Wednesday, December 22, 2010

சந்திப்பு-நடிகர் ரவிச்சந்திரன்


ரவிச்சந்திரன் அவர்களுடன் எனது சந்திப்பு    

நான் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கல்ச்சுரல் விழாவுக்காக தோழிகள் சிலர் நாட்டிய நாடகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். (அந்த நாட்டிய நாடகத்தில் நான் இல்லை, காரணம் நாட்டியம் பார்க்க மட்டுமே தெரிந்தவள் நான்). அதற்கு இசையமைக்க நல்ல இசையமைப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் முத்து என்பவரை போடலாம் என்று முடிவெடுத்தனர். திரு முத்து, அப்போது இசைஞானி இளையராஜா ட்ரூப்பில் இசை உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அவரைச்சந்திக்க சென்ற சின்ன குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டனர். (இம்மாதிரி திரையுலக சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க செல்லும் குரூப்பில் நானாக ஒட்டிக்கொள்வது வழக்கம். காரணம் நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது தெரிந்த விஷயம்).  

மாலை சுமார் ஆறு மணியிருக்கும். மயிலாப்பூர் சித்திர குளத்துக்கு சற்று தொலைவில் ஒரு தெருவில்தான் முத்து குடியிருந்தார். விசாரித்துக் கொண்டே அவருடைய வீட்டை அடைந்தோம். அவரது வீட்டுக்கு எதிரே சின்னதாக ஒரு அழகிய பங்களா தென்பட்டது. வாசலில் போர்டு எதுவும் இல்லை. பார்த்தால் யாரோ பெரிய புள்ளியின் வீடுஆக இருக்கும் என்பது மட்டும் தெரிந்தது. யாராவது பெரிய பிஸினஸ்மேன், அல்லது அதிகாரி வீடாக இருக்கும் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டே முத்துவின் வீட்டுக்குள் சென்று அவரிடம் கல்லூரி நாட்டிய நாடகத்துக்கு இசையமைக்கக் கேட்டோம். அவர் டைரியைப் புரட்டிப்பார்த்து விட்டு நாங்கள் கேட்ட அந்த தேதியில் அவர் முக்கியமான ரிக்கார்டிங்கில் வாசிக்க இருப்பதாகச் சொல்லி, எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனிடையே அவருக்கு ஏதோ முக்கியமான போன் வரவே, 'ஸாரி, வருத்தப்பட்டுக்காதீங்க. அவசரமா போக வேண்டியிருக்கு. என் மனைவியிடம் பேசிவிட்டு எல்லோரும் டீ சாப்பிட்டு விட்டுப்போங்க' என்று எங்களிடம் சொல்லி விட்டு, வாசலில் நின்ற பைக்கில் ஏறி பறந்தார். முத்துவின் மனைவி எங்களிடம் அன்போடு உரையாடினார். அப்போது எதார்த்தமாக, எதிரில் இருக்கும் பங்களா வீட்டில் இருப்பது யார் என்று கேட்டோம். 'உங்களுக்குத்தெரியாதா?. நடிகர் ரவிச்சந்திரன் சாரும், அவர் மனைவி ஷீலாவும் அந்த வீட்டில் இருக்காங்க' என்று சொல்லி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இப்போது எங்களுக்குள், 'ஏய் எப்படியாவது அவங்களை சந்திச்சிட்டுப் போகலாம்டி. இந்த மாதிரி சந்தர்ப்பம் இனிமே கிடைக்காது' என்று சொல்ல, எங்களில் ஒருத்தி, 'நாம நினைச்சவுடன் அவங்களை சந்திக்க முடியுமா?. திடீர்னு வாசலில் போய் நின்னா உள்ளே விடுவாங்களா?' என்று சந்தேகம் கிளப்ப, இன்னொருத்தி, 'ஒரு ஐடியா, இவங்க (முத்துவின் மனைவி) மூலமாகவே பெர்மிஷன் கேட்போமே' என்று சொல்லி அவங்களிடம் சொல்ல (இதனிடையே டீ வந்தது, குடித்தோம்). நாங்க சொன்னதைக் கேட்டு சிறிது தயங்கிய அவர், பின்னர் போன் செய்தார். ரிஸீவரை கையில் பொத்திக்கொண்டு, எங்களிடம் ரகசிய குரலில் 'சார்தான் பேசுறார்' என்றவர் போனில், 'சார், நான் எதிர்வீட்டிலிருந்து முத்துவின் மனைவி பேசுறேன். இங்கே வந்த சில கேர்ள்ஸ் ஸ்டூடண்ட்ஸ் அவரைப் பார்க்க வந்தவங்க உங்களைப்பார்க்க பெர்மிஷன் கேட்கிறாங்க...(gap)... அப்படியா?..(gap).. ரொம்ப தேங்க்ஸ் சார்' என்று ரிஸீவரை வைத்தவர், 'சார் வரச்சொல்றார்' என்றதும், எங்கள் மனதுக்குள் சந்தோஷம். முத்துவின் மனைவிக்கு நன்றி சொல்லிவிட்டு, எதிர்வீட்டுக்குப்போனோம். வாசலில் நின்றவரிடம் விஷயத்தைச்சொல்ல, உள்ளே போய் கேட்டு வந்தவர், 'உள்ளே போங்க' என்றார்.

