Monday, May 2, 2011

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் அதே கூட்டணியால் (ஜெயகாந்தன் - பீம்சிங் - எம்.எஸ்.வி - ஸ்ரீகாந்த் - லட்சுமி) மீண்டும் ஒரு கருப்பு வெள்ளைச் சித்திரமாக உருவானது. (இப்படம் முடிவதற்குள் இயக்குனர் பீம்சிங் மறைந்து விட்டார் என்பதாக நினைவு. 'பா'வன்னா பிரியரான அவரது இறுதிப்படம் 'பாதபூஜை' என்பதாகவும் நினைவு. இதை உறுதிப்படுத்துவது போல ஒரு நடிகை நாடகம்.பார்க்கிறாள்' படத்தின் டைட்டிலில் 'டைரக்ஷன் 2வது யூனிட் திருமலை மகாலிங்கம்' என்று காண்பிக்கப்படும்). படத்தின் தலைப்பு எதைச்சொல்கிறது என்பது படம் பார்க்கும்போதுதான் விளங்குகிறது. ஒரு நாடக நடிகை தன் வாழ்க்கையையே நாடகமாகப் பார்க்கிறாள் என்பதை உணர்த்துகிறது.

நாடகக்குழு நடத்தும் அண்ணாசாமி (ஒய்.ஜி.பார்த்தசாரதி)யின் நாடகங்களில் நடிக்கும் பிரதான நடிகை கல்யாணி (லட்சுமி). தாய் தந்தை உற்றார் உறவினர் யாருமில்லாத கல்யாணிக்கு ஆதரவாக இருந்து வருபவரும் அண்ணாசாமிதான். கல்யாணியின் வீட்டிலேயே ஒரு பகுதியில் நாடகத்துக்கான இசைக்குழு வைத்து ஒத்திகை பார்க்கும் தாமு (ஒய்.ஜி.மகேந்திரன்). கல்யாணியின் ஒரே துணையாக வேலைக்காரி மற்றும் சமையல்காரி பட்டு. நாடகங்களை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதும் விமர்சகர் ரெங்கா (ஸ்ரீகாந்த்). தன் நாடகங்களை விமர்சித்து ரெங்கா எழுதுவது அண்ணாசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்யாணிக்கு விமர்சகர் ரெங்கா மீது ஈர்ப்பு. தன்னை சந்திக்க வருமாறு கையெழுத்தில்லாத கடிதமொன்றை அவள் அனுப்ப,  குழம்பிப்போகும் ரெங்கா, தன் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியுமா என்று கேட்டு கல்யாணிக்கு கடிதமெழுத, கல்யாணி சம்மதிக்க ரெங்கா அவள் வீட்டுக்குப்போகிறான். பேட்டி நடக்கிறது. இடையில் கல்யாணிக்கு ஒரு சந்தேகம், ரெங்காவுக்கு திருமணம் ஆகியிருக்குமா என்று. பேச்சோடு பேச்சாக அண்ணாசாமி 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?' என்று கேட்க, 'ஐந்து வயதில் ஒறே பெண் குழந்தை'யென ரெங்கா சொன்னதும், அவள் முகம் ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அடுத்த வினாடியே தன் மனைவி முதல் குழந்தையின் பிரசவத்தில் இறந்துபோய்விட்டதாகவும், குழந்தை தன் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் சொல்ல, மீண்டும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. பேட்டியை எழுத்து வடிவில் முடித்து கல்யாணியிடம் காண்பிக்க மறுநாள் வரும்போது வீட்டில் பட்டுவும் இல்லை, தாமுவும் இல்லை, அண்ணாசாமியும் இல்லை. தனிமையில் இருவரும் மனம் விட்டுப்பேச, அவர்களுக்குள் ரெஜிஸ்ட்டர் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுக்கின்றனர். இது கல்யாணியின் சொந்த வாழ்க்கை என்பதால் அண்ணாசாமியால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.

