1982-ல் இப்படி ஒரு வண்ணப்படம் வந்தது பலருக்குத்தெரிந்திருக்கும். சிலருக்கு தெரியாமலிருக்கலாம். நடிகை அம்பிகா நடித்த இரண்டாவது படம் என்பதாக நினைவு. முதல் படம் சக்களத்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு ஜோடியாக விஜய்பாபு, வில்லனாக ராதாரவி, விஜய்பாபுவின் தங்கையாக வனிதா, நகைச்சுவைக்கு எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நடித்து வெளிவந்த படம். கதை ஒரு சாதாரண காதல் கதை. கடலோரத்தில் வாழ்ந்து மீன்பிடி தொழில் செய்துவரும் விஜய்பாபு, அவருக்கு துணையாக தங்கை வனிதா. வழக்கம்போல பண்ணையார் மகள் அம்பிகா பள்ளி மாணவி வழக்கம்போல ஏழை நாயகனுக்கும் பணக்கார நாயகிக்கும் காதல். வழக்கம்போல காதல் முறிகிறது. குடிகாரரான ராதாரவிக்கு அம்பிகா மணம்செய்து கொடுக்கப் படுகிறார். வழக்கம்போல கணவனிடம் கொடுமைகள். அதையறிந்து பழைய காதலனின் வேதனைகள். ஒருகட்டத்தில் கணவனை விட்டு காதலனிடம் ஓட முயல்கையில், அய்யனார் கோயிலில் கணவனுக்கும் அவளுக்கும் சண்டை, இழுபறி, துரத்தல்கள். அதில் கணவன் 'தானாகவே'(?) அடிபட்டு இறந்துபோகிறான். அப்போது ஒரு கொம்பில் மாட்டிக்கொண்டு அவள் தாலியும் அறுந்துபோகிறது. இப்போது லைன் கிளியர். காதலனிடம் சேரும் முயற்சியில் குற்றுயிரும் குலை உயிருமாக காதலனிடம் வந்து சேர கொஞ்ச நேரத்தில் அவன் கைகளிலேயே பிணமாகிறாள். காதலியின் பிணத்தை கையில் ஏந்தியவாறு கடலுக்குள் இறங்க, திரையில் 'தரையில் வாழ முடியாத மீன்கள் தண்ணீரை நோக்கி' என்ற டைட்டில் கார்டு.
இவ்வளவு சொதப்பலான ஒரு காதல் கதையைப் பார்ப்பது அரிது. அம்பிகாவுக்கு திருமணம் ஆகாதவாறு காட்டியிருக்க வேண்டும். திருமணம் ஆன பின்பும் காதலன் நினைவாக இருப்பதும் அவனோடு ஓடிவிட எத்தனிப்பதும், காதலனும் அதை விரும்புவதும் அந்தப் பாத்திரப் படைப்புகளை குறைவடையச் செய்துவிட்டன. படத்தில் கிட்டத்தட்ட அனைவரும் புதுமுகங்கள். அதனால் படப்பிடிப்பின்போது இழுத்த இழுப்புக்கு வந்தனர்.
கோரையாற்றங்கரையில் அமைந்துள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் முகம்மது அலி. அவர்தான் இப்படத்தின் இயக்குனர். படத்துறையில் ஈடுபட்டதும் தன் பெயரை 'கலை அலி' என்று மாற்றிக்கொண்டார். சைட் பிஸினசாக, வளைகுடாநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் பணியையும் செய்து வந்தார். இப்படத்துக்காக பெயரை மீண்டும் 'பாபு மகாராஜா' என்று மாற்றிக்கொண்டார்.
இப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்புக்குக் கதைக்களமாக அவர் தேர்ந்தெடுத்தது, அவரது ஏரியாவைச்சேர்ந்த பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள "மனோரா" என்ற இடம். அப்பகுதியில் பிரபலமான சுற்றுலாத்தலம். தஞ்சாவூரை மராட்டிய மன்னர் சரபோஜி மகாராஜா ஆண்டபோது, அதிராம்பட்டினத்தை அடுத்த மல்லிபட்டினம் கடற்கரையில் ஒரு ஏழு அடுக்கு மாளிகையைக் கட்டினார். சுற்றிலும் அகழி வைத்து, நடுவில் மடக்குப்பாலம் அமைத்து பெரிய கோட்டை வடிவில் அமைக்கப்பட்ட இதன் ஏழாவது தளத்தில் ஏறி நின்றால், சுற்றுவட்டாரம் முழுக்க நன்கு தெரியும். அதனால் இவ்விடத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வர்.
