Sunday, April 24, 2011

இவர்கள் வித்தியாசமானவர்கள்

எழுபதுகளின் இறுதிப்பகுதிகளில், முழுநேர நாடக நிறுவனங்களில் மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் போன்ற ஒரு சிலவே தொடர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டிருக்க, சென்னை நாடக அரங்குகளில் பெரும்பாலும் அமெச்சூர் நாடகமன்றங்களே கோலோச்சிக்கொண்டிருந்தன. அப்படியான அமெச்சூர் நாடகக்குழுவில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருவர் கதாசிரியர், வசனகர்த்தா, மற்றும் இயக்குனர் என்ற முப்பரிமாணங்களுடன் 1979-ல் திரையுலகில் கால் பதித்தார். அவர்தான் இன்றைக்கும் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கும் "மௌலி". அவருடைய வித்தியாசமான சிந்தனையில் உருவானதுதான் 'இவர்கள் வித்தியாசமானவ்ர்கள்'  திரைப்படம்.

ஒரு அலுவலகத்தில் மாதச்சம்பளத்தில் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த். அவருக்கு பாந்தமான மனைவியாக ஸ்ரீவித்யா மற்றும் இரண்டு குழந்தைகள் என அழகான அளவான குடும்பம். வித்யாவின் சித்தப்பாவாக நாகேஷ். இந்நிலையில் அதே அலுவலகத்துக்கு உதவி மேனேஜராக தலைமை அலுவலகத்திலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு வந்து சேரும் 'படாபட்' ஜெயலட்சுமி. திருமணம் ஆகியிராத அவருக்கு ஆதரவு நிழகாக இருக்கும் தந்தை பூர்ணம் விஸ்வநாதன்.  அலுவலகத்தில் மேனேஜர் ஸ்ரீகாந்துக்கும், உதவி மேனேஜர் ஜெயலட்சுமிக்கும் 'ஈகோ' பிரச்சினை படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போது, அங்கிருந்தே மாற்றல் வாங்கி சென்றுவிடத்துடிக்கும் ஜெயலட்சுமி. அவரை அப்படியே ஸ்ரீகாந்த் போக விட்டிருந்தாரானால் படம் மூன்றாவது ரீலில் முடிந்துவிட்டிருக்கும் (?). ஆனால் போகாமல் தடுக்கும்போது, ஸ்ரீகாந்தின் நல்ல மனம் ஜெயலட்சுமியின் மனதில் சலனத்தை ஏற்படுத்த, வந்தது வினை. ஸ்ரீகாந்த் திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்பவர் என்று தெரிந்தும் ஜெயலட்சுமி அவரைக் காதலிக்க, அதைத்தவிர்க்க முடியாத நிலையில் ஸ்ரீகாந்தும் ஏற்றுக் கொள்ள, இதற்கு அப்பாவியான முதல் மனைவி ஸ்ரீவித்யாவும் சம்மதிக்க, தந்தை பூர்ணம் ஊரில் இல்லாத நேரம் அவர்கள் திருமணம் நடந்துவிடுகிறது. அதைத்தொடர்ந்து இரண்டு பெண்டாட்டிக்காரரான ஸ்ரீகாந்த் வாழ்வில் படும் அவஸ்தைகளை வைத்து சுவையாக படத்தைக்கொண்டு சென்றிருப்பார் மௌலி. இன்னொன்றைக் குறிப்பிட விட்டுவிட்டேன். கதை, வசனம், இயக்கத்தோடு நிற்காமல் நான்காவது பரிமாணமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் உருவெடுத்திருப்பார் மௌலி. மனைவியிழந்தவராக வரும் இவர், கைவிடப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் கிடைத்த பொறுப்புமிக்க கதாபாத்திரம், ஏற்கெனவே அவர்மேல் திணிக்கப்பட்டிருந்த இமேஜை உடைத்து, எந்த ரோலிலும் தன்னால் சோபித்துக்காட்ட முடியும் என்ற புதிய முகவரியைத்தந்தது என்றால் மிகையல்ல. இரண்டு வீட்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடும் நிலையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். கடைசியில் இரண்டு வீடுமே இல்லாமல் போய், தனியாளாக அலையும் போது (பின்னணியில் மெல்லிசை மன்னரின் குரலில் 'இரண்டு வீடு இரண்டு கட்டில், படுக்க இடமில்லை' பாடல் ஒலிக்க) கடற்கரை மணலில் அலையும் அவர், ஒன்றுமாற்றி ஒன்று அறுந்து போகும் இரண்டு செருப்புக்களையும் உதறி எறிந்துவிட்டு வெறும் காலுடன் செல்வது நல்ல டைரக்டோரியல் டச்.  

