Thursday, February 10, 2011

வைர நெஞ்சம்

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அவர்களால் சித்ராலயா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு, அவரால் இயக்கப்பட்ட இப்படத்துக்கு, முதலில் அவர் வைத்த பெயர் ஹீரோ-72. இப்பெயர் வைக்க முக்கிய காரணமாக இருந்தது 1972-ல் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் அடைந்த தொடர் வெற்றிகள். இது பற்றி முன்பே நிறைய சொல்லிவிட்டோம். இப்படம் ஹீரோ-72 என்ற பெயரோடு, குறித்த காலத்தில் படப்பிடிப்பு முடிந்து, குறித்த காலத்தில் வெளியாகியிருந்தால் இப்படத்தின் வெற்றி வாய்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும். மிகக் காலம் கடந்து, வேறொரு பெயர் சூட்டப்பட்டு, ஏனோதானோ என்று வெளியானதால் எதிர்பார்த்த  வெற்றியைப்பெறவில்லை.
  

ஸ்ரீதர் படங்களிலேயே, மிக அழகான, மிக இளைமையான, நடிகர் திலகத்தை இப்படத்தில்தான் காணலாம். இத்தனைக்கும் அவர் படங்களிலேயே பின்னாளில் வந்த படம் (இதையடுத்து சில ஆண்டுகள் கழித்து, இந்த இருவர் கூட்டணியில் இறுதிப்படமாக மோகன புன்னகை வந்தது).

ஒரு பேங்கில் நடைபெறும் ஒரு கொள்ளையை மையமாக வைத்து, அதன் பின்னணியில் இயங்கும் ஒரு கொள்ளை மற்றும் கடத்தல் கும்பலை கதாநாயகன் வேட்டையாடிப்பிடிக்கும் கதை. வல்லவன் ஒருவன், ‘எதிரிகள் ஜாக்கிரதை காலத்தில் வந்திருக்க வேண்டிய கதை. இதைவிட தீவிரமான துப்பறியும் கதைகளான ராஜா போன்ற படங்களை மக்கள் பார்த்து ரசித்தபின் வந்தது.

கதாநாயகி கீதா (பத்மப்ரியா)வின் தந்தை தான் சேர்மனாக இருக்கும் பேங்கிலேயே பணத்தைக் கையாடிவிட்டு தற்கொலை செய்துகொள்ள, பேங்கில் டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் அவரது மகனுடைய (முத்துராமன்) ஒத்துழைப்புடனேயே, ஒருகொள்ளைக்கும்பல் பேங்கைக்கொள்ளையடித்து, அவர் அப்பா செய்த கையாடலின் தடையத்தையும் மறைத்து அவரைக்காப்பாற்ற, அந்தக் கொள்ளைக்குமபலைப் பிடிக்கப் போராடி வெற்றிபெறும் கதாநாயகனைப்பற்றிய கதை. கொள்ளைக்கும்பலுக்கு உதவியாக இருந்த முத்துராமனின் நண்பன் ஆனந்த் (நடிகர்திலகம்) தான் அந்த துப்பறியும் அதிகாரி என்பதும், இன்னொரு நண்பன் மதன் (பாலாஜி) தான் அந்தக்கொள்ளைக்கும்பலின் தலைவன் என்பதும் கூடுதல் சுவாராஸ்யம். 

நள்ளிரவில் நடந்த கொள்ளையை நேரில் பார்த்த தன் தங்கை கீதாவிடம், அந்த விவரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது, முக்கியமாக போலீஸிடம் சொல்லக்கூடாது என்று சொல்லும் முத்துராமன், சந்தேகத்தோடு பார்க்கும் தங்கையிடம், 'நீ கல்யாணம் ஆகாத பொண்ணு. தேவையில்லாமல் சாட்சி, கேஸ், கோர்ட்டுன்னு இழுத்தடிப்பாங்க. அதுக்குத்தான் மறைக்கச்சொன்னேன்' என்று சமாளிக்கும் இடமும், தன் நண்பன் ஆனந்த் தான் (நடிகர்திலகம்)  கொள்ளையைக்கண்டுபிடிக்க வந்த அதிகாரி என்றறிந்து, தன் வீட்டில் தங்கியிருக்கும் அவரைக்கொல்ல தண்ணீர் பைப்பில் கரண்ட் ஷாக் வைத்தவர், அவர் ஆன் பண்ணப்போகும் நேரம் நட்பின் வேகத்தால் உந்தப்பட்டு, சட்டென்று மெயினை ஆஃப் செய்து காப்பாற்றும் இடமும் முத்துராமன் கேரக்டருக்கு பெயர் சொல்ல வைக்கும் இடங்கள்.