ஆனால் தாய், தந்தை, முதல் மனைவி யாவரையும் இழந்து சித்தப்பாவோடும் சித்தியோடும் வாழும் ரெங்காவின் மறுமணம் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மறுமணம் கூடாதென்பதல்ல அவர்கள் எண்ணம், ஆனால் வரப்போகும் புது மருமகள் தங்கள் ஜாதியாக இருக்கவேண்டும் என்று எண்ணும் பிற்போக்குத்தனத்தில் ஊரியவர்கள். அதுபோல  ஊரிலிருக்கும் அவருடைய (முன்னாள்) மாமனாருக்கும், (அக்காவின் கணவர் தன்னையே மறுமணம் செய்வார் என்ற எண்ணத்தோடு அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து வரும்) ரெங்காவின் கொழுந்தியாளுக்கும் ரெங்காவின் மறுமணம், பிடிக்கவில்லை, அவர்கள் குழந்தையையும் ரெங்காவிடம் தர மறுத்து அனுப்பிவிடுகின்றனர்.

ஓரளவு வசதியான வீட்டில், ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாணியை, தானும் தன் சித்தப்பா (தேங்காய் சீனிவாசன்) மற்றும் தொத்தா என்று த்ன்னால் அழைக்கப்படும் சித்தி (காந்திமதி) ஆகியோர் வாழும் ஓட்டுவீட்டில் குடிவைத்து சங்கடப்படுத்த விரும்பாத ரெங்கா, தானும் அவளோடு அந்த வசதியான வீட்டிலேயேயே தங்கி வாழ்க்கை நடத்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிந்ததும், ரெங்காவின் மனதில் தாழ்வுணர்ச்சி  தலைதூக்குகிறது. தானும் சம்பாதித்து அவளும் சம்பாதித்து வாழ்வதை விட, தன் சம்பாத்தியத்தில் அவளும் வாழ்வதே சரிப்படும் என நினைக்கிறான். ஆனால் கல்யாணிக்கோ உயிரை விடுகிறாயா, நாடகத்தை விடுகிறாயா என்ற கேள்வி வரும்போது உயிரையே விடுகிறேன் என்று தேர்ந்தெடுக்கும் ரகம். அந்த அளவுக்கு நாடகமேடை அவளது உயிர்நாடி. விளைவு..?. சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினை தலைதூக்குகிறது. கல்யாணி எதையும் விட்டுக்கொடுத்துப் போகிற ரகம். ஆனால் அதே சமயம் பேரம் பேசி வாழ்வதல்ல வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சின்ன ரோஜாச்செடி வளர்ப்பதில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு.

கண்ணுக்கு அழகான ரோஜச்செடியல்ல மனிதனின் தேவை, அதைவிட பசியைப்போக்கும் காய்கறிச் செடியே பயன் தரும் என்கிற ரீதியில் ரெங்கா வாதிக்க , தொட்டதுக்கெல்லாம் கருத்து வேறுபாடு. விரிசல் பலமாகிக்கொண்டே போக, ரெங்கா தன் பெட்டியோடு சித்தப்பா இருக்கும் தன் வீட்டுக்குப்போய் விடுகிறான். சண்டைபோட்டுக்கொண்டு அல்ல. அவர்களிருவரின் மனதின் ஆழத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இழையோடிக்கொண்டே இருக்கிறது. எப்போதாவது தேடி வருவான், கல்யாணியும் எதுவுமே நடக்காததுபோல முகம் சுழிக்காமல் நடந்துகொள்வாள்.

இடையே, தாங்கள் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே அடங்கிப்போவோம் என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் நாகேஷிடம் போக, அவர் தன் வீட்டில் வைத்தே இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். அவரது நியாயமான கேள்விகளூக்கு இருவராலும் பதில்சொல்ல முடியவில்லை. அவர்கள் கூறும் காரணங்களெல்லாம் சட்டத்தின் முன் எடுபடாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும் என்று கூறி, ஆனால் அவர்களுடன் பேசியதில் இருவரும் என்னைக்கும் பிரியமாட்டார்களென்றும், இருவரும் சேர்ந்து வாழவேண்டுமென்பதே சட்டத்தின் விருப்பம், தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல, அவர்கள் மனதின் அடித்தளத்திலும் அதுதான் உள்ளது என்றும் சொல்லியனுப்புகிறார். கல்யாணிக்கு இந்த பந்தத்திலிருந்து விடுபட கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் ரெங்காவின் முடிவை எதிர்த்து அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ரெங்கா போய்விட்டான். மாதக்க்கணக்கில் அவள் வீட்டுக்கு வரவில்லை. அண்ணாசாமியும் பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர்.

