Friday, February 4, 2011

மூன்று தெய்வங்கள்

நடிகர் திலகத்தின் படங்களில் சோகமே இல்லாத முழுக்க முழுக்க நகைச்சுவைப்படங்களைப் பட்டியலிட்டால் கீழ்க்கண்ட படங்கள் நிச்சயம் இடம் பெறும்.

சபாஷ் மீனா
பலே பாண்டியா
ஊட்டிவரை உறவு
கலாட்டா கல்யாணம்
சுமதி என் சுந்தரி
மூன்று தெய்வங்கள்

இதில் மற்ற எல்லாப்படங்களையும் விட மக்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத படம் என்று 'மூன்று தெய்வங்கள்' படத்தை சொல்லலாம். உண்மையில் சிறையிலிருந்து தப்பி வந்த மூன்று குற்றவாளிகளைப்பற்றிய கதை. இதே படம் பின்னர் இந்தியில் தயாரிக்கப் பட்டபோது 'தீன் சோர்' (மூன்று திருடர்கள்) என்ற பெயரிலேயே எடுக்கப்பட்டது. திருடர்களை திருடர்கள் என்ற பெயரிலேயே எடுப்பதை விட அவர்களுக்கு தெய்வங்கள் என்று பெயர் வைத்து, அவர்கள் எப்படி தெய்வங்கள் ஆகிறார்கள் என்று காட்டுவதுதானே விசேஷம்.

கதைச்சுருக்கம்:

சிறையிலிருந்து மூன்று கைதிகள் நள்ளிரவில் தப்பித்து வரும் காட்சியோடு படம் துவங்குகிறது. சிவா (சிவாஜி), முத்து (முத்துராமன்), நாகு (நாகேஷ்) ஆகியோர்தான் அந்த மூன்று கைதிகள். (அவரவர்கள் பெயரில் பாதியையே பாத்திரத்துக்கு வைத்து விட்டார்கள்). எப்படிப்பட்ட பூட்டையும் உடைத்து திருடக்கூடிய  கைதேர்ந்த திருடன் சிவா, சந்தேகத்தினால் மனைவியைக் கொலை செய்த முத்து, யாருடைய கையெழுத்தையும் சுலப்மாகப்போட்டு 'ஃபோர்ஜரி' பண்ணக்கூடிய நாகு மூவருமே அந்த கைதிகள். தப்பி வந்த அவர்கள் எங்கே அடைக்கலம் புகுவது என்ற யோசனையில், சுப்பையாவின் கடையில் ரெடிமேட் துணிகலை திருடி போட்டுக்கொண்டு நிற்க, அவர்கள் ஓடு மாற்ற வந்தவர்கள் என்று நினைக்கும் சுப்பையா, பின்னர் அவர்களின் சேவையில் மகிழ்ந்து போய் அடைக்கலம் கொடுக்கிறார். தங்களுக்கு இப்படி ஒரு அருமையான அடைக்கலம் கிடைத்ததை எண்ணி மகிழும் அவர்கள் அதை இழக்க விரும்பாமல் அக்குடுமபத்தின் அனைத்து வேலைகளையும் தங்கள் தலையில் இழுத்துப்போட்டு செய்து, அக்குடும்பத்துடன் ஒன்றி விடுகிறார்கள். வீட்டு வாசலில் கடை வைத்து நடத்திவரும் சுப்பையா, கடை நிர்வாகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்கிறார்.

இந்நிலையில் சுப்பையாவுடைய மகள் சந்திரகலா சிவகுமாரைக் காதலிக்கிறார். சிவகுமாரை வளர்த்து வரும் அவருடைய பெரியப்பா (வி.கே.ராமசாமி) வடிகட்டிய கஞ்சன். சிவகுமாருக்கு தான் செய்த செலவுகள் அனைத்தையும் ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு, அந்தப்பணம் முழுவதையும் வரதட்சணயாக தருபவரின் பெண்ணுக்கே சிவகுமாரை திருமணம் செய்து வைப்பதாக கண்டிஷன் போட்டிருப்பார். சிவகுமாரோ பெரியப்பாவுக்கு பயந்த பிள்ளை. இந்த கண்டிஷனை மறைந்திருந்து கேட்கும் சிவா, முத்து, நாகு மூவரும் இதற்கு ஒரு வழி பண்ணி சிவகுமாரையும் சந்திரகலாவையும் சேர்த்துவைக்க தீர்மானிக்கிறார்கள்.