பத்மப்ரியா பல படங்களில் நடித்திருந்தபோதிலும் இந்தப்படத்தில் அவர் தோன்றும் அளவுக்கு அழகாக எந்தப்படத்திலும் வரவில்லை என்று சொல்லலாம். எல்லாவித நாகரீக உடைகளும் கச்சிதமாக பொருந்துகின்றன. டூயட் பாடல் காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார். நடிகர்திலகத்துடன் முதலில் முறைத்துக்கொண்டவர் மெல்ல மெல்ல காதல் வசப்படுவது அழகான கவிதை. நடிகர்திலகத்தின் நடவடிக்கைகளில் சந்தேகப்படும் அவர், அவர் யாரென்று தெரிந்ததும், மனம் உருகிப்போவது டாப். (ஆனால் அவர் யாரென்று அறியும் நேரம், அவர் அண்ணன் முத்துராமனுக்கு உச்சகட்ட அதிர்ச்சி).


அவரது இளமைக்கு ஈடுகொடுத்து நடிகர்திலகம் செய்திருப்பதுதான் பாராட்டுக்குரியது. அழகாக ஸ்லிம்மாக இளமையாகத்தோன்றும் நடிகர்திலகம், தோற்றத்தில் மட்டுமல்லாது, நடிப்பிலும் சுறுசுறுப்பு. குறிப்பாக பத்மப்ரியாவை டீஸ் செய்து அவர் பாடும் பாடலில் நல்ல துள்ளல் மற்றும் துடிப்பு. சண்டைக்காட்சிகளிலும் அப்படியே. குறிப்பாக லாரிக்குள் ஜீப்பை ஏற்றி டூப்ளிகேட் போலீஸுடன் போடும் ஃபைட் கண்ணுக்கு விருந்து. (லொக்கேஷன், சோழவரம் கார் ரேஸ் மைதானமா?). 'செந்தமிழ் பாடும் சந்தன காற்று' டூயட்டிலும் நல்ல அழகு. இந்த மாதிரிக்கதைகளில் உணர்ச்சி மயமான நடிப்பைக்காட்ட வாய்ப்புகள் அரிதுதான். (ராஜாவின் கிளைமாக்ஸில் பண்டரிபாய் அடி வாங்கும்போது சிரிப்பதுபோலவோ, தங்கச்சுரங்கம் கிளைமாஸில் வரும் 'சர்ச்' காட்சியைப் போலவோ ஒரு காட்சியை இயக்குனர் வைத்து, ரசிகர்களை திருப்தி செய்திருக்கலாம்)

முத்துராமனுடன் நண்பனாக உறவாடிக்கொண்டே, கொள்ளைக்கும்பலின் தலைவனாகவும் உலாவரும் பாலாஜிக்கு போதிய வாய்ப்புகள் இல்லை. அவரது கூட்டாளியாக வரும் சி.ஐ.டி.சகுந்தலா வுக்கும் அப்படியே. ஆனால் சகுந்தலாவுக்காக வாணி ஜெயராம் பாடும் 'நீராட நேரம் நல்ல நேரம்' பாடல், மற்ற எல்லா பாடல்களையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது.   