கூடத்தில் சோபாவில் பூப்போட்ட லுங்கி, ரோஸ் கலர் காட்டன் ஜிப்பா அணிந்து, ரிலாக்ஸ்டாக நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ரவிச்சந்திரன், எங்களைப்பார்த்ததும் பேப்பரை மடித்துக்கொண்டே, 'வாங்க வாங்க, உட்காருங்க. நீங்கள்ளாம் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?' என்றவாறு பேச்சைத்துவக்கினார். சோபாவில் உட்கார்ந்ததும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். 'ரொம்ப சந்தோஷம், நான் நடிச்ச படங்கள்ளாம் பார்த்திருக்கீங்களா?' என்று அவர் கேட்டதும், தோழிகள் மெல்ல என்னை உசுப்பினார்கள் (காரணம், அந்தக்கூட்டத்தில் நான்தான் அதிகமாக சினிமா பார்ப்பவள், நினைவிலும் வைத்திருப்பவள்). காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து வரிசையாக அவர் படங்களைப்பற்றியும் அவர் நடிப்பையும் சொல்லத்துவங்கியதும், பாதியிலேயே சற்று சத்தமாக சிரித்தவர், 'ஏது, காலேஜ்ல போயி பாடம் படிச்ச மாதிரி தெரியலையே. பாதிநாள் தியேட்டரிலேதான் குடியிருந்திருப்பீர்கள் போலிருக்கு' என்று மீண்டும் சிரித்தார். திடீர்னு போறோமே எப்படி பேசுவாரோ என்று நினைத்துப்போன எங்களுக்கு, அவர் பேசிய விதம் ரொம்ப ரிலீஃப் ஆக இருந்தது. ரொம்ப சகஜமாக பேசினார்.  

'ஷீலா மேடம் இருக்காங்களா?' என்றதும், 'ஷீலா ஒரு மலையாளப்பட ஷூட்டிங் போயிருக்காங்க. இங்கே மெட்ராஸ்லதான். வர நைட் பதினோரு மணியாகும்னு இப்போதான் போன் பண்ணினாங்க' என்றார். 'அப்போ உங்களுக்கு இன்னைக்கு ரெஸ்ட் டேயா சார்?' என்று கேட்டோம். 'இல்லேம்மா, காலைல ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிச்சிட்டு இப்போதான் நாலு மணிக்கு வந்தேன். இங்கேதான் ஓஷியானிக் ஓட்டல்ல ஒரு ஃபைட் சீன் எடுத்தாங்க. நாளைக்கும் கண்டினியூட்டி இருக்கு' என்றார். அவரது சகஜமான பேச்சு கொஞ்சம் தெம்பைத் தந்ததால் நான் தைரியமாகக் கேட்டேன், 'ஏன்சார் ஃபைட் சீன்ல டூப் போடுறாங்க?. டூப் இல்லாமல் எடுத்தால் என்ன?' என்று கேட்டதும், தோழிகள் என்னை இடித்து 'ஏய் என்னடி இதெல்லாம்' என்று சொன்னதைப் பார்த்துவிட்ட ரவி சார், 'தடுக்காதீங்க, அவங்க கேட்கட்டும்' என்றவர், சோபாவின் கைப்பிடியில் கையை ஊன்றி தீர்க்கமாக என் கண்ணைப்பார்த்தபடியே பெரிய லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சார்.....

