Wednesday, May 18, 2011

சட்டமன்றம் - புதியதும், பழையதும்

புதிய தலைமைச்செயலகக் கட்டிடம் ஒன்றைக்கட்டி, ஏற்கெனவே செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த தலைமைச் செயலகத்தையும், சட்டமன்றத்தையும் அங்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது முந்தைய (2001 - 2006) ஜெயலலிதா ஆட்சியிலேயே தீர்மானிக்கப்பட்டதுதான். அதற்காகத்தான் சென்னை கடற்கரையிலுள்ள ராணி மேரி கல்லூரியை, கையகப்படுத்தி இடிக்க முற்பட்டபோது மு.க.ஸ்டாலின் போன்றோர் போராடி கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கிண்டியிலுள்ள 'அண்ணா பொறியியல் பல்கலைக்கழக' வளாகத்தினுள் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டது. 

செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்றும், கட்டிடம் பழமையாகி விட்டதால் மழை நேரங்களில் தண்ணீர் ஒழுகி, கோப்புகள் வீணாகிறதென்றும், அதனால் இடமாற்றம் அவசியம் என்றும் முந்திய ஜெயலலிதா ஆட்சியில் காரணம் சொல்லப்பட்டது. அதோடு 2006 தேர்தல் நேரத்தில் ஜெயா டி.வி.யின் ஜெயலலிதாவின் சிறப்பு நேர்முகம் நிகழ்ச்சியில் 'உங்கள் ஆட்சியின்போது நீங்கள் செய்ய நினைத்து நிறைவேற்ற முடியாமல் போனது எதுவும் உண்டா?' என்று ரபி பெர்னார்ட் கேட்டபோது, 'புதிய தலைமைச்செயலகம் கட்ட நினைத்து அது இன்னும் நிறைவேறவில்லை. தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதைத்தொடருவோம்' என்று சொல்லியிருந்தார்.ஆனால் 2006-ல் கருணாநிதி தலைமையில் தி.மு.க.ஆட்சி அமைந்தது.

ஆக, புதிய தலைமைச்செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்ட வேண்டுமென்பது ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியிலேயே போடப்பட்ட திட்டம்தானே தவிர, கருணாநிதியின் திட்டம் அல்ல. ஆனால் ஜெ. தேர்ந்தெடுத்த 'அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு பதிலாக, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியை உள்ளடக்கிய அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயகத்தைக் கட்டினார். அதில் என்ன தவறு?.

சென்ற (2006 - 2011) ஆட்சியின்போது சட்டமன்றத்துக்கு வராமல் இருந்த ஜெயலலிதா, பழைய ஜார்ஜ் கோட்டையில் நடந்த கடைசி சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர் புதிய கட்டிடத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு வழக்கம்போல வரவில்லை. ஆனால் அவர் கட்சியைச்சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் 61 பேரும் வந்தனர். (முதல்நாள் கூட்டத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். என்ன துக்கம் நடந்து விட்டது?). ஆக, தனது கட்சியின் உறுப்பினர்கள் ஏற்கெனவே புதிய கட்டிடத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி விட்டதை அவர் அனுமதிக்கத்தானே செய்தார்?.

இப்போது (2011) சட்டமன்ற தேர்தலில் 160-க்கு 146 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் ஜெயலலிதா, புதிய சட்டமன்றக் கட்டிடத்துக்குப் போகமாட்டேன் என்று கூறி, (மிகவும் நெருக்கடியாக இருக்கிறது என்று அவராலேயே முன்பு சொல்லப்பட்ட) பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தைப் புதுப்பித்து, அங்கிருந்த செம்மொழி நூலகத்தை அகற்றிவிட்டு, மீண்டும் செலவழித்து சட்டமன்ற வளாகத்தை அமைத்து வருகிறார்.

இது எதைக்காட்டுகிறது?. ஏற்கெனவே பழைய சட்டமன்றம் நெருக்கடியாக இருந்தது என்பதும், கோடிக்கணக்கில் செலவழித்துக்கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றம், வசதியாகவும், தாராளமாகவும், நவீன வசதிகளுடனும், மற்ற மாநில சட்டமன்றங்களைப்போல அமைந்துள்ளது என்பது தெரிந்தும், வீம்புக்காக பழைய கட்டிடத்துக்கே செல்வேன், அதுவும் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்ட இருக்கைகளுக்குப் பதிலாக புதியவற்றை அமைப்பேன் என்று சொல்லி ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கதா?.

