Sunday, February 6, 2011

நீதி

நடிகர்திலகத்தின் 1972 வெற்றிப்பேரணியில் வீறு நடைபோட்ட இன்னொரு படம். மாபெரும் வெள்ளி விழாப்படமான 'வசந்த மாளிகை'யைத் தொடர்ந்து திரைக்கு வந்து அனைவரையும் கவர்ந்த படம். இரண்டு படங்களின் கேரக்டருக்கும்தான் எத்தனை வித்தியாசம்..!. மேட்டுக்குடியில் பிறந்த ஜமீன்தாருக்கும், ஒரு சாதாரண லாரி டிரைவருக்கும் நடிப்பில், பரிணாமத்தில், அதை வெளிப்படுத்துவதில் கிலோ மீட்டர் கணக்கில் வித்தியாசம். ஆம் அந்த ரோலுக்கு அந்த நடிப்பு, இந்த ரோலுக்கு இந்த நடிப்பு. எல்லா ரோலுக்கும் ஒரே மாதிரி நடிப்பதென்றால் இவர் தேவையில்லையே.


வழக்கமாக, தனது பிறந்த நாளான ஜனவரி 26 அன்று தனது சொந்தப்படங்களைத் திரையிடுவதை தன் வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, தீபாவளிக்கு வரவேண்டிய வசந்தமாளிகை, முன்னதாக செப்டம்பர் இறுதியிலேயே ரிலீஸ் ஆகிவிட்டதால் அந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி 26, 1972) 'ராஜா' படத்தை வெளியிட்டிருந்த பாலாஜி தனது நீதி படத்தை விரைவாக முடித்து 72 டிசம்பரிலேயே வெளியிட்டார். (முதலில் அவர் வெளியிடத் திட்டமிட்டிருந்தது 1973 ஜனவரி 26). இதன் மூலம் ஒரே ஆண்டில் நடிகர்திலகத்தை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்ற பெருமையைப் பெற்றார்.   

இந்தியில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ் ஜோடியாக நடித்து வெளிவந்த 'துஷ்மன்' படத்தின் கதைதான் 'நீதி'யாக தமிழில் எடுக்கப்பட்டது. ராஜா படத்தில் நடிகர் திலகத்துக்கு நிறைய டிசைன் டிசைனாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ, நீதி படத்தில் முதல் காட்சி முதல் வணக்கம் போடும் வரை ஒரே ட்ரெஸ்தான். ஆம், கைதியாக கிராமத்தில் தங்கியிருக்கும் ஒரு லாரி டிரைவர் வித விதமான உடையணிந்தால் லாஜிக் இடிக்காதா.. அதனால்தான். இடையில் 'எங்களது பூமி' பாடலின்போது மட்டும் ஒரு பைஜாமா ஜிப்பா அணிந்திருப்பார்,  

குடிபோதையில் லாரி ஓட்டி வரும்போது கவனக்குறைவினால் விடிகாலைப் பொழுதில் ஒரு விவசாயியையும் அவனது ஒரு மாட்டையும் கொன்று விட, நீதித்துறை அந்த டிரைவருக்கு அளிக்கப்போகும் சிறைத்தண்டனையால், பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு கிடைக்கப்போவது என்ன?. ஒன்றுமில்லை. அதற்கு மாறாக, கொலையாளியே அந்த கிராமத்தில் கைதியாக இருந்து, தண்டனைக்காலத்தில் அவர்களது நிலத்தை உழுது பயிரிட்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தால், கொலையாளிக்கும் தண்டனை கிடைத்தது போலிருக்கும், பாதிக்கப்பட்ட விவசாயக்குடும்பமும் பயனடைந்தது போலிருக்கும் என்ற வித்தியாசமான கருவில் உருவானதுதான் கதை. ஆம் வழக்கமான அரைத்த மாவு அல்ல. இதுவரை பார்த்திராத புதிய மாவு.

நீதிபதியாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், தன்னிச்சையாக இப்படி ஒரு வித்தியாசமான தண்டனையைக் கொடுக்காமல், தன்னுடைய இந்த பரீட்சாத்த முயற்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதும், அதற்கு நாகையா தலைமையிலான ஐந்து நீதிபதிகளடங்கிய 'ஃபுல் பெஞ்ச்' அனுமதியளிப்பதும், படத்துக்கு முதுகெலும்பான, ஒத்துக்கொள்ளத்தக்க காட்சியமைப்பு.

தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலாஜியால் கிராமத்தில் கொண்டுவந்து விடப்பட்ட டிரைவர் ராஜாவுக்கு (நடிகர் திலகம்) காவலாக கான்ஸ்டபிள் கன்னையா (சந்திரபாபு). தங்கள் குடுமபத்தலைவனும், குடும்பத்துக்கு அச்சாணியாகவும் இருந்த விவசாயியைக் கொன்று விட்டு, தங்கள் வீட்டுக்கே கைதியாக வந்திருக்கும் ராஜாவை, இறந்தவனின் மனைவி சீதா (சௌகார்), கண்ணில்லாத தாய் காந்திமதி, ஒரு காலில்லாத தந்தை எஸ்.வி.சுப்பையா, கல்யாணத்துக்கு நிற்கும் தங்கை ஜெயகௌசல்யா எல்லோரும் வெறுத்து ஒதுக்க, சௌகாரின் இரண்டு குழந்தைகளில் கடைசி பெண்குழந்தைதான் (பேபி இந்திரா) முதலில் அவனிடம் வந்து, தன் கள்ளம் கபடமில்லாமல் அவனிடம் பேசுகிறது.

"வாங்க, எங்கப்பாவை பாக்க வந்தீங்களா?. எங்க வீட்டுல ஒரு மாடு செத்துப் போச்சு. வேற மாடு வாங்க அப்பா வெளியூர் போயிருக்கு" என்று அந்த பிஞ்சு குழந்தை பேசும்போது, அந்த கைதிக்கு மட்டுமல்ல, நமக்கும் இதயம் சற்று இடம் பெயர்வது உண்மை. போதையில் கவனக்குறைவால் எவ்வளவு பெரிய மாபாதகம் செய்துவிட்டோம் என்று அந்தக் கைதியின் நெஞ்சில் ஈட்டியாய் தாக்குவதையும், குற்ற உணர்வால் குன்றிப்போவதையும் ரொம்ப அற்புதமான முகபாவத்தால் காட்டியிருப்பார் நடிகர் திலகம்.

நலிந்த குடும்பத்தின் பணத்தேவையை அறிந்து கொண்டு பண்ணையார் நாகலிங்கமும் (மனோகர்) அவரது எடுபிடியான எம்.ஆர்.ஆர்.வாசுவும் சேர்ந்து, இவர்களது நிலத்தை சொற்ப காசுக்கு அபகரிக்க முயல, விவரம் அறிந்த ராஜா சரியான நேரத்தில் வந்து அதை தடுத்துவிட, பண்ணையாருக்கும் ராஜாவுக்கும் பகை முற்றுகிறது.


விவசாயத்தைப்பற்றி எதுவுமே தெரியாத டிரைவர் ராஜா, ஒற்றை மாட்டை வைத்துக்கொண்டு சிறுவர்களின் துணையோடு நிலத்தை உழ முயற்சிப்பதும்,
 குழந்தைகளைக்காணாமல் தேடி வரும் சுப்பையா, கைதி ராஜாவை திட்டுவதும் கலகலப்பு. எப்படி படிப்படியாக அந்த வீட்டிலுள்ளவர்களின் மனதை மாற்றி தன்னைப்புரிந்துகொண்டு, அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் என்பதுதான் கதையின் சுவாரஸ்யமான நகர்வு. அம்மா திட்டினாள் என்பதற்காக ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போகும் குழந்தையைக் காப்பாற்றி அழைத்து வரும்போது குழந்தைகள் மனதில் இடம் பிடிக்கும் ராஜா, இறந்தவனின் தங்கை ஜெயகௌசல்யா விரும்பும் பையனையே திருமணம் செய்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது அவள் மனதிலும், அவளது திருமணம் நடைபெறும் கோயிலில் தாக்கவ்ரும் கும்பலின் அடிகளைத் தாங்கிக்கொண்டு தன் ரத்தத்தை சிந்தி அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதன் மூலம் சுப்பையா மற்றும் காந்திமதியின் மனதை மாற்றும் ராஜா, சௌகாரின் மனதை மாற்றி தன் பக்கம் திரும்ப வைத்து அவள் மன்னிப்பைப் பெற படாத பாடு படுகிறான்.