'அதாவதும்மா, இந்த மாதிரி டூப் போடறதுல பல விஷயங்கள் அடங்கி இருக்கு. அதாவது கதாநாயகர் கள் ஆன நாங்க ப்ரொபெஷனல் பைட்டர்ஸ் கிடையாது, ஸ்டண்ட் மாஸ்ட்டர் சொல்லிக்கொடுக்கிறதை வச்சு செய்றோம். சில சமயம் நம்மை மீறி மிஸ் ஆச்சுன்னா, கீழே விழுந்து பலமா அடிபட்டா ஒண்ணு உயிருக்கு ஆபத்து, அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து, அடுத்து அடிபட்டு படுத்துட்டோம்னா மொத்த படப்பிடிப்பும் நின்னு போயிடும். ப்ரொட்யூசருக்கு பெரிய அளவுல லாஸ் வரும்.


ரெண்டாவது, டூப் பைட்டர்ஸுக்குத்தான் அந்த டைமிங் கரெக்டா தெரியும். அதாவது ஒரு மாடியிலிருந்து, கீழே ஓடும் ஒரு ட்ரக்கில் குதிக்கணும்னா, எப்போ குதிச்சா, ட்ரக் அந்த இடத்துக்கு வரும்போது கரெக்டா அதன்மீது விழுவோம்னு அவங்களுக்குத்தான் தெரியும். அதுமாதிரி கரெக்டா குதிச்சிடுவாங்க. நாங்க குதிச்சா, கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்.

அடுத்து ஸ்டண்ட் யூனியனில் இருப்பவங்களுக்கு இம்மாதிரி ஃபைட் படங்கள்ளதான் வாய்ப்புக் கிடைக்கும். வருமானமும் கிடைக்கும். அதை நாம ஏன் தட்டிப்பறிக்கணும்?. அவங்களுக்கு பாலச்சந்தர் சார் படத்திலோ, கே.எஸ்.ஜி.சார் படத்திலோ வாய்ப்புக்கிடைக்காது. எம்.ஜி.ஆர்.சார் படம், என் படம், ஜெய்சங்கர் படம், இப்போ ஒரு பத்து வருஷமா சிவாஜி சார் படங்கள்ளேயும் பைட் சீன் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ, இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ளேதான் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும்.... இதை நீங்க ஸ்டூடண்ட்ஸ்ங்கிறதாலே சொல்றேன். நீங்களே பிரஸ் ரிப்போர்ட்டரா வந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேன். பிரச்சினையாயிடும் (சிரித்தார்).

இன்னொரு முக்கியமான விஷயம் கால்ஷீட் பிரச்சினை. நாங்க Heros ஒரே சமயத்துல நாலைந்து படங்கள்ளதான் நடிப்போம், ஆனா எங்களோடு காம்பினேஷன் சீன்ல நடிக்கிற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பல படங்கள்ள நடிச்சிக்கிட்டிருப்பாங்க. வி.எஸ்.ராகவன் சார், வி.கே.ஆர்.சார், மேஜர் சார், மனோரமா மேடம் இவங்கள்ளாம் ஒரே நேரத்துல முப்பது, நாற்பது படங்கள்ள நடிச்சிக்கிட்டு இருக்குறவங்க. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இவங்க கிட்டே கால்ஷீட் வாங்கியிருப்பாங்கன்னு நமக்குத்தெரியும். நாம பெரிய பந்தாவா டூப் போடாம செய்றேன்னு செஞ்சு அடிபட்டு ஒரு பதினைந்து நாள் படுத்துட்டோம்னா போச்சு. எல்லோர்கிட்டே வாங்கின கால்ஷீட்டுமே வேஸ்ட் ஆயிடும். அப்புறம் அவங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து கால்ஷீட் வாங்குவது லேசான விஷயமா?. அதே தேதியிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படத்துக்கும் கொடுத்திருப்பாங்க. அதனால் தயாரிப்பாளர் மாசக்கணக்கா வெயிட் பண்ண வேண்டி வரும். ஷெட்யூல்படி படத்தை முடிக்கலைன்னா எவ்வளவு பெரிய லாஸ்ல கொண்டுபோய் விடும் தெரியுமா?'