புதிய கட்டிடம் அமைப்பதில் முந்தைய தி.மு.க.அரசு ஊழல் செய்திருப்பதாகத் தெரிந்தால், அதை புதிய கட்டிடத்திலேயே வைத்து விசாரிக்க முடியாதா?.

கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டதை பயன்படுத்த மாட்டேன் என்பது சரியானால், அந்த ஆட்சியின்போது கட்டப்பட்ட பல்வேறு நீதிம்ன்ற கட்டிடங்கள், கலெக்டர் அலுவலகங்கள், பல்வேறு, பாலங்கள், மேம்பாலங்கள் அனைத்தையும் புறக்கணிப்பாரா?. இவ்வளவு ஏன்?, ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் வேனில் பயணம் செய்தாரே, அப்போது கருணாநிதி ஆட்சியின்போது கட்டப்பட்ட பாலங்களிலும் மேம்பாலங்களிலும் பயணிக்காமல் இருந்தாரா?.

தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காக அரசு எந்திரத்தையும், வரிப்பணத்தையும் விரயம் செய்யும் ஜெயலலிதா, தனது முந்தைய நடவடிக்கைகளிலிருந்து மாறிவிட்டார் என்று சொல்லப்படுவதை எப்படி நம்ப முடியும்?.

8 comments:

 1. http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_17.html
  வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!!

  இதே தான் என்னுடையே ஏன் அத்தனை வரி செலுத்துபவரின்,நாட்டுக்காக கவலைப்படும் மனிதரின் நிலைப்பாடுமே.இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?!!!

  ReplyDelete
 2. அது சரி, கட்டிடம் முழுவதும் கட்டி முடிந்ததும் திறப்பு விழா நடத்தி கூட்டத்தொடர் நடத்தியிருக்க வேண்டியது தானே? ஏன் அவசர அவசரமாக தோட்டாதரணியைப் பிடித்து செட் போடச்சொல்லி திறப்பு விழா நடத்த வேண்டும்? அடுத்தமுறை முதல்வராவோமோ இல்லையோ என பயந்து, தன் பெயர் திறப்புவிழாக் கல்லில் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காக மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செட்போடச் செலவழித்தது சரியா?

  ReplyDelete
 3. அன்புள்ள சாரூ,
  மிகத்தெளிவாகவும் அழுத்தமாகவும் உங்கள் கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள்.மிகவும் அருமை.
  ஒருவேளை நீங்கள் கேட்டதிற்கு பயந்துதானோ என்னமோ அம்மா இன்று இதைப்பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதை படிக்கவும்.
  மற்றபடி இந்த ஆட்சியில் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது.அம்மா அதே அம்மாதான் ஆனால் இவ்வளவு ஊழல செய்த பிறகு மீண்டும் மு.க வந்திருந்தாள் நம் ஜனநாயகமே கேலிக்கூத்தாக மாறியிருக்கும்.அந்த அளவில் நம் மானம் தப்பித்தது.
  தி.மு.க, அ(தே)தி.மு.க இரண்டும் ஒரே அளவிலும்,ஒரே டிசைனைக்கொண்டும் கட்டப்பட்டுள்ள twin towers! ஒரே வித்தியாசம்: ஒன்று மஞ்சள் கலர் மற்றொன்று பச்சைக்கலர் வர்ணம் பூசப்பட்டுள்ளது!

  ReplyDelete
 4. அன்புள்ள கீதப்ரியன், கிஷோர் மற்றும் கன்பத்....
  தங்களின் மேலான மறுமொழிகளுக்கு மிக்க நன்றி.

  கீதப்ரியன் & கன்பத்...
  பதிவுக்கு ஆதரவாக கருத்தளித்தமைக்கு நன்றி. மக்கள் பணத்தை வீணடிப்பதில் கழகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல.

  கிஷோர்,
  கருணாநிதி அப்படிப்பட்ட அவசரகோலங்களில் செயல்பட்டதற்காக தேர்தலில் மோசமாக தோற்கடிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிய கட்டிடடம் கட்டியதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருப்பின் அது குறித்து சட்டத்துக்கு முன் பதிலளிக்க வேண்டிய நிலையிலும் உள்ளார்.

  தவிர, திறப்புவிழாவின்போது அரைகுறையாக இருந்தபோதிலும் தற்போது பெருமளவில் வேலைகள் முடிந்து விட்டன.

