பழையவற்றை அசைபோடுவதுபோன்ற இனிமையான அனுபவம் உண்டா?. என்னைப் பொறுத்தவரை 'கிடையாது' என்பதே என் பதில்.
எங்கள் இளம் பருவத்தில், எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் பல ஆண்டுகள் பசுமாடு இருந்தது. எங்கள் ஊரிலும் 'பவுண்டுத்தொழு' எனப்படும் கால்நடை சிறைச்சாலை இருந்தது. சென்னையின் இயந்திர கதியில் வாழ்க்கையைத் தொலைக்கும் முன், அனுபவித்த சுவையான நினைவுகளை உங்கள் கட்டுரை கிளறிவிட்டுவிட்டது. சேர்மன்வாடி சந்திப்புக்கும், பழஞ்செட்டித்தெரு சந்திப்புக்கும் இடையே, மெயின் ரோட்டிலேயே இருந்தது பவுண்டுத்தொழு. எங்களுடையது நல்ல பசு ஆதலால் ஒருநாளும் பவுண்டில் அடைக்கப் பட்டதில்லை. ஆனால் என் நண்பர்களின் வீட்டு மாடுகள் அடைபட்ட போதெல்லாம் போய்ப்பார்த்த அனுபவம் உண்டு.
சரி, ‘பவுண்டுத்தொழு’ என்றால் என்ன?. அதுதான் கால்நடைகளுக்கான சிறைச்சாலை. மற்றவர்கள் வீட்டு ஆடுகள் அல்லது மாடுகள் தங்களது வீட்டு விளைநிலங்களில் நுழைந்து மேய்ந்து பயிர்களை, அல்லது செடிகொடிகளை நாசப்படுத்திவிட்டால், பாதிக்கப்பட்ட நிலத்துக்காரர்கள் அந்த ஆட்டை அல்லது மாட்டை இழுத்துக்கொண்டுபோய், பவுண்டுத்தொழு எனும் கால்நடைச் சிறையில் அடைத்து விடுவார்கள். அதற்கான சாவி பஞ்சாயத்து போர்டு பணியாளரிடம் இருக்கும். பின்னர் தங்கள் கால்நடைகளைக்காணாமல் தேடியலையும் அவற்றின் சொந்தக்காரர்கள், பவுண்டுத்தொழுவிற்கு வந்து, பஞ்சாயத்துபோர்டுக்கு அபராதம் செலுத்தி அவற்றை அழைத்துப்போவார்கள்.
உயர்நிலைப்பள்ளி முடியும் வரை ஆண், பெண் பாகுபாடின்றி பழகிய காலம் அது. அப்போது ஊரில் இருந்தது ஒரே உயர்நிலைப்பள்ளி. சேதுரோட்டுக்கு தெற்கே பெரிய கிரவுண்டைக்கடந்து போக வேண்டும். அல்லது கஸ்டம்ஸ் ரோட்டில் போய் பள்ளி அருகில் கிழக்கு நோக்கி இறங்க வேண்டும். சற்று தூரத்தில் ஆண்கள் கல்லூரி சேது ரோட்டுக்கு வடக்கே, சாலையை ஒட்டியே இருந்தது. எங்களது எஸ்.எஸ்.எல்.சி. வரை கோ-எஜுகேஷன் ஸ்கூல். பள்ளிகூடத்திலேயே காதல் உண்டாவதாகக் காண்பிக்கும் திரைப்படங்கள் வராததாலும், அவ நம் வீட்டுக்கூடத்துக்கே வந்து கெடுக்கும் தொலைக்காட்சிகள் இல்லாததாலும் மனதில் கல்மிஷம் இல்லாமல் பழகிய வயதுகள். எங்கள் கூட்டத்தில் ஆறு மாணவர்கள், ஐந்து மாணவிகள், என்னையும் சேர்த்து. எப்போதும் ஒரே கூட்டமாக சுற்றுவோம். பள்ளியில் யூனிபாரமெல்லாம் கிடையாது. கலர்கலராக பாவாடை, தாவணி அணிவோம். மாணவர்கள் நினைத்தால் பேண்ட் அணிந்து வருவார்கள் அல்லது லுங்கி (?) அணிந்து வருவார்கள்.
