Monday, February 21, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஸ்ரீகாந்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் வைரம்
லட்சுமிக்கு ஊர்வசி பட்டம் தந்த காவியம்
பீம்சிங்கின் கடைசி வெற்றிச்சித்திரம்
கருப்புவெள்ளை யுகத்தின் கடைசி வெற்றி அத்தியாயம்
ஜெயகாந்தனின் ஒப்பற்ற திரை ஓவியம்

.....இப்படி புகழ்மாலை சூட்டிக்கொண்டே போகலாம் இப்படத்துக்கு.

ஆர்ட் பிலிம் என்றாலே வெற்றிக்கும் அதற்கும் வெகுதூரம். மக்களைச் சென்றடையாது என்ற சித்தாந்தங்களைப் பொய்யாக்கி மாபெரும் வெற்றியடைந்ததன் மூலம், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் தைரியத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தந்த உன்னதச் சித்திரம்.

ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் சேர்ந்து, அதே சமயம் தனித்தனியாக வாழும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையில் தன் தாயுடன் வசிக்கும் ஒருத்தி ஒரு மழைபெய்த மாலை நேரத்தில் காரில் வந்த காமுகனால் சூறையாடப்பட, அதை மறைக்கத்தெரியாமல் தாயிடம் வெகுளித்தனமாகச் சொல்லப்போக, அதை அந்தத்தாய் அவளைவிட வெகுளித்தனமாக, ஒண்டுக்குடித்தனக்காரர்கள் மத்தியில் விஷயத்தைப் போட்டு உடைத்து, மகளைத் அடிக்க, வெறும் வாய்களுக்கு கிடைத்த அவலாக, அவளது அந்த கருப்பு சம்பவம் அலசப்பட, அவள் களங்கப்படுத்தப்பட்டதை விட அதை வெளியில் சொன்னதுதான் மகா பாவம் என்ற நிலைமைக்கு ஆளாகிப்போனாள்.

முள்ளில் விழுந்த சேலையாக ரொம்ப ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டிய கதை. கொஞ்சம் நூலிழை பிசகினாலும் விரசம எனும் பள்ளத்துக்குள் விழுந்துவிடக்கூடிய கதையை, இந்திய பாகிஸ்தான் பிரிவினையை விட கவனமாகக் கையாண்டிருந்தார் இயக்குனர் பீம்சிங். அதற்கு அடித்தளமாக அமைந்தது ஜெயகாந்தனின் யதார்த்தமான நடை.

ஊர்வாயில் விழுந்த அவலாக மெல்லப்படும் அவள் அவஸ்தை தாங்காமல் துடிப்பதை லட்சுமியை விட இன்னொருவர் சிறப்பாகக் காண்பித்திருக்க முடியுமா என்ன?. அதிலும் அந்த 'அக்கினிப்பிரவேசம்' என்ற நாவலை தாயிடம் கொடுத்து, அதில் வரும் குறிப்பிட்ட இடத்தைச்சுட்டிக்காட்டும்போது, மீண்டும் பழைய காட்சி... அம்மா சுந்தரிபாய் லட்சுமியை அடிக்கும்போது, வீடு மொத்தமும் எழுந்துபார்க்க.. 'ஒண்ணுமில்லே, இப்படி மழையிலே நனைஞ்சிட்டு வந்திருக்காளேன்னுதான் அடிச்சேன்' என்று சொல்ல மொத்த வீடும், மீண்டும் தங்கள் வேலையைப் பார்ப்பதைக்காண்பித்து, 'அன்னைக்கு மட்டும் நீ இப்படிச் சொல்லியிருந்தால், என் வாழ்க்கை இன்று சேற்றில் போட்டு இழுக்கப் பட்டிருக்குமா' என்பது போல லட்சுமி பார்ப்பாரே ஒரு பார்வை. அப்பப்பா... (தேசிய விருதுக்கமிட்டி அந்த இடத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்). எப்பேற்பட்ட ஒரு நடிகையை வெறுமனே டூயட் பாடவைத்ததன் மூலம், ஒரு நாதஸ்வரத்தை அடுப்பு ஊத பயன்படுத்தியுள்ளோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது.