  இருப்பினும், கருணாநிதி செய்த தவறுகளைச்செய்ய மாட்டேன் என்று மக்கள் முன் உறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, பதவியேற்றதும் செயல்படுத்தும் முதல் செயல்பாடே, தன் சொந்த விருப்பு வெறுப்புக்காக 100 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் பாழாகும் செயலாக இருக்க வேண்டுமா?. ஆயிரம் கோடிகளைச் செலவழித்துக் கட்டியாயிற்று. அப்படியிருக்க அதை எந்தவித நியாயமான காரணமும் இன்றி நிராகரிக்க வேண்டுமா? என்பதுதான் நமது கேள்வி.

  ReplyDelete
 5. புதிய தலைமைச் செயலகம் பாதுகாப்பானதா?
  (துக்ளக் -- 26/05/11)

  ‘சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை, புதிதாகப் பதவி ஏற்ற முதல்வர் ஜெயலலிதா பிடிவாதத்தால் புறக்கணிக்கிறார்; அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான், அவர் அங்கு செல்லவில்லை’ என்ற ரீதியில், பல்வேறு குற்றச்சாட்டுகளை தி.மு.க. சார்பான அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் கூறி வருகின்றனர். நமக்கு இது சம்பந்தமாகச் சில ஆராயத்தக்க தகவல்கள் கிடைத்துள்ளன.

  ஓமந்தூரார் எஸ்டேட்டிலுள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தின் லட்சணத்தைப் பற்றி 6.5.2011 அன்று விஜயசேகர் என்ற தீயணைப்புத் துறை இணை இயக்குனர் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் (கடித எண் RC No.1683/B/2011), புதிய தலைமைச் செயலகத்தில் அவசர காலப் பாதுகாப்பு விதிகளுக்குட்பட்ட, 25 முக்கிய தேவைகளுள் 24 இல்லாதிருப்பதைச் சுட்டிக் காண்பித்திருக்கிறார்.

  தீ விபத்து நேர்ந்தால், அதிலிருந்து முக்கியஸ்தர்கள் காப்பாற்றப்படுவதற்கு இன்றியமையாத முக்கிய வசதிகள் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லாதிருப்பதையும் சுட்டிக் காண்பித்திருக்கிறார்.

  விந்தை என்னவென்றால், இந்த அறிக்கையை (Letter Nos.11256/ Buildings 2011 & DFRS RC No.03/ Camp/DFRS/11) கேட்டுப் பெற்றது முந்தைய தி.மு.க. அரசுதான்.

  அக்கடிதத்தின் முக்கியப் பகுதிகள்:

  (1) கட்டிடத்தில் தேவைக்கேற்ப தீயணைப்பு இயந்திரங்கள் இல்லை. இருக்கும் இயந்திரங்கள் செயல்படும் திறன் கொண்டவை அல்ல.

  (2) தீயணைப்புப் பணிகளுக்குப் பயன்படும் குழாய்கள் போன்றவை இருந்தும், அவை பயன்படுத்தப்படும் நிலையில், இணைப்புகளுடன் இல்லை.

  (3) தேவைக்கேற்ப தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டிய கொள்ளளவு கொண்ட மேல் டாங்குகள் வழியாக வரும் தண்ணீரைத் தெளிக்கும் இயந்திரங்கள், அவற்றை இயக்கும் கம்ப்யூட்டர்கள், இவற்றை எல்லாம் ஒன்று சேரப் பயன்படுத்த உதவும் இணைப்புகள், புகை உணர்வுக் கருவிகள், முக்கியஸ்தர்களின் அறைகள் மற்றும் சட்டசபை மண்டபம் ஆகிய இடங்களில் தேவையான இதர தீயணைப்பு ஏற்பாடுகள், கட்டிடத்திலிருந்து அவசரமாக வெளியேறத் தேவையான வண்டிகள், பேட்டரியில் இயங்கும் லிஃப்ட்கள், புகை சூழ்ந்துள்ள நேரங்களில் பளிச்சென்று வழிக்காட்டும் திசைகாட்டிப் பலகைகள் – ஆகியவற்றில் பல உபகரணங்கள் இல்லை; அல்லது தேவைக்கு மிகவும் குறைவாகவே உள்ளன.

