இளைய சமுதாயத்துக்கு, குறிப்பாக மாணவ சமுதாயத்துக்கு சீரிய கருத்துக் களைச் சொல்லவந்த நல்லதொரு திரைப்படம். நடிகர் திலகத்தின் படங்களில் மிக நீண்ட அல்ல, கொஞ்சம் நீண்ட தயாரிப்பில் இருந்த படம். 1977 மே மாத மத்தியில் வெளியானது. அதற்கு முன்னர் இரண்டு முறை தியேட்டர் பெயர் களோடு விளம்பரம் வந்து, தியேட்டர்களில் ரிசர்வேஷனும் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டு, தாமதமாக ரிலீஸ் ஆனதாம். அதனால் (அதிசயமாக) தீபம் படத்துக்கும் இளைய தலைமுறைக்கும் 123 நாள் இடைவெளி விழுந்தது
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பட்டப் படிப்பு படித்த சம்பத் (நடிகர் திலகம்) வேலை தேடி சென்னைக்கு வர, அவருடைய நண்பன் (கே.விஜயன்), அவருக்கு பழக்கமான வீரராகவன் பிரின்ஸிபாலாக இருக்கும் கல்லூரியின் மாணவர் விடுதியில் 'வார்டன்' ஆக வேலை கிடைக்கிறது, (திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே அந்த வேலையில் சேர முடியும் என்ற நிபந்தனையுடன்). ஊரில் தான் காதலிக்கும் வாணிஸ்ரீ யின் நினைவு மனதில் இருந்தபோதிலும், வறுமையான குடும்ப சூழ்நிலை அவரை அந்த வேலையை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. (பட்டம் வாங்கி வந்ததும், "அம்மா நான் பட்டம் வாங்கிட்டேன்" என்று அம்மாவிடம் காட்ட, "இதை என்ன விலைக்குப்பா விற்கலாம்?" என்று அம்மா (எஸ்.என்.லட்சுமி) அப்பாவியாக கேட்கும் இடம், குடும்பத்தின் வறுமை சூழலை காட்டும்).
'ராகிங்' என்பது புதிதாக வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக வேலையில் சேரும் வார்டனுக்கும்தான், என்ற வகையில் முதல் நாளில் மாணவர்கள் செய்யும் ராகிங்கும் அதை வார்டன் சம்பத் (நடிகர் திலகம்) முறியடிப்பதும் சுவையான காட்சிகள். மாணவர்களாக வருபவர்களில் (பழைய) ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜூனியர் பாலையா, பிரேம் ஆனந்த், ஜெயச்சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் வார்டனை, (அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் தங்களுக்கு அடக்குமுறைகள் போல தோன்றுவதால்) தங்கள் எதிரிகளாக நினைத்து வெறுக்க, அவர்கள ஒவ்வொருவரையும் வார்டன் தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். ஒருகட்டத்தில் வார்டனை பழிவாங்குவதற்காக, தங்களுடன் எப்போதும் சேராமல் இருக்கும், குருக்கள் குடும்பத்து மாணவனுக்கு ஸ்ரீகாந்த் வலுக்கட்டாயமாக பெண் வேடம் போட்டு நள்ளிரவில் வார்டன் மேல் தள்ளிவிட்டு, அதை போட்டோ எடுத்து நோட்டீஸ் போர்டில் அம்பலப்படுத்த, அவமானம் தாங்காமல் அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்வது கொடூரம் என்றால், இன்னொரு பக்கம், ஊரில் சிவாஜியின் தந்தை இறந்து விட்டதாக வந்த 'தந்தி'யை ஜெயச்சந்திரன் மறைத்து விடுவது சோகம். மகன் வருவான், வருவான் என்று எதிர்பார்த்து (தந்தி மறைக்கப்பட்டு) மகன் வராததால் இறுதிச்சடங்கையும் முடித்து விட்டு, விதவைக்கோலத்துடன் தன்னைத்தேடி தாய் வந்து நிற்கும் கோலம் கண்டு நடிகர்திலகம் உடைந்து நொறுங்கிப்போவாரே... அது சோகத்தின் உச்சம்.
ஒவ்வொரு மாணவனும் வார்டனால் திருத்தப்பட்டு, அவரது தூய உள்ளம் கண்டு அவர் பக்கம் வந்துசேர, ஸ்ரீகாந்த் மட்டும் கடைசி வரை திருந்தாத வில்லனாகவே இருந்து விடுவார். கிளைமாக்ஸ் காட்சியில் வார்டன் மீது திராவகம் நிரப்பிய பல்பை வீச, அதை அவர் தாம்பாளத்தால் தட்டி விட, திராவகம் ஸ்ரீகாந்த் மீதே விழுந்து அவரைப்பழி வாங்கி விடும் கட்டம் நல்ல முடிவு.