ஸ்ரீகாந்த் மட்டும் என்னவாம். சூப்பர்ப். பாத்திரத்தின் தன்மைக்கு ஈடுகொடுத்து அற்புதமாகச்செய்துள்ளார். ஆரம்பத்தில் லட்சுமியை ஏமாற்றிவிட்டுப்போனதும், அவருக்கு வழக்கமான ரோல்தானோ என்று தோன்றும். ஆனால் மீண்டும் லட்சுமியைச் சந்தித்தபின், அவர் தொடரும் அந்த உறவில் அவர் காட்டும் கண்ணியம், நேர்மை. ஏற்கெனவே தனக்கு ஒரு குடும்பம் இருந்தும், லட்சுமியிடம் அவர் காட்டும் அன்பு, வரம்பு மீறாத பெரியமனுஷத்தனம் .....வாவ். இன்னும் ஒரு நாலைந்து படம் இதுபோல தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் மனிதர் எங்கோ போயிருப்பார்.

எழுத்தாளர் ஆர்,கே.விஸ்வநாத சர்மாவாக வரும் நாகேஷ் அப்படியே அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். காற்றில் பறந்துபோய்க்கொண்டிருக்கும் பேப்பர்களை ஓடி, ஓடி பிடிக்க முயன்று தோற்றுப்போய், மிச்சமிருக்கும் ஒரே பேப்பரையும் இவராகவே காற்றில் பறக்கவிடுவது போன்ற காட்சிகள் இவர் பாத்திரத்துக்கு வலு சேர்ப்பவை. இன்னும் கொஞ்சநேரம் வரமாட்டாரா என்று ஏங்கவைப்பார்.

மறக்காமல் குறிப்பிடப்படவேண்டிய இருவர் அம்மாவாக வரும் சுந்தரிபாய் (வெகுளியான அம்மா), வம்பு பேசும் கூட்டத்தின் மத்தியில் எதைப்பேசுவது, எதை மறைப்பது என்று அறியாத அப்பாவி. ஆச்சாரம் பத்தி மகளிடம் பேசப்போக, 'நீ மட்டும் ரொம்ப ஆச்சாரமோ. அப்பா செத்து இத்தனை வருஷமாச்சு. நீ மட்டும் ஆச்சாரத்தை கடைப்டிச்சியா?' மகள் கேட்டதற்காக, தலையை மொட்டையடித்துக்கொண்டு குளித்து சொட்டச்சொட்ட நனைந்து வந்து நிற்கும் ஒரு இடம்போதும் இவ்ருக்கு பேர் சொல்ல.  

இன்னொருவர், வெங்குமாமா வாக வரும் ஒய்.ஜி.பார்த்தசாரதி. தன் தங்கை மகள் கெட்டுப்போய்விட்டாள் என்று தெரிந்ததும், அவளைத் தான் அடைய அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், பெரிய மனிதனின் வக்கிர புத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் லட்சுமியிடம் செய்யும் சேஷ்டைகள் எல்லைமீறுமுன், கொதித்தெழும் லட்சுமி அவரை பெல்ட்டால் விளாச, தன் மனதில் இருந்த சாத்தான் விரட்டியடிக்கப்பட்டதும், லட்சுமி தூக்கி எறிந்த பெல்ட்டை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும்போது, இந்த மனிதர் ஏன் நாடக மேடைகளிலேயே தன்னைக் குறுக்கிக்கொண்டார் என்ற ஆதங்கம் நமக்கு வரும். அதற்கு ஈடாக இன்னொரு காட்சியைச் சொல்வதென்றால், மறுநாள் பொழுது விடிந்ததும் ஒய்.ஜி.பி., லட்சுமியின் அறைக்கதவைத்தட்டி, 'ஐ ஆம் லீவிங்' என்று சொன்னதும், லட்சுமி சட்டென்று அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பாரே அதைச்சொல்லலாம்.

இப்படி, படிப்படியாக நம்மை படத்துடன் ஒன்றவைத்து, படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவை மாற்றி, அல்லது மறக்கடித்து, ஏதோ நம் கண்முன் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் நாமும் ஒன்றாகிப்போனோம் என்ற நினைவில் நம்மைக்கொண்டு விடுவதால்தான், அந்த கிளைமாக்ஸ் காட்சி நம்மை அப்படி பாதிக்கிறது.