  ‘இந்தக் கட்டிடம் மகாபாரதத்தில் வரும் அரக்கு மாளிகை போன்றுள்ளது’ என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

  – வெங்கட்

  ReplyDelete
 6. புதிய கட்டிடத்திற்குப் போகாதது, தவறா? – என். முருகன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு)

  தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிடத்திலிருந்து, அண்ணாசாலையில் கட்டப்பட்ட நவீன கட்டிடத்திற்கு மாற்றும் திட்டத்தை, அவசர கோலத்தில் முந்தைய தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தியது. இந்தப் புதிய கட்டிடம் 9 லட்சத்து 50,000 சதுர அடியில் அமையும் என்று திட்டமிடப்பட்டது. முதலில் ரூ.500 கோடி செலவாகும் என்று கூறி, பிறகு ரூபாய் 1200 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.


  இந்தத் திட்டத்தில் தேவைக்கு மீறிய அவசரத்தையும் ஆர்வத்தையும் அன்றைய முதல்வர் காட்டும்போதே, நடுநிலையாளர்கள் பலரும் அதை எதிர்த்தனர். இப்போது புதிய அ.தி.மு.க. அரசு அமைந்த பின், தலைமைச் செயலக அலுவலகத்தை பழைய இடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றி விட்டார்கள். இதைப் பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களில் பலரும் எதிர்க்கின்றனர். அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தி.மு.க. ஆதரவு அணியில் இருப்பவர்கள் என்பதால் அவர்களது எதிர்ப்பு புரிகிறது.

  ஆனால், இந்த விஷயத்தில் முழுப் பின்னணியும் தெரியாத பொது மக்களில் பலர், ‘நிறையச் செலவு செய்து, மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு, பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட ஒரு தலைமைச் செயலகக் கட்டிடத்தை, தனக்கு வேண்டாத முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டினார் என்ற ஒரே காரணத்திற்காக பழைய இடத்திற்கு மாற்றலாமா?’ என்று கேட்கிறார்கள்.

  பிரதமர் மன்மோகன் சிங் புதிய சட்டமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கும்போது, மூன்றில் ஒரு பங்கு கட்டிட வேலைகள்தான் முடிவடைந்திருந்தன. குறிப்பாகப் புதிய கட்டிடத்தின் மேற்கூரை கோபுரம் கட்டி முடிக்கப்படவில்லை. சினிமா செட் அமைக்கும் தோட்டா தரணி என்பவரால், ரூபாய் மூன்று கோடி செலவில் மேற்கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது. சினிமா செட்டிங் போல, திறப்பு விழா முடிந்த பின், அந்த செட் கலைக்கப்பட்டு விட்டது. ரூபாய் 3 கோடியும் பாழ். இக்கட்டிடத்தில் முதல் சட்டசபைக் கூட்டம் 19.3.2011 அன்று அவசர கதியில் நடத்தப்பட்டது. அப்போது சட்டமன்ற அறையில் தரைக் கற்கள் பதித்து சரியாக முடிக்கப்படாததை மறைக்க, ஒரு தரை விரிப்பு போடப்பட்டிருந்தது. முதல் மாடி கேலரி முடிக்கப்படாததால், அதை மறைக்கப் பெரிய திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. சபாநாயகருக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டு சபை நடந்தது.

  இந்த லட்சணத்தில் இக்கட்டிடத்தைக் கட்டி முடித்த தொழிலாளர்களுக்குப் பிரியாணி விருந்தும், டப்பாங் கூத்து நடனங்களும் நடந்தேறின. தனிப்பட்ட முறையில் முன்னாள் முதல்வர் இந்தப் புதிய கட்டிடத்தைக் கட்டி முடிப்பேன் என்று உறுதியுடன் இருந்ததும், இந்தக் கட்டிடம் தேவையில்லை என்று இன்றைய முதல்வர் ஜெயலலிதா எதிர் கட்சியிலிருக்கும்போதே கூறியதும் நம் கவனத்திற்கு வருகிறது.

  இன்றைய முதல்வர் முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகக் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு நடவடிக்கை தொடங்கியது. சுற்றுச் சூழல் துறையின் பொறுப்பில் இருந்த தி.மு.க.வின் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, பல தடைகளை ஏற்படுத்தி அத்திட்டம் நடைமுறைக்கு வராமல் செய்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆக, இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்பதால்தான், இந்த கட்டிடத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனை என்ற வகையில் தி.மு.க. விளம்பரப்படுத்தியது.