இதற்கிடையே, சுப்பையாவுக்கு வட்டிக்கு கடன் கொடுத்திருக்கும் எம்.ஆர்.ஆர். வாசு, தன்னுடைய (கிறுக்கு) மகன் மூர்த்திக்கு சந்திரகலாவை திருமணம் செய்து தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சுப்பையாவை கடனுக்காக கோர்ட்டுக்கு இழுப்பேன் என்றும் மிரட்ட, சுப்பையா ஆடிப்போகிறார். ஆனால் இம்மூவரும் அவரை பயப்பட வேண்டாம் என்றும், தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

முதலில் வாசு வீட்டுக்கு நள்ளிரவில் போகும் சிவாவும் நாகுவும், கடன் பத்திரத்தை திருடி, அதில் பூராக் கடனையும் பெற்றுக்கொண்டதாக எழுதி வாசுவைப்போல கையெழுத்துப்போட்டு வைத்து விட்டு வருகிறார்கள் (அதுக்குத்தான் யாருடைய கையெழுத்தையும் போடும் நாகேஷ் இருக்கிறாரே). அடுத்து வி.கே.ஆர்.வீட்டுக்கு நள்ளிரவில் புகுந்து, பணத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள் (பூட்டை உடைக்கும் சிவாவின் கைங்கர்யத்தால்). மறு நாள் மாறு வேடத்தில் சந்திரகலாவின் வெளிநாட்டு மாமன்கள் என்று சொல்லிக் கொண்டு வி.கே.ஆர் வீட்டுக்குப்போய், அவரிடம் கொள்ளையடித்த பணத்தை அவரிடமே வரதட்சணையாக கொடுத்து விட்டு, திருமணத்துக்க சம்மதம் வாங்கி வருகிறார்கள். பணம் தந்தது சுப்பையாவுக்கு தெரியக்கூடாது என்றும் வி.கே.ராமசாமியை எச்சரித்து விட்டு வருகிறார்கள்.

நடப்பது எல்லாம் சுப்பையாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. பெண்பார்க்கும் படலம் எல்லாம் முடிந்து திருமண நாள் அன்று இம்மூவருக்கும் சோதனை ஏற்படுகின்றது. திருமணத்துக்கு, விகேஆரின் நண்பரான ஜெயிலர் வருகிறார். அதை மூவரில் ஒருவர் பார்த்துவிட்டு மற்றவர்களிடம் சொல்ல, மூவரும் மணப்பந்தலுக்கு வராமல் உள்ளேயே பதுங்கிக்கொள்கிறார்கள். பந்தலுக்கு அவர்கள் வந்தே ஆக வேண்டும் என்று சுப்பையா தம்பதியர் வற்புறுத்த, வேறு வழியில்லாமல் அவகளிடம் மட்டும் தாங்கள் யார் என்று சொல்லி, தாங்கள் இப்போது பந்தலுக்கு வந்தால் ஜெயிலர் கண்களில் மாட்டி, உண்மை வெளியாகி, அதனால் இவ்வளவு சிரமப்பட்டு ஏற்பாடு செய்த திருமணம் நின்று போய் விடும் என்று கூறி, தாங்கள் மூவரும் யாருக்கும் தெரியாமல் போக விரும்புவதாக கூறி வெளியேறுகின்றனர். 'உங்களையே குற்றவாளிகள் என்றால், உலகில் யார்தான் நல்லவர்கள்' என்று கண்கலங்கும் சுப்பையா தம்பதியர் அவர்களுக்கு பிரியா விடை கொடுக்கின்றனர்.