நம் ஊனையும் உருக வைக்கும் வாணி ஜெயராம் குரலில்....
'வேறு இடம் தேடிப்போவாளோ - இந்த
வேதனையில் இருந்து மீள்வாளோ' என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க,
அவர் (ஸ்ரீகாந்த்) இனிமேல் மாட்டார் என்று தெரிந்தும், வாசலை வாசலைப் பார்த்துக்கொண்டும், திரைச்சீலை அசையும்போதெல்லாம் ஆவலோடு திரும்பிப் பார்த்துக்கொண்டும் இருக்கும் லட்சுமி இனி வரமாட்டார் என்ற நிதர்சனத்துடன் கடைசியில் ஸ்ரீகாந்த் கழற்றி வைத்துவிட்டுப்போன கோட்டை எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ளும்போது, உணர்ச்சிப்பெருக்கால் நம் மனதில் விழும் சம்மட்டி அடி. (பின்னாளில், 'பூவே பூச்சூட வா' கிளைமாக்ஸில் நதியாவை ஆம்புலன்ஸில் கொண்டுபோனபின், கண்களில் நீருடன் மீண்டும் காலிங் பெல்லை பொருத்திக் கொண்டிருக்கும் பத்மினியைப் பார்த்தபோது, மீண்டும் மனதில் விழுந்த அதே சம்மட்டி அடி). ஆம், செல்லுலாய்டில் கவிதை வரையும் திறன் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

படம் முடிந்தபின்னும் பிரம்மை பிடித்தது போன்ற உணர்வுடன், இருக்கையை விட்டு எழக்கூட மனமில்லாமல் எழுந்து செல்கையில், அடுத்த காட்சிக்காக கியூவில் நிற்பவர்களைப்பார்த்து, 'பீம்சிங் கொன்னுட்டாண்டா' என்று கத்திக்கொண்டு போகும் ரசிகர் கூட்டம் (அன்று 'பாகப்பிரிவினை' பார்த்துவிட்டு இவர்களது அப்பாக்கள் கத்திக்கொண்டு போன அதே வார்த்தை).

இப்படத்துக்கு அற்புதமான இசையைத் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 'கண்டதைச் சொல்லுகிறேன்' என்ற பாடலும், 'வேறு இடம் தேடிப்போவாளோ' என்ற பாடலும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின. பின்னணி இசையிலும் மனதை வருடியிருந்தார்.


தமிழ்த்தாயின் தவப்புதல்வன் ஜெயகாந்தன் எழுதி, முதலில் தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாகவும், பின்னர் முழுநாவலாகவும் வெளியாகி மக்கள் உள்ளங்களைக்கொள்ளை கொண்டு, கிடைத்தற்கரிய 'சாகித்ய அகாடமி' விருதையும் பெற்ற இந்நாவல், திரைப்படமாகிறது என்றதும் ஒரு பயம். காரணம் அதற்கு முன் திரைப்படமாக உருப்பெற்ற நாவல்களில் 95 சதவீதம், சிதைந்து உருமாறி, நாவலைப்படித்து விட்டு படம் பார்க்கச்சென்றோர்  மனங்களை ரணமடையச்செய்தன என்பதுதான் உண்மை. ஆனால், இப்படி மாமல்லபுரம் சிற்பமாக இப்படம் உருப்பெற்று, உயர்ந்து நிற்கும் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால்,

 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற இப்ப்டம் மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது தமிழ் ரசிகர்களை தலைநிமிரச்செய்தது. ஆம், 112-ம் நாள் படம் பார்க்கச்சென்று டிக்கட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பிய அதிசயமும் நடந்தேறியது. லட்சுமிக்கு, இந்தியாவின் சிறந்த நடிகை என்ற தேசிய விருதான 'ஊர்வசி' விருதையும் பெற்றுத்தந்தது. ஸ்ரீகாந்த்தை நினைக்கும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, "உங்களுக்கு இந்த ஒரு படம் போதுமய்யா"

2 comments:

  1. மிக அருமையான படம்,ஜெயகாந்தன் இயக்கிய படங்களை ஆவணகாப்பு செய்யாவிட்டால் அது கலைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு.ஒரு கலைஞன் தான் உண்மையிலேயே சாதித்துவிட்டோம் என்ற பெருமிதம் அடைந்ததாலேயே இப்போது தன் மனதுக்கினிய விருப்ப ஓய்வுடன் இருக்கிறார்.வாழ்வில் யாரும் எடுக்க துணியாத ஒரு முடிவு,அதனால் தான் அவரைத்தேடி புகழ் சென்றுகொண்டே இருக்கிறது.

    நீங்கள் கமெண்ட் மாடரேஷனை நீக்கிவிட்டால் நிறைய பேர் கருத்துக்களை பதிவார்கள்.

    ReplyDelete
  2. மிகச் சிறந்த படங்களில் ஒன்று. அவ்வளவு இயல்பான நடிப்பை எல்லாம் இனி எங்கு பார்க்க முடியும்?

    ReplyDelete