Saturday, February 5, 2011

ஸ்ரீதர் VS ஜெயலலிதா

மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்கும் அவரால் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கும் இடையேயான உரசல், 1996 விகடனின் 'காலப்பெட்டகத்தில்' வெளியாகியிருந்தது.
இயக்குநர் ஸ்ரீதர், ஜெயலலிதா பற்றிய தன் மனக் குறையைச் சொல்லி விகடனுக்குப் பேட்டியளிக்க, அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. இந்தச் சர்ச்சையில், தயாரிப்பாளர் கோவை செழியனும் தனது கருத்தைச் சொல்ல, பரபரப்பானது விஷயம். இதோ, அந்தக் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்

        என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!

புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது.கமல்ஹாசனின் அவ்வை சண்முகிபட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்

என் உடம்பு நிலைமை இப்படி ஆகிப்போச்சுனு தெரிஞ்சதும், நான் எதிர்பார்த்த முக்கால்வாசிப்பேர் வந்து எனக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டுப் போனாங்க. முந்தாநாள் ரஜினி வந்து ரொம்ப நேரம் பேசிட்டுப் போனார். ஆனா, அஞ்சு வருஷம் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா போன்லகூட என்னனு ஒரு வார்த்தை விசாரிக்கலே!

வெண்ணிற ஆடைபடத்துக்காக நிர்மலாவையும் ஜெயலலிதாவையும் ஃபிக்ஸ் பண்ணிட்டோம். கடைசி நேரத்தில், ஜெயலலிதா அந்த ரோலுக்கு சரிப் படாதுன்னு நான் ஒதுக்கிட்டேன். அவங்க அம்மா சந்தியா ஓடிவந்து என்கிட்டே எப்படியெல்லாம் மன்றாடினாங்கனு பசுமையா நினைவிருக்கு! வெண் ணிற ஆடைபடத்துல ஜெயலலிதாவை நான் அறி முகப்படுத்தியது அவங்களுக்கு ஒரு திருப்புமுனை. அப்புறம்தான் வரிசையான சினிமா வாய்ப்புகள், எம்.ஜி.ஆர். அறிமுகம், அரசியல் வாழ்க்கை எல்லாம் வந்தது!” – தடித்த தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் துடைத்துக்கொண்டார் ஸ்ரீதர்.

தெரிஞ்சவங்களுக்கு உடல்நலக் குறைவுன்னா நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்டே எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார். கான்வென்ட்படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்குபோல!

தன்னோட வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த போது அவங்க எத்தனையோ பழைய நண்பர்களை எல்லாம் நினைப்பு வெச்சுக்கிட்டு அழைப்பிதழ் அனுப்பினாங்க. அப்பவும் எதிர்பார்த்தேன், நமக்கும் பத்திரிகை வரும்னு. ஏமாந்துட்டேன். சிவாஜி சார் வீட்டுலேர்ந்து பத்திரிகை வந்தது.

இருந்தாலும், அந்தக் கல்யாணத்துக்குப் போக என் மனசு ஒப்புக்கலே!
கடைசியா நான் படிச்ச அவங்களோட ஒரு பேட்டியில், ஏதோ ஒரு கன்னடப் படத்தில்தான் அவங்க அறிமுகம் ஆன மாதிரி சொல்லியிருக்காங்க. அந்தக் கன்னடப் படத்தோட அப்படியே விட்டிருந்தா, தமிழ்நாட்டு முதல்வர் பதவி வரை வந்திருப்பாங்களா? ‘வெண்ணிற ஆடைபடம் பற்றியோ, என்னைப் பற்றியோ அவங்க எங்கேயும் சொல்லலை! அப்படிச் சொல்லணும்னு நானும் எதிர்பார்க்கலை. ஆனா, இப்படிப்பட்ட நாகரிகம் உள்ள ஒருத்தரைத்தான் நாம அறிமுகப்படுத்தினோம்னு நினைக் கறப்ப கஷ்டமா இருக்கு!
விடைபெறும்போது ஸ்ரீதர் அழுத்தமாகச் சொன்னார்: என்மேல் அனுதாபப்படற மாதிரி எதுவும் எழுதிடாதீங்க. நான் தன்னம்பிக்கையோட தைரியமாத்தான் இருக்கேன்!

யூ டூ மிஸ்டர் ஸ்ரீதர்?” – ஜெயலலிதா விளக்கம்!

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
உங்கள் 15.9.1996 ஆனந்த விகடனில், டைரக்டர் ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டியில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி, உங்கள் வாசகர்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதனால் சில விளக்கங்கள் அளிக்கவேண்டியது அவசியமா கிறது.