ஸ்ரீவித்யா அப்படியே ஒரு அப்பாவி மனைவியை கண்முன் கொண்டு வந்திருப்பார். கணவர் ஸ்ரீகாந்தை 'ராமுப்பா... ராமுப்பா..' என்று அழைத்தவண்ணம் படத்தின் முற்பகுதியில் வளைய வரும்போதே அனைவரது அபிமானத்தையும் பெற்றுவிடுகிறார். (அதென்ன ராமுப்பா?. தன் மகன் ராமுவுடைய அப்பாவாம்). கணவரின் இரண்டாவது மனைவியான படாபட் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்ததைப் பார்க்கச்செல்லும் அவர், தன் கணவர் தன்னையும் தன் குழந்தைகளையும் மறந்து இரண்டாவது மனைவியே கதி என்று இருப்பதைச் சுட்டிக்காட்ட, அங்கு கிடக்கும் தூசி படிந்த தலையணையைத் தட்டி, 'அப்பப்பா தலையணையெல்லாம் ஒரே தூசி படிஞ்சு கிடக்கு' என்று சொல்லும் இடத்தில் மௌலி தெரிகிறார்.

இவரது சித்தப்பாவாக வரும் நாகேஷ் பற்றி சொல்லவே வேண்டாம். பிரமாதப்படுத்தியிருப்பார். அத்தானின் இரண்டாவது திருமணத்துக்கு ஸ்ரீவித்யா சம்மதித்து விட்டார் என்பதையறிந்து கொடுப்பாரே ஒரு பஞ்ச் டயலாக்.. சூப்பர். கடைசியில் ஸ்ரீவித்யாவிடம் 'உன் புருஷனோட  கல்யாணத்தில் நீ எங்கே இருப்பே?. புருஷனோட ரெண்டாவது கல்யாணத்துல முதல் மனைவி எங்கே இருக்கணும்னு இந்து தர்மத்துல சொல்லலியேம்மா' என்று கேட்கும் இடத்தில் அவர் முகத்தில் தெரியும் அந்த ஏக்கமும் ஏமாற்றமும்.. யப்பா.

'படாபட்' ஜெயலட்சுமியிடம் நல்ல பாந்தமான நடிப்பு. அந்த நேரத்தில் அவர் முள்ளும் மலரும், தியாகம், 6 லிருந்து 60 வரை என அசத்திக்கொண்டிருந்த நேரம். இந்தப்படத்திலும் அசத்தியிருந்தார். தேனிலவுக்காக ஸ்ரீகாந்துடன் வெளியூர் சென்று ஓட்டல் அறையில் நுழைந்த சற்று நேரத்திலேயே, வித்யாவின் குழந்தைக்கு விபத்து என்று போன் வர, முகத்தில் தோன்றும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, 'புறப்படுங்க.. போகலாம்' என்று சொல்வாரே, அந்த இடத்தில் அவர் பார்வையும், அதற்கு பதிலளிப்பது போல 'என்னை மன்னித்துவிடு, வேறு வழியில்லை' என்பது போல ஸ்ரீகாந்த் அவரைப் பார்ப்பாரே அந்தப்பார்வையும் வசனமின்றி உணர்ச்சிகளைக்கொட்டும். அதேபோல இன்னொரு கட்டத்தில், வெளியூரிலிருந்து வரும் பூர்ணம் தன் வீட்டில் ஸ்ரீகாந்த் குளித்துக்கொண்டிருப்பதை கேள்விக்குறியுடன் பார்க்க, 'அவர் யாருடைய வீட்டிலோ குளிக்கிறார்னு பார்க்காதீங்கப்பா. அவருக்கு உரிமையான வீட்டில்தான் குளிச்சிக்கிட்டிருக்கார்' என்று சொல்லி, தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்துவிட்டதை நாசூக்காக உணர்த்துமிடமும் அப்படியே. ஆனால் அதைக்கேட்டதும் அதிரும் பூர்ணம் மகளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், நேராகச்சென்று சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்தை உடைப்பதும், அதைப்பார்த்து ஜெயலட்சுமி அதிர்வதும் உணர்ச்சிகளின் உச்சம். 