இதனிடையே கல்யாணி உடல் நலிவுறுகிறது. ஒருநாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அலறுகிறாள். அண்ணாசாமி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்று அட்மிட் செய்கிறார். அவள் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் உடனடியாக நடக்காது என்று டாக்டர் சொல்கிறார். மனதுகேட்காத அண்ணாசாமி, ரெங்காவிடம் சென்று விஷயத்தைச்சொல்ல, அவன் நாலுகால் பாய்ச்சலில் மனைவியைக்காண வருகிறான். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் அவளுக்கு ரெங்காவே கால்களாக இருக்கிறான். அவளது தேவைகளை அவனே நிறைவேற்றுகிறான். அப்போது கல்யாணியைக்காண வரும் வக்கீல் நாகேஷ் ரெங்காவிடம், அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை காரணம் காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் அதை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல, ரெங்கா வெகுண்டெழுகிறான்.

'என்ன சார் உங்க சட்டம்?. இரண்டுபேரும் திடகாத்திரமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழமுடியும் என்றிருந்தபோது விவாகரத்து அளிக்காத சட்டம், இப்போ ஒருவரில்லாமல் ஒருவர் வாழமுடியாது என்ற  அளவுக்கு உடலில் குறை வந்தபிறகு அந்தக்குறையையே காரணமாக வைத்து, பிரிக்க முடியும் என்றால் அந்த சட்டம் எங்களுக்குத் தேவையில்லை' என்று கூற வக்கீலுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருவருக்கும் இடையில் நந்தியாக இருக்க வேண்டாம் என்று அண்ணாசாமியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்போது நடக்கமுடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரெங்காவுக்கு மனநிறைவைத் தருகிறது. அவளை சக்கரநாற்காலியில் தள்ளிக்கொண்டே நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறான். தன் உயிரான நாடகமேடையைப் பார்த்ததும், தனக்கு கால்களே வந்துவிட்டதுபோல அவள் உணர்ந்து மகிழ்வதுபோல படம் நிறைவடைகிறது.

ஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலைகாட்டாமல், முழுக்க முழுக்க யதார்த்த மாக படத்தை மிக அருமையாகக்கொண்டு சென்றிருப்பதன்மூலம், காட்சி வடிவிலேயே நாடகத்தைப்படித்த திருப்தி நமக்கு. கதாபாத்திரங்கள் யாரும் அந்நியமாகத்தோன்றவில்லை, நம் அன்றாட வாழ்வில் நம் கண்முன்னே வளைய வரும் இயற்கை மனிதர்கள் அத்தனைபேரும்.

ஒவ்வொருவருடைய நடிப்பைப்பற்றியும் தனித்தனியாகச்சொல்லிப் பாராட்ட வேண்டியதில்லை. ரெங்காவாக ஸ்ரீகாந்தும், கல்யாணியாக லட்சுமியும், அண்ணாசாமியாக ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக தேங்காய் சீனிவாசனும், சித்தியாக காந்திமதியும், வக்கீலாக நாகேஷும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யதார்த்தம். அதிலும் தேங்காயும், நாகேஷும்.... வாவ்... என்ன ஒரு பெர்பாமென்ஸ். இவர்கள் நடிக்கவில்லை. கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துவிட்டார்கள். அதுபோல ஒய்.ஜி.பி. நம் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர்.

வசனங்கள் எல்லாம் வாள்பிடித்து நறுக்குகிறாற்போல தெள்ளத்தெளிவு. இந்த இடம்தான், அந்த இடம்தான் என்று தனித்தனியாகவெல்லாம் குறிப்பிட முடியாது. சென்ஸார் சர்டிபிகேட் துவங்கி, சுபம் என்ற எழுத்துக்கள் வரையில், திரைப்படங்களுக்கென்று எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளை யெல்லாம் மீறி, படம் எங்கோ போய்விடுகிறது.  

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மனதை வருடும் பின்னணி இசை. கூடவே  இரண்டு அழகான பாடல்கள். ஸ்ரீகாந்த் - லட்சுமி ரெஜிஸ்ட்டர் திருமணத்தின்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல்...
'எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மனங்கள் திருமணங்கள்'
T.M. சௌந்தர்ராஜன் மற்றும் வாணி ஜெயராம் பாடியிருப்பார்கள். மற்றும், படத்தின் நிறைவுப்பகுதியில் ஜாலி ஆபிரகாம் பாடிய..
'நடிகை பார்க்கும் நாடகம் - அதில்
மனிதர்கள் எல்லாம் பாத்திரம்'
ஆர்ப்பாட்டமில்லாத இதமான மெட்டு. இப்படத்தின் கதை வசனத்தை மட்டுமல்ல, பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதியதாக டைட்டில் சொல்கிறது.

