Tuesday, February 8, 2011

எங்க மாமா

நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா' வுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அழகான கதை, நடிகர் திலகத்தின் அழகிய தோற்றம் மற்றும் அருமையான நடிப்பு, துறு துறுவென மழலைப்பட்டாளங்கள், அழகான கதாநாயகிகளாக ஜெயலலிதா மற்றும் நிர்மலா ('வெண்ணிற ஆடை' நமக்குத் தந்த இரு பரிசுகள்), வில்லனாக பாலாஜி (ரொம்ப பேர் இதை அவருடைய சொந்தப்படம் என்றே நினைத்திருக்கிறார்கள்), நகைச்சுவையில் கலக்கும் சோ, தேங்காய் மற்றும் ஏ.கருணாநிதி, என்றென்றைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அருமையான பாடல்கள் என பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஒரு அழகான படம்தான் 'எங்க மாமா'.


'ஜேயார் மூவீஸ்' என்ற நிறுவனம் இதற்கு முன் 'வேறொரு' கறுப்பு வெள்ளைப் படத்தை தயாரித்த பிறகு, நடிகர் திலகத்தை வைத்து வண்ணத்தில் தயாரித்த படம் இது. (இதன் பிறகு இதே நிறுவனம் நடிகர் திலகத்தை வைத்து 'ஞான ஒளி', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களைத் தயாரித்தனர். அவையிரண்டும் நூறு நாட்களைத் தாண்டி ஒடின).
                      
'எங்க மாமா' திரைப்படம் இந்தியில் வெளியான 'பிரம்ம்ச்சாரி' என்ற படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தியில் ஷம்மி கபூர், ராஜஷ்ரீ, மும்தாஜ், பிரான் ஆகியோர் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்:

திருமணம் ஆகாத 'கோடீஸ்வரன்' (பெயர்தான் கோடீஸ்வரன், மற்றபடி அன்றாடம் காய்ச்சிதான்) பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக் கலைஞன். அத்துடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் பகுதி நேரப் பாடகன். குழந்தைகள் மேல் அன்பு கொண்ட அவர் ஒரு வாடகை வீட்டில் தங்கி தன்னுடன் பல அனாதைக்குழந்தைகளை வைத்து அவர்களுக்கு உண்வு, உடை, கல்வி என அனைத்தையும் வழங்கி ஒரு தந்தையாக இருந்து அன்புடன் வளர்த்து வருகிறார். தன் வீட்டின் முன்பு ஒரு தொட்டில் கட்டி வைத்திருக்க அதில் அனாதைக்குழந்தைகளை மற்றவர்கள் போட்டு விட்டுப் போவதும் அதை இவர் எடுத்து வளர்ப்பதும் இப்படியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இவர் வழக்கமாக புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் பத்திரிகை ஆசிரியர், இனிமேல் அழகான இளம்பெண்களின் கவர்ச்சியான படங்கள் வேண்டும் என்று கண்டிஷன் போட, வேறு வழியில்லாத இவர் கடற்கரையில் குளிக்கும் இளம் பெண்களை படம் எடுக்கும்போது, ஒரு பெண் (ஜெயலலிதா) தற்கொலை செய்து கொள்ள ஆயத்தமாக நிற்பதைக் கண்டு பதறி ஓடிப்போய் அவளைக் காப்பாற்றுகிறார். வீட்டிற்கு அழைத்து வந்து அவளுடைய கதையை கேட்க, அவ, தன்னுடைய பெயர் சீதா என்றும் தன்னுடைய தாய் தந்தையர் இறந்து விட்டனர் என்றும் கிராமத்திலிருந்து வந்த தன்னை, தனக்கென ஏற்கெனவே திருமணம் செய்ய முடிவு செய்து வைத்திருந்த தன் அத்தை மகன் முரளி கிருஷ்ணன் (பாலாஜி) ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால் மனமுடைந்து போய் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறாள்.கோடீஸ்வரனும் (சிவாஜி) குழந்தைகளும் சீதா மேல் இரக்கப்பட்டு அவளை அவள் அத்தை மகன் முரளியுடன் சேர்த்துவைக்க முடிவெடுக்கின்றனர். அதே சமயம், குழந்தைகளை வளர்க்க தன்னுடைய வருமானம் போதாமல் கஷ்டப்படும் கோடீஸ்வரன், முரளியுடன் சீதாவை சேர்த்து வைத்து விட்டால் அவருக்கு இருபதாயிரம் ரூபாய் (அப்போ அது பெரிய தொகை) முரளியிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று, சீதாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.