படத்தின் மிகப்பெரிய குறை, இம்மாதிரி படங்களுக்கு இருக்க வேண்டிய நட்சத்திரக்கூட்டம் போதிய அளவு இல்லாமல், ஏதோ ஓரங்க நாடகம்போல மூன்று நான்கு கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு படம் முழுவதையும் நகர்த்த முயற்சித்திருப்பது. தவிர மந்தமான ஆரம்பம். மிகச்சிக்கனமான தயாரிப்பு. ஏர்போர்ட்டில் நடிகர்திலகம் வருவதாகக் காண்பிப்பதைக்கூட, சும்மா ஸ்டுடியோவில் இருட்டில் பத்துபேரோடு நடந்து வருவதாக காட்டி ஒப்பேற்றி விடுவார்கள். படம் பார்க்கும்போது,  ஸ்ரீதருக்கு இப்படத்தில் நஷ்ட்டம் வந்திருக்க வாய்பில்லை என்றே தோன்றும். அதிக நாட்கள் ஓடாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஓடியவரையில் ஸ்ரீதருக்கு லாபமே கிடைத்திருக்கும். அந்த அளவுக்கு படத்தில் சிக்கனம்.

வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைத்திருக்கும் மற்றும் இருவர் உண்டு. ஒருவர் ஒளிப்பதிவாளர் யு.ராஜகோபால். கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான ஒளிப்பதிவு. நைட் எஃபெக்ட் காட்சிகள் அதிகம் இருந்தபோதிலும் அத்தனையும் துல்லியம். இயக்குனர் ஸ்ரீதர் ஆச்சே.

இன்னொருவர் 'மெல்லிசை மாமன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். பாடல்கள் அத்தனையும் அருமை.

1) பத்மப்ரியாவை டீஸ் செய்து சிவாஜி பாடும் முதல்பாடல்
' ஏஹே .... மை ஸ்வீட்டி...
என் பிரியத்துக்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்துக்கினியவளே'

('என் பழக்கத்துக்கு இனியவளே', ‘என் பழக்கத்துக்கு இனி அவளே' கண்ணதாசா, உன்னை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம்பா)

2) நடிகர்திலகம் - பத்மப்ரியா பாடும் டூயட் பாடல்..

'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று
தேரினில் வந்தது கண்ணே'

மனதை இதமாக வருடும் அழகான மெலோடி. டி.எம்.எஸ். - சுசீலா வெற்றி ஜோடியின் இனிய குரலில் நம் மனதை அள்ளும். இப்பாடலை சென்னைக்கு அருகிலுள்ள ஒரு பீச் ரிஸார்ட்டில்தான் படமாக்கியிருப்பார்கள். ஆனால் ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் சேர்ந்து ஏதோ வெளிநாட்டில் படமாக்கிய உணர்வைத்தருவார்கள்.

3) சி.ஐ.டி.சகுந்தலாவிடமிருந்து கழுத்திலுள்ள டாலரை அபகரிக்க, நடிகர்திலகமும், பத்மப்ரியாவும் மாறுவேடம் போட்டுக்கொண்டு பாடி ஆடும் பாடல்...

'கார்த்திகை மாசமடி கல்யாண சீஸனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே - இங்கு
மாலையை மாத்திக்கடி முன்னாலே'

பாடலில், மெல்லிசைமன்னர் தவில் பயன்படுத்தி பாடலுக்கு அழகு சேர்த்திருப்பார்.

4) சூப்பர் டாப் பாடல், CID சகுந்தலாவுக்காக வாணி ஜெயராம் பாடிய..

'நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனியொரு பாலாடை
மின்னுவது நூலாடை'

அதிலும் சரணத்தில்...

காலம் பார்த்து வந்தாயோ
கமலம் மலரக் கண்டாயோ..ஓ.... ஓ..... ஓ... ஓ....
கோலம் காணத்துடித்தாயோ
கூடல் வேதம் படித்தாயோ

நீயும் கண்டாய் என்னை
நானும் கண்டேன் உன்னை
போதும் இது நாம் கூட
போதையுடன் ஊடாட

மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக மெட்டமைத்த பாடல். மக்களை அதிகம் சென்றடையாத பாடல். தொலைக்காட்சிகளுக்கு இப்படியொரு பாடல் தமிழில் வந்திருக்கிறது என்றே தெரியாத பாடல்.