இன்னொரு பக்கம் வார்டனின் சொந்த ஊரில், அவரது காதலி வாணிஸ்ரீ யின் முறைமாமன் (எம்.ஆர்.ஆர்.வாசு) அவரை திருமணம் செய்துகொள்ள தீவிரமாக இருக்க, வாணிஸ்ரீ யின் அம்மா எம்.என்.ராஜம், தன் தம்பிக்கே அவளை மணம் முடிக்க வேண்டும் என்றும் துடிக்க, அப்பா (வி.கே.ஆர்) தன் மகளின் காதலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். 'திருமணம் செய்தவர்கள் வார்டன் வேலையில் நீடிக்க முடியாது' என்ற கல்லூரியின் சட்ட விதிகளின்படி, (வாணிஸ்ரீ யை மணந்து கொள்வதற்காக) வேலையை விட்டு விலக முடிவு செய்ய, வார்டனை விட்டு பிரிய மனமில்லாத மாணவர்கள் 'தங்களை தீய பழக்கங்களில் இருந்து திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்த வார்டன், தங்களை விட்டுப்போவதன் மூலம் தாங்கள் மீண்டும் தவறான வழிக்கு திரும்ப வேண்டுமா?' என்று கண்கலங்கி நிற்க, அதைப்பார்த்து நெகிழ்ந்துபோன வாணிஸ்ரீ தன் காதலை அந்த மாணவர்களுக்காக தியாகம் செய்ய முடிவு செய்ய, நடிகர் திலகம் செய்வதறியாது திகைத்து நிற்க.... எல்லோர் பேசுவதையும் வாய்மூடி கேட்டுக் கொண்டிருக்கும் பிரின்ஸிபால் வீரராகவன், "இதோ பார் சம்பத், உன்னுடைய சின்ஸியரான வேலை பற்றி மேனேஜ்மெண்டுக்கு எடுத்து சொல்லி, கல்லூரியின் தேவையில்லாத ஒரு சட்டத்துக்காக ஒரு நல்ல வார்டனை இழக்க வேண்டுமா என்று வாதாடினேன். நீ திருமணம் செய்து கொண்டு இந்த வார்டன் வேலையில் நீடிக்க கல்லூரி நிர்வாகம் சம்மதம் அளித்து விட்டது" என்று சொல்ல மாணவர்களுக்கும், வருங்கால மனைவிக்கும் ஒருசேர மகிழ்ச்சி பொங்க, முடிவு சுபம்.
நகைச்சுவைக்கு, விடுதியில் மெஸ் நடத்தும் 'சர்மா' வாக வரும் நாகேஷும் அவரது உதவியாளனாக வரும் பையனும். நாகேஷின் மலையாள வாடை கலந்த பேச்சு நேச்சுரல். (அவருக்கு சொல்லணுமா?). ஒவ்வொரு வசனமும் சரியான சிரிப்பு.
மல்லியம் ராஜகோபால் கதை வசனம் எழுத கிருஷ்ணன் பஞ்சு இயக்கி யிருந்தனர். வசனம் அருமை. குறிப்பாக, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும் இடத்தில், அந்த ஸ்ட்ரைக்கை கண்டித்து நடிகர்திலகம் பேசும் வசனம் சூப்பர். (அதில் ஒரு துளி... "ஊரில் உங்க அப்பா சாகக்கிடக்கிறார். நீ உடனே போக வேன்டிய கட்டாயம். ஆனால் ஸ்ட்ரைக் நடக்கிறது. வண்டிகள் ஓடவில்லை. உன்னால் போக முடியவில்லை. உன் தந்தையின் முகத்தைக்கூட நீ கடைசியாக பார்க்க முடியாமல் செய்கிறது இந்த ஸ்ட்ரைக். இது ஏன் உங்க மூளையில் ஸ்ட்ரைக் ஆகலை?")
கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 'இளைய தலைமுறை... இனிய தலைமுறை' பாடலை மட்டும் மல்லியம் ராஜகோபால் எழுதியிருந்தார். டைட்டில் ஓடும்போது எம்.எஸ்.வியும், படம் துவங்கியதும் (நடிகர் திலகத்துக்காக) டி.எம்.எஸ்ஸும் பாடியிருப்பார்கள். நல்ல பொருள் பொதிந்த பாடல். பட்டம் வாங்கியதும் நடிகர் திலகம் சக மாணவர் களுடன் (கல்விக்கண் திறந்த) காமராஜரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதாக காட்டியிருப்பது அருமை.