முதலில் முரளியின் நடவடிக்கைகளை அறிய விரும்பும் கோடீஸ்வரன், தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே பிறந்த நாள் கொண்டாட வரும் முரளியிடம் அந்த ஓட்டலின் பாடகனாக அறிமுகமாகிறார். முரளியின் வேண்டுகோளுக்கு இணங்க, முரளியின் காதலி 'லீலா' (வெண்ணிற ஆடை நிர்மலா)வுடன் ஒரு பாடலும் பாடி ஆடுகிறார். கோடீஸ்வரனுக்கு ஒன்று தெளிவாகிறது. முரளி ஒரு ஷோக்குப் பேர்வழி. அவனைச் சுற்றி எப்போதும் இளம் பெண்களின் கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பட்டிக்காட்டு சீதாவை அவன் ஏற்றுக்கொள்வது என்பது நடக்காத காரியம். முரளி (பாலாஜி)யின் கவனத்தை சீதா (ஜெயலலிதா)வின் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், அவளை மற்ற பெண்களைக்காட்டிலும் நவநாகரீக மங்கையாக மாற்றியே தீர வேண்டியது அவசியம் என்று உணர்கிறார். வீட்டுக்குத் திரும்பியதும் சீதா விடமும், குழந்தைகளிடமும் இது பற்றி விவாதிக்கிறான். வேறு வழியின்றி சீதா நாகரீக மங்கையாக மாற சம்மதிக்கிறாள்.

படிப்படியாக கோடீஸ்வரன் அவளை நாகரீக மங்கையாக மாற்றி, கிட்டத்தட்ட முரளிக்கே அவளை அடையாளம் தெரியாத அளவுக்கு கொண்டு வந்து, தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே அவளை அழைத்து வந்து, வழக்கமாக முரளி அமரும் மேஜைக்கருகிலேயே அவளை அமர்த்தி விடுகின்றார். பெண் பித்தனான முரளி அங்கே வரும்போது, தன்னை அசர வைக்கக்கூடிய அப்ஸரஸ் ஆக ஒரு இளம்பெண் அமர்ந்திருப்பதை அறிந்து,  எப்படியும் அவளை அடைய தீர்மானிக்கிறான். தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வைர மோதிரம் பரிசளிக்க அவள் அதை அலட்சியப்படுத்துகிறாள். தொடர்ந்து பேசும்போது உண்மையில் தான் சீதா என்ற உண்மையை வெளியிட அசந்து போன முரளி அப்போதும் அவளை வெறுக்கவில்லை. அவளை மணந்தே தீருவது என்று முடிவெடுக்க சீதா அதை மறுத்து வீட்டுக்கு திரும்புகிறாள்.

முரளியின் மீது அவள் கொண்ட வெறுப்பு கோடீஸ்வரன் (சிவாஜி) மீது காதலாக மாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கோடீஸ்வரன் மனமும் அவள் பக்கம் திரும்ப ஒரு கட்டத்தில் காதலர்களாகிறார்கள். கோடீஸ்வரனிடம் இருந்து எப்படியும் சீதாவை பிரித்து தான் அடைய வேண்டும் என்று முடிவெடுக்கும் முரளி, பலநாள் வாடகை தராமல் கோடீஸ்வரனும் குழந்தைகளும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரும் தன்னுடைய நண்பருமான செந்தாமரையை அணுகி, கோடீக்கு நெருக்கடி தருமாறு கூற, செந்தாமரையும் சம்மதித்து அமீனாவுடன் வீட்டை காலி செய்ய வருகிறார். அப்போது அங்கு வரும் முரளி தான் ஏதோ பரோபகாரி போல, ஜப்தி செய்ய வந்தவர்களை கடிந்து கொள்கிறார். அந்நேரம் வெளியில் 'சோ'வென மழை பெய்து கொண்டிருக்க, பாத்திரம் பண்டங்கள், குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் மழை நீரில் வீசியெறியப்படுகின்றன. இதுதான் பேரம் பேச சரியான சமயம் என்பதை உணர்ந்த முரளி, இந்த நெருக்கடியில் இருந்து கோடீயையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டுமானால், சீதாவை தனக்கு விட்டுத்தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்க, கோடீஸ்வரன் செய்வதறியாது திகைக்கிறார். குழந்தைகளோ தங்களுக்காக அக்காவை இழந்து விடாதீர்கள், நாங்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறோம் என்று கூற, அதே சமயம் முரளி கோடீயின் தியாக உள்ளத்தை கேலி செய்து 'நீ குழந்தைகள் மேல் கொண்ட அன்பெல்லாம் வெறும் வேஷம். நீ ஒரு சுயநலக்காரன்' என்று கூறி கேலி செய்ய, ஆடிப்போன கோடீஸ்வரன், குழந்தைகளின் நலனுக்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுக்கிறார்.