(வி.ஐ.பி.தேன்கிண்னமெல்லாம் நான் இப்போது பார்ப்பது கிடையாது. அவர்கள் என்னென்ன பாட்டு போடப்போகிறார்கள் என்று என் பையனே லிஸ்ட் போட்டுவிடுவான். படகோட்டியில் ஒரு பாடல் (தரை மேல்), ஆயிரத்தில் ஒருவனிலிருந்து ஒரு பாடல் (ஓடும் மேகங்களே), எங்க வீட்டுப் பிள்ளையிலிருந்து ஒரு பாடல் (நான் ஆணையிட்டால்), பாசமலரிலிருந்து (மலர்ந்தும் மலராத), ஞான ஒளியிலிருந்து (தேவனே என்னைப்பாருங்கள்), திருவிளையாடலில் இருந்து ஒரு பாடல் (பாட்டும் நானே), புதிய பறவையிலிருந்து ஒரு பாடல் (எங்கே நிம்மதி)... டைம் முடிந்தது. 'எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை வழங்கிய '......' டிவிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு'.... அட போங்கப்பா.)

சரி, பாடகி திருமதி வாணி ஜெயராம் கலந்துகொள்ளும் டி.வி. நிகழ்ச்சிகளிலாவது இம்மாதியான பாடல்களைப் பாடுவாரா என்று ஆவலோடு காத்திருந்தால், அவர் மைக்கைப்பிடித்துக்கொண்டு ஆரம்பிப்பார் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்'... (அவர் 'மல்லிகை' என்று ஆரம்பித்ததும் 'ஆமா. இந்தம்மாவுக்கு இதைவிட்டால் வேறு பாட்டு தெரியாது' என்று ரிமோட்டைத்தேடுவோர் பலர். நல்ல பாட்டுத்தான், இல்லேன்னு சொல்லவில்லை. நாலாம் வகுப்பில் மீனாட்சி டீச்சர் திருக்குறள் நடத்தினார்.. 'பசங்களா, சொல்லுங்க 'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்....'). திருப்பி திருப்பி வாணியம்மா அதையே பாடும்போது, இவர் முப்பதாயிரம் பாடல் பாடினார்.. நாற்பதாயிரம் பாடல் பாடினார் என்பதெல்லாம் பொய்யோ என்று எண்ணத்தோன்றும்.

சரி, மெல்லிசை மன்னராவது என்றைக்காவது இதுபோன்ற 'தான் பெற்ற' அற்புதமான குழந்தைகளைப்பற்றி சொல்வாரா என்றால்.... ஊகும். அவரும் திரும்ப திரும்ப ஜெனோவா, சி.ஆர்.சுப்பராமன், நௌஷாத், எனக்கொரு காதலி இருக்கின்றாள், அறிஞனாய் இரு என்று அந்தக்கால கீறல் விழுந்த கொலம்பியா ரிக்கார்ட் போலவே பேசிக்கொண்டு இருக்கின்றார்.

சரி, படத்தைப்பேச ஆரம்பித்து டாப்பிக் எங்கோ போகிறது (இருந்தாலும் நான் சொன்னதெல்லாம் உண்மைதானே)

படத்தில் நடிகர்திலகம் - பத்மப்ரியா காதல் காட்சிகள் நல்ல் அழகோடும் இளமையோடும் அமைக்கப்படிருக்கும். (ஒருவேளை இந்தக் காட்சிகளை மட்டும் சி.வி.ஆர். இயக்கியிருப்பாரோ). பத்மப்ரியாவின் பெட்ரூமில் சிவாஜி கிண்டல் செய்துகொண்டிருக்க, 'ஐயோ, சீக்கிரம் வாங்க. அங்கே அண்ணன் டைனிங் ஹாலில் காத்துக்கிட்டிருக்கார்' என்று கெஞ்சும் பத்மப்ரியாவிடம், 'உங்க அண்ணன் சாப்பாட்டுராமன். டைனிங் ஹால்லதான் இருப்பான். நான் அழகை ரசிப்பவன் அதனால்தான் பெட்ரூம்ல இருக்கேன்' என்று சிவாஜி பதில் சொல்லும் இடம், இளமை கொஞ்சும் இதுபோன்ற இடங்கள் நிறையவே உண்டு.

