Saturday, May 21, 2011

ஒரு ரூபாய் சம்பளம்

ஒரு ரூபாய் சம்பளம் துவங்கியது எப்போது...?

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது நமக்குத்தெரியும். ஆனால் அந்த ஒரு ரூபாய் சம்பளம் துவங்கியது எப்போது தெரியுமா?.

கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் சொன்ன விவரம்....

முக்தா வி.சீனிவாசன் இயக்கத்தில், வித்யா மூவீஸின் 'சூரியகாந்தி' படத்துக்கு நான் கதை வசனம் எழுதியிருந்தேன். அது கதாநாயகிக்கு நல்ல ஸ்கோப் உள்ள சப்ஜெக்ட் ஆதலால் அந்த ரோலுக்கு ஒரு பெரிய நட்சத்திரத்தை போடலாம் என்று முடிவடுத்து, யாரைப்போடலாம் என்ற ஆலோசனையின் போது கலைச்செல்வி ஜெயலலிதாவை நடிக்க வைக்கலாம் என்று யோசனை சொன்னேன். முக்தா தயங்கினார். 'என்னுடைய பொம்மலாட்டம் படத்தில் நடித்தபோது அவர் இருந்த ஸ்டேஜ் வேறு. ஆனா இப்போ அவர் பெரிய நட்சத்திரம். இப்போ அவர் வாங்கும் சமபளம் எல்லாம் கொடுக்க நமக்கு கட்டுபடியாகாது' என்றார்.

நல்ல ரோலாக இருப்பதால் ரேட்டில் நான் கன்வின்ஸ் பண்றேன், நீங்க மட்டும் சம்மதம் கொடுங்க என்று நான் சொல்ல முக்தா சம்மதித்தார். ஜெயலலிதா வீட்டுக்குப்போய் கதை சொன்னேன். அவருக்கும் ரோல் பிடித்துப்போகவே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது செல்போனெல்லாம் கிடையாது, ஆகவே ஜெயலலிதா வீட்டிலிருந்தே முக்தா சீனிவாசனுக்கு போன் செய்து ஜெ. நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதைச் சொன்னேன். அதற்கு அவர் 'அம்மு இப்போ ஒரு படத்துக்கு ஒரு லட்சம் வாங்குறாங்க. நமக்கு அதெல்லாம் கட்டுபடியாகாது. நம்ம படத்துக்கு முப்பதாயிரம் ரூபாய்தான் தர முடியும். அதற்கு சம்மதமான்னு கேளுங்க' என்று சொல்ல, நான் போனை கட் பண்ணாமல் கையில் ரிஸீவரை வைத்துக்கொண்டே ஜெயலலிதா அவர்களிடம் விவரத்தைச்சொல்ல, அவர் போனை என் கையிலிருந்து வாங்கி, "டைரக்டர் சார், புரொபஸர் எல்லா விவரமும் சொன்னார். இந்தப்படத்தில் நடிக்க என்னுடைய சம்பளம் 100 நயா பைசா, அதாவது ஒரு ரூபாய். சரியா?. மேற்கொண்டு ஆக வேண்டியதைப்பாருங்க" என்று போனை வைத்து விட்டார்.

'சூரியகாந்தி' படம் வெற்றிகரமாக ஓடி 100வது நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள் கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கினார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து முக்தா சீனிவாசன் ஜெயலலிதா அவர்களுக்கு சம்பளமாக ரூபாய் நாற்பதாயிரத்துக்கு செக் கொடுத்தார். அதைப்பார்த்த ஜெயலலிதா "நான் ஒரு ரூபாய்தானே கேட்டேன்" என்று தமாஷாகச்சொல்ல, முக்தாவும் தமாஷாக "மீதி 39,999 ரூபாய் அடுத்த படத்துக்கான அட்வான்ஸாக வச்சுக்குங்க அம்மு" என்று சொல்ல அந்த சூழ்நிலையே மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஜெயலலிதாவின் ஒரு ரூபாய் சம்பளம் பற்றி எழுதும்போது, அதே போன்ற இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இது திரு வி.சி.குகநாதன் சொன்னது....