எங்கள் ஊர் பவுண்டுத்தொழு சுமார் இருபது அடிக்கு இருபது அடி சதுர இடம், அதிலேயே ஆடுகளுக்காக சின்ன உட்பிரிவு, அதற்கு தனியாகக்கதவு. ஆடுகளுக்கான பிரிவுக்கு மட்டும் மேற்கூறை, மாடுகளுக்கு வெட்டவெளி. இரண்டு கதவுகளிலும் முக்காலுக்கு முக்கால் அடியில் கம்பிகள் போட்ட ஒரு திறப்பு உண்டு. உள்ளே நிற்கும் மாடு அல்லது ஆடுகளை அதன் வழியாகப் பார்த்துக்கொள்ளலாம். அந்த வழியாகப்போகும்போதெல்லாம் சும்மா போய் உள்ளே எட்டிப்பார்ப்போம். ஏதோ அவைகளை அழைத்துப்போக வந்திருப்பதுபோல பரிதாபமாகப்பார்க்கும். உள்ளே அடைத்தாலும் பட்டினி போட்டுவிட மாட்டார்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் அல்லது புல், மற்றும் ஒரு பக்கம் சிமெண்ட் திண்ணையோடுகட்டப்பட்ட 'குடுதாழி' எனப்படும் தண்ணீர்த் தொட்டியில் நிறையத்தண்ணீர் இருக்கும்.
சில நேரங்களில் எட்டிப்பார்க்கும்போது, நமக்குத்தெரிந்தவர்கள் வீட்டு மாடு அல்லது ஆடு உள்ளே நின்றால் அவர்கள் வீட்டுக்குப்போய் 'உங்க வீட்டு மாட்டைக்காணோமா?. பவுண்டுல அடைச்சி வச்சிருக்காங்க' என்று தெரிவித்து சமூக சேவை செய்வதும் உண்டு.
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்காக சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் சேர்ந்ததும், சூழ்நிலைகள் சுத்தமாக மாறிப்போனது. என்னவோ திடீரென்று சந்திர மண்டலத்தில் போய் இறங்கியது போன்றதொரு நிலை. ஊரில் ஆண் மாணவர்களோடு பழகும்போது கூட தப்பாக தெரியாத பழக்க முறைகள் மறைந்து, மாணவிகளிலேயே கூட வார்த்தைக்கு வார்த்தை தவறான உள்ளர்த்தம் வைத்து பேசும், முற்றிலும் புதியதொரு சூழ்நிலை புரிபடத்துவங்கியது.
நிறைய ஆண்டுகள் கடந்தபின்னர் ஊர் சென்ற சமயம் பவுண்டுத் தொழுவத்தைப் போய்ப்பார்த்தபோது, அது உபயோகத்தில் இல்லையென்று சொன்னார்கள். இருந்தாலும் ஆர்வத்துடன் முக்காலடி ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தேன். காலியாகக்கிடந்தது. இடம் முழுக்க கருவேலஞ்செடிகள் மண்டிக்கிடந்தன. இதுவும் சரி, இதோடு இணைந்த பழைய ரெவினியூ இன்ஸ்பெக்டர் அலுவலகமும் சரி, நொறுங்கிப்போய் இன்றோ நாளையோ விழும் நிலையில் இருந்தன.
விரைவில் அவற்றை இடிக்கப்போவதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இடிந்து கட்டந்தரையாகப் போகும்முன்னர் பார்த்துவிட்ட திருப்தியில் பெருமூச்சு விட்டேன். 'இவ்வளவுதான் வாழ்க்கை'யென்பதை எவையெவைல்லாம் நமக்குப்புரிய வைக்கின்றன.
மிக நல்ல நினைவலைகளை பகிர்ந்தீர்கள்.கடற்கரையோரம் எந்த ரயில்வே ஸ்டேஷன் உள்ளது?எனக்கு பிடிபடவில்லை.ஒரு சிறுகதை படித்த உணர்வை கொடுத்தது.,அருமை
ReplyDeleteமிக்க நன்றி கீதப்ரியன்.
ReplyDeleteதங்களது ஊக்கமளிக்கும் வரிகளைக்காணும்போது, 'பரவாயில்லை, நம் எழுத்துக்கள் மற்றவர்களுக்கு போரடிக்கவில்லை' என்ற நிறைவு ஏற்படுகின்றது.
கனிவான பின்னூட்டத்துக்கு நன்றி.
சாரூ...