இதனிடையில் கிராமத்தில் 'பயாஸ்கோப்' படம் காட்டும் ராதாவுக்கும் (ஜெயலலிதா) ராஜாவுக்கும் ஏற்படும் மோதல் பின்னர் காதலாக மாறுகிறது. இந்தப்படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத பாத்திரம். தொட்டுக்கொள்ள ஊறுகாய். அவ்வளவுதான். ராஜாவை அடைவதில் இவருக்கும் மனோரமாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை. சந்திரபாபு, மனோரமா வெல்லாம் இருந்தும் சிரிப்புக்கு கடும் பஞ்சம். மனோரமாவின் டிராக்டரை ராஜா ரிப்பேர் சரி செய்யுமிடத்தில் மனோரமா பேசும் வசனங்களும், தன்னை 'அக்கா' என்று அழைத்த ஜெயலலிதாவுடன் சண்டை போடுமிடத்திலும் மனோரமாவின் முத்திரை.  

வில்லன் மனோகரின் அடியாட்களால் கடத்தப்பட்டு குடோனில்  அடைக்கப் பட்டிருக்கும் ஜெயலலிதாவை, தன் உடைகளைத்தந்து தப்பிக்க வைத்து அனுப்பி விடும் சௌகார் ஜானகியை, வில்லன் மனோகர் கற்பழிக்க முயல, கதறல் சத்தம் கேட்டு அங்கு வரும் கைதி ராஜா, பூட்டியிருக்கும் குடோன் கதவை லாரியால் மோதித்திறந்து, மனோகருடன் சண்டையிட்டு சௌகாரைக் காப்பாற்ற, ராஜாவின் நல்ல மனம் அறிந்துகொண்ட சீதா (சௌகார்), ராஜாவை மன்னித்து, தங்கள் குடுமபத்தில் ஒருவராக அவரை ஏற்றுக்கொள்கிறார்.

இதனிடையே ராஜாவின் தண்டனைக்காலம் முடிந்து அவரை அழைத்துப்போக வரும் இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம், அந்தக்குடும்பத்தினருடன் அந்தக் கிராமத்திலேயே ஆயுள் கைதியாக இருந்துவிடப்போவதாகச் சொல்லி ராஜா அவரை திருப்பி அனுப்பி விட, சோகமாக துவங்கிய படம் சுகமான முடிவு.

தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பாலாஜி தயாரித்த இந்தப்படம், அதிக பொருட்செலவோ, பிரம்மாண்டமான செட்டுக்களோ இல்லாமல், முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்ட படம். கிராமத்தின் வண்ண ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. ஒளிப்பதிவு மஸ்தான். மோகினிப்பிசாசு குடியிருப்பதாகச் சொல்லப்பட்ட மரத்தை வெட்டப்போன ராஜா, காலையில் செத்துப்போய் கிடப்பதாக நடிப்பதும், ஆரம்பத்திலிருந்து பெரிய மீசையுடன் வரும் ராஜாவிடம், மோகினிப்பேய் கதையைக்கேட்டுகொண்டே மீசையை நாவிதன் மழித்து விடுவதும் சுவையான இடங்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதியிருந்தார்.  