1972-ல் துவங்கிய இப்படம், 1975 தீபாவளிக்கே ரிலீஸானது. இதே நாளன்று மற்றொரு படமான ஏ.சி.டி.யின் சினிபாரத் சார்பில் தயாரான 'டாக்டர் சிவா'வும் வெளியானது. (இரண்டு படங்களுக்குமே MSV-யின் பங்களிப்பு அபாரம்) சினிபாரத்தின் முந்தைய படங்களான பாபு, பாரத விலாஸ் படங்களை மனதில் கொண்டு ரசிகர்களும் பொதுமக்களும் ரொம்ப எதிர்பார்த்தனர். மாவுக்கேற்ற பணியாரமில்லை. 'மன்னவன் வந்தானடி' பட வெற்றிக்குப்பின் சிறிது தேக்க நிலை, 'அன்பே ஆருயிரே'யிலிருந்து தொடங்கியது. இடையில் பெருந்தலைவரின் மறைவு ரசிகர் மத்தியிலும் நடிகர்திலகத்திடமும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அந்நேரம் வெளியான இம்மூன்று படங்களோடு தொடர்ந்து வந்த 'பாட்டும் பரதமும்' உனக்காக நான் ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இத்தனைக்கும் இப்படங்களின் இயக்குனர்கள் எல்லாம் சாமானியர்கள் அல்ல. ஏ.சி.திருலோக்சந்தர், ஸ்ரீதர், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் என நடிகர்திலகத்துடன் இணைந்து பல வெற்றிகளை ருசித்தவர்கள்.

'வைர நெஞ்சம்'  சிவாஜி ரசிகர்களால் புறந்தள்ளப்பட்டதற்கு இன்னொரு முக்கிய காரணம், இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீதர் இப்படம் தயாரிப்பில் இருந்தபோதே மாற்றுமுகாமுக்கு தாவி, வைரநெஞ்சம் வெளியாவதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன் ஒரு படத்தை தயாரித்து வெளியிட, அது மாபெரும் வெற்றியடைந்தது. அவ்வெற்றியின் மூலமாக தன்னுடைய கடன் தொல்லைகளில் இருந்து மீண்டதாக அவர் சொல்லப்போக, அது திரிக்கப்பட்டு, அவர் நடிகர்திலகத்தை வைத்து எடுத்த முந்தைய படம் மூலம்தான் கடனாளியானார் என்று மாற்று முகாமினரால் பரப்பப்பட, சிவாஜி ரசிகர்கள் வெகுண்டார்கள். அதனால் வைரநெஞ்சம் என்றொரு படம் தயாரிப்பில் இருந்ததையே மறந்தனர். அவர்கள் கவனம் முழுக்க டாக்டர் சிவாவின் பக்கமே இருந்தது. வைரநெஞ்சம் வெளியான ஓடியன் திரையரங்கில் ஒரு கொடி, தோரணம், பேனர் கூட கட்டப்படவில்லையாம்.

ஆக, வைரநெஞ்சம் ஏனோதானோ என்று வெளியாகி, ஏனோதானோ என்று ஓடி ஒருவழியாக ஐந்து வாரங்களை மட்டுமே கடந்தது.

இப்படிப்பட்ட படத்துக்கு நீ ஒரு கட்டுரை எழுதவேண்டுமா? என்று என்னைக்கேட்கலாம். ஆனால் வைரநெஞ்சம் (துவக்கத்தில் குறிப்பிட்ட காரணங்களால்) எனக்குப் பிடித்த படம் . தவிர, இப்படத்தைப்பற்றி வேறு யாரும் எழுதும் வாய்ப்புக்குறைவு. ஆகவேதான் எழுதுவோமே என்ற ஆசை. சர்ச்சைக்குரிய தகவல்கள் இருந்தால் பொறுத்தருளுங்கள்.   

'வைரநெஞ்சம்' பற்றிய என்னுடைய பதிவைப்படித்த அத்தனை அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

5 comments:

 1. வாழ்த்துகள்! சகோதரி சாரதா. இன்றுதான் நீங்கள் பிளாக் ஆரம்பித்து இருப்பதை 'அவார்டா கொடுக்குறாங்க' மூலம் தெரிந்து கொண்டேன்.ஃபோரமிலேயே நீங்கள் விளாசிக்கட்டுவீர் தனி பிளாக்கில் இன்னும் நான் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். நன்றியுடன்! நல்லதந்தி!