பொதுவாழ்வில் 14 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த போதிலும், நான் அவ்வளவாகப் பிறர் வீடுகளுக்கு விஜயம் செய்யும் பழக்கம் இல்லாதவள் என்பதனை, தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் அறிவார்கள். அதனாலேதான் எத்தனையோ முக்கிய நண்பர்களின் குடும்ப வைபவங்களுக்குக்கூட நான் போகாமல் இருந் திருக்கிறேன். என்னை நன்கு புரிந்துகொண்ட எவரும் என்னை வற்புறுத்துவதும் இல்லை. சிறு வயது முதல் நான் ஒரு சங்கோஜியாகவும், தனிமை விரும்பியாகவும் இருந்திருக்கிறேன். அது எனது உரிமை. முதலமைச்சர் ஆனதால், எனது வேலைப்பளுவும் 1991-க்குப் பின் அதிகரித்து வந்துள்ளது என்பதையும் மறந்துவிடலாகாது. டைரக்டர் ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்க இயலாமல் போனதன் காரணம் வேறேதுமில்லை. எனினும், அவர் தேறி வருகிறார் என்று உங்கள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் திரு.ஸ்ரீதரைப் பார்க்கவில்லை என்று அவர் வேதனைப்படலாம்; நியாயம்! ஆனால், தேவையில்லாமல் உண்மைக்குப் புறம்பான சில சம்பவங்களைக் கூறி என்னை வேதனைப்படுத்தியுள்ளாரே திரு.ஸ்ரீதர் என்று வருந்துகிறேன். You too Mr.Sridhar? வெண்ணிற ஆடைபடத்தில் நடிக்க வாய்ப்பளித்து, என்னைத் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் திரு.ஸ்ரீதர் என்பதனை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், அதனால்தான் நான் பின்னர் பொது வாழ்வில் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. திரு.ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகை களில் எத்தனை பேர் முதலமைச்சராகி உள்ளார்கள்? எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்துள்ளார்கள்? எத்தனை பேர் பேரும் புகழும் பெற்றுள்ளார்கள் என்பதனை அவரே கூறட்டும்.

நான் எனது நடன ஆற்றலால் சிறந்த நாட்டியக் கலைஞராக இருந்தேன்; நடிப்பாற்றலால் சிறந்த நடிகையாக இருந்தேன்; அறிவாற்றலால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரகாசித்தேன்; அரசியல் ஆற்றலால் முதலமைச்சராக வீற்றிருந்தேன் என்பது என் கருத்து. இக்கால கட்டங்களில் எனக்கு உறுதுணையாக, ஆசானாக, நண்பர்களாக, ஊன்று கோலாக, ஆலோசகர்களாக இருந்த வர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அத்தனை பேர் மீதும் அன்பும், பரிவும், பாசமும், நேசமும் கொண்டு நன்றி மறவாமல் வாழ்ந்து வருகி றேன். நன்றி மறப்பது நன்றன்றுஎன்பதை நான் நன்கு அறிவேன். திரு.ஸ்ரீதர் போன்றோர் கூறும் கூற்றுக்களில் நன்றல்லது அன்றே மறப்பது நன்றுஎன்பதனையும் நான் அறிவேன்.
என் தாயார் அவரிடம் போய் எனக்காக மன்றாடினார் என்று அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய். நடிகை ஹேமமாலினி, அதே படத்தில் வேறு பாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹேம மாலினியின் தாயார் திரு.ஸ்ரீதரைப் பார்த்து சந்தர்ப்பம் கேட்டார் என்று திரு.ஸ்ரீதரே என்னிடம் கூறியுள்ளார். அவ்வாறு திரு.ஸ்ரீதரால் உதாசீனப் படுத்தப்பட்ட ஹேமா, பம்பாய் சென்று அகில இந்திய அளவில் பெரிய நடிகையாகப் பேரெடுத்து, பேரும் புகழும் பெற்று வளர்ந்தாரே, அதுவும் திரு.ஸ்ரீதரால்தானா என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இனிய உளவாக இன்னாத கூறல்அவசியமா திரு.ஸ்ரீதர்?

- ஜெ.ஜெயலலிதா
பொதுச்செயலாளர், அ.இஅ.தி.மு.க.,
முன்னாள் தமிழக முதலமைச்சர்.

ஜெயலலிதாவுக்கு ஸ்ரீதர் பதில்!