திருமண வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் எங்கே போவது என்று யோசித்து, தாங்கள் வந்த இடத்துக்கு (சிறைச்சாலைக்கு) திரும்பி செல்வதே சரியென்று முடிவெடுக்கின்றனர். (இதே முடிவை கல்யாண வீட்டில் எடுத்திருந்தால் கல்யாணம் நின்று போயிருக்கும்). அதன்படி அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று சரணடைகின்றனர். சந்திரகலாவின் கழுத்தில் தாலி கட்டப்படும் அதே நேரத்தில் இவர்கள் கைகளில் விலங்குகள் பூட்டப்பட, இரண்டையும் மாற்றி மாற்றி காண்பிக்கும் காட்சியில் இயக்குனர் நிற்கிறார். காவல் நிலையத்திலிருந்து சிறைச்சாலைக்கு ஜீப்பில் போகும்போது எதிரில் திருமண ஊர்வலம் வர ஜீப் ஒதுங்கி நிற்கிறது. சிவகுமாரையும் சந்திரகலாவையும் திருமண கோலத்தில் (யாருக்கும் தெரியாமல்) பார்த்து விலங்கு பூட்டிய கைகளுடன் அவர்கள் ஆசீர்வதிக்க, திருமண ஊர்வலம் கடந்து போனதும் புறப்படும் ஜீப் இருட்டில் சென்று மறைய, அதுவரை நம் கண்களில் கோர்த்து நின்ற கண்ணீர் முத்துக்கள் சட்டென்று நம் கன்னங்களில் வழிய.......... திரையில் "வணக்கம்".

படம் முழுக்க நகைச்சுவையால் நம் வயிறு குலுங்க சிக்க வைத்த்வர்கள் கடைசி பதினைந்து நிமிடங்கள் நம் மனத்தை உணர்ச்சி மயமாக்கி விடுவார்கள். (அது என்னவோ நடிகர் திலகத்தின் படமென்றால், அது நகைச்சுவைப் படமேயானாலும் இறுதியில் உணர்ச்சிகளின் சங்கமத்தோடுதான் அரங்கை விட்டு வெளியே வரவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும். அதற்கு இப்பட்மும் தப்பவில்லை).

இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய கட்டம். ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரியான வி.எஸ்.ராகவனிடம் ஜெயிலர் சிவா, முத்து, நாகு மூவரின் படத்தைக்காட்டி 'இவர்களைப் பார்த்ததுண்டா' எனக் கேட்க, தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வீட்டிற்குச்செல்வார் வி.எஸ் ராகவன். அப்போது ஒரு குழந்தை பீரோ ஒன்றுக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள அது தானாக பூட்டிக்கொள்ளும். யார் யாரோ என்னென்னவோ முயற்சி செய்து பார்க்க, அந்நேரம் வி.எஸ்.ராகவன் அங்கு வர, எந்தப்பூட்டையும் திறக்கும் சாமர்த்தியம் கொண்ட சிவாஜி, அவரைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நிற்பார். அவர் கண்முன்னே பீரோவைத் திறந்தால் வலிய மாட்டிக்கொள்ள நேரிடும். இருந்தாலும் குழந்தையின் அழுகுரலில் நெகிழ்ந்து போகும் சிவாஜி, என்ன ஆனாலும் சரியென்று பூட்டை திறந்து விடுவார். திரும்பிப் பார்த்தால் அங்கு வி.எஸ்.ஆர் இல்லை. சிவாவின் மனிதாபிமானத்தில் மனம் கனத்துபோன ராகவன், ஜெயிலரிடம் சென்று 'நான் சொன்ன ஆட்கள் இவர்களில்லை. இது வேறு யாரோ' என்று சொல்லி அவரை அனுப்பி விடுவார்.

நடிகர் திலகம் இப்படத்தில் முழுக்க முழுக்க ஜோடியில்லாமல் நடித்திருப்பார். அவர் மட்டுமல்ல முத்துராமன் நாகேஷ் இவர்களுக்கும் ஜோடி கிடையாது. இந்தப்படத்தின் கதையமைப்பின் படி இவர்களுக்கு ஜோடி கொடுத்திருந்தால் கதையோட்டத்துக்குப் பொருந்தாது என்று நினைத்ததுதான் காரணம். எனவே, சிறையிலிருந்து தப்பி வந்தவர், வந்து தங்கிய இடத்தில் ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்டார் என்று கதையமைத்து, கூடவே கனவில் இரண்டு டூயட் பாடுவது போன்ற அபத்தமான கற்பனைகளையெல்லாம் கதாசிரியரும் இயக்குநரும் புகுத்தவில்லை. நடிகர் திலகமும் தனக்கு ஜோடி இருந்தே ஆக வேண்டும் என்றும் வற்புறுத்தவில்லை.

பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, 'மெல்லிசை மாமன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசைய‌மைத்திருந்தார். முதல் பாடல், சந்திரகலா குளித்துக்கொண்டே பாடும் "தேன் மழையிலே மாங்கனி நனைந்தது" பாடலை பி.சுசீலா தனித்துப் பாடியிருப்பார்.

சிவகுமார் சந்திரகலா ஜோடியாகப்பாடும் "முள்ளில்லா ரோஜா... முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்" அந்த நாளைய (இளைய) எஸ்.பி.பி.யின் குரல் நம்மை மயக்கும். கூடவே சுசீலா மேடமும்.

சீர்காழியின் கணீர் குரலில், சுப்பையா பாடுவதாக வரும் "திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா" என்ற பாடல், சுப்பையாவின் பீரோவைத் திறந்து மூவரும் கொள்ளையடிக்க முற்படும் வேளையில் இப்பாடல் ஒலிக்க, மூவரும் மனம் மாறி பூஜையறைக்கு வருவதும், பின்னர் திருப்பதி போகும்போது சுப்பையா இவர்களிடமே கடை வியாபாரத்தை ஒப்படைத்துப் போகும்போது மூவரும் நெகிழ்ந்து போய், சுப்பையா குடுமபத்துக்கு உண்மையாக நடக்க உறுதியெடுப்பதும் நெகிழ்ச்சியூட்டும் இடங்கள்.


விகேஆரிடம் வெளிநாட்டு மாமன்களாக மாறு வேடம் போட்டுச் செல்லும் மூவரும், மாறு வேடத்தில் பாடும் "நடப்பது சுகம் என நடத்து" என்ற பாடல் சுவையானதுதான். ஏனோ மக்களைச் சென்றடையவில்லை. அது போலவே வாசுவின் கிறுக்கு மகன் மூர்த்தியுடன் சந்திரகலா பாடும் "நீயொரு செல்லப்பிள்ளை... நானொரு வண்ணக்கிள்ளை..." பாடலும் நல்ல மெட்டமைப்பு. ஆனால் இலக்கை எட்டவில்லை.

தீபாவளிக் கொண்டாட்ட‌த்தின்போது, சுப்பையா குடுமபத்துடன் மூவரும் பாடும் "தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்" பாடலும் நம் மனதில் நிற்கும். (ஆனால் இப்பாடலுக்கு நடிகர் திலகம் அணிந்திருக்கும் MEROON கலர் ஜிப்பா, அவருக்கு கொஞ்சம் கூட பொருந்தாது).

ஆனால் இவையெல்லாவற்றுக்கும் சேர்ந்தாற்போல, அந்த வருடத்தில் சுசீலாவின் மாபெரும் HIT பாடல்களில் ஒன்றான "வசந்தத்தில் ஓர் நாள்" பாடலின் வரிகளும், மெட்டமைப்பும், காட்சியமைப்பும் அருமையோ அருமை. தன்னைப் பெண் பார்க்க வந்த இடத்தில் சிவகுமாரின் பெரியப்பா விகேஆர், ஒரு பாடல் பாடும்படி தன் வருங்கால மருமகள் சந்திரகலாவிடம் கேட்க... அவரது கற்பனை விரிகிறது. ஒருபக்கம் விகேஆரின் பணத்தாசை விரட்ட, மறுபக்கம் வாசுவின் கெடுபிடி நெருக்க, எங்கே தங்களின் காதல் திருமணத்தில் முடியுமோ முடியாதோ என்ற ஏக்கத்தில் இருந்த தனக்கு, எங்கிருந்தோ வந்து தன்னுடைய திருமணத்தை நடத்த அம்மூவரும் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு, அவர்கள் மனிதர்கள் என்ற நிலையைத் தாண்டி தன் கண்ணுக்கு தெய்வங்களாகத் தெரிய......

