1989 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியுடன், குறிப்பாக திரு ஜி.கே.மூப்பனார் அவர்களின் தலைமையின்மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக நடிகர்திலகம் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். தனியாக விலகியிருந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடலாம். ஆனால் அவரோடு காங்கிரஸில் இருந்த ஏராளமான ஆதரவாளர்கள், குறிப்பாக ரசிகர்மன்றத்தினர் பெருமளவில் விலகியதன் காரணமாக அவர்களை அரசியலில் வழிநடத்திச்செல்ல ஒரு அரசியல் அமைப்பைத் துவங்கவேண்டிய நிலைக்கு ஆளானார். அதில் உருவானதுதான் அவரது தலைமையில் அமைந்த 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற இயக்கம்.
அவ்வியக்கம் உருவான சிலமாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்தது. அச்சமயம் தனிக்கட்சி துவங்கியது முதலே தன்னைத்தொடர்பு கொண்டு ஆதரவு வழங்கி வந்த அ.இ.அ.தி.மு.க (ஜானகி பிரிவைச்சேர்ந்த) திருமதி வி.என்.ஜானகி, திரு ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர், அந்தத்தேர்தலில் தனது த.மு.மு.இயக்கத்துடன் கூட்டணி வைக்க விரும்புவதை நடிகர்திலகம் ஏற்றுக் கொண்டார். இதனிடையே நடிகர்திலகம் தனிக்கட்சி ஆரம்பித்திருப்பதை அறிந்த கலைஞர் தலைமையிலான 'திராவிட முன்னேற்றக் கழகம்', நடிகர்திலகத்தின் த.மு.மு.இயக்கத்துக்கு அந்தத்தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகளைத் தருவதாக தூதனுப்பியது. ஆனால் ஏற்கெனவே ஜானகி அணிக்கு ஆதரவளிப்பதாக வாக்குக்கொடுத்து விட்டதாகவும், கொடுத்த வாக்கைக்காப்பாற்ற வேண்டுமென்றும் அரசியலில் பத்தாம்பசலித்தனமாக எண்ணிய நடிகர்திலகம், தி.மு.க.வின் கூட்டணி கோரிக்கையை நிராகரித்தார். அரசியலில் நடிகர்திலகம் எடுத்த மோசமான முடிவுகளில் இதும் ஒன்று. 20 என்ற இடத்தில் கொஞ்சம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் 25 தொகுதிகளை தர சம்மதித்திருப்பார்கள்.
ஏனென்றால் 1989 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வேறெந்த பிரதானக்கட்சியும் இல்லை. அ.தி.மு.கழகம் ஜானகி அணியென்றும், ஜெயலலிதா அணியென்றும் பிளவுபட்டு நின்றது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப்பிடிக்கும் எண்ணத்துடன் தனித்து நின்றது (மூப்பனாரும் போட்டியிட்டார்). எனவே 89 தேர்தலில் திமு.க.வின் வெற்றி உள்ளங்கை நெல்லிகனியாக கணிக்கப்பட்டது. அப்போது நல்ல வாய்ப்பாக திமு.க.தரப்பிலிருந்து வலிய வந்த அழைப்பை நடிகர்திலகம் நிராகரித்து, ஜானகி அணிக்கு வாக்குறுதி கொடுத்ததை பிரதானமாக மதித்தார். அந்நேரத்தில் இருந்த அரசியல் சூழலுக்கு, த.மு.மு.இயக்கம் தி.மு.கவுடன் சேர்ந்து களம் கண்டிருந்தால் எப்படியும் 15 சட்டமன்ற உறுப்பினர்களை த.மு.மு. பெற்று, அதன்மூலம் இயக்கம் வலுப்பெற்றிருக்கும்.
ஆனால் அரசியலில் வாக்குறுதிகளை மதித்த காரணத்தால் பெரிய இழப்பு ஏற்பட்டது. 1989 தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. (ஜானகி பிரிவு), த.மு.மு. கூட்டணி பெருத்த தோல்வியைச் சந்தித்தது. ஒரு இடம் தவிர அந்த அணி போட்டியிட்ட அனைத்து தொகுதியையும் இழந்தது. சேரன்மாதேவியில் மட்டும் இவ்வணியின் வேட்பாளர் பி.எச்.பாண்டியன், தனது தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெற்றார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட நடிகர்திலகம் உட்பட, த.மு.மு. இயக்கத்தின் 50 வேட்பாளர்களும் தோல்விடைந்தனர். ஏற்கெனவே நடிகர்திலகத்தின் அரசியல் பங்கேற்பு பற்றி வாய்க்கு வந்தபடி கிண்டல் செய்து வந்தோர்க்கு, வாயில் ஒரு மூட்டை அவல் கொட்டியது போலானது. ஆசைதீர மென்று தீர்த்தனர்.
ஆனால் தற்போது வலைப்பூக்களில் எழுதிவருவோர், அத்தேர்தலில் நடிகர்திலகத்தின் தோல்வி பற்றி எழுதும்போது, திருவையாற்றில் அவர் டெபாஸிட் இழந்தார் என்ற ஒரு முழுப்பொய்யையும் சேர்த்து எழுதிவருகின்றனர். அது முழுப்பொய் என்பதற்கு ஆதாரம், திருவையாற்றில் பதிவான வாக்கு விவரங்கள் இதோ:
1989 திருவையாறு சட்டமன்றத்தொகுதி தேர்தல் முடிவு
துரை சந்திரசேகரன் (திராவிட முன்னேற்ற கழகம்) 36,981 சிவாஜி கணேசன் (தமிழக முன்னேற்ற முன்னணி) 26,338 ஆறுமுக கொண்ணமுண்டார் – (காங்கிரஸ்) - 14,346 ஆழி கோ மருதையன் (அ.இ.அ.தி.மு.க (ஜெ.அணி)) 13,435 முருகேசன் – (நெடுமாறன் கட்சி) – 270
துரை சந்திரசேகரன் (திராவிட முன்னேற்ற கழகம்) 36,981 சிவாஜி கணேசன் (தமிழக முன்னேற்ற முன்னணி) 26,338 ஆறுமுக கொண்ணமுண்டார் – (காங்கிரஸ்) - 14,346 ஆழி கோ மருதையன் (அ.இ.அ.தி.மு.க (ஜெ.அணி)) 13,435 முருகேசன் – (நெடுமாறன் கட்சி) – 270
அத்தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் திரு துரை சந்திரசேகரன் கருத்து...
('சிவாஜியை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற உங்கள் அனுபவம் எப்படியிருந்தது?' என்ற கேள்விக்கு, திரு துரை சந்திரசேகரனின் பதில் - மாலை முரசு நாளிதழ்).
பலருக்கும் சென்றடைய வேண்டிய தகவல்கள்
ReplyDelete