  ReplyDelete
 2. அன்புச் சகோதரி சாரதாவுக்கு பாராட்டுக்கள். சிவாஜி ரசிகர்களின் உள்ளத்தை துல்லியமாக பிரதிபலித்துள்ளீர்கள். ஹீரோ 72 என்று ஆரம்பித்த போது ஏராளமான கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் உண்டாக்கி, அந்த ஸ்டில்களின் மூலம் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்து ஏக பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் சித்ராலயா பத்திரிகையில் படம் தயாரிப்பில் இருந்த போதே முழுப்பக்க விளம்பரம் வந்து அனைத்து ரசிகர்களின் இதயத்திலும் நடிகர் திலகத்தின் தோற்றம் ஓய்யாரமாக குடிகொள்ள வைத்தது, இவையெல்லாம் நேற்று நடந்தது போல் உள்ளன. வாழ்க்கையில் 1972 திரும்பி வராதா என்று ஏங்காத நாளே இல்லை, அப்படிப் பட்ட காலகட்டம் அது. நீங்கள் சொன்னது போல் ஹீரோ 72 வாகவே வந்திருந்தால் பலர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியிருப்பர். அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு பின் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு, அவளுக்கென்று ஓர் மனம், அலைகள் போன்ற படங்களில் இருந்த வருவாயெல்லாம் முதலீடு செய்து அவற்றின் தோல்வியால் சித்ராலயா பாதிக்கப் பட்டதாக செய்திகள் பரவியது அக்காலம்.

  வாணி ஜெயராம் அவர்கள் சமீபத்தில் மெல்லிசை மன்னர் இணையதள ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கிட்டத் தட்ட 50 நிமிடங்கள் பாடினார். அனைத்தும் மெல்லிசை மன்னரின் இசையில் அவர் பாடியவை. அதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்றால் இப்பாடல் மிக பலத்த வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி மீண்டும் இரண்டாம் முறை அவரைப் பாட வைத்தது. அதே போல் அவரை இரண்டாம் முறை பாட வைத்த பாடல், அவன்தான் மனிதன் படத்தில் இடம் பெற்ற எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது.

  மீண்டும் என் பாராட்டுக்கள்.

  அன்புடன்

  ReplyDelete
 3. நன்றி சகோதரர் நல்லதந்தி அவர்களே.
  தாமதித்த மறுமொழிக்கு மன்னிக்கவும். ஏதோ எனக்குத்தோன்றுவதை எழுதிவைக்கலாமே என்று துவங்கியதுதான். அவற்றில் ஒருசில பதிவுகள் சுவாரஸ்யமாக அமைந்தால், அட்கு என் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். உங்களின் 'தொடர் எட்டிப்பார்த்தலில்' சேர்த்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. டியர் ராகவேந்தர் (NTFan)
  'வைர நெஞ்சம்' பற்றிய கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி. 70-களின் இனிய நினைவுகள் என்றேன்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும். 'நீராட' பாடலை வாணி ஜெயராம் மேடையில் பாடினார் என்றறிந்து மிக்க சந்தோஷம்.

  இந்த வலைப்பூவைப்பற்றி www.nadigarthilagam.com இணையதளத்தில் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி..

  ReplyDelete
 5. தஞ்சாவூர் ராஜா கலை அரங்கம் தியேட்டரில் பார்த்தது. பழைய நினைவுகள் வருகின்றன. அவர் தோற்றம் பற்றி குறிப்பிட்டது முதல் இசை அமைப்பு வரை எல்லாம் நினைவுக்கு வருகின்றன. பத்மப்ப்ரியா தமிழில் அறிமுகமான படம் இதுதான்.செந்தமிழ் பாடும் பாடலை இப்போதும் நான் என் செல்லில் வைத்து கேட்கிறேன். ஆஹா...என்ன பாடல்....

  ReplyDelete