Friday, December 24, 2010

காங்கிரஸில் நடிகர்திலகம்-2

வசந்த் தொலைக்காட்சியில் புதன் தோறும் ஒளிபரப்பாகும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர்திலகத்தைப்பற்றிய அரிய பல விஷயங்களை வழங்கியவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினருமான திரு இரா. அன்பரசு அவர்கள். காங்கிரஸ் தலைவராதலால், அவருடைய உரை நடிகர்திலகத்தின் திரைப்படங்களை பற்றியல்லாது, காங்கிரஸ் பேரியக்கத்தில் அவருடைய பங்களிப்பின் அரிய தொகுப்பாக அமைந்தது. அவருடைய உரையிலிருந்து சில துளிகள்.....

நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்றவண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழைக்கப் படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின் போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.

எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் அவருக்கான சுற்றுப்பயணம் தனியாக தயாரிக்கப்படும். சிவாஜி அவர்கள் இருந்தவரையில் அவர் எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்காமல் இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக அப்போது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பெரிய தொண்டர் பாசறையாக செயல்பட்டதே அவரது ரசிகர் மன்றங்கள்தான். (இதை மிகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்). ஒவ்வொரு தேர்தலின்போதும் சிவாஜி ரசிகர்களின் உழைப்பு, காங்கிரஸுக்கு பெரிய பலமாக அமைந்தது.  

சிவாஜி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவராக நியமிக்க வேண்டும் என இந்திராகாந்தியிடம் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார். அதை ஏற்று அது தொடர்பாக நேர்முக பேட்டிக்கு வருமாறு டெல்லிக்கு இந்திராகாந்தி அம்மையார் அழைத்தார். சிவாஜி அவர்களுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். வழக்கமாக இந்திரா அம்மையாரை சந்திக்க யார் சென்றாலும் அவர் அலுவலக அறையில் இருப்பார், போகின்றவர்கள்தான் வணக்கம் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள். ஆனால் சிவாஜி அவர்கள் சென்றபோது, இந்திரா அம்மையார் வாசல் வரை எழுந்துவந்து வரவேற்று அழைத்துச்சென்றார். கிட்டத்தட்ட அப்போது அவரையே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்த போதிலும் அது நடைபெறவில்லை. அதற்கு கட்சியில் நிலவிய உட்கட்சிப் பூசல்தான் காரணம் என்று நான் அடித்துச்சொல்வேன். அப்போதுமட்டும் அவர் தலைவராகியிருந்தால், அப்போதே தமிழ்நாட்டில், இப்போது நாம் சொல்லிவரும் 'காமராஜ் ஆட்சி' ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காமல் போனதால்தான் இன்னும் நாம் மாநிலக்கட்சிகளுக்கு மாறி மாறி பல்லக்குத் தூக்கிக் கொண்டிருக்கிறோம். (நெத்தியடி)

அவரது திரைப்படங்களில் எப்போதும் தேசியம் இடம்பெற்றிருக்கும். அவர் பங்குபெறும் காட்சிகளில் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் படம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுபோல அவரது படங்களின் பாடல்களில் பெருந்தலைவர் அவர்களைப்பற்றி புகழ்ந்து பாடும் வரிகளை சேர்க்கச்சொல்வார். தேசியம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்ததால்தான் யாருமே ஏற்றிராத பல்வேறு தேசியத்தலைவர்களின் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கினார். (இந்த இடத்தில் பகவத்சிங், திருப்பூர் குமரன் கிளிப்பிங்குகள் காண்பிக்கப்பட்டன).

தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் சிலை இடம்பெற்றுள்ள தென்றால் அதற்கு முழுமுதற்காரணம் அண்ணன் சிவாஜி அவர்கள்தான். அதிகமான காமராஜ் சிலைகளின் பீடத்திலுள்ள கல்வெட்டைக் கவனித்தோமானால், அவற்றைத்திறந்து வைத்தவர் அண்னன் சிவாஜி அவர்கள்தான். தன்னை தங்கள் ஊருக்கு வரும்படி அழைக்க வரும் தொண்டர்கள்/ ரசிகர்களிடம் 'உங்கள் ஊரில் பெருந்தலைவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யுங்கள், நான் வந்து திறந்து வைக்கிறேன்' என்று சொல்லியே ஊருக்கு ஊர் தலைவர் சிலை ஏற்படக் காரணமாயிருந்தவர் அண்னன் சிவாஜி அவர்கள். (அடுத்து அன்பரசு அவர்கள் சொன்ன விஷயம் சிலிர்க்க வைத்தது).

பெருந்தலைவர் ஆணைப்படி தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அண்னன் சிவாஜி அவர்கள், அந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை, தொண்டர்களின் முகவரிகளோடு சேகரிக்க அந்தந்த பகுதி மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். முகவரி எதற்கென்றால், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க நேர்ந்தபோது அவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்தார். தமிழ்நாட்டில் எந்த கட்சித்தலைவரும் செய்யாத அரிய செயல் இது.

அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய வெள்ளம் வந்தபோது, 16 பேரைக்காப்பாற்றிய சிவாஜி ரசிகருக்கு, அப்போதைய அரசு 'வீர இளைஞர்' பட்டம் வழங்கியது. 'நீங்கள் என்ன பட்டம் வழங்குவது?. நான் வழங்குகிறேன்' என்று அவ்விளைஞருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தி 'வீர இளைஞர்' பட்டம் அளித்ததோடு நில்லாமல் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள்.

1975 அக்டோபர் முதல்தேதி அவரது பிறந்தநாள்விழாவுக்கு வழக்கம்போல் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் , திரைப்பட நடிகர்களும் வந்து வாழ்த்துச்சொல்லி சென்றவண்ணம் இருந்தனர். ஆனாலும் அண்ணன் சிவாஜி அவர்களுக்கு பெருந்தலைவர் அவர்கள் இன்னும் வரவில்லையே என்று மனதில் ஒரு தவிப்பு இருந்தது. அதே நேரம் திருமலைப்பிள்ளை ரோட்டில் தனது இல்லத்தில் உடல்நலமின்றி இருந்த பெருந்தலைவர் அவர்களுக்கு, 'சிவாஜியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தப்போக முடியவில்லையே' என்ற துடிப்பு இருந்தது. ஒரே நேரத்தில் இருவருக்கும் ஒரே மாதிரியான தவிப்பு. இறுதியில் அங்கிருந்த குமரி அனந்தன், மணிவர்மா ஆகியோரிடம் 'புறப்படுங்கள், சிவாஜி வீட்டுக்குப்போவோம்' என்று காரில் கிளம்பி விட்டார். தலைவர் புறப்ப்ட்டு விட்டார் என்ற செய்தி கிடைத்ததுமே அண்ணன் சிவாஜி அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து தலைவரை எதிர்பார்த்து நின்றவர், அவர் காரிலிருந்து இறங்கியதும் அவரது கைகளிரண்டையும் பிடித்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். தலைவர் அண்னன் சிவாஜியை வாழ்த்திவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டார். பெருந்தலைவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி அண்ணன் சிவாஜி அவர்களின் பிறந்த நாள்தான். மறுநாள் பெருந்தலைவர் மறைந்தார்.

அண்ணன் சிவாஜி அவர்களுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் 'காமராஜ் ஆட்சி' அமைய வேண்டுமென்பதாகவே இருந்தது. எனவே அவர் கனவு கணடது போல தமிழகத்தில் 'காமராஜ் ஆட்சி' அமையச்செய்வதே அவருக்கு நாம் செய்யும் பெரிய கைம்மாறு ஆகும் என்று கூறி விடைபெறுகிறேன்".

(காங்கிரஸ் பேரியக்கத்தில் நடிகர்திலகத்தின் பங்களிப்பு பற்றிய அரிய பல தகவல்களைத்தந்த அன்பரசு அவர்களுக்கு சிவாஜி ரசிக நெஞ்சங்களின் நன்றிகள்).