முரளியின் தூண்டுதலால் கோடீஸ்வரன் வீட்டிற்கு வரும், சீதாவின் 'திடீர்' சித்தி (சி.கே சரஸ்வதி)யும் அவரது எடுபிடி ஓ.ஏ.கே.தேவரும், சீதாவை கோடீ-யிடம் இருந்து பிரித்து முரளிக்கு சொந்தமான ஒரு இடத்தில் கொண்டு விடுகிறார்கள். அமீனா தன் வீட்டை காலி செய்ய வந்தபோது தனக்கு உதவிய முரளியிடம் அவன் வாக்களித்தபடி சீதாவை மணமுடித்து வைக்க வேண்டுமே என்று எண்ணும் கோடீ, அவள் தானாக வெறுக்க வைக்க ஒரு செட்டப் செய்கிறார். அதன்படி, தனியே பேசுவதற்காக ஓட்டலுக்கு சீதாவை கோடீ அழைத்து வர, அங்கே வரும் பெண்ணொருத்தி அவரிடம் தனியே பேச விரும்புவதாக கூறி அழைத்துச் செல்ல, அவர்களின் உரையாடலை சீதா கேட்க நேரிடுகிறது. அந்தப்பெண்ணுக்கும் கோடீ-க்கும் ஏற்கெனவே தொடர்பு இருப்பது போலவும், அதன் காரணமாக அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் அவர்கள் பேசிக்கொள்ள, சீதா (ஜெயலலிதா) மனம் உடைந்து போகிறார். ஏற்கெனவே செய்துகொண்ட செட்டப்பின்படி முரளி (பாலாஜி) அங்கே வர, அவரிடம் சீதா சென்று தன் மனக்குறையைச் சொல்லி அழ, அவன் கோடீ-க்கும் அந்தப்பெண் ணுக்கும் ஏற்கெனெவே தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தனக்கும் தெரியும் என்று கூற அதை நம்பி அவனுடன் செல்கிறாள். அவளை முன்னே போக விட்டு, முரளி பின்னே திரும்பி கோடீ-க்கு சைகையால் நன்றி தெரிவித்து விட்டுப்போகிறான்.

ஏற்கெனவே தன்னுடைய குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் தன் காதலி லீலாவை ஏமாற்றி அவள் தனக்கு ஆதாரமாக வைத்திருந்த தான் எழுதிய கடிதங்களை திருடி தன் பர்ஸில் வைத்து முரளி எடுத்துபோக, குடிகாரனாக வரும் தேங்காய் அந்த பர்ஸை பிக்பாக்கெட் அடித்துப்போய் அவைகளை நண்பன் சோவிடமும் அவன் மனைவி ரமாபிரபாவிடமும் படித்துக் காட்டுகிறான். இந்நிலையில் திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் லீலா, அதை கோடீஸ்வரனின் அனாதை இல்லத்தில் போட வரும் போது அவரிடம் மாட்டிக்கொள்கிறாள். அவளைப்பார்த்த கோடீ-க்கு அதிர்ச்சி. 'இவள் முரளியின் பிறந்த நாளில் தன்னுடன் நடனம் ஆடிய பெண்ணல்லவா' என்று எண்ணி விசாரிக்க, அக்குழந்தைக்கு தந்தை முரளிதான் என்று அவள் சொல்லி அதற்கு ஆதாரமான கடிதங்களை முரளி எடுத்துக்கொண்டு போய் விட்டான் என்றும் சொல்கிறாள். அப்போது அந்த இடத்தில் இருக்கும் சோ 'கடிதங்கள் எங்கும் போய் விடவில்லை தன் நண்பனிடம் தான் இருக்கிறது' என்று சொல்ல, அவரும் கோடீயும் தேங்காயிடம் போய் நாலு போடு போட்டு கடிதங்களை வாங்கி, லீலாவை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்டு முரளியின் வீட்டுக்கு செல்கிறான்.