கவியரசர் கண்னதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாமே நன்றாக அமைந்திருந்தன. ஷோக்குப் பேர்வழியான டிரைவர் ராஜா, ஆரம்பத்தில் சாராயத்தைப் போட்டுக்கொண்டு ஆட்டக்காரி சி.ஐ.டி.சகுந்தலாவுடன் ஆட்டம் போடும், "மாப்பிள்ளையே பாத்துக்கடி மைனாக்குட்டி" என்ற பாடல். வட இந்திய 'கவாலி' ஸ்டைலில் டி.எம்.எஸ். சோலோ. பாடலின்போது நடிகர்திலகத்தின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் (குறிப்பாக வித்தியாசமான கைதட்டல்கள்) சூப்பர். ரசிகர்களின் கைதட்டல் பறக்கும். பாடல் முடிந்ததும் கே.கண்ணனுடன் ஒரு சின்ன சண்டைக்காட்சி. (இப்பாடல் முடிந்து, லாரி ஓட்டிபபோகும்போதுதான் விபத்து நடக்கும்).

கிராமத்தில் கைதியாக இருக்கும்போது, சாராயக்கடை வாசலில், குடிக்கப் போகும் கணவனைத்தடுக்கும் மனைவிடம் குடிகாரன் ஒருவன், 'நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன் தங்கம், இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிச்சுக்கிறேன்' என்று சத்தியம் செய்துவிட்டுப்போகும் கனவனைப்பார்த்து, அவன் சொன்ன வார்த்தையிலிருந்தே
"நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்" 
என்ற ரொம்ப ஃபேமஸ் பாடலின் பல்லவியைத் துவங்குவார். இந்தப்பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக கைதட்டல்கள். (பெண் ரசிகைகளுக்கு பிடிக்காவிட்டலும் கூட). இதுவும் டி.எம்.எஸ்.சோலோதான்.

இப்பாடல் முடியும் தறுவாயில், தங்கை ஜெயகௌசல்யாவுக்கும் அவருடைய காதலனாக வரும் பாலச்சந்திரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டதும், அவர்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக, தன்னுடைய குடிப்பழக்கத்தை விடுவதாக முடிவெடுப்பார். 'கடவுளே, எல்லாத்தையும் என்கிட்டேயிருந்து பறிச்சிக்கிட்ட மாதிரி, இதையும் பறிச்சிட்டியே' என்று சொல்லிக்கொண்டே சாராய பாட்டிலை, ஆற்றங்கரை கோயில் படிக்கட்டில் வீசியடிப்பார். ரசிகர்களுக்கு சந்தோஷம்.

பயாஸ்கோப் படம் காட்டும் ஜெயலலிதா பாடும் பாடல்
"ஓடுது பார நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்போண்ணு"
பி.சுசீலா தனித்துப்பாடியிருப்பார். இப்பாடலின் இடையே வரும் வரிகள்... (அப்போது வங்கதேசப்போர் முடிந்து, இந்தியா வெற்றியடைந்து, தனி வங்கதேசம் உருவாகியிருந்த நேரம்)
"வங்காளத்தில் சேனை போகும் வேகம் பாருங்க
இந்திராகாந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க"
இந்தக்கட்டத்தில், கோவையில் நடந்த நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் கூட்டமும், அதில் நடிகர்திலகம், பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசும் காட்சியும் காட்டப்படும். ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேட்கணுமா

கிளைமாக்ஸுக்கு சற்று முன்னால் வரும் பாடல்...
"எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி"
கிராம மக்கள் மொத்தமும் திரண்டு நடிகர்திலகத்தை வாழ்த்திப்பாடுவதாக அமைந்திருக்கும். பி.சுசீலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடன், மனோரமா, சந்திரபாபு ஆகியோரும் பாடியிருப்பார்கள். படம் முழுக்க ஒரே உடையுடன் வரும் நடிகர்திலகம், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தங்கை ஜெயகௌசல்யா எடுத்துக்கொடுத்த வெள்ளை ஜிப்பா, பைஜாமாவுடன் ஆடுவார். பின்னர் மீண்டும் கிளைமாக்ஸ் வரையில் பழைய கருநீல ஜீன்ஸ், ஷர்ட்தான்.

