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்"
என்ற பாடலில் இசையை அள்ளிக்கொட்டியிருப்பார்கள் இரட்டையர்கள். தாங்கள் மெல்லிசை மன்னரின் மாணவர்கள் என்பதை அழுத்தமாக நிரூபித்திருப்பார்கள்.
No comments:
Post a Comment