என்று முடித்தார். என் சிறுமதியை நான் நொந்துகொண்டேன். அதே சமயம் பரவாயில்லை, கேட்டதால் தானே இவ்வளவு விவரமும் சொன்னார் என்று சமாதானம் அடைந்தேன். (அடேயப்பா டூப் போடுறதுல இவ்வளவு அட்வான்டேஜ் இருக்கா).

மேலும் சிறிது நேரம் சில விஷயங்களைப்பற்றிப்பேசினோம். எங்கள் ஒவ்வொருவருடைய படிப்பைப் பற்றியும் கேட்டறிந்தார்.  இதனிடையே பணியாளர் டீயும் பிஸ்கட்டும்  கொண்டு வந்து வைத்தார். 'சார் நாங்க முத்துசார் வீட்டுல இப்போதான் டீ சாப்பிட்டோம்' என்று சொன்னதும், 'அது அவர் வீட்டுக்கு போனதுக்கு. இப்போ என் வீட்டுக்கு வந்ததுக்கு சும்மா அனுப்ப முடியுமா?. டீ தானே. எத்தனையும் சாப்பிடலாம். எடுத்துக்குங்க' என்றார்.

'சார், உங்களை சந்திப்போம்னு ஒருமணி நேரத்துக்கு முன் வரை நினைக்கவேயில்லை. பெர்மிஷன் கொடுத்ததுக்கும், ஒரு விருந்தினரைப்போல கவனிச்சதுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்' என்றோம் கோரஸாக. 'என்ன பெரிசா செஞ்சுட்டேன்னு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. நாம இன்னைக்கு சந்திக்கணும்னு ஆண்டவன் எழுதி வசிருக்கான். அதான் உங்களைக்கொண்டு வந்து சேர்த்துட்டான். நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணூம். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மணி நேரம் நல்லா ரிலாக்ஸ்டா போச்சு. ஷீலாவைப்பார்க்கணும்னா இன்னொரு நாளைக்கு போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்க' என்று வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

முத்து எங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எல்லாம் போச்சு. மாறாக, ரவிச்சந்திரன் அவர்களின் சந்திப்பும் உரையாடலும் மனம் முழுக்க நிறைந்தது. எதிர் வீட்டிலிருந்த முத்துவின் மனைவியைச் சந்தித்து மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு வந்தோம். ஆட்டோ பிடிக்கணும் என்ற எண்ணம்கூட இல்லை. சள சளவென்று பேசிக்கொண்டே 'லஸ்கார்னர்' வரை நடந்தே வந்தோம்.

இந்தச் சந்திப்புக்குப்பின் ரவிச்சந்திரன் என மனதில் பல படிகள் உயர்ந்துவிட்டார்.

3 comments:

  1. மிக அருமையாக இருந்தது சந்திப்பை விளக்கிய விதம்.என் தளத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி கீதப்ரியன்.
    தங்களது பின்னூட்டத்தை இன்றுதான் பார்த்தேன். பதிலளிக்கத் தாமதித்தமைக்கு வருந்துகிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள்.

    நன்றியுடன்... சாரூ...

    ReplyDelete
  3. உங்கள் பதிவுகளை எல்லாம் படித்தேன். அருமை.

    ReplyDelete