செண்டிமென்ட், சீரியஸ், பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் சி.வி.ராஜேந்திரன்.

சென்னையில் தேவிபாரடைஸ், பிரபாத், சரவணா அரங்குகளில் திரையிடப்பட்ட நீதி 99 நாட்களில் மாற்றப்பட்டது. அதற்கு கீழ்வரும் காரணத்தை சொல்வார்கள்....  

இந்தியில் இருந்து இப்படத்தின் கதையை வாங்கும்போது, இப்படம் நூறுநாட்கள் ஓடினால், கதைக்காக மேற்கொண்டு ஐந்து லட்சம் ரூபாய் (72-ல் அது பெரிய தொகை) தருவதாக பாலாஜி ஒப்பந்தம் போட்டிருந்தார் என்றும், அந்த ஒப்பந்தத்திலிருந்து தப்பிக்க, வேண்டுமென்றே '99' நாட்களில் படத்தை திரையரங்கிருந்து தூக்கி விட்டார் என்றும் பரவலாக ஒரு பேச்சு உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் இதை மெய்ப்பிப்பது போல தேவிபாரடைஸ் 'ஷீல்ட் காலரி'யில், மற்ற வெற்றிப்படங்களின் ஷீல்டுகளோடு, 'நீதி' படத்தின் '99வது நாள்'  PECULIAR  SHIELD ஒன்றை இன்றைக்கும் காணலாம்.  
நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான 'நீதி' திரைப்படத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

4 comments:

  1. அன்புள்ள சாரதா அவர்களுக்கு

    உங்கள் சீரான எழுத்துக்குகளை இணையத்தில் வேறு வலையில் படித்துள்ளேன், உங்கள் ரசனைக்கு ஒரு சபாஷ்!! தொடர்ந்து நிறைய எழுதுங்கள்...

    திரு பாலாஜி அவர்களின் திருமண நாள் அன்றுதான் படங்களை வெளிடுவார் என கேள்விப் பட்டுள்ளேன், எனவே ஜனவரி 26 அவரது பிறந்த நாளா ? திருமண நாளா ? தெரியவில்லை.

    நன்றி
    பலே பலே

    ReplyDelete
  2. அன்புள்ள பலே பலே,

    உங்கள் பதில், 'பலே பலே' என்று பாராட்டும்படியாக உள்ளது. வருகைக்கும், பதிலிறுத்தமைக்கும் மிக்க நன்றி.

    நீங்கள் சொன்னதுதான் சரி. ஜனவரி 26 தயாரிப்பாளர் பாலாஜியின் திருமண நாள்தான். பிறந்தநாள் அல்ல. கவனக்குறைவுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
    சாரூ...

    ReplyDelete
  3. ''"போகும் கணவனைத்தடுக்கும் மனைவிடம் குடிகாரன் ஒருவன், 'நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன் தங்கம், இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிச்சுக்கிறேன்' என்று சத்தியம் செய்துவிட்டுப்போகும் "//

    "தெருவுக்கு ஒரு சாராயக் கடையை தொறந்துட்டு குடிக்காத குடிக்காதன்னா எவன் கேப்பான்?"என்பார் சிவாஜி. அப்புறம்தான் நம்ம பாட்டு 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடல். "கடவுள் என் வாழ்வில் கடன் காரன்" வரிகள் மகுடம்.

    ReplyDelete
  4. அன்புள்ள சாரதா,

    …உங்கள் பதிவுகள் ஒன்றுவிடாமல் படித்துவிட்டேன். அனைத்தும் அற்புதம். தகவல் களஞ்சியம். தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுகள், வாழ்த்துகளுடன்.

    …ராஜ்

    ReplyDelete