ஜெயலலிதா விகடனுக்கு (29.9.96 இதழ்) எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, “என் தரப்பில் மேலும் சில விளக்கங்கள் சொல்ல விரும்பு கிறேன்!என்று டைரக்டர் ஸ்ரீதரிடமிருந்து போன். நேரில் சந்தித்தபோது ஸ்ரீதர் சொன்னார்

என் உடல்நிலை பற்றி பத்திரிகை வாயிலாகத் தெரிந்து, பத்திரிகை மூல மாகவே நலம் விசாரித்ததற்கு ஜெயலலிதாவுக்கு என் நன்றி! ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவல் களைச் சொல்லியிருப்பது அவர் தான்; நான் அல்ல!
ஜெயலலிதாவின் தாயார் திருமதி சந்தியா, என்னைச் சந்தித்துத் தன் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டபோது, தயாரிப்பாளர் கோவை செழியன் என்னுடன் இருந்தார். அவரைக் கேட்டால் உண்மையைச் சொல்வார்!

மேலும், ஜெயலலிதா சொல்வது போல், ஹேமமாலினியை நான் தேர்வு செய்தது வெண்ணிற ஆடை படத்துக்கு அல்ல; ‘காதலிக்க நேர மில்லைபடத்துக்கு! அப்போது அவர் முகம் குழந்தைத்தனமாக இருந்ததால், அறிமுகம் செய்ய வில்லை. ஆனால், அவர் இந்தியில் ட்ரீம் கேர்ள்படத்தில் அறிமுகமாகி நடிப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு நானும் ஒரு திருக்குறளை நினைவுபடுத்த விரும் புகிறேன் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு!

தயாரிப்பாளர் கோவை செழியனைச் சந்தித்தோம்.

டைரக்டர் ஸ்ரீதருக்கு ஜெயலலிதா பதில் எழுதிய கடிதத்தை விகடனில் நானும்
படித்தேன். ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.
நான் தயாரித்த சுமைதாங்கிபடம் வெளியான பிறகு, டைரக்டர் ஸ்ரீதர் முழுக்க முழுக்கப் புதுமுகங்களை வைத்து வெண்ணிற ஆடைபடத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.மற்ற தேர்வுகள் முடிந்து கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான், சிவாஜி தலைமையில் நடிகை சந்தியாவின் மகள் நடன அரங்கேற்றம் நடந்தது. அவரை ஏன் கதாநாயகியாக்க முயற்சிக்கக் கூடாது?” என்று சந்தியாவுக்கு போன் செய்து வரவழைத்துப் பேசி னோம். அப்போது ஜெயலலிதாவுக்கு 14 வயது. கதாநாயகி பாத்திரத்துக்குப் பொருந்திவரமாட்டார் என்ற முடிவில், வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்துவிட்டோம்.

சித்ராலயா ஆபீஸில் பாடல் கம்போஸிங். டைரக்டர் ஸ்ரீதர், நான், எம்.எஸ்.விஸ்வநாதன், சி.வி. ராஜேந்திரன், சித்ராலயா கோபு அனைவரும் இருந்தபோது, சந்தியா அங்கு வந்தார். வேறு நடிகை தேடுகிறீர்களாமேநீங்கள் அவசியம் என் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்என்று கேட்டுக்கொண் டார். என் மகள் வயது குறைந்தவள் என்றாலும், நல்ல முறையில் நடிப்பாள். அவள் நடிப்பில் திருப்தி இல்லாவிட்டால் பிறகு மாற்றிவிடுங் கள்!என்று சொன்னபோது, சந்தியாவின் கண்களில் நீர் பெருகி விட்டது. அதன்பிறகுதான் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடங்கி னோம்!என்றார்.

2 comments:

 1. திரைப்பட ஆய்வாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் கூறுகிறார்...

  அண்மையில் நான் எழுதிய `சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்கிற புத்தகத்தை ஸ்ரீதரிடம் காண்பிக்க வந்தேன். அந்தப் புத்தகத்தில் வெளியாகியிருந்த `வெண்ணிற ஆடை' படத்தின் ஸ்டில்களைத் தடவிப் பார்த்துக் கொண்டே கதறியழுத ஸ்ரீதர், `அம்மு (ஜெயலலிதா) இப்போ எப்படி இருக்கா?' என்று கேட்டார். தன்னைச் சந்திக்க வருபவர்கள் அனைவரிடமும் அவர் மறக்காமல் கேட்கும் கேள்வியும் இதுதான்.

  ReplyDelete
 2. நன்றி சீனிவாஸ்,

  பின்னூட்டம் இட்டதற்கும், மேலதிகமான தகவல்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.
  நன்றியுடன் சாரூ..

  ReplyDelete