படத்தின் தொண்ணூறு சதவீத கதைக்களம் என்றால், அது சாப்பாட்டு மேஜையும், கல்யாணியின் படுக்கையறையும்தான் (அதிலும்கூட குறிப்பாக கட்டில்தான்). இவற்றையே திருப்பித் திருப்பி காண்பித்தபோதிலும்   போரடிக்காமல் படம் செல்கிறதென்றால், அதற்குக் காரணம் கதையைக் கையாண்ட விதம்தான்.

பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத்தூண்டும் படம் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'.
 

8 comments:

  1. நல்ல படம். சந்தேகமில்லை. ஆனால் ஏனோ சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்து விட்டு இதைப் பார்த்ததனாலோ என்னவோ அந்த நாளில் ஒரு பெரிய ஈர்ப்பு இந்தப் படத்தில் ஏற்படவில்லை. ஒரு வேளை அதே லஷ்மியும் ஸ்ரீகாந்தும் இந்தப் படத்திலும் தொடர்ந்தது காரணமா... நாகேஷின் பங்களிப்புகள் பற்றி சொல்லவே வேண்டாம். என்ன மாதிரி நடிகர் அவர்...அப்பா...

    ReplyDelete
  2. ஒரு வாக்கியத்தில் விவரிக்க வேண்டும் என்றால் இது ஒரு முதிர்ச்சியான & அற்பமான காதல் கதை. அற்பம்? ஜெயகாந்தனின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் 'காதல் மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும்'. நாமெல்லாம் காதல் என்று நினைத்து செய்யும் ஆக்கிரமிப்பையும், காதலை ஏற்றுக்கொள்வது என்ற பெயரில் அந்த மனோ பலாத்காரத்தை ஏற்றுக்கொள்வதையும், அதனால் சுயத்தை இழப்பதையும், அந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளாத சமயத்தில் காதலே தன்னை அழித்துக்கொள்வதையும் மிக நிதானமாக, அதே சமயம் நறுக்கு தெரித்தது போல எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கையும் இப்படி தான் போய்கொண்டு இருக்கிறது. இந்த கொடுமையை அகற்ற முயலுவதைவிட, மானுட இயல்பேயான இதனின்றும் விலகுவதே விவேகம். இதை படிக்கும் பொறுமை இருந்தால் இந்த இளம் சமுதாயம் நிறைய விவாகரத்துகளை தவிர்க்கும்.

    ReplyDelete
  3. இந்த கதை நாடகத்துறையின் pinnacle எனப்படும் உச்சகட்டத்தில், சினிமா வளர்ந்து வந்த சமயத்தில், சுமார் 60-களின் இறுதியில் நடப்பதாக எழுதப்பட்டது. 32 வயதாகும் கல்யாணி தன் நாடக தொழிலை, அரிதாரப் பூச்சை, தன்னுடைய நாடக குழுவை மிகவும் நேசிக்கிறாள். நாடகத்தை விட்டு சினிமாவில் ஸ்டாராக வேண்டும் என்ற பெரிய கனவுகள் இல்லாமல், வாழ்க்கையை ஒரு தெளிந்த நீரோடை போல ரசித்து, ருசித்து வாழ்ந்து வருகிறாள். அவளது வாழ்க்கையில் நுழைகிறான் ரங்கா என்னும் விமரிசகன், மனைவியை இழந்தவன். சந்திப்பு காதலாகி, ரங்காவும், கல்யாணியும் திருமணம் புரிந்து கொள்கிறார்கள். ரங்காவின் மனதை அறிந்து, திருமணத்துக்கு பிறகு கல்யாணி அவனுடன் வேறு வீட்டில் தனிக்குடித்தனம் புகுகிறாள். கல்யாணியின் வளர்ந்த விதமும், ரங்காவின் சமூக அமைப்பும் வேறுபட்டு இருக்கின்றன. ரங்காவால் முழுமையாக தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியாததால் விவாகரத்தை முன்வைக்கிறான். கல்யாணியும் ஒத்துக்கொள்கிறாள்.