நடிகர்திலகம், வாணிஸ்ரீ பாடும் டூயட் பாடலான 'யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஸ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடலும் நன்றாக அமைந்திருக்கும். அடையாறு ஆலமரத்தின் பிரம்மாண்ட விழுதுகளுக்குள் கேமரா நுழைந்து நுழைந்து படமாக்கியிருக்கும் டூயட் பாடல் கண்ணுக்கு விருந்து (இப்போது அந்த ஆலமரம் இல்லை)
இருவருக்கும் காதல் அரும்பும் முன்னர், குட்டை பாவாடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் தெருவில் செல்லும் வாணிஸ்ரீ யை கிண்டல் செய்து, நடிகர் திலகம் பாடும்
"சிங்கார தேர்கூட திரைமூடி போகும் - அதுகூட உனக்கில்லையே
செவ்வானம் தனைக்கூட மேகங்கள் மூடும் - மூடாத வெண்முல்லையே"
என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் அருமை. குடகு மலை மெர்க்காராவில் படமாக்கப்பட்டிருக்கும். (முதலில், இந்தக்காட்சிக்காக 'பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு' என்ற பாடல் ஒலிப்பதிவாகி அது இசைத்தட்டில் கூட வந்ததாம்).
நடிகர்திலகத்தைப்பொறுத்தவரை, கதாபாத்திரத்துக்கு ஏற்ற நிறைவான நடிப்பைத் தந்திருந்தார். பெரிய குடும்பத்தைத் தாங்கவேண்டிய சூழ்நிலையில், எந்த வேலைக்கும் தயாராக சென்னை புறப்படும்போதும், சென்னையில் நண்பனின் வீட்டில் அவன் தங்கை தன்னை விரும்புவது கண்டு, அதை மிகவும் கண்ணியமாக தவிர்க்கும்போதும், விடுதியில் ஒவ்வொரு மாணவனின் நலனிலும் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களை நல்வழிப் படுத்தும்போதும், இறுதியில் மாணவர் நலனுக்காக தன் காதலை தியாகம் செய்ய காதலி வாணிஸ்ரீ துணியும்போது செய்வதறியாது திகைத்து நிற்கும்போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் குருக்கள் குடும்பத்து மாணவனின் தற்கொலைக்குக் காரணமான ஸ்ரீகாந்த் மீது அவர் காட்டும் ஆவேசமாகட்டும், ஸ்ட்ரைக் நடக்கும்போது அதை உடைக்க அவர் காட்டும் தீர்க்கமாகட்டும் பிரமாதம்.
இவருடன் இணைந்து வாணிஸ்ரீ, சங்கீதா (பொம்மை), K.விஜயன், வீரராகவன், V.K.ராமசாமி, M.N.ராஜம், S.N.லட்சுமி, M.R.R.வாசு, நாகேஷ், ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜூ.பாலையா, Y.G.மகேந்திரன், ஜெயச்சந்திரன், பிரேம் ஆனந்த் ஆகிய அனைவரும் நிறைவான நடிப்பைத் தந்திருந்தனர்..
படம் பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராகத்தான் ஓடியது. ஆனால் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம். அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகர் திலகத்தின் சில படங்கள் நீண்ட கால தயாரிப்பில் இருந்தன. வைர நெஞ்சம் (Hero-72), ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, சித்ரா பௌர்ணமி, என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி இப்படி சில படங்கள். (ஆனால் எந்தப் படத்தின் தாமதத்துக்கும் நடிகர் திலகம் காரணமல்ல. தயாரிப்பாளர்களின் ஃபைனான்ஸ் பிரச்சினையே முக்கிய காரணம்). இவற்றில் பல படங்கள் வெற்றிப் படத்துக்குரிய சிறப்புகளைப் பெற்றிருந்தும், தாமதமான வெளியீடு வெற்றியை பாதித்தது.
பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு .. இந்த வரிகளுடன் படத்தில் இடம் பெற்றால் பேச்சுத் தமிழ் என்றாலும் சற்றே குறைவான தொனி ஒலிப்பதாக கருதி, நாகரீகமான வரிகளுடன் மற்றொரு பாடலை பதிவு செய்ய நடிகர் திலகம் வேண்டுகோள் விடுத்து அப்படி இடம் பெற்ற பாடல்தான் சிங்கார தேர்கூட திரைபோட்டு போகும் என்ற பாடலாகும். பெண்மையை வரிகளில் கூட இழிவு படுத்துவதை அவர் விரும்பவில்லை. இதன் காரணமாக அந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லை. மற்றொரு காரணம் கதாபாத்திரம். அப்படி ஒரு புனிதமான கதாபாத்திரம் சற்று ஒருமையுடனும் பேச்சுத் தமிழ் தொனியுடனும் பாடுவதாக வருவது பாத்திரத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருக்காது என அவர் கருதியதால் இருக்கலாம்.
ReplyDeleteஇளைய தலைமுறை, ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டிய படம்.
நன்றி
ராகவேந்திரன்
டியர் ராகவேந்தர்,
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கள், நடிகர்திலகத்தின் படங்களைப்பற்றி மென்மேலும் எழுத தூண்டுகோலாய் அமைகிறது. மிக்க நன்றி. ஆய்வுகளைப்பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். பாடல் மாற்றம் பற்றிய உங்களின் விளக்கம் அருமை.
அன்புடன்
சாரூ....