தயாரிப்பாளர், இயக்குனர் வி.சி.குகநாதன் தனது 'மஞ்சள் முகமே வருக' படத்தைத் துவங்கியபோது, அவர் கையில் இருந்தது வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே. இதைக்கொண்டுதான் முதல் நாள் படப்பிடிப்பை நடத்த வேண்டும். படப்பிடிப்புக்கு முந்திய நாள் பிரதான நடிகர் நடிகையருக்கு மட்டும் ஆளுக்கு ரூ. 100 அல்லது 150 அட்வான்ஸாகக் கொடுத்து புக் பண்ணினார். அவரது நெருக்கடியான நிலையைப் பார்த்து சிலர் அட்வான்ஸ் வேண்டாம். படம் துவங்கிய பிறகு வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லி விட்டனர். S.N.லட்சுமியம்மாவிடம் 100 ரூபாய் கொடுத்தபோது, அதில் 50 ரூபாயைத் திருப்பிக்கொடுத்து, 'இதை இன்னொருவருக்கு அட்வான்ஸா கொடுத்துக்கோ' என்று சொன்னாராம்.

இறுதியாக படத்தின் கதாநாயகனான நடிகர் முத்துராமனிடம் போய் அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும் என்று கேட்டபோது முத்துராமன், "நான் இரண்டு தொகை மனசுல நினைச்சிருக்கேன். அதுல எதைக்கேட்கலாம்னு பூவா தலையா போட்டுப்பார்ப்போம். அதுக்கு ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் கொடுங்க" என்று குகநாதனிடம் கேட்க, அவரும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டியிருக்கிறார். அதை வாங்கி பூவா தலையா போட்டுப்பார்க்காமல் தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்ட முத்துராமன், "இப்போ நீங்க கொடுத்த ஒரு ரூபாய்தான் என் அட்வான்ஸ். நீங்க போய் மற்ற வேலைகளைப்பாருங்க" என்று சொல்லி விட்டாராம்.

மிச்சமிருந்த பணத்தில் 460 ரூபாய்க்கு கருப்பு வெள்ளை பிலிம் ரோல் ஒன்று வாங்கி, மறுநாள் குறிப்பிட்டபடி ஒரு மரத்தடியில் படப்பிடிப்பைத்துவங்கி விட்டாராம். முதல்நாள் படப்பிடிப்பைப் பார்க்க வந்திருந்த விநியோகஸ்தர்களில் ஒருவர், ஒரு ஏரியாவைத்தான் வாங்கிக்கொள்வதாக விலைபேசி அப்போதே அட்வான்ஸாக ரூ. 25,000-க்கு செக் கொடுக்க, அதைக்கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினாராம் குகநாதன். (கேட்கும் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது).

திரையுலகில் எல்லோரும் இப்படி தாராள மனதுடன் நடந்துகொள்பவர்கள் அல்ல. பலர் ரொம்ப கறார் பேர்வழிகள். படப்பிடிப்பு துவங்கும் முன்னரே முழுப்பணத்தையும் வாங்கிக்கொள்ளும் சில்க் ஸ்மிதா போன்றவர்களும் இத்திரையுலகில்தான் இருந்தனர், இருக்கின்றனர்.

2 comments:

  1. சாரூஜி,

    ஒரு ரூபா சம்பளம் என்பது ஒரு குறியீடுதான்.cash ஆக ஒரு ரூபா எடுத்துக்கொண்டு மீதியை செக்காக பெற்றுக்கொள்வர்.ஒரு ரூபா சம்பளம் வாங்கி சிங்கிள் டீ கூட வாங்க முடியாது.ஆனால் சிலர் இதில் tea estate யையே வாங்கியுள்ளனர்.

    மேலும் சினிமாத்துறையில் தயை தாட்சணியம் பார்த்தால் துண்டுதான்!

    நடிகர் ஜெயசங்கரும் இளகிய மனதுகாரர் என கேள்விப்பட்டுள்ளேன்.அவர் இறந்த போது அவரிடம் bounce ஆன பல செக்குகள் இருந்தன என சொல்லக்கேள்வி!

    நாகேஷ் தன பணம் முழுதும் செட்டில் செய்தால் தான் கடைசி schedule ஐ முடித்துக்கொடுப்பாராம்!
    இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.

    மற்றபடி உங்கள் பதிவு அருமையாக இருந்தது.குறிப்பாக குகநாதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எனக்கு முற்றிலும் புதியவை.

    ReplyDelete
  2. Free Online Slots & casino games by 【FULL review and 】
    Free online casino games by Real bk8 Time Gaming. Try the gioco digitale free planet win 365 slots and casino games and get a 200% Welcome Bonus.

    ReplyDelete