மனதில் எதையும் மறைக்கத்தெரியாத வெள்ளந்தியான அப்பாவாக வரும் 'பூர்ணம்' விஸ்வநாதனுக்கு யார் அந்தப்பெயர் வைத்தார்களோ தெரியாது. ஆனால் பெயருக்கேற்றாற்போல நடிப்பில் பரி'பூரணம்'. மகளின் திருமணத்துக்கு முன் மகளின் மேலதிகாரியான ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வரும் அவர், அங்கிருக்கும் நாகேஷ் ஒரு பழைய பட்டாளத்து வீரர் எனப்தையறிந்து, பட்டாளத்திலிருக்கும் யாரோ (நாகேஷுக்கு முன்பின் தெரியாத) தன் பழைய நண்பனைப்பற்றி அசால்ட்டாக விசாரிக்கும்போது தெரியும் அப்பாவித்தனம் அவரது தேர்ந்த நடிப்புக்கு ஒரு சான்று.

ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா, 'படாபட்'ஜெயலட்சுமி, மௌலி, நாகேஷ், பூரணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்துக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வித்யாவுக்காக வாணி ஜெயராம் பாடிய பாடலும் (முதலடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்), எம்.எஸ்.வி. பாடிய (நான் முன் குறிப்பிட்ட) பாடலும் மனதைக்கவர்ந்தன. குடும்பக்கதைக்கேற்ற சுகமான ரீ-ரிக்கார்டிங். படம் துவங்கும்போது ஆகாசவாணியின் இசையை மெல்ல பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பது ஜோர்.

வித்தியாசமான ஒரு படத்தைத்தந்த 'இவர்கள்' நிச்சயம் 'வித்தியாசமானவர்கள்'தான்.

6 comments:

  1. வித்தியாசமான போஸ்டும் கூட..:) மெளலியோட குறும்ம்புத்தனமான வசனங்கள் & நடிப்பு இரண்டுமே எனக்கு(ம்) பிடிக்கும்.

    ReplyDelete
  2. Dear சாரதாஜி,

    ஒரு வெளிச்சம் படாத பழைய திரைப்படத்திற்கு இப்பேர்ப்பட்ட sincere detailed விமரிசனம் உங்களால் மட்டும்தான் எழுத முடியும்.

    You have an awesome passion for review writing

    அன்புடன்,

    ReplyDelete
  3. மௌலி எனக்கு பிடித்த இயக்குனர்,நடிகரும் கூட.மிகவும் புதிய அறிமுகத்துடன் கூடிய பதிவு,இதுபோல நிறைய அறிமுகம் செய்யுங்கள்.நன்றி

    ReplyDelete
  4. இவர்கள் வித்தியாசமானவர்கள் படத்தைப் பற்றிய தங்களின் விரிவான அறிமுகம் சிறப்பாக உள்ளது. இப்படத்தில் மற்றோர் சிறப்பம்சம் என்னவென்றால், ஹம்மிங் குயில் வசந்தாவின் சகோதரி சாவித்திரி எஸ்.ஜானகியுடன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். சாவித்திரியைப் பற்றி நினைவூட்டும் பாடல், காஞ்சிப் பட்டுடுத்தி என்கின்ற பாடலாகும். வயசுப்பொண்ணு படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ஜேசுதாஸ் குரலுடன் ஒலிப்பது சாவித்திரியின் ஹம்மிங். இப்படத்தில் அவர் பாடலை பாடியிருப்பார். மிகச் சிறப்பான பாடல். முதலடி நினைவில்லை.
    அன்புடன்

    ReplyDelete
  5. hi,

    just saw your site today.. it is very interesting. I almost had read all your articles because
    1. I am also interested to know about the true legends of the past and most importantly,
    2. the articles are very less. :) please publish more...

    One problem I faced/facing is that the background colour. I am not able to read even a paragraph continuously. If I read it fully, kan koosudhu.... can you please address this issue?

    Regards,
    Nandakumar G.

    ReplyDelete
  6. தக்குடு,
    கன்பத்,
    கீதப்ப்ரியன்,
    ராகவேந்தர்,
    நந்தகுமார்....

    உங்கள் அனைவரின் ஊக்கமளிக்கும் பின்னூட்டப் பதிகளுக்கும் நன்றி.

    மேலதிக தகவல்கள் தந்த ராகவேந்தர் அவர்களுக்கு நன்றி.

    நந்தகுமார், தாங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை விரைவில் நிவர்த்திசெய்ய முயற்சிக்கிறேன்.

    ReplyDelete