நடிகர்திலகம் காங்கிரஸுக்காக உழைத்த அளவுக்கு, காங்கிரஸில் அவர் கௌரவிக்கப் படவில்லை. காங்கிரஸில் அவரளவுக்கு காமராஜர் பெயரை உச்சரித்தவர்களும் இல்லை. தன்னுடைய திரைப்படங்கள் மூல்மாக காமராஜரையும் காங்கிரஸையும் மக்கள் மத்தியில் உயிர்ப்பாக வைத்திருந்தவர். அவரது அரசியல் ஈடுபாடு காரணமாக, வெற்றிபெற வேண்டிய பல படங்களும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றன. அவ்வளவு பெரிய நடிகர் தன்னுடைய திரைப்பட செல்வாக்கை காங்கிரஸ் கட்சிக்கு வலிய வந்து தருகிறாரே என்ற நன்றியுணர்ச்சி காங்கிரஸ் தலைவர்களுக்கு (தொண்டர்களுக்கு அல்ல) என்றுமே இருந்ததில்லை.
தேர்தல் நேரங்களில், அவர் தன்னுடைய திரைப்பட படப்பிடிப்புகளை ஒத்தி வத்துவிட்டு, தேரதல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஒரு நன்றி சொல்லக்கூட அவரைச்சென்று பார்க்கமாட்டர்கள். இது கண்கூடாக நடந்த உண்மை.
ஒருமுறை ஒரு பொதுத்தேர்தல் முடிந்த சமயம், படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் ஸ்டுடியோவுக்கு வெளியில் மரத்தின் நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, சற்று தூரத்தில் ஒரு கூட்டத்தினர், வேறொரு படப்பிடிப்பில் இருந்த நடிகர் ஆனந்தனை சந்தித்து, அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து அவருடன் உரையாடிவிட்டுப் போனார்களாம். அப்போது சிவாஜி தன் அருகில் இருந்தவரிடம் 'அவங்க என்னப்பா பண்றாங்க?. ஆனந்தனுக்கு இன்னைக்கு பிறந்த நாளா?' என்று கேட்க, அருகில் இருந்தவர், 'இல்லண்ணே, இப்போ நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர் வந்து ஆனந்தனுக்கு நன்றி சொல்லிட்டு போகிறார். ஏன்னா, ஆனந்தன் அவருக்காக அவருடைய தொகுதியில் பிரச்சாரம் பண்ணினாராம்' என்று சொல்லியிருக்கிறார். அப்போது நடிகர்திலகம் 'உம்... நானும்தான் தமிழ்நாடு முழுக்க சுற்றி, சுற்றி பிரச்சாரம் பண்ணினேன். அதுல பலர் ஜெயிச்சும் இருக்காங்க. ஆனா ஒருத்தர் கூட தேர்தல் முடிந்து என்னை வந்து பார்க்கலை' என்று விரக்தியோடு சொன்னாராம். இந்த அளவுக்குத்தான் காங்கிரஸ்காரர்களின் நன்றியுணர்ச்சி.
கலைஞர் கருணாநிதியும், எம்,ஜி,ஆரும், ஜெயலலிதாவும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் சிவாஜி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கருணாநிதி தி.மு.கவுக்காக பிரசாரம் செய்தால், அக்கட்சி வெற்றி பெற்றதும் அவர் முதல்வர் ஆவார். எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்தால் அக்கட்சி வெற்றியடைந்ததும் அவர் முதல்வர் ஆவார். அதுபோலவே ஜெயலலிதா, அண்ணா தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்தால் அக்கட்சி வெற்றியடைந்ததும் அவர் முதல்வர் ஆவார். ஆனால் சிவாஜி காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்து அக்கட்சி வெற்றி பெற்றாலும் அவருக்கு எந்தப்பதவியும் கிடைக்கப்போவதில்லை. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸில் அவருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் வழங்கப்படவில்லை என்பது உண்மை.