  தமிழகத்தின் பல பகுதி மக்களும் சென்னைக்குச் சுற்றுலா வந்து, இதைக் கண்டு களிக்க வேண்டும் என்ற கடிதத்தை முதல்வர் முரசொலி பத்திரிகையில் எழுதியபோது, நடுநிலையாளர்கள் பலரும் முகம் சுளித்தனர். தான் ஆட்சிக்கு வருவோமா மாட்டோமா என்ற சந்தேகம் முன்னாள் முதல்வரின் மனதில் ஓட – ‘நான் ஆட்சிக்கு வந்தால், பழையபடி சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றி விடுவேன்’ என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா தெளிவாகக் குறிப்பிட்டதை கவனத்தில் கொண்டு – பழைய சட்டசபைக் கட்டிடத்தின் உள்புற அமைப்பை இடித்து, செம்மொழி நூலகமாக மாற்றினார் கருணாநிதி.

  இந்தச் சூழ்நிலையில் தி.மு.க. தோற்றுப் போனது. தலைமைச் செயலகத்தை புதிய அரசு ஆய்வு செய்தபோது, அரசின் 36 துறைகளில் 6 துறைகள் மட்டுமே புதிய கட்டிடத்திற்கு போர்க்கால வேகத்தில் மாற்றப்பட்டிருந்தன. இந்த 6 துறைகளின் கோப்புகள் கூட, பல முடிச்சு அவிழ்க்கப்படாத மூட்டைகளாகக் கிடந்தன. மிகவும் மோசமான நடவடிக்கையாக, 30 துறைகள் பழைய கட்டிடத்திலும், 6 துறைகள் புதிய கட்டிடத்திலும் செயல்பட்டன. துறைச் செயலர்களின் கூட்டம் புதிய கட்டிடத்தில் நடந்தால், புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து பெருவாரியான அதிகாரிகள் புதிய கட்டிடத்திற்கு வந்து கலந்து கொள்ளும் சூழ்நிலை நிலவியது.

  ReplyDelete
 7. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, எல்லாத் துறைகளையும், சட்டமன்றத்தையும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றியது இன்றைய அரசு. இதில் இன்றைய முதல்வரின் காழ்ப்புணர்ச்சி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

  ‘1967-ஆம் ஆண்டு அண்ணாதுரை முதல்வராகப் பதவி ஏற்றபோது, அவருக்கு முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விடுதியை அவர் ஏற்றுக் கொண்டது போல், புதிய சட்டசபை வளாகத்தையும் இன்றைய முதல்வர் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 1967-ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி, எந்த கருத்து வேறுபாடுகளும் இன்றி உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடம். அந்த உதாரணம் இன்றைய புதிய சட்டசபை வளாகப் பிரச்சனைக்குப் பொருந்தாது.

  சென்னையின் பல இடங்களில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களை, புதிய சட்டசபை கட்டிடத்திற்கு மாற்றலாம். போதிய இடவசதி இல்லாத மருத்துவமனைகள், கல்லூரிகள், ஆராய்ச்சித் துறைகள் ஆகியவற்றையும் இங்கு மாற்றலாம். அல்லது புதிய அரசுத் துறைகள் ஆரம்பிக்கும்போது இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  ஒரு விஷயத்தில் சரியான உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது, பின் அதை நிறைவேற்றுவது என்ற குணம் ஜெயலலிதாவிற்கு உண்டு. அதை இந்த விஷயத்திலும் அவர் கடைப்பிடித்திருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  --துக்ளக் - 03/06/11 --என். முருகன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு)

  ReplyDelete
 8. முதல்வர் பதவி ஏற்கனவே கருணாநிதி உட்கார்ந்த பதவிதான்.. அதனால் அதை வேண்டாம் என்று மறுத்து
  விடவில்லையே.. காப்பீடு, மெட்ரோ ரயில், எல்லாம்
  ஓரம் கட்டப்பட்டுவிட்டது. மெட்ரோ ரயில் பில்லாகள்
  ரோட்டை அடைத்து கொண்டு நிற்கின்றன. இனிமே மோனோ ரயிலுக்கு தனியாக பள்ளம் தோண்டுவார்களா?
  மே-13ந் தேதி.. ஜெயித்தவுடன் ஜெயலலிதா அளித்த
  பேட்டியில் தமிழக கஜானா காலி என்றார். பழைய சட்ட சபை கட்டிடத்துக்கு நூறு கோடி, பாடப் புத்தகங்கள் அச்சடிக்க இருநூறு கோடி.. எங்கிருந்து வந்தது என தெரியவில்லை..
  - வி.யோகானந்த்

  ReplyDelete