Wednesday, December 29, 2010

தமிழக முன்னேற்ற முன்னணி பற்றி நடிகர்திலகம்

"அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்தபின், ஜானகி அம்மாள் சிலநாட்கள் முதல் மந்திரியாக இருந்தார். அப்போது சட்ட மன்றத்துக்கு தேர்தல் வந்தது. 'ஜானகி அம்மையார் அணியும் நானும் ஒன்றாகத் தேர்தலில் நின்றால் ஜெயித்து விடலாம்' என்று பல பேர் கூறினார்கள். அது போலவே நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தோம். இருந்தாலும் எனக்குத் தேர்தலில் நிற்பதற்குத் தயக்கம் இருந்தது. ஏனென்றால் நான் கட்சி ஆரம்பித்து சில நாட்கள் தான் ஆகியிருந்தன. கட்சியானது அப்போது முழுமையாக வளர்ச்சி அடைந்து மக்களின் நம்பிக்கையைப் பெற அவகாசம் இல்லை. எனவே நான் சற்றுத் தயங்கினேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னிடம் வந்து 'நாங்கள் மக்களிடத்தில் நமது கட்சியைப்பற்றிக் கேட்டோம். எல்லா இடங்களிலும் நமது கட்சி நன்கு வளர்ந்திருக்கிறது. கிராமங்களில் எல்லாம் காங்கிரஸ் கொடிக்குப் பதில் உங்கள் கொடி தான் பறக்கிறது' என்று கூறியவுடன் எனக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. என்னை ஒரு மாயையில் சிக்கவைத்து எனக்கு சோப்புப் போட்டு விட்டார்கள். எனது தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி வைத்து விட்டார்கள். நானும் "ஆகா!" என்று ஏமாந்து விட்டேன். என்னையே நான் ஏமாற்றிக் கொண்டேன். நமக்கும் மேலாக ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் அல்லவா? எதுவாயினும் அவன்தானே தீர்ப்புச் சொல்ல வேண்டும். அவனை மீறி நாம் எது செய்தாலும் அது தீங்காகவேதானே முடியும். அப்படித்தான் எனக்கும் நடந்தது. நான் தேர்தலில் நிற்கிறேன் என்றதும் 50 சீட் கொடுத்தார்கள். என் சொந்தப் பணத்தையும் மற்றும் வங்கியில் வாங்கிய கடன்களையும் வைத்துக் கட்சிக்காக செலவழித்தேன். பிற கட்சிக்கார்களில் நல்லவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் என் பிள்ளைகளிடம் வந்து 'அப்பாவை கட்சி ஆரம்பிக்க சொல்லாதீர்கள். வீணாக செலவு செய்யச் சொல்லாதீர்கள்' என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் என் பிள்ளைகளோ நல்ல பிள்ளைகள், அவர்கள் வந்தவர்களிடம் 'அப்பா இது வரை தனக்கென எதுவுமே கேட்டதில்லை. கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கிறார். அவர் என்ன செய்தாலும் தடுக்க மாட்டோம். சொத்துக்களையே விற்றாலும் கவலைப்பட மாட்டோம். எதுவாக இருந்தாலும் அவர் இஷ்டப்படியே செய்யட்டும்' என்று கூறிவிட்டார்கள். அதைப்போலவே நானும் என் இஷ்டப்படிதான் செய்தேன். தேர்தலில் நின்றேன் தோல்வி அடைந்தேன். தேர்தல் தோல்விக்குப் பிறகு ரசிகர் மன்றத்துப் பிள்ளைகள் மட்டும் தான் என்னுடன் இருந்தார்கள். அரசியலைச் சேர்ந்தவர்கள் வேறு யாருமே கிடையாது. அரசியலில் பல நேரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறேன். அரசியலுக்குள்ளே அரசியல் பண்ணுவது எனக்கு ஒத்துவரவில்லை. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும். நான் தெரிந்தோ தெரியாமலோ ஒரு மாபெரும் தவறு செய்தேன் என்றால் அது அரசியலில் புகுந்ததும் அதைக் கையில் எடுத்துக் கொண்டு சுயமாக ஒரு கட்சி ஆரம்பித்ததும்தான். காமராஜர் பிறந்த விருதுநகர் மண் அவரைத் தோற்கடித்தது. நான் வளர்ந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு மண் என்னைத் தோற்கடித்தது. என் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் நான் கற்றுக்கொண்ட நல்ல பாடங்களை என் கலையுலக நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கலைஞர்களே! நீங்கள் அரசியலில் அனுதாபியாக இருங்கள். ஆனால் அதனுள் நுழையாதீர்கள். அரசியல்வாதியின் நண்பனாய் இருங்கள். ஆனால் நீங்கள் அரசியல்வாதியாகி விடாதீர்கள். அதில் சென்று உறுப்பினராகி அந்த வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர் ஒரு அரசியல்வாதியா? அவருக்கு உதவி செய்யுங்கள். கட்சியின் கொள்கைகளை ஆதரியுங்கள். பரவாயில்லை. நீங்களே கட்சிக்காரனாக ஆகிவிடாதீர்கள். நீங்கள் பாடகனாகவே இருங்கள் அந்த பாட்டாகவே நீங்கள் ஆகிவிட வேண்டாம். ஆண்டவனுடைய எண்ணமோ, மக்களுடைய எண்ணமோ தெரியவில்லை. நான் எவ்வளவோ முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்தேன். இருந்தும் நம்மை தூக்கித் தள்ளிவிட்டார்கள். "நீ நடிகன். நடிகனாகவே வாழ்க்கையை ஆரம்பித்தாய். நடிகனாகவே இருக்கப்போகிறாய். நடிகனாகவே சாகப்போகிறாய். ஆகையால் மற்ற வேலைகள் எல்லாம் உனக்கு வேண்டாம். நீ எப்போதும் கலையுலகின் நிரந்தர நடிகனே!" என்று மக்கள் நினைத்திருக்கலாம். அதனால் தான் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி, நடிகனாக மட்டும் இருக்கிறேன். அரசியல் என்னவென்றும் மக்களிடத்தில் நாம் அரசியல்வாதியாக எவ்வாறு இருந்தோம் என்றும், நடிகனாக எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அனுபவத்தில் தெரிந்து கொண்டவன் நான். "கெட்டபின்பு ஞானி". இவையெல்லாம் தெரிந்து கொள்ள 60 வருடங்கள் ஆகிவிட்டன. அரசியலில் நான் தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால் ஏமாற்றப்பட்டேன்."