சிவா, முத்து, நாகு மூவரும் முறையே திருமால், சிவன், பிரம்மாவாக வந்து நடத்தி வைக்கும் சீதா ராம கல்யாணம் கதாசிரியர் மற்றும் இயக்குனரின் அபார கற்பனை.

வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ... தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பாட‌லாசிரிய‌ரும், இசைய‌மைப்பாள‌ரும், இய‌க்குந‌ரும், ந‌டித்த‌வ‌ர்க‌ளும் போட்டி போட்டுக்கொண்டு இப்பாட‌லில் விஸ்வ‌ரூப‌ம் எடுத்து நிற்க‌, அர‌ங்க‌த்தில் இருந்த‌ ர‌சிக‌ர்க‌ள் எப்ப‌டி ர‌சித்தார்க‌ள் என்ப‌த‌ற்கு, பாட‌ல் முடிந்த‌தும் எழும் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லே சாட்சியாக‌ அமைந்த‌து

இப்படத்தில் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, ருக்மணி, எம்.ஆர்.ஆர்.வாசு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சிவகுமார், சந்திரகலா, ஜெயகௌசல்யா (சுப்பையாவின் கண்ணில்லாத மகள்), வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன் என பலரும் நடித்துள்ளனர்.

'ஸ்ரீ புவனேஸ்வரி மூவீஸார்' தயாரித்த மூன்று தெய்வங்கள் படத்துக்கு 'சித்ராலயா' கோபு திரைக்கதை வசன‌ம் எழுதியிருந்தார். (கோபு இருக்கும் இடத்தில் சிரிப்பு இல்லாமல் இருக்குமா. இவர் அடுத்த ஆண்டில் (1972) 'காசேதான் கடவுள‌டா' படம் மூலமாக இயக்குநர் ஆனார்). நடிகர் திலகத்தின் காவியப்படங்களான 'இரத்தத் திலகம்', 'புதிய பறவை' படங்களை இயக்கிய தாதாமிராஸி, மூன்று தெய்வங்கள் படத்தை இயக்கியிருந்தார். கொஞ்சம் கூட போரடிக்காமல் இரண்டரை மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக அமைத்திருந்தார். நடிகர் திலகத்தின் படங்களில் மிகச் சிக்கனமாக தயாரிக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

1971 ஆகஸ்டு 15 அன்று வெளியான் இப்படம் சென்னை சித்ரா, மகாராணி, மேகலா, ராம் ஆகிய நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. எல்லா அரங்குகளிலும் ஐம்பது நாட்களைக்கடந்து ஓடிய இப்படம் அதிக பட்சமாக திருச்சி ஜூபிடர் மற்றும் மதுரையில் 10 வாரங்களைக் கடந்தது. நடிகர்திலகத்தின் பொழுதுபோக்குப்படங்களில் 'மூன்று தெய்வங்களுக்கு' நிச்சயம் இடம் உண்டு.

'மூன்று தெய்வங்கள்' திரைப்படத்தைப் பற்றிய என்னுடைய பதிவைப் படித்த நல் இதயங்களுக்கு நன்றி.

 

1 comment:

  1. ஹிந்தியில் தீன் தெவியன் என்ற பெயரில் படம் வெளியானதாக நினைவு. நீயொரு செல்லப் பிள்ளை பாடல் எல் ஆர் ஈஸ்வரி பாடிய சுவாரஸ்யப் பாடல்களில் ஒன்று. தாயெனும் செல்வங்கள் இன்றும் என் செல்லில் வைத்து நான் கேட்கும் பாடல். சுசீலாவின் வசந்தத்தில் ஓர் நாள் பாடலும் அருமையான பாடல். இந்தப் பாடலைச் சொன்னால் எனக்கு உடனே நினைவுக்கு வரும் இன்னொரு சுசீலா பாடல் ரோஜாவின் ராஜா படத்தில் வரும் ஜனகனின் மகளை மணமகளாக ...பாடல்.

    ReplyDelete