இதனிடையில் ஜெயலலிதாவை மீட்டு அழைத்து வரலாம் என்று செல்லும் குழந்தைகள் முரளியின் கஸ்டடியில் மாட்டிக்கொள்கிறர்கள். லீலாவை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொன்று விடுவதாக முரளி மிரட்ட, இருவருக்கும் பெரிய சண்டை நடக்க சண்டையின் முடிவில் முரளி கடிதங்களை பிடுங்கிக்கொண்டு, குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் வேனில் தப்பியோட, கோடீஸ்வரன் ஜீப்பில் விரட்ட, ஒரு ரயில்வே லெவெல் கிராஸிங்கில் தண்டவாளத்தின் குறுக்கே வேனை நிறுத்தி விட்டு முரளி ஒளிந்திருந்து, குழந்தைகள் சாகப்போவதை வேடிக்கை பார்க்க, அதே நேரம் ஜீப்பில் வரும் கோடீ, தண்டவாளத்தின் குறுக்கே வேன் நிற்பதையும், ரயில் வேகமாக வந்து கொண்டிருப்பதையும் அதிர்ச்சியோடு பார்த்து, ரயில் வருவதற்குள் ஜீப்பினால் வேகமாக வேனை முட்டித்தள்ளுவதோடு, சடாரென ஜீப்பையும் ரிவர்ஸில் எடுக்க குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர். அப்போது தன்னிடம் இருக்கும் கடிதங்களை முரளி கொளுத்தப்போக, மீண்டும் கோடீ அவனுடன் சண்டையிட்டு அவைகளை கைப்பற்றுகிறான். அப்போது காரில் லீலாவுடன் வந்து இறங்கும் முரளியின் அம்மா, கடிதங்களைப் படித்து உண்மையறிந்து முரளியை அறைந்து, லீலாவை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்க, வேறு வழியில்லாமல் முரளி சம்மதித்து லீலாவுடன் சேருகிறான். மீண்டும் கோடீ-யும் சீதாவும் ஒன்று சேர, குழந்தைகள் குதூகலிக்க‌...... முடிவு 'சுபம்'.


பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியிருக்க. இசை...????,  வேறு யார். "மெல்லிசை மாமன்னர்தான்". பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டியது. இன்றைக்கும் தெவிட்டாத தேன் விருந்தாக மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள்.

முதல் பாடல், தன்னுடைய அனாதை இல்லக்குழந்தைகளை காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு (அந்தக் காரை பார்த்தாலே சிரிப்பு வரும். 'காதலிக்க நேரமில்லை'யில் ரவிச்சந்திரன் வைத்திருப்பாரே அது போன்ற ஒரு கார்) நடிகர் திலகம் சென்னையைச் சுற்றி வரும் பாடல்.

நான் தன்னந்தனிக்காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டுப்பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை முல்லை... முல்லை... முல்லை

இந்தப்பாடல் காட்சி சென்னை மெரீனா கடற்கரை, பழைய உயிரியல் பூங்கா வில் இருந்த குட்டி ரயில், தீவுத்திடல் பொருட்காட்சியின் குடை ராட்டினம், ஜயண்ட் வீல் போன்றவற்றில் படமாக்கப் பட்டிருக்கும். நடிகர் திலகம் வழக்கத்துக்கு மாறாக தொப்பியணிந்து நடித்திருப்பார்

தன்னுடைய குழந்தைகள் இல்லத்தில் நடிகர் திலகம் பாடும் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' என்ற பாடல். 'ல...ல...ல... ல... ல...ல..லா' என்ற ஆலாபனையுடன் டி.எம்.எஸ். பாடத்துவங்கும்போதே நம் மனதை அள்ளிக் கொண்டு போகும்.

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள்... ஏன் தூங்கவில்லை

எத்தனை முறை கேட்டாலும் கிறங்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்தப்பாடல் படத்தில் இரண்டு முறை வரும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் முதலில் பாடிய இதே பாடலை, சேகரை பணக்காரர் ஒருவருக்கு தத்துக் கொடுத்த பின்னர் சோகமே உருவாக இருக்கும் குழந்தைகளை சமாதானப் படுத்த மீண்டும் ஒருமுறை சோகமாக பாடுவார். இரண்டுமே மனதைத்தொடும்.

பாலாஜியின் பிறந்தநாள் விழாவில், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் நடிகர் திலகம் பாடும்
"சொர்க்கம் பக்கத்தில்...
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்"

மஞ்சள் நிற சேலையில் நிர்மலாவும், டார்க் மெரூன் கலர் ஃபுல் சூட்டில் நடிகர் திலகமும் ஆடும் இந்த காட்சி நம் இதயங்கலை கொள்ளை கொள்ளும். நான் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான். இக்காட்சிகள் மிக அருமையாக அமைய காரணம் அப்போதிருந்த அவருடைய ஒல்லியான அழகு உடம்பு. அதற்கேற்றாற்போல அமைந்த அழகான நடன அசைவுகள். இன்றைக்குப் பார்த்தாலும் அந்தப்பாடல் நம் மனதை அள்ளும். இப்பாடல் டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். (இப்பாடலுக்காக நடிகர்திலகம் 'அக்கார்டியனை' தோளில் மாட்டிக்கொண்டு வாசிப்பது போல உடலை பெண்ட் பண்ணி நிற்பதுதன் அன்றைய 'தினத் தந்தி' பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம்).