ஏற்கெனவே இந்தக்கோட்டை, கலைஞரும் நடிகர்திலகமும் இணைந்த 'புதையல்' படத்தில் காண்பிக்கப்படும். இருந்தாலும் அதிக காட்சிகளில் அல்ல. பின்னர் 1967-ல் ரவிச்சந்திரனும், பாரதியும் நடித்த ஒரு டூயட் பாடல் மட்டும் இதில் படமாக்கப் பட்டது. இருந்தாலும், இந்தக்கோட்டை முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டது இந்த 'தரையில் வாழும் மீன்கள்' வண்ணப் படத்தில்தான்.
பக்கத்திலுள்ள பெரிய நகரம் என்ற வகையில், பட்டுக்கோட்டையில்தான் படப்பிடிப்புக்குழுவினர் தங்கினர். பேருந்து நிலையம் எதிரே, காவல் நிலையத்தின் பக்கத்திலிருந்த ஏ.வி.லாட்ஜில்தான் கலைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதனால் அந்த லாட்ஜைச்சுற்றி எப்போதும் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்கும். காலையில் ஷூட்டிங் புறப்படும் முன்பு, லாட்ஜில் வைத்தே எல்லோருக்கும் மேக்கப் போட்டு ரெடியாக்கி விடுவார்கள். கார்களிலும் வேன்களிலும் அவர்கள் படப்பிடிப்புக்குப் புறப்பட்டதும், பின்னாடியே ரசிகர்கள் கூட்டம் பைக்கில் பின் தொடர்வார்கள்.
புறப்பட்டுப்போகும் வழியில் மணிக்கூண்டு சந்திப்பு பழனியப்பன் தெரு, தலையாரித்தெரு வளைவில் அசோக் ஸ்டுடியோவின் கீழேயிருந்த ஒரு ஒட்டுக்கடையின் அருகில் கார்களை நிறுத்தி கலைஞர்களுக்கு 'டீ' வாங்கிக்கொடுப்பார்கள். (இன்றைக்கு அந்த டீக்கடையில் அம்பிகா டீ குடிப்பாரா தெரியாது).
பைக்குகளில் பின்தொடர்ந்த்வர்கள் போக, அந்த வசதியில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக ஒரு பஸ் கம்பெனி இரண்டு ‘ஷூட்டிங் ஸ்பெஷல்’ பஸ்களை பட்டுக்கோட்டையில் இருந்து மனோராவுக்கு விட்டது. அவற்றிலும் கூட்டம் கூட்டம் நிரம்பி வழிய பஸ் ஓனர் நன்றாக கல்லா கட்டினார். படப்பிடிப்பு நடந்த இருபது நாட்களும் அந்தப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரிசுகள் கூட்டம் முழுக்க மனோராவில்தான் டேரா போட்டது.
இப்படத்துக்காக மனோரா முழுதும் சுத்தம் செய்யப்பட்டு பொலிவாக விளங்கியது. அத்துடன் ஒரு பாடல் காட்சியின்போது இரவு நேரத்திலும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஒரு பாடல் காட்சியின்போது விஜயபாபுவும், அம்பிகாவும் ராஜா ராணி உடையில் கடற்கரையோரம் குதிரையில் சவாரி செய்து வரும் காட்சிக்காக, அப்பகுதியில் பிரபலமான ஆவணம் என்ற ஊரிலிருந்து வெள்ளைக்குதிரை கொண்டுவரப்பட்டு படமாக்கப்பட்டது. அதற்குப்பெயரே 'ஆவணத்துக்குதிரை' என்பதுதான். அப்ப்குதியின் முக்கிய விழாக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தது.
இப்படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். 'மணிமாளிகை கண்ட மகராணியே' என்ற பாடலை ஜெயச்சந்திரன், சுசீலாவும், 'அன்பே சிந்தாமணி இன்பத்தேமாங்கனி' என்ற பாடலை மலேசிய வாசுதேவன், ஜானகியும், 'அழகான சின்னக்குட்டி ஆட்டம் ஆடுது' என்ற பாடலை எஸ்.ஜானகியும் பாடியிருந்தனர்.
1981 ல் வெளியான முத்துப்பேட்டை. முஹம்மது அலி (என்ற) பாபு மகா ராஜா கதை வசனம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் தரையில் வாழும் மீன்கள். இந்த திரைப்படத்தில் தான் நடிகை அம்பிகா அறிமுகம். நடிகை வனிதா அறிமுகம். நடிகர் விஜய்பாபு அறிமுகம். நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன் அறிமுகம். நடிகர் ராதா ரவி அறி்முகம். மற்றும் இசையமைப்பாளார் சந்திரபோஸ் இந்த படத்தில் முதன் முறையாக இசையமைத்தார்.
ReplyDelete