    நாவலின் கதையோட்டமும், முடிவும் இந்த காலக்கட்ட வாசகர்களுக்கு மணிரத்னத்தின் "அலைபாயுதே"வை நினைவுபடுத்துகிறது. ஆனால் "ஒரு நடிகை...."-ல் சற்று சிக்கலாக, தம்பதியினரின் வளர்ப்பு முறைகள் அவர்களின் வாழ்க்கையில் பிரிவு ஏற்படுத்துவதை இயல்பாக காட்டுகிறார். மேலும் ஆதிக்கம் செலுத்தாத, ஆக்கிரமிப்பு செய்யாத அன்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும் ஒரு மனோதத்துவ ரீதியில் அலசுகிறார். ஆக்கிரமிப்பு செய்யும் அன்பை மட்டுமே காதல் என்றும், பக்தி என்றும் கருதி தங்கள் நிராசைகளை அறுவடை செய்து கொள்கிறார்கள். பலாத்காரம் செய்யாத அன்பை 'பற்றற்ற' நிலைமை என்று கருதி வேறு எங்கோ அன்பை தேடும் அவலத்தை அழகாக சொல்கிறார் ஜெயகாந்தன்

    ReplyDelete
  4. ரங்காவின் வளர்ப்பு - ஒரு சராசரி கீழ் / மத்திய வர்க்கத்தியது. ஒரு வகையில் தன் துணைவிக்கென்று தனிப்பட்ட ரசனை, ஒரு அடையாளம் இருக்கும் என்று எதிர்பார்க்காத மனநிலை. இறந்துபோன மனைவியுடனான தாம்பத்தியத்தை அவ்வப்போது ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு, கல்யாணியின் அபிப்பிராயங்கள், சுதந்திரம் ஆகியவற்றால் intimidate ஆகிறான். காதல் மிக அற்பமானது - கல்யாணியின் ரோஜா வளர்க்கும் பழக்கம் ஆடம்பரத்தை பறைசாற்றுவது என்கிற அற்பமான, சிறிய விவாததில் இருந்து ரங்காவின் காதல் உடைகிறது. தன் ஆக்கிரமிப்பு ஏற்கப் படாதபோது, ரங்கா தன் காதலை வாபஸ் பெறுகிறான். அவனது மனநிலையை, தடுமாற்றத்தை புரிந்துக்கொள்ளும் கல்யாணி அவனை ஆக்கிரமிக்காமல், அவன் போக்கிலேயே விட்டு, விளைவுகளை புரிந்துக் கொள்ளட்டுமே என்று விட்டுவிடுகிறாள். ஆனால் இந்த Free Hand-ஐ புரிந்துக்கொள்ளாத ரங்காவோ, கல்யாணிக்கு தன் மீது அன்பு இல்லை என்று முடிவுகட்டி விவாகரத்து என்ற drastic முடிவு எடுக்கிறான். அப்போதும் கல்யாணி அவனது முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லை. ஒரு வகையில் இந்த பாதிக்கப்படாத மனநிலை தான் அவளது வாழ்க்கையில் மோதல்களை, அவலங்களை தவிர்த்தது.

    ஜெயகாந்தனுக்கே உரிய விலாவாரியான விவரிப்பில், இயல்பான மொழி வழக்கிலும், அதே சமயம் Dramatic-ஆக மாறாத காட்சியமைப்பிலும் இந்த நாவல் ஒரு Reader's delight. ஆரம்ப கட்ட காட்சிகளை தாண்டிவிட்டால் இந்த நாவல் முடியவே கூடாது என்று தோன்றும் அளவுக்கு நம் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொள்கிறது. முன்னுரையில் ஜெயகாந்தனின் வார்த்தைபடி திருமணத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பை ஒரு லட்சிய மனைவியாக எப்படி சமாளிப்பாள் என்ற எண்ணத்தில் படைக்கப்பட்டதே கல்யாணியின் பாத்திர படைப்பு.