ஓட்டலில் ஜெயலலிதா ஆடும் 'பாவை பாவைதான்... ஆசை ஆசைதான்' என்ற பாடலில் அதிகப்படியான இசையை அள்ளிக்கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். வயலின், கிடார், பாங்கோஸ் யாவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விளையாடும்.

நடிகர் திலகத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் டூயட் பாடல் வேண்டுமே என்ற   சித்தாந்தத்தில் உருவான "என்னங்க... சொல்லுங்க... இப்பவோ எப்பவோ" என்ற  பாடல்.
  
கடைசி பாடல்  நம மனதை அள்ளிக்கொண்டு போகும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டலுக்கு ஜெயலலிதாவுடன் வரும் பாலாஜி, நடிகர் திலகத்தை ஒரு பாடல் பாடும்படி வற்புறுத்த, இவர் தன்னுடைய சோகத்தை யெல்லாம் கலந்து பாடும் இந்த பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் கூட ஃபேவரைட்.

'பியானோ' வாசித்துக்கொண்டே பாடுவது போன்ற பாடல் இது. டி.எம்.எஸ். அண்ணா பற்றி சொல்லணுமா. அவருக்கு இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. பிண்ணியெடுத்திருப்பார். எத்தனை ஆழமான வரிகள்.

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

பாடலின்போது பாடல் வரிகளின் பொருளை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொள்ளும் ஜெயலலிதாவின் முகபாவமும் அருமையாக இருக்கும்.

நடிகர் திலகம், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, பாலாஜி, சோ, தேங்காய் சீனிவாசன், ஏ.கருணாநிதி, ரமாபிரபா, கி.கே.சரஸ்வதி, ஓ.ஏ.கே.தேவர், செந்தாமரை, டைப்பிஸ்டு கோபு இப்படி பெரியவர்கள் மட்டுமல்லாமல், அப்போதிருந்த குழந்தை நட்சத்திரங்கள் அத்தனை பேரும் (பேபி ராணி நீங்கலாக) பிரபாகர், சேகர், ராமு, ஜெயகௌசல்யா, ரோஜாரமணி, ஜிண்டா, சுமதி இன்னும் பெயர் தெரியாத குழந்தை நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகர் திலகத்தின் படங்களிலேயே முழுக்க முழுக்க குழந்தைகளோடு நடித்த படம் இது.

அப்போது நடிகர்திலகத்தின் பல படங்களை வரிசையாக இயக்கி வந்த இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இப்படத்தையும் இயக்கியிருந்தார். வசனம் குகநாதன் எழுதியிருந்தார். மாருதிராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார் (கிளைமாக்ஸில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நிற்கும் வேனை ஜீப் இடித்துத்தள்ளிவிட்டு சட்டென்று ஜீப் ரிவர்ஸில் வர, உடனே ரயில் கடந்து செல்லும் காட்சி தியேட்டரில் பலத்த கைதட்டல் பெற்றது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமை).

நான் துவக்கத்தில் சொன்னபடி, நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா'வுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு.

"எங்க மாமா" பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

2 comments:

  1. அன்பு சகோதரி சாரதா அவர்களுக்கு,
    தங்களின் ஒவ்வொரு படத்திற்குமான பதிவுகள் பல புதிய செய்திகளை மக்களுக்கு அளிக்கின்றன. அதற்கென என்னுடைய பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நிதானமாக ஒவ்வொரு படத்தைப் பற்றிய பதிவுகளுக்கும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என உள்ளேன்.
    மகேந்திராவின் பார்வையில் நிகழ்ச்சியினைப் பார்த்து வருகிறீர்களா. செவ்வாய் தோறும் வசந்த் டி.வி.யில் இரவு 7.30 மணி்க்கு ஒளிபரப்பாகிறது.

    பார்த்து விட்டுத் தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

    அன்புடன்
    ராகவேந்திரன்

    ReplyDelete
  2. டியர் ராகவேந்தர் (NTFan),
    தங்களின் பாராட்டுக்கள், நடிகர்திலகத்தின் படங்களைப்பற்றி மென்மேலும் எழுத தூண்டுகோலாய் அமைகிறது. மிக்க நன்றி. ஆய்வுகளைப்பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
    அன்புடன்
    சாரூ....

    ReplyDelete