    ReplyDelete
  5. முடிவாக என்ன தான் சொல்லுகிறார் ஜெயகாந்தன்? இந்த சமுதாயத்தில் ஆண் தயவில் பெண் இருப்பதையே ஆண், பெண் இரு வர்கத்தினரும் இருப்பதையும், இந்த எண்ண ஓட்டம் மாறும்போது பிரச்சினைகளின் உருவமும் வேறுபடும். நாம் ஆக்கிரமிப்பு செய்ய விரும்புகிறோம் (எனக்காக என் மனைவி அவள் கொள்கையை விட்டுவிட்டு அசைவம் சாப்பிடுகிறாள் என்பதில் அன்பு ஏற்கப்பட்டதாக மகிழ்கிறோம்), நாமும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதையே விரும்புகிறோம் (எனக்கு பிடிக்கலைன்னாலும் என் மனைவிக்காக நானும் மெகா சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டேன் என்று நமது அன்பை நிரூபித்ததாக மகிழ்கிறோம்). துணைவரிடம் ஏற்படுத்திய நஷ்டத்திலும், துணைவரால் ஏற்பட்ட நஷ்டத்திலும் இல்லறத்தில் / உறவில் அன்பு பூத்து குலுங்குவதாக செயற்கையாக மகிழ்கிறோம். அதே சமயம் ஆக்கிரமிப்பை ஏற்காத, ஆக்கிரமிப்பு செய்யாத அன்பை, வாழ்க்கையை நாம் குறையாகவே கருதுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் நிறைவாகவே இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கை எப்போதும் நிறைவாகவே இருக்கிறது என்று தோன்றும் போது, நாம் இந்த ஆக்கிரமிப்பின்மையை ஏற்றுக்கொண்டு நாம் அமைதியாக வாழ்வோம் போல...

    --http://www.maheshwaran.com

    ReplyDelete
  6. அன்புள்ள சீனிவாஸ்,

    பதிவுக்குப் பின்னூட்டம் இடும் முகமாக, சிரமம் பாராமல் அந்த நாவலின் சுருக்கத்தையே இங்கு தந்து விட்டீர்கள். தங்கள் விவரமான பதிவுகளால், இந்த தளமே புதுப்பொலிவைப்பெற்றுள்ளது. தங்களின் மேலான பதிவுகளுக்கு மிக்க நன்றி.

    அன்புள்ள ஸ்ரீராம்,

    பின்னூட்டத்துக்கு நன்றி. நடித்த கலைஞர்கள் ஒன்றாக இருந்தபோதிலும், அடிப்படையில் இரண்டும் இருவேறு கோணங்களில் பயணித்த கதைகள். அதனால் மக்களின் வரவேற்பிலும் சிறிது வித்தியாசம் இருந்தது.

    ReplyDelete
  7. ஜெயகாந்தன் பற்றி ஜீவி கூறுகிறார்...

    அவரது மறக்கவே முடியாத 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' பற்றி எவ்வளவு எழுதினாலும் அலுக்காது. அடிப்படை உணர்வுகள் என்பது உயிர்நிலை மாதிரி. எந்த நேரத்தும் யாருக்காகவும் அதை விட்டுக்கொடுக்க இயலாமல் போகும். விட்டுக் கொடுப்பதாக அந்த நேரத்து மனம் பாசாங்கு காட்டினாலும், உள்ளுக்குள் இருந்து கொண்டு அந்தந்த நேரத்து வெளிப்போந்து வேதனை கொடுக்கும். அறிவை நேசித்தவனுக்கும், அழகை நேசித்தவளுக்கும் இடையே முகிழ்த்தக் காதலின் முரண்பாட்டைச் சொல்லவந்த புதினம் தான் ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள'. இந்தநாவலுக்கு எழுத வந்த முன்னுரையில், "காதல் என்பது மிகவும் அற்பமானது; அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்ப காரணங்களே போதும்" என்பார் அவர். ரங்காவுக்கும், கல்யாணிக்கும்--சிலப்பதிகார கோவலனுக்கும் மாதவிக்கும் நேர்ந்தது அதுதான். காதலின் உடன்பிறந்த சகோதரி ஆக்கிரமிப்பு. அன்பும் பாசமும் கொண்டோரிடையே இந்த ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு என்கிற உணர்வில்லாமலே யதார்த்தமாக வெளிப்படும். ஜே.கேயின் அந்த நாவலில், அப்படிப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பைச் செய்யத் தெரியாத உயர்ந்த நாகரிகமே கல்யாணியின் குறையாயிற்று. விகடனில் இது வெளிவந்த பொழுது வாராவாரம் இதைப் படிக்கும் அனுபவமே தனி சுகமாகப் போயிற்று.

    --http://jeeveesblog.blogspot.com/

    ReplyDelete
  8. Just remembered a story with the title "Gokila enna solli vittal" (I vaguely remember the title) written by Jayakanthan. This story was serialized in Ananda Vikatan (Here again, I am not sure). I was so impressed with the story that on reading it, I wrote a letter to Ananda Vikatan profusely appreciating the novel. By any chance, do you remember this title? What is your take on that?

    ReplyDelete